நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 5

5

தாமோதரன் வீட்டில் ஊரே குடிபுகுந்திருந்தது. அவன் தங்கை விஜயாவையும், தமிழரசியின் அண்ணன் ராஜதுரையையும், ஒன்றுபடுத்துவதற்காகத் திரண்ட கூட்டம். அந்த ஊரின் வழக்கப்படியும், அவர்கள் ஜாதியின் மரபுப்படியும் தமிழரசியின் பங்காளிகள், அவள் வீட்டில் இருந்து ஊர்வலம் போல் புறப்பட்டு, இரவு எட்டு மணிக்கு தாமோதரன் வீட்டில் குவிந்தார்கள். தாமோதரன் குடும்பத்துப் பங்காளிகளும், அங்கே திரண்டு நிச்சயதாம்பூல வேலைகளைப் பங்காடிக் கொண்டிருந்தார்கள்.

இந்த இரு தரப்பாரும் குட்டாம்பட்டியில் மிகப் பெரிய குடும்பங்கள் என்பதால், ஊராரில் வசதியுள்ளவர்கள், முறைப்படி தங்களுக்கு சொல்லப்பட்டதோ இல்லையோ, ஏதோ ஒரு உறவு முறையைச் சொல்லிக் கொண்டு வந்துவிட்டார்கள். இன்ஸ்பெக்டர் வீடாயிற்றே! சும்மாவா? பொதுவாக நிச்சயதாம்பூல விழாவில், மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டுப் பெண்களும் கலந்து கொள்வதில்லை. ஆனால், தமிழரசி இந்த மரபை உடைத்து, தான் மட்டுமல்லாமல், தன்னோடு சித்தப்பா மகள் கலாவதியையும், இன்னும் சில 'சின்ன தாத்தா--பெரிய தாத்தா” பேத்திகளையும் இழுத்துக் கொண்டு, தாமோதரன் வீட்டுக்கு வந்துவிட்டாள். அதே சமயம், அந்த ஊரின் ஒருசில பெண் மரபுகளை இன்னும் மதிப்பது போல், கூட்டத்தோடு கூட்டமாக உட்காராமல், *மசோதா' நிலையில் இருக்கும் மணப்பெண் விஜயா இருந்த அறைக்குள், பங்காளிப் பெண்களோடு போய்விட்டாள். தாமோதரன் வெளியே உட்கார்ந்திருந்தான்.

மணப்பெண் அறைக்குள் மெள்ள மெள்ள நுழைந்த தமிழரசி, தாமோதரன் உருவம் கண்ணில் முழுமையாகப் படும் இடத்தை, புகைப்படக்காரர் காமிராவை அட் ஜெஸ்ட் செய்வது போல், நின்று, சென்று, கண்களை உயர்த்தி-தாழ்த்தி, கால்களை முன்னாலும் பின்னாலும் நகர்த்தி, மைய இடத்தைப் பிடிக்கும் போதெல்லாம், தாமோதரன், தன் பங்குக்கும் அட்ஜெஸ்ட் செய்ய: நினைத்து, இருக்கையில் இருந்து அங்குமிங்குமாக தன்னைத் தானே நகர்த்திக் கொண்டான். போட்டோ பிடிக்க வந்தவர்கள் அசைந்தால், புகைப்படக்காரருக்கு எப்படிக் கோபம் வருமோ, அப்படிப்பட்ட கோபம் தமிழரசிக்கும். வந்தது. எப்படியோ, அவள் கண்ணுக்கு இவனும், இவன் கண்ணுக்கு அவளும் கிடைத்து விட்டார்கள்.

மணப்பெண் நாணத்தால் முகம் கவிழ்ந்து, உடம்பைக் கோணியபடி காணப்பட்டாள். வெள்ளை ரோஜாவில், இரண்டு பெரிய விழிகளைப் போட்டது போன்ற முகக்காரி; பாக்குச் செடி போன்ற பளபளப்பு மேனிக்காரி, அப்போது மட்டும், அவள் கோரியிருந்த பாங்கை, நமது பத்திரிகைக்காரர்கள் பார்த்திருந்தால், அதையே தேவையான 'போஸாக' நினைத்து அட்டைப் படத்தில் போட அலை மோதியிருப்பார்கள். விஜயாவை, பெண்கள் கூட்டம். மொய்த்தது.

