நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 6

6

மிழரசியால், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சித்தப்பா மகன் வினைதீர்த்தானை, தன் சொந்த அண்ணன் ராஜதுரையைவிட ஒருபடி அதிகமாகவே நினைத்திருந்தாள். சி ன் ன வயதிலிருந்தே இரட்டைக் குழந்தைகள் போல் பழகியவர்கள். அப்படிப் பட்டவன், தன்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், வாழ்க்கையைப் பற்றி இன்னும் முழுமையாகத் தெரியாத ஒரு அப்பாவிப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்பதை நினைக்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அவளுக்கும், அவன் செய்தது அசல் துரோகமாகவே தெரிந்தது. முத்துமாரிப்பாட்டி அன்று பொன்மணியை, கன்னத்தில் 'கன்னம்’ போடுபவள் என்று வர்ணித்ததும், வினை தீர்த்தான் தேங்காய் பறிக்கும் போது, பொன்மணி அவசரமாக ஓடியதன் அர்த்தமும், இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. இருவரும் தேங்காயை சிதறடிப்பது போல், குடும்ப மானத்தையே சிதறடித்து விட்டார்கள்!

முத்துலிங்கமும், தாமோதரனும் முன்னல் ஜோடியாக நடக்க, தமிழரசி அவர்கள் பின்னல் நடந்தாள். மெளனம் பேயாட்சியாகியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, முத்துலிங்கம் "எட்டி நடப்பா. இன்னைக்கு ராத்திரிக்குள்ள அவனைப் பிடிக்காட்டால் அப்புறம் ஆள் அகப்படுறது சிரமம். மொதல்ல போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம் அவங்க உதவியில்லாமப் பிடிக்க முடியாது பாரு" என்றார்.

தமிழரசி, முத்துலிங்கத்தையே உற்றுப் பார்த்தாள். தாமோதரனைவிட வளர்த்தி. எல்லோரையும் மேலே இருந்து கீழ்நோக்கிப் பார்க்கும் கண்கள். லேசாக நீண்ட கழுத்து. நடக்கும்போது கழுகு பறப்பதைப் போல் கழுத்தை நீட்டும் தோரணை. நாற்பத்தைந்து வயதிலும், வயதை வரைப்படுத்தியது போன்ற உடம்பு.

மூவரும், தத்தம் மனவெளிக்குள் அலைமோதி, புளியந் தோப்பைக் கடந்து, எல்லையம்மன் கோவிலுக்கருகே வந்த போது, முத்துலிங்கம் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யப் போனார்.

பைக்கின் பக்கவாட்டில் இருந்த லெதர் பேக்கை” திறந்தார். வெட்டரிவாள் ஒன்று கண்ணாடி மாதிரி பளபளத்தது. இதற்குள், சற்று தொலைவில், கானப் பயிர் தோட்டத்தில் நின்ற ஒருவர் "டேய் முத்து! ஒரே ஒரு நிமிஷம் வந்துட்டுப் போ. வினைதீர்த்தான் ரூட்ட நான் சொல்றேன். இன்னைக்கே பிடிச்சிடலாம்’ என்றார், உடனே, அப்படிச் சொன்னவரையே வினைதீர்த்தானாக நினைத்துப் பிடிக்கப் போகிறவர்போல், முத்துலிங்கம் ஒடினார்.

தமிழரசி தாமோதரனைப் பார்த்தாள். அவன் கண்களோ ஆகாயத்தைத் துழாவின. கைகள் மோவாயைப் பிசைந்தன. சற்று முன்புவரை, அவளே ரசித்துப் பார்த்த அதே அந்த நிலாக் கண்கள், இப்போது அக்கினிக் குழம்பாய் திரண்டு நின்றன. அவன் கோபத்தை வெளியே வார்த்தைகளாக்காமல், தன்னுள்ளேயே பாய்ச்சிக் கொண்டிருப்பது புரிந்தது. தமிழரசி, அவன் தோளைப் பிடித்துக் குலுக்கி "ஒங்களத்தான்... ஏன் இப்டி பார்க்கீங்க? ஒங்களத்தான்...ஒங்களத் தான்" என்றாள்.

