நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 2

2

மிழரசி, தன் முன்னல் பூணிக் குருவி மாதிரி, கூனிக் குறுகி நின்ற அந்த வாலிபனைப் பார்த்தாள். அவனுக்கு வக்காலத்து வாங்குவது போல் அரட்டலோடு வந்து நின்று அரட்டிய அந்த நால்வரையும் பார்த்தாள். பிறகு ஒன்றும் புரியாமல், சித்தப்பா மகன் வினைதீர்த்தானைப் பார்த்தாள். இதற்குள் உள்ளே இருந்து பகவதியம்மாளும், பொன்மணியும், கலாவதியும் ஒடி வந்தார்கள்.

வீட்டுக்குள் வந்த நால்வரில் ஒருவர் நடுத்தர வயது மனிதர். எவராக இருந்தாலும் எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்பவர். ‘இன்றைக்கு மழை வரும்’ என்று யாராவது சொன்னால் ‘எப்டி வரும்’ என்பவர். வராது’ என்றால் ‘ஏன் வராது, வரும்’ என்பவர். 

புளிய மரத்தடியில் போய் கள்ளச் சாராயம் குடிக்கும். அவரை, ஊரார் கில்லாடியார் என்பார்கள். வசதியுள்ளவர் என்பதால் ஆர். மீதி மூன்று பேரும் உதிரிகள். அதே சமயம், உடம்பைப் பொறுத்த அளவில் உறுதியான வர்கள். தமிழரசியின் முன்னால், உடம்பின் ஒவ்வொரு அங்கமும் லாக் அவுட் செய்வது போல் துடிதுடித்து நின்றவனுக்கு, ஊரார் ஊட்டிய பெயர் மண்டையன்.” இருபத்து நான்கு வயதுள்ள அந்த உள்ளுர் டெய்லருக்கு, தலையின் பரப்பளவு அதிகம். எப்போதும் தையல் தொழிலை விட்டு விட்டு, “தையல்களை பார்ப்பதையே, தொழிலாகக் கொண்டவன். வெள்ளை ஜிப்பாவும், கறுப்பு. லுங்கியுமாக அலைபவன்.

அனைவரும் அரை நிமிடம் பேச்சற்று நின்றபோது, வினைதீர்த்தான், வக்காலத்துக்களை அலட்சியமாகப் பார்த்தபடியே, ‘உ.ம்...சீக்கிரம் என் தங்கச்சிகிட்ட மன்னிப்புக் கேளு...நீயாய் கேட்காட்டால், ஒன் தலை மட்டும் தனியா அவள் காலுல உருளும்” என்றான் உறுமியபடி

கில்லாடியார் இரண்டடி முன்னால் நடந்து டேய், வெனதீர்த்தான், அவனை அடிச்சால், என்னை அடிச்சது. மாதிரி என்றார். வினைதீர்த்தான் அதைக் கண்டு கொள்ளாமல், மண்டையனைப் பார்த்து “ஏல..நீயா அப்படிப் பேசினியா, இல்ல எந்த தேவடியா மவனும் ஒன்னை அப்படிப் பேசச் சொன்னானா? உள்ளதைச் சொல்லு’ என்று சொன்னபடியே, மண்டையனின் பிடரியில் அடிக்காமலே தன் கையை வைத்தான்.

கில்லாடியார், மூவர் புடைசூழ மண்டையனை மீட்கப்போனார். இதற்குள் தமிழரசியின் தந்தை அருணாசலம் கர்ஜித்தார்.

டேய் கில்லாடியான்...யார் வீட்ல வந்து நிக்கோ முன்னு கொஞ்சம் யோசிச்சிட்டு, அப்புறமாய் நீ என்ன செய்யணுமோ அதைச் செய்’ என்றார்.

‘பைத்தியாரத் தருமரு’ மாடக்கண்ணு, அங்கே எதுவுமே நடக்காததுபோல் கால்களைச் சேர்த்த கையை விடாமல், உடம்பை ஒரு சின்ன நெளிப்புக்கூட நெளிக்காமல், மகளையும், மண்டையனையும் மாறி மாறிப் பார்த்தார்.