தமிழரசி தாம்பாளத்தோடு கொண்டு வந்திருந்த நிச்சய தாம்பூலப் புடவையை விஜயாவிடம் நீட்டினள். விஜயா, அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, மீண்டும் தலையை கீழே போட்டாள். கொடுத்த புடவையை வாங்காமல், உடுத்த புடவையின் முந்தானையை தூக்கி, கையோடு சேர்த்து முகத்தை மறைத்துக் கொண்டாள். உடனே தமிழரசி "என்னடி நீ...நாம எட்டாவது வரைக்கும் கிளாஸ் மேட். அப்பவே நீ எங்க அண்ணனை கண் போட்டே. எத்தன தடவ என் கிட்டயே அவனைப் பத்திக் கேட்டிருக்கே? இப்ப ஏன் அவன் எடுத்த சேலைன்னு நாணுறே? நல்ல நேரம் முடியறதுக்கு முன்னால கட்டுப்பா...’ என்றாள்.

புதுமையாக 'ப்பா’ போட்ட தமிழரசியை, எல்லாப் பெண்களும், ஆச்சரியமாகப் பார்த்தார்கள். விஜயாவோ, முகத்தை மூடிய கையை எடுக்கவில்லை. தமிழரசி அவளைத் துாக்க முயற்சி செய்து “எப்பாடி, என்ன கனம்" என்று சொல்லி விட்டு, மூச்சு விட்டாள்.

கலாவதி, "சேலைய கட்டத்தான் சொல்லுதாவ... அவிழ்க்க சொல்லுதது மாதிரி...இப்டி வெட்கப்படுறியோ அதுவும் இந்தக் காலத்துல? ஒரேயடியாய் வெட்கப் பட்டு, வெக்கம் முழுதையும் தீர்த்துட்டு. அப்புறம் புருஷன் முன்னால 'ஒன்னும் இல்லாம’ நிக்கப்படாது மயினி. கொஞ்சம் வெட்கத்தை வச்சுக்கணும். பேசாம சேலய கட்டு" என்றாள். அப்போதும் விஜயா மசியவில்லை. இயல்பிலேயே தன்னடக்கமானவள். விஜயாவை எப்படி புதுச் சேலைக்குள்’ கொண்டு வரலாம் என்ற யோசித்த போது, ஒரு குரல் பெரிதாக அதட்டலோடு ஒலிக்தது.

"இது என்ன தேசிங்கு ராசன் கல்யாணமா? மொகத்தை மூடுகிறாள்...ஒருவேளை மாப்பிள்ளை பிடிக்கலையோ என்னவோ...!’

எல்லோரும் குரல் வந்த திசையைப் பார்த்தார்கள்! முத்துமாரிப் பாட்டி! வாசல் படியில் தலைசாய்த்தபடி நின்றாள். எப்படி, யார் கூப்பிட்டு வந்தாள் என்று தெரிய வில்லை. எப்படியோ வந்து விட்டாள். பாட்டி போட்ட -பழியை கேட்டமாத்திரத்தில், விஜயா துள்ளி எழுந்தாள். நாணத்தை எங்கேயோ போட்டு விட்டு, பாட்டியை ஒரு மொறைப்பு மொறைத்தாள். தமிழரசியிடம் இருந்த புடவையை பலவந்தமாகப் பிடுங்கினாள்.

முத்துமாரிப் பாட்டி வாய் குலுங்கச் சிரித்தபடியே "என்ன சொன்னால் ஒன்னை வழிக்குக் கொண்டுவர முடியுமுன்னு எனக்கா தெரியாது” என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் பார்த்தாள். மங்கள காரியத்திற்காக, பாட்டி அமங்கலமாகப் பேசியதைப் புரியாதவர்கள்போல் பெண்கள், பாட்டியைப் பார்த்தார்கள்.