அவனோ, அவளை குழந்தை போலவும், குழந்தையைப் போலவும் பார்த்தான். அவன் பார்த்த அவலப் பார்வையில் அவளுக்கு அழுகை வரும்போலிருந்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டு 'என்ன செய்யலாம்?’ என்றாள்.

தாமோதரன், அவளைப் பார்க்காமலேயே பதிலளி தான்:

“என்னaல நெஞ்சு வலியத் தாங்கிக்க முடியும். ஆனaல் முதுகு வலியைத் தாங்க முடியாது. நான் பொன்மணியைப் பற்றி எவ்வளவோ கனவு கண்டேன். அந்தக் கனவை வினைதீர்த்தான் கலைச்சிருந்தால்கூட பரவாயில்ல; முடிவையே மாற்றிட்டான். ஒன் சித்தப்பா மகன், கூட இருந்தே குழிபறிச்சுட்டான். எங்க குடும்பம் முழுவதையும் அதில் தள்ளி மூடிட்டான்.”

தமிழரசிக்கு 'சுரீர்” என்றது. அவன் சித்தப்பா மகனா? இப்படிப்பட்ட ஒருவனை சித்தப்பா மகன் என்று சொல்லலாமா? ஆமாம். சித்தப்பா மகன்தான். இல்லையானால், முத்துலிங்கம் அவனை வெட்டிப்போட வேண்டும் என்று சொல்லும்போது, இந்தப் பாழும் மனம் ஏன் படபடக்கிறது? சிறிது குழம்பிய தமிழரசி, தன் மனதைக் கைவசப் படுத்தியவள் போல், படபடப்பாக, உடலாட நின்ற தாமோதரனின் கைகளைப் பற்றியபடியே, மன்றாடும் குரலில் பேசினாள்:

"நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும், அவன் எனக்கு சித்தப்பா மகன்தான். அதுக்காக அவன் செய்த காரியத்தை அதிகமாகவே வெறுக்கிறேன். அதே சமயம் அவனை நீங்க வெட்டிப் போடுறதையும் என்னல் தாங்கிக்க முடியல. ஒங்க குடும்பத்துல ஒருத்தியாய் ஆகப் போகிறவள் என்கிற முறையில, நான் ஒண்னு சொல்லியாகணும். தயவு செய்து என்னைத் தப்பாய் நினைக்கப் படாது. நடந்தது என்னமோ நடந்துட்டு. அதை முறைப் படுத்திப் பார்த்தால் நல்லது. அதுக்கும் மேல ஒண்ணு. எந்தச் சந்தர்ப்பத்திலேயும் நீங்க என்னைக் கைவிட்டுடப் படாது. ஒருவேளை பொன்மணி சொன்னபோதே, நான் உஷாராய் இருந்திருந்தால் இதைத் தடுத்திருக்கலாம். அவங்க ஒடிப்போனதுக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன். எந்தச் சூழ்நிலயிலயும் நீங்க...என்னை...”

‘அடடே... நீ ஏன் அழுகுறே? நான் ஒன்கிட்ட இருந்து விலகிடுவேன்னு ஒனக்கு அந்தமாதிரி எண்ணமே வந்திருக்கப்படாது. இன்னும் உண்மையைச் சொல்லப் போனால், ஒடிப் போனவள் வீட்ல சம்பந்தம் வேண்டாமுன்னு...ஒன் வீட்ல... ஒன் மனசை மாற்றிடப்படாதேன்னு எனக்குப் பயமாய் இருக்கு. என் தங்கை ஒடிப்போன சமயத்துல, எனக்கு இந்த மாதிரி எண்ணம் வரப்படாது. ஆனால் வருதே...!’’