தமிழரசி சற்றுமுன்னுல் நடந்து வந்து, வினைதீர்த்தானின் கையை, மண்டையனின் பின் மண்டையில் இருந்து எடுத்து விட்டு, ‘என்ன இதெல்லாம்? விஷயம் தெரியாமலே சண்டை போடப் போனால் எப்படி?” என்றாள்.

‘அதத்தான் நானும் சொல்றேன். அடிச்சாலும் நான் என்ன சொன்னேங்றதை சொல்லிட்டு அடிங்க’ என்றான் மண்டையன். கில்லாடியார், எல்லோரையும் கருடபார்வை பார்த்துக் கொண்டிருந்தார். தமிழரசி தவிர, இதர பெண்கள் கைகளைப் பிசைந்தார்கள். வினை தீர்த்தான், தமிழரசிக்குக் கட்டுப்பட்டு, மண்டையனை அடிக்க முடியாமல் போன குறையை பேச்சில் காட்டினான்.

‘ஏல...மண்டையா, பேசுனதையும் பேசிப்பிட்டு...நீ பேசுனதை என்னையே திருப்பிச் சொல்லச் சொல்றியா? மூதேவி!’

கில்லாடியார், சாடினார்:

‘என்னடா இது...சும்மா நேரப் போக்குக்கு காசு வைக்காம சீட்டு விளையாடிக்கிட்டு இருந்தோம். அசக்குன்னு இவனை தூக்கிக்கிட்டு வந்ததும் இல்லாம, அதட்டவா செய்யுற? இந்தப் புத்தியாலதான் ஒப்பன் சொத்து ஊர்ல போச்சுது. அந்த பைத்தியார தர்மரு வயித்துல நீயா பிறக்கணும்? அததான் ராமையா மச்சான் வீட்ல வேலக்காரனாய் நிக்குற. ஒன் எசமான் பிள்ள இன்ஸ்பெக்டரா இருந்தால், சும்மா கிடக் கிறவனை தூக்கிட்டு வரச் சொல்லுதா?’”

“சும்மா இருந்தவன தூக்கிட்டு வாரதுக்கு ஒம்மை மாதிரி நான் கள்ளச்சாராயமா குடிக்கேன்? சத்தியமாய் சொல்லு... அவன் சொல்லுத... ஒம் எருமைக் காதுல விழல?”

“சத்தியமா சொல்றேண்டா... எனக்கு கேட்கல... சீட்டு விளையாட்ல...அதுவும் ரம்மில உட்கார்ந்திட்டால் உலகமே தெரியாது. தூக்குறதே தூக்குறே...அவன் சும்மா இருக்கும்போது தூக்கணும். சீட்டாட்டத்துல ஒரு கை குறையும்படியாய் ஏண்டா தூக்குறே? இதவை தான் ஒப்பன் பைத்தியாரத் தருமராய் இருக்காரு. நீ வீமன் மாதிரி உடம்பை வச்சுக்கிட்டு, வெங்கனுலயும் வெங்கன் வேலக்கார வெங்களுய் இருக்கே.”

“கில்லாடி மாமா நான் இப்பதான் மெட்ராஸ்ல இருந்து வந்திருக்கேன். வயிறு பசிக்குது. அவன் என்ன சொன்னுன்னு வினைதீர்த்தானை சொல்லவிடும்.”

வினைதீர்த்தானுக்கும், கில்லாடிக்குப் பதிலுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று ஆசை.

“ஏய்யா செவிட்டு முண்டம்...இருக்கிற சொத்தை யெல்லாம் புளியம் தோப்புல, கள்ளச்சாராயத்துல கலைக்கிற மூதேவி...இந்த மண்டையன் எனக்கு ஒரே ஒரு ஆசை இந்த தமிழரசியை... ஒரு நாள்... ஒரு பொழுதாவது’...”