வெளியே, விசாலமான தளத்தில் கூடியிருந்தவர்கள், வாழை இலை மேல் வைக்கப்பட்ட கேசரியையும், வெண் பொங்கலையும் சுவைத்தபோது, தமிழரசியன் பங்காளி அண்ணன் ஒருவன் ஒங்களுக்கெல்லாம் கேசரி போடணு முன்னு ஏன்வே ஆசை? அதை முன்னப்பின்ன சாப்பிட்டிருந்தால் போடலாம். இல்லன்னா பார்த்திருந்தாவது செய்யணும், ஒங்களுக்குத் தெரிஞ்சதைப் போடாம, தெரியாததை ஏன்வே போடுறிய?’ என்றான்.

உடனே பெண் வீட்டு பங்காளி ஒருவன் "ஒம்ம மாதிரி ஆட்கள் வாரது தெரியாது. இல்லன்னா புண்ணாக்கு போட்டிருப்போம்..." என்றான்,

தாமோதரன், தன் அருகே உட்கார்ந்திருந்த சித்தப்பா மகன் ஒருவன் காதில் எதையோ பேசினான். உடனே அவன் வாய் விரித்தான்.

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ... ரொம்பத்தான் துள்றாங்க... துள்ளாதிங்க...நாங்களும் ஒங்க வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர்களாய் வரத்தான் போறோம். அப்போ கவனிச்சுக்கிறோம்.’’

தாமோதரன் நடவடிக்கைகளை உளவு பார்த்துக் கொண்டிருந்த தமிழரசி, “தாமுவை' நாணங் கலந்து பார்த்தாள். அவன், அக்கம் பக்கத்து ஆசாமிகளை முறைத்துவிட்டு, பிறகு அவளைப் பார்த்துச் சிரித்தான். மீண்டும் கூட்டத்தைக் கண்ணால் நோட்டம் விட்டபடியே, வலது கையைத் தலையில் சாய்த்தபடி, விரல்களை நாகமாய் விரித்து, தமிழர சிக்குப் படம் காட்டினன். தமிழரசி, லேசாகத் திடுக்கிட்டவள் போல் கண்களை நிமிர்த்தி, பிறகு அவன் கையாட்டிற்குக் கட்டுப்பட்டு, வலது கையை தற்செயலாகத் தூக்குவது போல், பாதி துரரம் கொண்டு போனபோது, ஒருகை, அவள் கையைப் பிடித்துக் கீழே போட்டது. பார்த்தால், முத்துமாரிப் பாட்டி!

பல் தெரியச் சிரித்தபடி “இங்கே வச்சு வேண்டாம் தங்கம். இவளுவ கண்ணுபட்டால் ஒன் காதலு போயிடும். பாட்டி எங்கேயும் வேண்டாங்கல. இங்கதான் வேண்டாங்கிறேன்” என்று ரகசியமாய் கிசுகிசுத்தாள்.

வெளியே, வினை தீர்த்தான் பந்தியை கவனித்துக் கொண்டிருந்தான். தண்ணீர் கொடுப்பது முதல், தட்டுக்களில் வாழைப் பழ வகையருக்களைக் கொண்டு போடுவது வரை, எல்லாக் காரியங்களையும் அவனே செய்து கொண் டிருந்தான்.

உடனே ஒருவர் "ஏல! ஒனக்கு மூளை இருக்கா? இன்னக்கி நீ மாப்பிள்ளை வீட்டுக்காரன். மாப்பிள்ளை யோட சொந்த சித்தப்பா மகன். மாப்பிள்ளை பவுசுல உட்காருல" என்றார். சாப்பாட்டுச் சமாச்சாரங்களை மேற் பார்த்துக் கொண்டிருந்த தாமோதரன் அண்ணன் முத்துலிங்கம் “சரியான லூசு ப்யா. எந்தச் சமயத்துல எது பேசணுமுன்னு ஒனக்குத் தெரியாது. சொல்லிக் கொடுத் தாலும் புரியாது’ என்று செல்லமாகவும் காரமாகவும் பதிலளித்தார்.

