நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 8

8

போலிசாரை ‘அடித்துப்' பேசிய முத்துமாரிப் பாட்டி, பேச்சற்றுப் போனது போல், அவள் குரல் தமிழரசிக்குக் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, சவுக்குத் தோப்பில் வீசும் காற்றின் ஓசைபோல, வீச்வீச்” என்ற கேட்டது. 'திருட்டுச் செறுக்கி...’ என்ற ஆண்குரல் ஒன்று, ஆவேசமாய் கேட்டது. கோழிகள் அங்குமிங்குமாய் பறந்து, வீட்டுக் கூரைகளில் தாவி, பனையோலைகளை சலசலப்புச் செய்த சத்தம் கேட்டது. கூட்டமாக நிற்பது போல் தோன்றிய ஊராரின் கிசு கிசு சத்தம். ஆட்கள், அங்கிருந்தோ அல்லது அங்கேயோ ஒடும் காலடிச் சத்தம். கலாவதியின் செல்லப் பசுமாடு “ம்மா...’ என்று கனைக்கும் சத்தம்-ஆகிய அத்தனை சப்தங்களும், தமிழரசியின் சப்த நாடிகளில் பாய்ந்து, அவளை நிமிர வைத்தன. எல்லா சப்தங்களையும் நிசப்தமாக்குவது போல் “வேண்டாய்யா ... வேண்டாய்யா... இதுக்குமேல எனக்குத் தாங்க முடியாதுய்யா...’ என்று கெஞ்சும் குரலோடு, முத்துமாரிப் பாட்டி ஒப்பாரி போட்டது கேட்டது. கலாவதியின் முனங்கலும், மாடக்கண்ணுவின் ஊமைக்குரலும் கலந்து கேட்டன.

தமிழரசியின் கால்கள் சக்கரங்களாயின. முகத்தைக் கழுவாமல் முந்தானையால் துடைத்தபடியே, தளத்திற்கு வந்தவள், வராண்டாவில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவள் தந்தை அருணாசலம், அன்றைய தினசரிப் பத்திரிகைக்குள் முகத்தை மறைத்து, பூலோகத்தின் அந்தப் பகுதியில் எதுவும் நடக்கவில்லை என்பதுபோல் கண்களை மூடிக்கொண்டார். மாட்டுத் தொழுவத்தில், ஒரு காளை மாட்டின் கொம்பை தடவி விட்டுக் கொண்டிருந்த ராஜதுரை, அவளைப் பார்த்ததும், வேறுபுறமாகத் திரும்பிக் கொண்டான். அம்மாக்காரி பகவதியம்மா, இப்போதும் எதுவும் நடக்காததுபோல், “காபியை சூடாக் கட்டுமா’ என்று மகளிடம் “கூலாகக்' கேட்டாள்.

தமிழரசி படபடப்பாய், பரபரப்பாய், விறுவிறுப்பாய், வெளியே ஒடினாள். பத்திரிகையில் இருந்து முகந்திருப்பிய, அருணாசலம், 'எங்கே போறே' என்று கேட்பதற்கு வாயெடுத்து வாய் மூடுவதற்கு முன்பாக, ராஜதுரை மாட்டின் இன்னொரு கொம்பை தடவுவதற்காக கையெடுத்து கை வைக்கும் முன்பாக, அவள் மறைந்து விட்டாள்.

வீதிக்கு வந்து, சப்தங்கள் சபதமிட்ட சித்தப்பா வீட்டிற்குள் போகப் போனவள், தெருவில் போலீஸ் ஜீப்பைப் பார்த்தாள். முத்துலிங்கம் மச்சானின் மோட்டார் பைக்கையும் கண்டாள். அவர் போலீசிற்கு வேண்டப் பட்டவர் என்பதைக் காட்டும் வகையில், அவரது பைக் போலீஸ் ஜீப்பை உரசிக் கொண்டிருந்தது.