வினைதீர்த்தானல் மேற்கொண்டு பேச முடியவில்லை. இனிமேல் அடி விழாது என்பது போல், முதுகை நெளித்து விட்ட மண்டையன் முதுகில், இரண்டு குத்து குத்தினான். தமிழரசி, சித்தப்பா மகனைப் பிடித்துக் கொண்டாள். தந்தை, மண்டையனே நோக்கி நகர்ந்தார். திடீரென்று, யாரும் எதிர்பாராத விதமாக, காலைக் கட்டிக்கொண்டிருந்த பைத்தியாரத் தர்மரு எழுந்தார். துணி பரப்பிய கயிற்றைப் பிடித்து இழுத்து, கயிறோடு வந்து செறுக்கி மவனை தூணுல கட்டி வையுங்கடா” என்று சொன்னபடியே, மண்டையனின் கைகளைப் பிடித்து, அவன் முதுகுக்குப் பின்னால் கொண்டு போகப் போனார். அவர் கோபம், கில்லாடியாரையும் தொற்றிக் கொண்டது. மண்டையனின் முதுகில் அடிக்க இடமில்லாமல் மாடக் கண்ணு நின்றதால், கில்லாடி முன்னால் வந்து, மண்டையனின் முடியைப் பிடித்து இழுத்தபடி “செறுக்கிமவனே... யாரப் பேசுனாலும் தமிழரசியையால பேசுறது? மெட்ராஸ்ல... காலேஜ்ல வாத்தியாராய் இருந்ததோட, பல பெரிய பெரிய கூட்டத்துல பேசி, பெயர் வாங்கமுடியாத இந்த குட்டாம்பட்டிக்கே பேர் வாங்கித்தார தமிழரசியைப் பத்தியா இப்படிப் பேசுனே? இதைவிட நீ என்மவள பேசியிருக்கலாம்... ஒன்ன .. ஒன்ன...” என்று சொல்லி அவன் முடியை முன்னும் பின்னுமாய் இழுத்தார்.

தமிழரசி, அடிபடுபவனையே பார்த்தாள். ஒரு கணம் அது சரியென்றுபட்டது. பிறகு காலஞ்சென்ற சோவியத் அதிபர் பிரஸ்நேவ் எழுதிய “கன்னி நிலம்” என்ற புத்தகம் அவளுக்கு நினைவுக்கு வந்தது. சோவியத் கலாச்சாரக் கழகத்தில், இந்த புத்தகத்தை விமர்சித்து, அவள் பேசியிருக்கிறாள். அதில் தோழர் பிரஸ்நேவ் இரண்டாவது உலகப்போரில் கருங்கடல் தீபகற்பம் ஒன்றில், உயிருக்குப் பயப்படும் வீரர்களை வீட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார். அவர்களிடம் இதுபற்றி பலர் முன்னிலையில் கேட்காமல், தனித்தனியாக கேட்க விரும்பினார். அதற்குக் காரணமும் சொல்கிறார். எவரையும்—அவர்கள் எவ்வளவு கோழைகளாக இருந்தாலும், கடமையாற்ற பயந்தவர்களாய் இருந்தாலும், அவர்களை பகிரங்கமாக இழிவு செய்ய, யாருக்கும் உரிமை இல்லை” என்கிறார். இது தான் மனிதாபிமானம். இந்த மானுடத்தான் இந்த நூலின் ஜீவன்! என்று பேசி கைதட்டு வாங்கியிருக்கிறாள்! இப்போது, அவளே இந்த இழிவை அனு மதிக்கலாமா? ஒரு மனிதனின் இழிவு, மானுடத்தின் இழிவாகலாமா?

எப்போதோ படிக்கும் இலக்கிய வரிகள், சமயத்தில் வந்து கை கொடுக்கும் என்பதைக் காட்டுபவள் போல், மண்டையனைப் பிடித்து, தன் பக்கமாக இழுத்துக் கொண்டு, “என்ன மண்டையா, ‘என்ன தமிழு ... எப்போ வந்தே’ன்னு அன்போட கேட்கிற நீயா இப்டிப் பேசினே?” என்றாள்.

மண்டையன் குய்யோ, முறையோ என்று கத்தினான்.