தமிழரசி, கலங்கிய அவன் கண்களைக் கலக்கத்தோடு பார்த்தாள். பிறகு மெல்லிய-நையப் புடைக்கப்பட்ட குரலில், “அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். விஜயாவோட கல்யாணமும் நடந்தே தீரும். ஒரு விஷயம். இந்தக் காலத்துல, இந்த வீட்ல இருந்து இவள் ஓடிட்டாளாம் என்கிறதை யாருமே பெரிசா எடுத்துக்கிறதில்ல. அப்படி இருந்தும் அந்த அபவாதத்துக்கு பயப்படுற நீங்க, கொலைகார குடும்பமுன்னு ஒரு பட்டம் வாங்கணுமா? நல்லா யோசித்துப் பாருங்க... ஒங்க அண்ணன்கிட்டேயும் சொல்லுங்க...”

“நான் யோசிக்காமல் இல்லை. எப்படியாவது அவளை வினை தீர்த்தான் கிட்டே இருந்து பிரிச்சு, ராவோடு ராவாக நாகர்கோவில் மாப்பிள்ளைக்கு கட்டி வச்சுடலாமான்னு கூட நினைச்சேன். ஆனால் அது அயோக்கியத்தனம். நான் சொல்றதை வேதவாக்காய் நினைக்கிற அந்த வாத்தியார் மாப்பிள்ளைக்கு நான் துரோகம் செய்யப்போறதில்லை.”

"ஒங்க அண்ணன் கிட்ட..."

"எப்படி தமிழு சொல்ல முடியும்? எனக்கே அந்தத் தேவடியாமவனை ஸாரி... எனக்கே வினைதீர்த்தானை கண்ட துண்டமாய் வெட்டணுமுன்னு தோணுது. எங்க அண்ணனைப் பத்தி சொல்ல வேண்டியதில்ல. ஒரு சிலர் முயலுக்கு மூன்று கால்னு சாதிப்பாங்க. ஆனால் இவரோ, பிறத்தியார் முயலுக்கும் மூணு கால்தான் இருக்கணுமுன்னு ஒவ்வோரு முயலோட ஒரு காலையும் ஒடிக்கிற டைப். அவர்கிட்ட சுத்தி வளைச்சுத்தான் பேசணும். எப்படியோ விஷயத்தை நல்லதோ கெட்டதோ அதன் போக்கில வி ட் டு ட ப் போறேன். வினைதீர்த்தானைக் கொன்னாலும் தப்பில்ல.’’

தமிழரசியும், தாமோதரனும் மேற்கோண்டு பேசாமல், தங்களுக்குள்ளேயே தத்தளித்துக் கொண்டிருந்தபோது, முத்துலிங்கம் பாய்ந்து வந்தார். வந்த வேகத்திலேயே, பைக்கை உதைத்தபடி "செறுக்கிமவன். நம்ம தங்கச்சியை ஆத்துல குலத்துல தள்ளிடுவான்னு நினைக்கேன். ஏன்னால், அவள் போட்டிருந்த கம்மலைக்கூட கழற்றி மேஜையில வச்சுட்டு, அவன்கூட மொட்டையாய் ஒடிட்டாள். மேஜைமேல கம்மலைப் பார்த்த பிறகுதான் எங்களுக்கு சந்தேகமே வந்தது.”

‘வெறுங்கையோட போறவளை... இந்த செறுக்கி மவன் எத்தனை நாளைக்கு காலம் தள்ளுவான்? அவள் எக்கேடும் கெடட்டும். கடைசியில வேலைக்காரன்கிட்ட பொண்ண விட்ட குடும்பமாய் போயிட்டோம் பாரு. எல்லாம் ஒன்னால வந்தது. நீ ஊருக்கு வரும்போதெல்லாம் அவள் மேல உயிரை விட்டே. அவள் எல்லாரையும் பந்தாடிட்டாள். நீயும் வீட்டுக்கு வந்தோம் வீட்லயே இருப்போமுன்னு நினைக்கியா? ஒன் புத்திதானே ஒன் தங்கச்சிக்கும் இருக்கும்...”