வீடு தாங்காமல் வெளியே குவிந்திருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அத்தனை பேரும் அவளுக்கு வழிவிட்டு, அவள் பின்னாலேயே உள்ளே போனார்கள். மூன்று மண்சுவர் படிக்கட்டுக்களில் இறங்கி, சித்தப்பா செங்கோலோச்சும் ஒலே வீட்டின் முற்றத்திற்கு வந்தாள். தலைகீழான ‘ட’ வடிவத்தில் கட்டப்பட்ட அந்த வீட்டின் முன் வியாபித்திருந்த அகண்ட வெளிக்குள், மூன்றில் ஒரு பகுதியில் தெளிக்கப்பட்ட சாணநீர் முடியாக் கோலம் போல், ஒரு பானையில் கிடந்தது. ஆங்காங்கே லத்திக் கம்புகள் குடைந்ததாலோ, குத்தியதாலோ, அந்தப் பகுதி தன்னுள் இருந்த செம்மண்ணை, சதைக்கட்டி போல் காட்டியது. முத்துமாரிப் பாட்டி, குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி, வீங்கிப் புடைத்த முட்டிகளை ஊதிவிட்ட படியே "அட கரிமுடிவானுவளா...எங்களுக்கும் ஒரு காலம் வராமலா போகும்" என்று தனக்கு மட்டுமே கேட்கும் குரலில், போலீஸ் நடவடிக்கைகளைப் பார்த்தபடியே விம்மிக் கொண்டிருந்தாள். கூட்டமோ, போலீசாரின் லத்திக் கம்புகளின் வீச்சிற்கும், வேகத்திற்கும் ஏற்ப, கூடிக் கொண்டும், குறைந்து கொண்டும் இருந்தது.

தமிழரசி ஆவேசியாகி, பார்த்த இடத்தில்--

சித்தப்பா மாடக்கண்ணுவின் நீண்ட தலைமுடியைப் பிடித்து, தன் கைக்குள் வைத்திருந்த ஒரு போலீஸ்காரர், தன் கையைச் சுண்டிச்சுண்டி இழுத்து விட்டபோது, இன்னொரு போலீஸ்காரர், லத்திக் கம்பால் அந்த பைத்தியாரத் தர்மரின் முதுகிலும், தலையிலும் மாறி மாறி குத்திக் கொண்டும், குடைந்து கொண்டும் இருந்தார். “ஒன் மகன ஒளிச்சு வச்சிருக்கிற இடத்த மட்டும் நீ சொல்லல, அப்புறம் நீ எந்த இடத்துலயும் இருக்க முடியாது. கிழட்டுப் பயலுக்கு இவ்வளவு அழுத்தமுன்னால், எங்களுக்கு எவ்வளவு இருக்கும்’ என்று .நான்காவது போலீஸ்காரர் அதட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு போலீஸ்காரரின் பிடியில் சிக்கியிருந்த கலாவதி, எப்படியோ அந்தப் பிடியில் இருந்து விடுபட்டு. தந்தையின் முதுகுமேல் தன் மேனியை சுமத்திக் கொண்டு, *"எங்காப்பாவ விட்டுடுங்கய்யா, விட்டுடுங்கய்யா’’ என்று புலம்பினாள். அவள் தன்னிடம் இருந்து திமிறி வெளியேறியதை, தன் உடல் பலத்திற்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்ட போலீஸ்காரர், பாய்ந்து வந்தார். அவள் கொண்டையைப் பிடித்திழுத்து, தன் புறங்கைகளால் அவளை மாறிமாறி கன்னத்திலும், காதோரத்திலும் அடித்தார். அந்த அடிகளைக் கண்டறியாதவள் போல், “என்னை வேணுமுன்னால் அடிங்கய்யா. எங்கப்பாவ விட்டுடுங்கய்யா. ஒங்களுக்கு கோடிப் புண்ணியம் உண்டுய்யா..." என்று ஈனக்குரலோடும், ஏக்கப் பார்வை யோடும் முனங்கிய கலாவதி, தந்தையின் கருப்புக் கருப்பாய், பாளம் பாளமாய் காய்ப்புப் பிடித்த முதுகில், சிவப்புச் சிவப்பாய் ரத்தம் பீறிடுவதைக் கண்டு "அட பாவிப் பயலே! அடுத்துக் கெடுத்த துரோகி... ஒன்னல நாங்க படுற பாட்டைப் பார்த்தியாடா... நீ எங்கடா போனே? எங்கடா போனே?’ என்று அண்ணன் வினைதீர்த தானுக்கு, 'புலம்பல் தூது’ விட்டுக் கொண்டிருந்தாள். உடனே இன்னொரு போலீஸ்காரர் தேவடியா மவள் பேசுறதப் பாரு. ஏடி நடிச்சி மழுப்பிடலாமுன்னு நெனைக்காதே. உண்மையச் சொல்லாட்டால் சுட்டுப் பொசுக்கிடுவோம்" என்று சொல்லிச் சவாலிட்டார்.