ஒரு சில பெரியவர்கள் அவசரப்படுத்த, தாமோதரன் தந்தை தன் முன்னல், குத்து விளக்கிற்குக் கீழே வைக்கப் பட்டிருந்த தாம்பாளத் தட்டைத் தூக்கினர். தேங்காய், மஞ்சள் வகையருக்களுடன்-எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கட்டு நூறு ரூபாய் நோட்டுக்களோடு கொண்ட தாம்பாளத் தட்டை, தமிழரசியின் தந்தை அருணாசலத்திடம் ஒப்படைத்தார். அப்போது மணப் பெண்ணின் அறையில் இருந்து வெளிப்பட்ட பெண்கள், குலவையிட்டார்கள். தாமோதரனையே அப்போதும் பார்த்துப் பருகிய தமிழரசி, தன் தந்தையுடன், தான் வாங்கிக் கொடுத்த எட்டு முழ வேட்டியைக் கட்டி, ஜரிகை நேரியலை மார்பில் சுழற்றி, கம்பீரமாக உட்கார்ந்திருந்த சித்தப்பா மாடக்கண்ணுவை பெருமிதமாகப் பார்த்தாள். இப்படிப் பல இடங்களுக்குத் தாவிய அவள் கண்கள், வழக்கம் போல் மீண்டும் தாமோதரன் மேல் குவிந்த போது, அவன், சித்தப்பா மகன் காதைக் கடித்தான். கடிக்கப்பட்டவன், கடித்துக் கொண்டிருந்த உதடுகளை விட்டான்.

‘தமிழரசி அண்ணி, மெட்ராஸ்ல வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து மேடைபோட்டு பேசுறிங்களாம். இப்போ என்னடான்னால், நாங்க கொடுக்கிற பணத்தை ஒப்பா வாங்குறார். நீங்க பேசாம நிக்கிறீங்க. என்ன நாயம்?”

தமிழரசி விட்டுக் கொடுக்காமல் பேசினாள் : ‘சில சமயம் வரதட்சணை என்கிறது, ஒரு பெண்ணுக்கு, பிறந்த வீட்ல இருக்கிற சொத்துக்குக் கொடுக்கிற நஷ்ட ஈடாக்கும்.’’

“என்ன ஈடோ? ஒங்க அப்பா கிட்ட இருந்து இப்போ கொடுத்த ரூபாயை வட்டியும் முதலுமாய் வசூலிக்கத் தான் போறோம். இல்லியா தாமோதரன்?’’

தமிழரசி, சின்னச் சின்ன சிரிப்புகளாய் சிரித்து, தாமுவைப் பார்த்து விட்டு, தன்னையும் பார்த்து விட்டு, கூட்டத்தைப் பார்த்தாள். கூட்டத்தின் பார்வை ஒட்டு மொத்தமாய் தன்மேல் படுவதை உணர்ந்து, மணப் பெண்ணின் அறைக்குள், மணப்பெண் போல் வெட்கப்பட்டு ஓடினாள்.

விஜயாவை அவள் நெருங்கியபோது, அந்த அறைக் இருந்த இன்னொரு சின்ன அறைக்குள் இருந்து “அண்ணி... அண்ணி” என்று சத்தம் கேட்டது. தமிழரசி உள்ளே போனாள். பொன்மணி, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கேவினாள். இதுவரை பொன்மணியின் நினைவே இல்லாமல் இருந்த தமிழரசிக்கு, அப்போதுதான் ஞாபகம் வந்தது. நேற்றே தாமோதரனை, மாலையில் தனியாகச் சந்தித்தபோது, பொன்மணிக்கு நாகர் கோவில் கல்யாணம்’ பிடிக்கவில்லை என்பதைச் சொன்னாள்.