தாமோதரனும், இதுவரை எதிர்த்துப் பேசியறியாத அண்ணனை சூடாகக் கேட்டான்: “நான் மட்டும் வீட்டோட இருந்திருந்தால் ஆரம்பத்துலயே சுண்டுபிடிச்சு, முளையிலேயே கிள்ளியிருப்பேன். ஒனக்குப் பட்டந்தான் முரடன்னு... ஒரு பச்சைக்குழந்தை மாதிரியே இருந்திட்டே...’

‘சரிதாம்பா...என் மேல தப்புத்தான். அதுக்காகத் தான் இப்போ துடிக்கேன். மொதல்ல வண்டில ஏறு: போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம்.’’

ராணுவ தளபதிபோல் கம்பீரமாகவும், களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாய் துடிக்கும் வீரன் போலவும் அரற்றிய முத்துலிங்கத்தையே, தமிழரசி பயத்தோடும், பரிதாபத்தோடும் பார்த்த போது, தாமோதரன் வண்டியில் ஏறினன். தமிழரசி வேண்டாம்... வேண்டாம்’ என்பதுபோல், முரட்டுக் குரலோடு துடித்த மோட்டார் பைக் வண்டிக்கு, முன்னுலும் பின்னலுமாகப் போனள். போகிறவர்கள் எப்படி வரப் போகிறார்களோ? வருவார்களோ, வழியிலேயே கைதாகிறார்களோ? வினைதீர்த்தான் என்ன ஆகப்போகிறானோ?

தமிழரசி கண்களால் கெஞ்சி, கால்களால் மண் கிளறி, கைகளால் முட்டி மோதியபோது, மோட்டார்பைக், ஏவு கணேபோல் பாய்ந்தது. பின்னால் உட்கார்ந்திருந்த தாமோதரன், சற்று தொலைவில், கள்ள ச்சாராயத்தைக் குடித்துக்கொண்டோ அல்லது காய்ச்சிக்கொண்டோ இருந்த உள்ளூர் கும்பலைப் பார்த்துவிட்டு, பிறகு தமிழரசிக்கு அவர்களை கண்களால் சுட்டிக்காட்டிவிட்டு, அவளை வீட்டுக்குப் போகும்படி கைகளால் சைகை செய்தான்.

தனித்து விடப்பட்ட தமிழரசி, அங்கேயே சிறிது நேரம் நின்றாள். கண்ணசைத்து காதல் செய்யத் துவங்கிய கண்ணிமைக்கும் நேரத்திற்குள், என்னவெல்லாமோ நடந்துவிட்ட ஆற்றாமையில், நின்று நின்று நடந்தாள். ஆகாயத்தில் வெள்ளை ஆந்தை ஒன்றை, காக்காக்கூட்டம் துரத்திக் கொண்டிருந்தது மைனாக் குருவி ஒன்றுக்கு, பூனை ஒன்று பதிபோட்டுக் கொண் டிருந்தது.

அந்தக் கருகிய மாலைப்பொழுதில், அவள் நடந்ததை உருவகப்படுத்துவதற்கு நிற்பது போல் நின்று, அதை நினைக்கப்படாது என்பதுபோல், வேகவேகமாய் நடப்பது போல் நடந்து, கடந்த ஒரு சில தினங்களாக, தன் உள்ளத்திலும், உடம்பிலும் செங்கோலோச்சிய அந்த இனிமை யான உணர்வுகளே, இப்போது கொடுங்கோல் ஆதிக்கம் புரிய, தட்டுத்தடுமாறி நடந்தாள்.