தமிழரசிக்கு, பேசிய ஏச்சும், கொடுங்கோலோச்சிய தடிகளும் கண்களில் பட்டன. கருத்தில் பதியமுடியாத வகையில், பிரம்மிப்பில் நின்றாள். இந்த மாதிரி கெட்ட கெட்ட வார்த்தைகளோடு, குனியக் குனியக் குட்டும் நிகழ்ச்சிகளை, அவள் போலீசாரிடம் இருந்து சிறிதும் எதிர் பார்க்காமல், நடப்பவைகளை அவளால் நம்பமுடியவில்லே. எங்கேயோ, ஏதோ, யாரோ, எவருக்கோ, எதையோ கொடுத்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை. பெயர் பிளாஸ்டிக்கை, சட்டைப்பையில் பதித்த சப்-இன்ஸ் பெக்டரும், முத்துலிங்கமும் நிற்பதுபோல் தோன்றியது. நிற்கிறார்களோ... நினைவுதானே?

தமிழரசி கைகளைத் தூக்கப்போனாள், முடியவில்லை.” உதடுகளைப் பிரிக்கப் போனள், இயலவில்லை. தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட, முதுகில் ரத்த ஊற்றுப் பீறிட்டுக் கிளம்ப, தலைமுடியை போலீஸ்காரர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு நிற்கும் சித்தப்பா போன்ற மனிதரையும், கிழிந்த ஜாக்கெட்டை மறைப்பது போல் ரத்தச் சதை திரண்டு, நெற்றியில் குங்குமத்திற்குப் பதிலாக ரத்தக் குவியலுடனும், காதுகளில் கம்மலுக்குப் பதிலாக ரத்தக் கட்டிகளுடனும், கைகளில் நொறுங்கிய வளையல்களுக்குப் பதிலாக, லத்திக் கம்பு பதிந்த தடயங்களுடனும், கலாவதிபோல் ஒரு உருவம் பார்த்தாள். இதற்குள் முத்துலிங்கம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அவளிடம் கூட்டிவந்தார். “இவங்கதான்! நான் நேற்று சொன்னேன் பாருங்க தமிழரசி, அவங்க. ஒங்க பெரிய அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவங்க. நம்ம தாமுவை கட்டிக்கப் போற வங்க...” என்றார். பிளாஸ்டிக் அதிகாரி அவளுக்கு வணக்கம் போட்டார். பிறகு, காதலன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தால், அவள் தன்னையே மறந்து நிற்பதாக அனுமானித்து, அவளுக்கு ஒத்தாசை செய்ய வேண்டியது தனது கடமையென நினைத்து, மாடக்கண்ணுமேல் பாய்ந்தார். அந்த பைத்தியாரத் தர்மரை, பூட்ஸ் காலால் உதைத்து, கீழே தள்ளியபடி “ஏண்டா கிழட்டுப் பயலே! இன்னும் ஒன் மகன் இருக்கிற இடத்தை சொல்ல மாட்டக்கே... போலீஸ்காரன்னு நெனச்சியா, ஒன் மாமன்னு நெனச்சியா? ஒன் மகன் இருக்கிற இடத்தைச் சொல்லல, நீ போக வேண்டிய இடத்துக்குப் போயிடுவே" என்று, மல்லாக்கப் புரண்ட மாடக்கண்ணுவின் தலையை காலால் இடறினார். அந்த மனிதரோ எதுவும் பேசாமல், ஏறிட்டு நோக்காமல், உடைந்துபோன மண் சட்டிபோல் கிடந்தார். அப்பாவை நெருங்கப் போன கலாவதியை, ஒரு போலீஸ்காரர் தொண்டையைப் பிடித்து, மல்லாக்கத் தள்ளி, அவள் கீழே விழப்போன போது, அவள் தலைமுடியைப் பிடித்திழுத்து, 'பாலன்ஸ்’ செய்தார்.