“அய்யோ ... அய்யய்யோ ... ஒன்னப்பத்தி பேசினால் என் நாக்கு அழுகிவிடாதா? நான் பேசுனது வாஸ்தவந்தான். ஆனால் ஒன்னையில்ல; இந்த பொன்மணியோட பெரியய்யா மகள் தமிழரசி இருக்காளே, அவளச் சொன்னேன். வினைதீர்த்தான் சொல்லிக் காட்டுனது மாதிரியே தான் சொன்னேன். ஒன்னைச் சொல்லியிருந்தால் என் நாக்கு, வாய்க்குள்ளேயே பாம்பாவி, என்னைக் கொத்தி குடஞ்சிருக்காதா?”

வினைதீர்த்தான், கோபப் பார்வையை, சிநேகிதமாக்கினான். ‘பைத்தியாரத் தர்மரு’ மாடக்கண்ணு, மீண்டும் கல்தூணில் சாய்ந்தார். அருணாசலம், தார் பாய்ந்த வேட்டியை இழுத்து விட்டார். கில்லாடியார், தாம்பாளத்தில் இருந்து வெற்றிலைப் பாக்கை எடுத்தார். திடீரென்று பொன்மணி கத்தினாள்:

“ஏய் மண்டையா, எங்க பெரியப்பா மகளையா அப்டிக் கேட்டே? இரு, இரு, எங்க இன்ஸ்பெக்டர் அண்ணன் கிட்ட சொல்லி ஒன்னை போலீஸ்ல புடம் போடச் சொல்றேன்.”

மண்டையன் மீண்டும் நடுங்கப்போனபோது, கில்லாடியார் அவனைப் பிடித்து, தன் வசமாக்கிக் கொண்டு “நீ மனுஷனே இல்லடா. வடக்குத் தெரு தமிழரசியைப் பற்றி எப்போ ஆசைப்பட்டியோ, அப்பவே நீ மனுஷன் இல்ல. வா... வா... தாமோதரன் இந்த பொன்மணி சொன்னபடி ஆடுற ஆள் இல்ல. அப்படியே கோபப் பட்டார்னால், இந்த வினைதீர்த்தான் பயலை வச்சுச் சரிக்கட்டலாம். நீ இப்போ வா. நான் செட்டு சேத்துட்ட நேரம்; சீட்டுக்கட்டு அப்டியே கிடக்கு. வாடா! வாறேன் தமிழு, வாறேன் மச்சான், வாறேண்டா வென’” என்று சொன்னபடியே, மற்றவங்களை நகர்த்தியபடி, நகர்ந்தார்.

பகவதியம்மா, மகள் தலையில் படிந்த வைக்கோல் தும்பை தட்டிவிட்டபடியே, “சரி, மொதல்ல சாப்பிடு. வாம்மா” என்றாள்.

தமிழரசிக்கும் பசியோ பசி.

வினைதீர்த்தான் “இந்தா தமிழு வாழை இலை. ஒனக்காவ கொண்டுவந்தேன்” என்று சொன்னபோது, தமிழரசி, சரியான உயரமும், அரையடி அழுத்தமும் கொண்ட வினைதீர்த்தானையே பார்த்தாள். சித்தப்பாவுக்கும், இவனுக்கும் எவ்வளவு வித்தியாசம்? என் மேலதான் இவனுக்கு எவ்வளவு பிரியம்? இருந்தாலும் அன்பை அடிதடி மூலமாகவா காட்டுறது?

பகவதியம்மாள், சமையலறைக்குள் போய்க்குரலிட்டாள்:

“எத்தன தடவம்மா சாதத்தை சூடாக்குறது? வாம்மா...”

தமிழரசி, வினைதீர்த்தான் மீது நாட்டிய கண்களை எடுத்து விட்டு, அம்மாவைப் பார்ப்பதற்காக, அரைவட்டமாகக் கண்களைச் சுழற்றியபோது—

வெளியே சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் போய்க் கொண்டிருந்தான். வாசலுக்கு முன்னல் சிறிது நின்று அவளைப் பார்த்ததுபோல் தோன்றியது. பதவிக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல், பெளவியமாகப் போய்க்கொண்டிருந்தான். தோளில் ஒரு கலர் துண்டையும், கையில் சோப்பு டப்பாவையும் பார்த்ததாக ஞாபகம். குளிக்கப் போகிறார் போலும் காசியாபிள்ளை கிணற்றைப் பார்த்துத்தான் போவார்!