வினைதீர்த்தான் செய்த துரோகச் சுமையோடும், அவனை முத்துலிங்கம் சொல்லுக்குச் சொல் வேலைக்காரப் பயல்’ என்று சொன்னதால் ஏற்பட்ட சுயமரியாதைக் குறைவோடும், இதற்குக் காரணமான சமூக நெறிகளை நெறிக்க வேண்டும் என்ற ஆவேசத்துடனும், கடைசியில் சித்தப்பா மகன், எல்லோரையும் பைத்தியமாக நினைத்து, பைத்தியக்காரத்தனத்தை செய்து விட்டானே என்ற வெறுப்போடும் நடந்தாள். அதேசமயம், இப்போதுதான் பழகிய தாமுவை, தன்னல் பிரிய மனமில்லை. அவர்கள் எவ்வளவுநாள் பழகினர்களோ, எப்படிப் பழகினர்களோ என்ற மனக் கணக்கைப் போட்டுப் பார்த்தாள். முடிவும். “சைபர்' போல் தலைச்சுற்றாகியது.

தமிழரசி ஊருக்குள் வந்தபோது, மங்கிய நிலா வெளிச்சத்தில், ஊரார் கூட்டங்கூட்டமாக நின்று, கிசு கிக்ப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளைப் பார்த்துவிட்டு, சிலர் தமது கூட்டங்களில் இருந்து கட்சி மாறி அவளிடம் வந்தார்கள். “பொன்மணி குலுக்கும் போதே தெரியும். கடைசியில் அவளுக்கு வேற ஆம்புள கிடைக்காமல், இந்த அப்பாவிப் பயதான் அகப்பட்டிருக்கான்” என்றவர்கள், அவளை தாமோதரன் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவளாகக் கருதி, "அறியாத பொண்ண,. அவன் அப்டி கடத்தியிருக்கப்படாது’ என்றவர்கள், "எல்லார் தலையிலயும் மண்ண அள்ளிப் போட்டுட்டு ரெண்டுபேரும் கம்பி நீட்டிட்டாவ பாரு" என்று பொதுப் படையாகப் பேசியவர்கள்- இவர்கள் அனைவரையும் ஒரே நோக்காய் நோக்கியபடியே தமிழரசி வீட்டுக்குள் வந்தாள்.

அன்னை பகவதி மகளிடம், 'ஒனக்கு விஷயம் தெரியுமா என்று கேட்கப் போனாள். தமிழரசியின் முகம் போன போக்கை வைத்தே, அவளுக்கும் விஷயம் தெரிந்து விட்டது என்பதை யூகித்துக் கொண்ட பகவதியம்மா, வராண்டாவில் அமர்ந்து, சுவரில் தலையை வைத்துத் தேய்த்தபடி, முகத்தைக் கைகளால் துடைத்தபடி தோன்றிய மகனைப் பார்த்தாள். தமிழரசி, அம்மாவிடம் "அப்பாவை எங்கேம்மா...’’ என்றாள். -

ராஜதுரை தங்கைக்குப் பதிலளித்தான்.

“அவரு, தாமோதரன் அப்பாவோட போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருக்காரு. நம்ம வீட்ல கல்யாணம் கூடப்போற சமயத்துல, வினைதீர்த்தான் இப்டிப் பண்ணிட்டதுல அப்பாவுக்கு சொல்ல முடியாத கோபம். அவனை ரெண்டுல ஒண்ணு பார்த்துடணுமுன்னு கத்திக் கிட்டே போனாரு. பொண்ணப் பறிகொடுத்தவங்களுக்கு நாமும் கூடமாட ஒத்தாசை செய்யனும் பாரு. செறுக்கி மவனை ஒரே வெட்டாய் வெட்டணும்.”

தமிழரசி, அண்ணனின் முகத்தில், வேதனையும், வேகமும் ஒன்றை ஒன்று விடாமல் வட்டமடிப்பதைப் பார்த்தாள். அவன் போக்கிற்கும் தனக்குள்ளேயே நியாயம் சொல்லிக்கொண்டாள். கல்யாண மாப்பிள்ளை வேடத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளப் போகிற சமயத்தில், வேடம் கலையுமோ என்ற பயம். அது, சித்தப்பா மகனையும், செறுக்கிமவன் என்று பேசவைக்கிறது. காலத்தோட கோளாறோ? இல்ல காதலோட கோளாறோ?