தமிழரசிக்கு பிரக்ஞை வந்தது. தான் தமிழரசி என்பதும், தான் நிற்பது சித்தப்பாவீடு என்பதும், அடிப்பது போலீசார் என்பதும், அடிக்கச் சொல்வது முத்துலிங்கம் என்பதும், அடிபடுவது அபலை என்பதும் புரிந்தது. புரியப் புரிய புத்துயிர் பெற்றாள். கீழே புரண்டு கொண்டிருந்த சித்தப்பாவை நோக்கி ஓடி, கீழே குனிந்து உட்கார்ந்து, அவர் தலையைத் தூக்கி நிறுத்தி, போலீசாரை பரவலாகப் பார்த்தபடியே கத்தினாள். இடி முழக்கமாய் ஒலித்தாள். சித்தப்பா குளித்த ரத்தம் தன்னையும் குளிப்பாட்ட, ரத்த வாடையை சுவாசித்து, ஆங்காரியாய், ஒங்காரியாய், வீங்காரியாய், காட்டுக் கத்தலாகக் கத்தினாள்.

“நிறுத்துங்கய்யா. நீங்கெல்லாம் போலீஸ்காரங்களா, இல்ல... வேண்டாம், என் வாயால அதைச் சொல்லி கண்ணியமாய் வேலை பார்க்கிற போலீஸ்காரங்களையும் ஒங்களோட சேர்க்காண்டாம். ஒங்களப் பார்த்தால் சட்டத்த காப்பாற்ற வந்த வங்கமாதிரி தெரியல. நீங்க சட்டப்படி உள்ள ரவுடிங்க மாதிரி நடந்துக்கிறீங்க. ஒங்க மனசுல என்னய்யா நெனச்சுக் கிட்டீங்க? இவங்க சிந்துன ரத்தத்துக்கு இப்பவே நீங்க பதில் சொல்லியாகணும்?’’

போலீசார் திடுக்கிட்டார்கள். எவள் பாதுகாப்பாக இருந்து, எவனாவது மேலதிகாரிகளுக்கு பெட்டிஷன்” போட்டால் காபந்தாக இருப்பாள் என்று நம்பி, அந்த நம்பிக்கையில் நடவடிக்கை எடுத்தவர்கள், அவளை, அரண்டுபோய் பார்த்தார்கள். தமிழரசி, பேசிக் கொண்டே போனாள்:

“ஒங்களுக்கும் அக்கா தங்கச்சி இருப்பாங்கல்ல? நீங்களும் இந்த மாதிரி ஒரு கஷ்டப்பட்ட குடும்பத்துல பிறந்திருக்கத்தானே செய்வீங்க? நீங்க அடிச் சதை நீங்களே பாருங்க. ஒரு மனிதைேட டிக்னரிட்டியை பாதிக்கிறபடி எதையும் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. ஒங்களுக்கு யாருய்யா இந்த உரிமை கொடுத்தது? பதில் சொல்லுங்கய்யா. எங்க சித்தப்பாவையும், என் தங்கச்சியையும் இப்டி அடிச்சதுக்கு யாருய்யா பட்டா கொடுத்தது? எவன்யா கொடுத்தான்?” -

சப்.இன்ஸ்பெக்டர் திகைத்து திக்குமுக்காடினார். அவருக்கு எதுவும் ஒடவில்லை. தொழில் சகாவான தாமோதரனுக்கு உதவுவதற்காக வந்து, உபத்திரவத்தில் மாட்டிக் கொண்டதைப் புரிந்து கொண்டார். அடிபட்டவர்கள் தமிழரசிக்கு நெருங்கிய உறவினர்கள் என்று தன்னிடம் சொல்லாத முத்துலிங்கத்தைப் பல்லைக் கடித்த படியே பார்த்தார் மாறிய நிலைக்கு தன்னை மாற்ற முடியாமல் திண்டாடினர்.

இதற்குள் ஆங்காங்கே சிதறிநின்ற மக்கள் ஒன்று பட்டார்கள். முதலில் தமிழரசியை வியப்போடு பார்த்தார்கள். தத்தமக்குள் பேசிக் கொண்டார்கள். அப்புறம் பொதுப்படையாக, மெலிதாய் பேசினர்கள். முனங்கல்கள் முணுமுணுப்பாகி, மூர்க்கமான வார்த்தைகளாயின.

“இவனுவ உடுப்புப் போட்ட உடனே, ஆடுற ஆட்டம். அப்பப்பா... ஏய்யா... எங்களெல்லாம் பார்த்தா ஒங்களுக்கு மனுஷனாய் தெரியாதா?”

தமிழரசியும் பேச்சை நிறுத்தவில்லை.