உடனே அவன் ‘ஊர் ல காதல் எதுலயும் சிக்கி இருக்காளா என்றான். அப்டில்லாம் கிடையாதுன்னு அவளே சொல்லிட்டாள்’ என்று தமிழரசி பதிலளித்ததும், தாமோதரன், ‘கல்யாணம் ஆகிற சமயத்துல, எல்லாப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒருமாதிரி பயம் வருமாம். இந்த பயத்தை பொன்மணி, கல்யாணத்துமேல ஏற்பட்ட வெறுப்பாய் நினைக்கிறாள். நீயும் அவள் கிட்ட எடுத்துச் சொல்லு. பக்குவமாய் பேசி அவளை ரெடிபண்ணு’"என்றான். "இப்போ வந்திருக்கிற பையன், அவள் சுபாவத்துக்கு ஏற்ற மாப்பிள்ளை’’ என்றான்.

தமிழரசிக்கு, அவன் சொல்வது நியாயமாகவே தெரிந்தது. கலைந்த தலையோடு, குலைந்த குரலோடு விம்மிய பொன்மணியைப் பார்க்க அவளுக்கே பரிதாபமாக இருந்தது. ஆனாலும் அவளை உரிமையோடு சாடினாள்:

“என்ன பொன்மணி! பொண்ணுப் பிறந்தால் ஒருத்தனோட வாழ்ந்துதானே ஆகணும். மாப்பிள்ளை நல்ல பையனும். நல்ல அழகளும். வேணுமுன்னுல் மாப்பிள்ளையை இங்கே வரவழைப்போம். அவனைப் பாரு. பிடிக்கலன்னா வேண்டாம். ஒருத்தனைப் பார்க்காமல் கழுத்தை நீட்டுறது தப்பு. அவனைப் பார்க்கும் முன்னுல பிடிக்கலன்னு சொல்றதும் தப்பு. ஒங்க அண்ணா சொல்றது மாதிரி கல்யாணம் கூடுற சமயத்துல ஏற்படுற படபடப்பைப் பற்றிக் கவலப்படாதே. கல்யாணம் ஆகிட்டால் சரியாயிடும்.’’

பொன்மணி, தமிழரசியிடம் ஏதோ சொல்லப் போனாள். இதற்குள், தற்செயலாக அங்கே வந்த தாமோதரன் அண்ணன் முத்துலிங்கம் என்னம்மா ரகசியம்... எனக்கும் சொல்லப்படாதா?’ என்று சிரித்தபடியே கேட்டார். சிறிதுநேரம், தமிழரசியிடம் எதை எதையெல்லாமோ விசாரித்தபடி நின்றார். இதற்குள் வெளியே நின்ற பெண்கள்கூட்டம் உள்ளே வந்து விட்டது. பொன்மணியால், தமிழரசியிடம் தன் விவகாரத்தை முறையிட முடியாமலே போயிற்று.

இரவில், தமிழரசி, தாமோதரனைப் பற்றிய போதை நினைப்போடும், இடையிடையே பொன்மணிக்கு இன்னும் எடுத்துச் சொல்ல வேண்டிய போதனை நினைப்புடனும் தூக்கத்தைத் தூங்க வைத்து விட்டு, தனியே புரண்டாள். மறுநாள் காலையிலேயே, அத்தை வீடு, அக்கா வீடு, மாமா வீடு என்று பல வீடுகளுக்கு, அழைப்பின் பேரில் சென்று விட்டாள். மத்தியானம் வீட்டிற்குத் திரும்பிய போது, பொன்மணி அவளுக்காக வெகுநேரம் காத்திருந்ததாக கலாவதி சொன்னாள். எப்படியோ, பொன் மணியை அப்புறம் அவளால் பார்க்க முடியவில்லை.

மாலையில், கிணற்று மேட்டில் தாமோதரன் முன்னதாகப் போய் காத்திருந்தான். கமலைக் கல்லில் உட்கார்ந் திருந்தவன், வேகமாக வந்து கொண்டிருந்த தமிழரசிக்காக, கைக்குட்டையை எடுத்து, அருகே கல் பகுதியைத் துடைத்தான். அந்தச் சமயத்தில் அங்கு வந்துவிட்ட தமிழரசி, எதிர்க்கல்லில் உட்கார்ந்து, அவனைப் பார்த்து "நல்லாத்தான் திட்டம் போடுறீங்க’’ என்று சொல்லி, தலையை ஆட்டினாள். பிறகு "நேற்று ஒங்க சித்தப்பா மகன் மூலம் எப்டில்லாம் கூத்து அடிச்சிட்டிங்க. குரங்கு... குட்டிக் குரங்கு... கைய வச்சு சூடுபார்க்குமாமே அது மாதிரி"’ என்றாள்.