தமிழரசிக்கு, உடம்பெல்லாம் கசகசவென்று இருப்பது போல் தோன்றியது. ரயிலில் கூட்டத்தில் இடிபட்டு, கசங்கி, உடம்பெல்லாம் எரிச்சலாய் இருக்கு. குளிக்காமல் இருக்க முடியாது இருக்கவே முடியாது... அப்பப்பா ... உடம்பெல்லாம் புழுக்கம்.

பகவதியம்மாள், வாழை இலையை விரித்தபோது, தமிழரசி “எம்மா, என்னால குளிக்காமல் சாப்பிட முடியாது. குளிச்சே ஆகணும்” என்றாள்.

“கலாவதி, ஒக்காவுக்கு வெந்நிய பழையபடி சுட வை. என்ன பொண்ணோ நீ.”

“எனக்கு வெந்நீர் வேண்டாம்மா. காசியா பிள்ளைக் கிணத்துல பம்ப்செட் ஓடுதுல்லா... அங்கே போய் தலையைக் கொடுத்தால்தான் குளிச்சது மாதிரி இருக்கும்.”

“நாளைக்குப் போகலாம். இப்போ வேணுமுன்னல் லேசா குளிச்சிட்டு சாப்புடு, இங்கேயே குளி...”

தமிழரசி, பதில் பேசவில்லை. வீட்டுக்குள் போய் சூட்கேசைத் திறந்து, டர்க்கி டவலையும், சோப்பு டப்பாவையும் எடுத்தாள். பிறகு, பெட்டியைப் பூட்டினாள். வெளியறைக்கு வந்தவளுக்கு, புடவையை எடுக்காதது நினைவுக்கு வந்தது. சூட்கேசைத் திறக்கப் போனாள். அதற்குள் நேரமாகி... அவர் போய்விட்டால்...

கொடியில் கிடந்த அம்மாவின் புடவையை எடுத்துத் தோளில் போட்டபடியே, கலாவதியையும், பொன்மணியையும் ஓரக்கண்ணால் பார்த்தபடி, ‘கண்டுக்காமல்’ வெளியே வந்தாள். பகவதியம்மா, மகளை வற்புறுத்தவில்லை. மகளின் பிடிவாதத்தை, மறுவாதத்தால் மாற்ற முடியாது என்பது, தாய்க்குத் தெரிந்ததுதான்.

தமிழரசி, தெருவழியாக நடந்து கொண்டிருந்தாள். தெருவின் இருபுறமும் திண்ணைகளில் உட்கார்ந்திருந்த ஏழை பாழைகள், அவளைப் பார்த்ததும், தங்களை நோக்கித் தான் அவள் நடந்தாலும், இவர்களே அவளைப் பார்த்து நடந்தார்கள். தமிழரசி அவசரமாக நடந்து பார்த்தும் அவளால் முடியவில்லை. ஒவ்வொருவரும் அன்பு கனியப் பேசும்போது, இன்னும் கனியா-காயா என்று தெரியாத அந்த அன்பிற்காக, இந்த கனிந்த அன்பை அவளால் மீற முடியவில்லை. அப்படியும் “நாளைக்கு சாவகாசமாகப் பேசலாம்” என்று சிலரிடம் சொல்லிப் பார்த்தாள். அந்த சிலரில் ஒரு சிலரோ “நாளைக்கு நாங்க எந்த ஊர்ல, எந்த வயக்காட்டில் நிக்கிறோமோ?” என்று சொன்னபோது, அன்பைத் தவிர, வேறு எதையும் கேளாத அந்த மக்களிடம் இருந்து, எடுத்த எடுப்பிலேயே அவளால் விடை பெற முடியவில்லை. காதலே காயப்படுத்தியபடியே, அவள் காது விட்டு கேட்டு, மனம் விட்டுப் பேசினாள்.