‘மிருகமாய் இருக்கிறவனையும் மனுசனாய் நெனைத்து நடத்த வேண்டியது போலீஸ். ஆனால் நீங்க மனுசனாய் இருக்கவனயும், மிருகமாய் நடத்தி, கேடுகெட்ட மிருகமாய் நடந்துக்கிட்டீங்களே! இந்த ஜனங்க கோபத்தை ஒங்களால தாக்குப்பிடிக்க முடியுமாய்யா?”

சப்-இன்ஸ்பெக்டர், தன்னையறியாமலே ச ற் று பலமாகக் கேட்டார். கிரிமினல் கோர்ட்டில், மூன்று வருஷம் வாங்கிக் கொடுக்கிற ஒரு செக்க்ஷனை நினைத்த படியே பேசினார்.

"மேடம்! நீங்க போலீஸ் மேல் பொதுமக்களை ஏவி விடுறீங்க. போலீஸ்னா அயோக்கியன்னு ஒரு புரளிய கிளப்பி விடப் பார்க்கீங்க.”

"பிரச்சனையை திசை திருப்பாதய்யா. எனக்கும் பெண் போலீஸ் சிநேகிதிகள் இருக்காங்க. கண்ணியமான போலீஸ்காரங்க பலர் எனக்குத் தெரியும். அவங்கபடுற பாடும் புரியும். போலீஸ்படை, தமிழ் நாட்ல எப்படி இருக்குதுன்னு ஒங்ககூட நான் பட்டிமன்றம் நடத்தல. அதுக்கு அறிவு வேணும்.”

“அப்படின்னா..."

"அறிவு சரியாய் பயன் படாட்டாலோ இல்ல குதர்க்கமாய் பயன்பட்டாலோ அது அடிமுட்டாள்தனம், ஒங்களுக்கு அறிவு இருந்திருந்தால், இந்தப் பொண்ண இப்டி அடிச்சிருப்பீங்களா? இந்த மனுஷரை இப்டி சித்ரவதை செய்திருப்பீங்களா? சட்டப்படி விசாரிங்க. நான் வேண்டான்னு சொல்லல. ஆனல் சட்டத்துக்குப் புறம்பா, எதுக்குய்யா இப்டி அடிக்க வச்சே? நீ அக்கா தங்கையோட பிறந்தியா, இல்ல தனியாய் பிறந்தியா? அவங்க அடிபட்ட வேதனையில நான் துடிச்சால், என்னையே நான் ஏதோ தமிழ்நாட்டு போலீசிற்கு எதிராய் செயல்படுறது மாதிரி பேசறியே. இன்னும் இருபத்து நாலு மணி நேரத்துல, ஒன் காக்கி யூனிபாரம் கழறுதா இல்லியான்னு பாரு. இந்த ஏரியா டி.ஐ.ஜி. எனக்கு காலேஜ்ல எகனமிக்ஸ் டீச்சராய் இருந்தவர். அவர்கிட்ட நான் நியாயம் கேட்கப்போறேன். கலா, புறப்படும்மா! இந்த கிழிஞ்ச ஜாக்கெட்டோடயே புறப்படு. சித்தப்பா எழுந் திரும். மக்களுக்காக போலீசா? போலீசிற்காக மக்களான்னு டி.ஐ.ஜி. கிட்டேயே கேட்டுடலாம்.”

தமிழரசி தற்செயலாகத் திரும்பிய போது, தந்தையும், அண்ணனும், அம்மாவும், முத்துலிங்கத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தாள். கூட்டத்தின் போலீஸ் எதிர்ப்பு ஒலி, சப்தமாகி, கத்தலாகிக் கொண்டிருந்தது. கூட்டம் தைரியப்பட்டபோது, போலீஸ் அதைரியப்பட்டது. முத்துமாரிப் பாட்டியும் எகிறினாள்.

‘நானும் ஒன்கூட வாரேன் தங்கம். ஆனல் இந்த கொள்ளி முடிவானுவ அடிச்ச அடில, என்னல நடக்க முடியுமோ என்னவோ. உம், புறப்படு...”

திடீரென்று, தமிழரசியின் தந்தை அருணாசலம், மகளை நோக்கிப் பாய்ந்தார். “ஒன்ன இதுக்காளா படிக்க வச்சேன். நாலு பேரு முன்னால இப்டி ஏடாகோடமாய் பேசுறதுக்கா படிக்க வச்சேன்" என்று கையை முஷ்டிகளாக்கி ஓடியவரை, ஒரு போலீஸ்காரர் பிடித்துக் கொண்டே பெரியவரே, அவங்க ஒங்க மகளாய் இருக்கலாம். ஆனல் அவங்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது எங்க டூட்டி’ என்று எச்சரித்தார். சகாக்களைக் கண்ணடித்தார்.