. “நான் குரங்காவே இருந்துட்டுப் போறேன். ஆன இந்தக் குரங்கு கைல...இந்தப் பூமாலை எப்போ வரப்போவுதாம்? நம்மளால இனிமேல் நாகர்கோவிலுல தனியாய் இருக்க, முடியாதும்மா. கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்?’’ -

“எப்போ வேணுமுன்னாலும் வச்சுக்கலாம். ஆனல் நம்மளால மெட்ராஸ்ல இருந்து நாகர்கோவிலுக்கு வரமுடியாது.”

“ஆல் ரைட் சீதை இருக்கும் இடந்தான் ராமனுக்கு அயோத்தி. நான் மெட்ராஸ்ல ஒன்னோட குடித்தனம் செய்யத் தயார். ஆனால் எங்க டிபார்ட்மென்ட்ல என்னை டிரான்ஸ்பர் பண்ண மாட்டாங்களே."

“ஓங்க டிரான்ஸ்பரை என் பொறுப்புல ஒப்படைச்சிடுங்க. ஒங்க டைரக்டர் ஜெனரல் மிஸ்டர் ராதா கிருஷ்ணனை டி.வி.யில் இன்டர்வியூ செய்திருக்கேன். இன்னொரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் பொன்பரமகுரு, போலீஸ் கமிஷனர் ஶ்ரீபால் சார். இவங்களோட பல இலக்கியக் கூட்டத்துல பேசியிருக்கேன். என் 'ஹப்பிக்கு” டிரான்ஸ்பர் வேணுமுன்னு நான் நியாயமா கேட்கிறதை நிறைவேற்றாமலா போயிடுவாங்க.”

“அப்படின்னா ஒண்ணு செய்யேன். என் பேரு, புரமோஷன் பேனர்ல இருக்குதாம். ஒன் வாயால ஒரு வார்த்தை...”

நோ சார்,நோ. என் ஹஸ்பெண்ட் தாமோதரனுக்கு ஒரு சின்ன டிரான்ஸ்பர் கேட்கலாம். புரமோஷனைப் பற்றி மூச்சே விடமுடியாது. அப்படி இருக்கையில் ஆப்டர் ஆல் காதலன் தாமுவுக்கு எதையுமே கேட்க முடியாது! இப்போ நான் சொல்றதைக் கேளுங்கள். காலையில நமக்கு குட்டாம்பட்டியில் கல்யாணம். மறுநாள் மெட்ராஸ்ல ரிசப்ஷன். இதுக்குள்ள, நீங்க நாகர்கோவிலுல டூட்டிய ஒப்படைச்சுட்டு, மறுநாள் காலையில மெட்ராஸ்ல டூட்டில சேர்ந்துட்டு, சாயங்காலம் ரிசப்ஷன்ல மாப்பிள்ளைக் கோலம் போடலாம். அதாவது இந்தப் பொண்ணு கழுத்துல தாலி விழுந்தவுடனே டிரான்ஸ்பர் ஜெட்வேகத்துல வருமுன்னு சொல்ல வந்தேன்."

‘'நீ சொல்றதைப் பார்த்தால், கல்யாணம் ஆச்சுதா, முதலிரவு முடிஞ்சுதான்னு கிடையாது. அதுக்கு நாலைந்து நாளேக்குக் காத் திருக்கணும். உ.ம்...”

“சீ... பேசுறதப் பாரு...??

“சரிதாம்மா... வெட்கப் பட்டதுபோதும், இருக்கதே கொஞ்சநேரம். ஏதாவது பேசு ’’

“ஒன்று சொல்ல மறந்துட்டேனே. பொன்மணி என் கையைப் பிடிச்சுட்டு நேற்றுக்கூட அழுதாள். அவளேப் பார்க்கவே பரிதாபமாய் இருக்கு. கல்யாணத்தை நிறுத்தாட்டாலும் தள்ளியாவது போடுங்களேன்.’’