எப்படியோ, பேசவேண்டியவர்களிடம் எல்லாம் பேசி, புளியந்தோப்பிற்குள் வந்தபோது, காசியாபிள்ளை கிணற்று மேட்டில், வெள்ளை ஆடையில் ஒரு உருவம் தெரிந்தது. அநேகமாய் தாமோதரனாகத்தான் இருக்கும்!

தமிழரசிக்கு நடக்க நடக்க, கால்கள் வேகமெடுத்தன. அவள் பதினொன்றாவது படிக்கும்போது, இந்த தாமோதரன், பி. ஏ. படித்தான். ஒரு தடவை விடுமுறையில் வந்தபோது, இவன் மட்டும் ஏரிப் பக்கமாக வந்தான். தோழிகளோடு, தமிழரசியும் பின்னால் வந்தாள். மாலை மயங்கிய நேரம். ஏழெட்டுப் பெண்களுக் கிடையில் வந்த தமிழரசி “தாமு...தாமு...” என்றாள் அவனுக்குக் கேட்கும் குரலில். அவன் திரும்பிப் பார்த்த போது, இவள் ‘பால் குடிக்காத’ பூனை போல் வேறு எங்கேயோ பார்ப்பாள். அவன் மீண்டும் நடக்கும்போது “தாமு... தாமு” என்பாள். இப்படி அவன் நிற்க நிற்க நிறுத்தி, போகப் போகப் பேசியவளைப் புரிந்து கொண்டவன் போல், அவன், மறுநாள் நண்பர்களோடு போனபோது “இப்போ, பாரதி சொன்னது மாதிரி, தெருவெங்கும் தமிழோசை கேட்குதுடா” என்றான்.

இப்படிப் பல சின்னச்சின்ன நிகழ்ச்சிகள். தமிழரசி கல்லூரிக்குள் நுழைந்தபோது, அவன் சென்னையில் எம். ஏ. வுக்குப் போய்விட்டான். அதிகமாக ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. ஆனாலும், அவளால் அவனை மறக்க முடியவில்லை. இன்னும், மனதுள் அந்த ‘இன்ஸ்பெக்டர்’ தாமோதரனுக்குப் பதிலாக, கல்லூரித் தாமுவே நிற்கிறான். தமிழரசியும், பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு, ஊரில் சில காலம் வேலையில்லாமல் இருந்தாள். அப்போது ஊருக்கு வந்த அவனை ஓரிரு தடவை பார்த்திருக்கிறாள். ஆனால் பேசியதில்லை. சென்ற ஆண்டு, உதவிப் பேராசிரியையாக, அவள் விடுப்பில் வந்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரனை ஊரில் பார்த்தாள். ஏரிப்பக்கம் பார்த்துக் கொண்டார்கள்.

அங்கே அப்போது ஆளில்லைதான்! ஆனாலும் இருவரும் ‘நீங்க... நாங்க’ போட்டுப் பேசினார்கள். அவன் கல்லூரி டிஸ்ஸிபிளின் பற்றிக் கேட்டான். இவள் லா அண்ட் ஆர்டர் பற்றிக் கேட்டாள். இருவருமே தங்களை ‘மெச்சூர்’ ஆட்களாகக் காட்டிக் கொண்டதில், காதல், ‘இம்மெச்சூர்ட்’ ஆகியது. ஏதோ ஒரு உதவிப் பேராசிரியை, ஒரு காவல் துறை அதிகாரியிடம் ‘ஜெனரல்’ சமாச்சாரங்களை பேசிய அதிருப்தியோடு அவள் விடைபெற்றாள். அவன் எப்படி நினைத்தானோ?

காதல் வயப்பட்ட ஒருத்தனோ அல்லது ஒருத்தியோ, அந்த ஒருவனை அல்லது ஒருத்தியைப் பார்க்கும்போது, தாங்கள் நினைத்த நினைப்பும், தவித்த தவிப்பும் நினைப்பிற் தரிய அடுத்த தரப்பிற்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறார்கள் , ‘அது’ தெரியாமல் விழிக்கும்போது, ‘பெரிய மனிதத்தனம்’ போர்வையாகி விடுகிறது.