ஒவ்வொருவரும், ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற யூகத்துடன், தங்களுக்குப் பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்துக் கொண்டார்கள். வேண்டப்பட்டவர்களே தேடிப் பிடித்து, அவர்கள் அருகே நின்று கொண்டார்கள். பாதாதிகேசம் வரை, லத்தித் தடயங்களோடு, சிவப்புச் சாயம் பூசப்பட்டவர் போல் தலைகுனிந்து நின்ற மாடக் கண்ணு, ரத்தக் காயங்களின் எரிச்சல் தாளாமல் அவற்றை ஊதிவிட்டுக் கொண்டிருந்த கலாவதியைப் பார்த்தார். தமிழரசியின் தந்தை ராஜதுரையைப் பார்த்தார். அவன் விஜயாவின் அண்ணன் முத்துலிங்கத்தைப் பார்த்தான். முத்துலிங்கம், அருகே நின்ற சிறுவனிடம் ரகசியமாய்ப் பேசி, அவனை வெளியே அனுப்பி வைத்தார். சிறிய மவுனம். எல்லோரும் இளைப்பாறிய நிசப்தம்.

எவர் எவரெல்லாமோ பேசப் போனபோது, திடீரென்று முத்துலிங்கம் கத்தினார்:

"இதுவரைக்கும் பாலைப் பார்க்கிறதா, பால் காய்ச்ச பானையைப் பார்க்கிறதான்னு நடந்த விஷயத்த முழுசாய் சொல்லல. இப்போ சொல்லப் போறேன். அருணாசலம் மாமா எப்படி நினைச்சாலும் சரிதான். என் அப்பாவி தங்கச்சிய கடத்துனதே இந்த தமிழரசிதான். இந்தப் புண்ணியவதிதான் என்கிட்டேயே ஓங்க பொன்மணிக்கு, நாகர்கோவில் கல்யாணத்துல சம்மதமா'ன்னு கேட்டாள். அடிக்கடி ஒன்றுமே தெரியாத என் அப்பாவி தங்கச்சிகிட்ட கிசுகிசுன்னு பேசி, அவள் மனச கலைச் சிட்டா. பொன்மணியக் கடத்துனதே இந்த அம்மாதான். சப்-இன்ஸ்பெக்டர் சார், இவளை விசாரிக்கிற முறையில விசாரிங்க. என் தங்கச்சி இருக்கிற இடம் தானாய் தெரியும்.’’

தமிழரசி திடுக்கிட்டாள். உதடுகள் துடிக்க நின்ற முத்துலிங்கத்தை, அதிர்ச்சியோடு பார்த்தாள். அவர் .பொய்யாகச் சொல்லியிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டாள். அவரோ, உண்மையென்று நம்பிச் சொல்வது போல் தோன்றியது. அவரும் மற்றவர்களும் அவளைப் பார்த்த விதத்தில், ஒரு வேளை-தானே ஒரு வேளை-அவர் களைக் கடத்தியிருக்கலாமோ என்பதுபோல்கூட, தன்னையறியாமலே தன்னுள் மூழ்கினாள். நியாயத்திற்குப் பதில் கேட்டால் பழி கிடைப்பது இயற்கைதானே? இதனால்தான் நியாயக்காரர்களுக்கு, தங்கள்மேல் சுமத்தப்படும் பழிகளைத் துடைக்கவே நேரம் போதாததால், பழிகாரர்களே அநியாயமாய் நியாயம் பேசுகிறார்களோ?

சற்று நேரம்வரை நியாயக்காரியாய் நின்றவள், இப்போது பழிகாரியாய் தடுமாறினாள். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீளப்போவதுடன், எவளிடம் வாங்கிக் கட்டினாரோ, அவளுக்கே அதை வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுக்கப் போகிற திருப்தியில், சப்-இன்ஸ்பெக்டர் தலையை நிமிர்த்தினர். அவளை எக்காளமாக, இளக்காரமாகப் பார்த்தார்.

முத்துலிங்கம் அனுப்பிய சிறுவனோடு, தாமோதரன் வாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.