“நீ வேற... பெண்களோட மனம் ஆண்களுக்கும், ஆண்களோட மனம் பெண்களுக்குந்தான் தெரியும். இப்பவும் சொல்றேன். அந்தப் பைத்தியம் கல்யாணப் படபடப்பை, வேற விதமாய் நினைக்குது. கல்யாணம் ஆகட்டும் பாரு. வீட்டுப்படியை தாண்டுனாலும் தாண்டுவாள். ஆனல் நாகர்கோவிலை தாண்டவே மாட்டாள்."

“ஆமா .. போன வருஷம் 'உம்' முன்னு இருந்தீங்களாம். ஆனால் இந்த வருஷம் வெளுத்துக் கட்டுறீங்களாம். ஊர்ல இதுதான் இப்போ பேச்சு...!”

‘நான் பேசுறேன் என்கிறதைவிட நீ பேச வச்சுட்டே...!”

“நான் ஒங்களே வச்சேனோ இல்லியோ, மெட்ராஸ் மேடையில... பெண்கள் விடுதலையைப்பற்றி முழக்கம் செய்யுற நான்கூட... நீங்க என்னை அடிக்கிறவராய் இருந்தால் கூட, வாழ்ந்தால் ஒங்களோடதான் வாழணுமுன்னு நினைக்க வச்சு, என்னை அடிமையாய் மாற்றிட்டீங்களே... பெரிய ஆளுய்யா நீங்க...”

‘அடிமை கிடிமைன்னு ஏன் அபத்தமாய் பேசுறே?’’

"காதலே ஒரு அபத்தந்தானே. இல்லன்ன பத்து வருஷம் பாராமுகமாய் இருந்த என்னால, இப்போ பத்து நிமிஷங்கூட பிரிய மனம் வரலியே...”

இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு, ஒருவரை ஒருவர் மவுனமான அழுத்தத்துடன், பாசம் பரிணாமப்பட்டது போல் பார்த்துக் கொண்டார்கள். தாமோதரன், அவள் கையைப் பிடித்து வளையல்களை உருட்டினான். எவராவது பார்க்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காக அக்கம் பக்கம் கண்போட்ட தமிழரசி, தாமோதரனைத் தள்ளி விட்டு விட்டு, ஸ்டெடியாக உட்கார்ந்தாள்.

அப்போது தாமோதரனின் அண்ணன் முத்துலிங்கம், வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார். அவர்களது தனித்த நிலையைப் பொருட்படுத்தாமல் தாவி வந்தார்; கோர்வை இல்லாமல் கத்தினார்.

"நம்ம பொன்மணியை வேலக்காரப் பயல் வினை தீர்த்தான் கூட்டிக்கிட்டு ஓடிட்டான். தென்காசியில அவங்களப் பார்த்ததா மண்டையன் சொல்லிட்டுப் போறான். நான் நாலாகரையும் கத்தி கம்போட ஆட்களை அனுப்பியிருக்கேன். அடுத்துக் கெடுத்த அந்த செறுக்கி மவன, இன்னைக்கு ராத்திரிக்குள்ள கொன்னு... குழி தோண்டிப் புதைக்காட்டால் நீ இன்ஸ்பெக்டரும் இல்ல; நான் இன்ஸ்பெக்டர் அண்ணனும் இல்ல. உ.ம்... புறப்படுடா, துப்பாக்கி வச்சிருக்கியா?’’

தமிழரசி திடுக்கிட்டாள். முத்துலிங்கத்தை உற்றுப் பார்த்தாள். கண்களில் கொலை வெறி; பற்களில் நரமாமிச வேகம்; போக வேண்டாம் என்று சொல்லாமல் சொல்வது போல், தாமோதரன் கையைப் பிடித்துக் கொண்டாள். அதே சமயம் ஏதோ ஒரு விபரீதம் விபத்தாக வரப் போவதையும் புரிந்து கொண்டாள்.