இப்போது, அந்தப் போர்வையை விலக்கியவள் போல் தமிழரசி நடந்தாள். “தாமு... தாமு” என்று மெல்லச் சொல்லியபடியே நடந்தாள். சத்தம் கேட்காமல் திரும்பாதவள், முதுகில் யாரோ குத்துவதைப் பார்த்துத் திரும்பினாள்.

கலாவதி, தன் தோளில் ஒரு துண்டு துலங்க சிரித்தாள். தமிழரசி ஒப்புக்கு “பொன்மணி வரலியா” என்ற போது, கலாவதி, “வர்ல... இப்போ வரவும் மாட்டாள்” என்றாள் திட்டவட்டமாக.

இருவரும் வருவதைப் பார்த்ததும், சட்டையைக் கழற்றிய தாமோதரன், அவசர அவசரமாக அதைப் போட்டான். வேறு கிணற்றைப் பார்த்து நடக்கப் போனவன், பிறகு அங்கேயே செக்கு மாடு மாதிரி சுற்றிச் சுற்றி வந்தான்.

‘பதினோராவது வகுப்பு’ தமிழரசி, உதவிப் பேராசிரியையாகி, அவனைப் பார்த்துக் கும்பிட்டாள், அவனும் பதிலுக்கு சல்யூட் அடிப்பது போல், வலது கரத்தைத் தூக்கினான். பேச்சு இப்படிப் போனது:

“எப்டி இருக்கீங்க...”

“எப்டி இருக்கீங்க...”

“மெட்ராஸ் எப்டி இருக்கு?”

“மண்டைக்காடு எப்டி இருக்கு?”

“எப்போ புரமோஷன்?”

“ஒங்களுக்கு எப்போ?”

மேற்கொண்டு எப்படிப் பேசுவது என்று தாமோதரனுக்குத் தெரியவில்லை. அதே சமயம் ஒரு உதவிப்பேராசிரியையிடம் - அதுவும் பல இலக்கிய மேடைகளில் முழங்கும் ஒருத்தியிடம் பேசாமல் இருக்கக்கூடாது என்று நினைத்துப் பேசினான். தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் தலைநகரின் தலைவிதியை நினைத்தபடி கேட்டான். எப்படி?

“மெட்ராஸ்ல...எவ்வளவு காலமாய் ‘குளிக்காமல்’ இருக்கீங்க?”

உதவிப் பேராசிரியைக்குப் புரியாதது, கலாவதிக்குப் புரிந்தது. சிரிப்பை முகமெங்கும் சிதற விடாமல் இருக்க, ஒரு தென்னை மரத்திற்குப் பின்னால் போனாள்.

உதவிப் பேராசிரியை, ‘டிக்னரிபைடாக’க் கேட்டாள்.

“கல்யாணத்துக்கு வந்தீங்களா?”

“ஆமாம். இப்போ இன்னொரு கல்யாணமும் கூடியிருக்கு. நானே ஒங்க வீட்டுக்கு வந்து, நிச்சயதாம்பூலத்திற்குக் கூப்பிட வருவேன். ரெண்டு கல்யாணத்தையும் ஒரே பந்தலுல வைக்கப் போறோம். நான் வேலை பார்க்கிற இடத்துலயே கிடச்சிட்டு. நல்ல இடம். எனக்குத் தெரிஞ்ச இடம். மனசுக்குப் பிடிச்ச இடம். வீட்லயும் ஒனக்கு சரின்னால் எங்களுக்கும் சரின்னுட்டாங்க.”

உதவிப் பேராசிரியை தமிழரசி அதிர்ந்து போனாள்! கடைசியில் இவன். இவர்... காதலிச்சு கல்யாணம் செய்யுறார். நான்தான் ‘பேக்கு’ மாதிரி இவரையே நினைச்சேன்.

தமிழரசி, பதினேராவது வகுப்புக்காரியாகி, தாமோதரனுள் காலேஜ் தாமுவைப்’ பார்த்தாள்—தாபத்தோடு, கோபத்தோடு, வேகத்தோடு, தன்னையே தானே தொலைத்துவிட்ட துயரத்தோடு.