தமிழரசியும், தன் பங்குக்கு வினைதீர்த்தானை திட்ட வேண்டும் என்று ராஜதுரை எதிர்பார்த்தான். அவள் திட்டாத தில் அவனுக்கு ஏமாற்றம். அவளை முறைத்த படியே பார்த்தான்.

சிறிது நேரத்தில் சித்தப்பா மாடக்கண்ணுவும், அவர் மகள் கலாவதியும் வீட்டுக்குள் வந்தார்கள். ராஜதுரை அவர்களைப் பார்க்காததுபோல் பாவித்தான். மாடக்கண்ணு, மார்போடு சேர்த்துத் தூக்கிய உள்ளங்கையில், தலையைக் கவிழ்த்தபடி நின்றார். கலாவதி சிதறிய முடியோடு, சிந்திக்கும் திராணியற்று, ஆறுதல் தேடுபவள் போல் தமிழரசியைப் பார்த்தாள். சிறிது நேரம் தயங்கி நின்ற மாடக்கண்ணு, பிறகு படபடப்பாகப் பேசினார்.

“பன்னாடப்பய. இப்டிப் பண்ணுவான்னு நான் நினைக்கல. நமக்கும் கல்யான வயசுல ஒரு தங்கச்சி இருக்காள்னு நினைக்காமல், குடியைக் கெடுத்திட்டான். தங்கச்சியாய் நினைக்க வேண்டியவள, தாரமாய் நெனச்சுட்டான். எனக்குக் கையும் ஒடல, காலும் ஒடல!’’

சித்தப்பா பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்த தமிழரசிக்கு, அவர் முகத்தில் அப்பிய துயரம் தொத்தியது. இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசாத சித்தப்பா பேசவில்லை. வேதனைகளை வெளிக்கொண்டு போடுகிறார்! பாவிப் பயல்! இந்தத் தள்ளாத மனிதரை விட்டுட்டுப் போக எப்படி அவனுக்கு மனம் வந்தது?

தமிழரசி, சித்தப்பாவின் துயரத்தைப் பங்கிட்டுக் கொள்பவள்போல், அவரை நோக்கி “உட்காருங்க சித்தப்பா" என்றாள். அவரும் நாற்காலியில் உட்காராமல் தரையில் உட்கார்ந்தார்.

ராஜதுரையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒடிப் போன பயலோட அப்பன்கிட்ட என்ன பேச்சு? இவன் சித்தப்பா இல்ல; வேலைக்காரப் பயலோட அப்பன். இவனும், இவன் மகளும் இங்கே வந்து போனது தெரிந்தால், விஜயா வீட்டில் என்ன நினைப்பார்கள்? இது ஏன் இந்த தமிழரசிக்குத் தெரியல? அவளுக்குத் தெரியாது. நாம சொல்லிக் கொடுக்கலாம்...

ராஜதுரை வராண்டாவில் இருந்து குதித்து, மாடக்கண்ணு அருகே போய் நின்று கொண்டு, ஏகத்தாளமாகக் கொக்கரித்தான்.

"ஏய்யா பெரிய மனுஷா...ஒன் மகனை வழியனுப்பி வச்சுட்டு இப்போ ஒண்ணுந் தெரியாதவன் மாதிரி நடிக்கிறியாக்கும். மொதல்ல வீட்டை விட்டு மரியாதியா நடையைக்கட்டு. போறியா... கழுத்தைப் பிடிச்சுத் தள்ளட்டுமா?”

தமிழரசி, விக்கித்துப் போனாள். கலாவதி, தலை கழுத்தில் இருந்து துண்டானதுபோல் ஆடிப்போனாள். ஆனல் அந்த ‘பைத்தியாரத் தர்மர்' மாடக்கண்ணுவோ, கூடப்பிறந்த அண்ணன் மகன் வேறு யாரையோ பேசுகிறான் என்று நினைத்து, வழியைப் பார்த்தார். பகவதியம்மாளோ, எதுவும் நடக்காததுபோல், தன் வேலையைக் கவனித்தபடி நின்றாள்

எப்படியோ மாடக்கண்ணு நிலைமையைப் புரிந்து கொண்டு, துண்டை உதறிப்போட்டபடியே எழுந்தார். பிரமிப்பில் இருந்து விடுபட்ட கலாவதி, யதார்த்தத்தில் பொசுங்கி, ஒப்பாரிபோல் பேசினாள்,

“நாங்க ஒரு பாவமும் அறியாதவங்க அண்ணாச்சி... அந்த பாழாப்போற பாவி இப்படிப் பண்ணுவான்னு எங்களுக்குத் தெரியவே தெரியாது அண்ணாச்சி... ஓங்க கிட்ட அடைக்கலமுன்னு யோசன கேட்கத்தான் வந்தோம். எங்கப்பாவ பேச, ஒனக்கு எப்படி அண்ணாச்சி மனசு வந்துது?’’

ராஜதுரை மேலும் கோபப்பட்டு, கூப்பாடு போட்டான் :

“வாம்மா மூளியலங்காரி... மூதேவி சண்டாளி: ஒன்னைப்பற்றி எனக்குல்லா தெரியும். ஒன் அண்ணன் இருக்கிற இடத்தை மட்டும் நீ சொல்லல, முதல் பலி நீ தான். அது அப்புறம். இப்போ ஒப்பன கூட்டிட்டு மரியாதியா போ. ஒன்னத்தான்... வெளில போ நாயே..."

பிரமித்து எழுந்த தமிழரசி, எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்ற அண்ணனைப் பார்த்தாள். தலை கவிழ்ந்து உடல் கவிழ்ந்து நின்ற சித்தப்பாவையும், தன்னையே அடைக்கலம் தேடி நோக்கிய கலாவதியையும் பார்த்தாள். அப்படிப் பார்க்கும்போது அண்ணனின் கை, சித்தப்பாவின் பிடரிக்குப் போவதையும் பார்த்தாள். த மி ழ ர சி அண்ணனின் கையைப் பிடித்தபோது, அவன் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவள் கன்னத்திலேயே ‘பளார்’ என்று அடித்துவிட்டு, அப்புறம் யோசிப்பது போல் கண்களால் கெஞ்சினான். பிறகு எல்லாம் இந்த மூதேவிகளால வந்துது” என்று சொல்லி, மாடக் கண்ணுவின் கழுத்தைப் பிடித்து மீண்டும் தள்ளப் போனான்.

தமிழரசி கன்னத்தைத் தடவியபடியே, போகப் புறப்பட்ட சித்தப்பாவை வழிமறித்தபடியே, அண்ணனுக்கு சவாலிட்டாள்.

"ஒனக்கு இவர் யாரோ? ஆனால் எனக்கு சித்தப்பா. இந்த வீட்ல எனக்கும் சட்டப்படி ஒரு பங்கு உண்டு. நீ அவரை போன்னு சொன்னால், என்னால அவரை ‘வான்னு’ கேட்க முடியும். என்னை துரத்துமுன்னால, என் சித்தப்பாவையோ, என் தங்கச்சியையோ நீ துரத்த முடியாது.”

பகவதியம்மாள் பரபரத்தாள். ராஜதுரை சீறப் போனான். பைத்தியாரத் தர்மரோ அண்ணன் மகள் கழுத்தைக் கட்டிக்கொண்டு "என் மவளே... என் மவளே... நான் ஒரு பாவமும் அறியலியே மவளே’’ என்று பூமி பிளக்கப் புலம்பினார்.