நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 9

9

ருவர் நல்லது செய்தார் என்பதை நம்பாத சமூகம், அந்த ஒருவர் கெட்டது செய்தார் என்றவுடன் நம்புமோ இல்லையோ, நம்ப விரும்பும் என்பதை, தமிழரசி கண் கூடாகப் பார்த்தாள். கூட்டம், ஒட்டு மொத்தமாக ஒரே கண்ணாகி, அவளேயே பார்ப்பது போலிருந்தது. அங்குள்ள ஒவ்வொருவரும் போலீசாராகி, தன்னை கண்களால் புலன் விசாரணை செய்வது போலிருந்தது. போலீசார் கேஸ் கிடைத்த திருப்தியோடும், கூட்டத்தினர் அவளை ஒருவித அதிருப்தியுடனும் பார்த்தபோது, தமிழரசி, அங்கே வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்ற தாமோதரனைப் பார்த்தாள். ஒருவேளை இந்தப் பழியை அவரும் நம்புவாரோ? பொன்மணி சம்பந்தமாக, அவரிடம் பேசியதையே ஒரு நடிப்பாக நினைப்பாரோ? அப்படியானால் என் காதல்...காதல் ...மண்ணாங்கட்டிக் காதல்...நாசமாய்ப்போற காதல். ஒரு ஏழைப் பெண்ணை, தனது தொழில் பலத்தால், போலீசை ஏவி அடித்த இந்த மனிதரோடு, என்ன காதல் வேண்டிக் கிடக்கு? இதோ... இங்கே... ஈரக்காயங்களோடு துடிக்கும் இவர்களை அனுதாபத்துடன் நோக்கக்கூட மறுக்கும் இந்த மனிதரை, ஒருத்தி காதலிப்பவளாக இருந்தால், அவள் நிச்சயம் வாழ்க்கையின் மெல்லினங்கள் தெரியாத வல்லினக்காரியாகத்தான் இருப்பாள்.

தமிழரசியின் தடுமாற்ற மவுனத்தை, 'குற்றத்திற்கு” ஒப்புதலாக நினைத்த சப்-்இஸ்பெக்டர், கண்களைக் கூர்மைப்படுத்தி, தனக்குள்ளேயே புலன் விசாரணை வார்த்தைகளை, வேலாய் செதுக்கிக் கொண்டிருந்தார். இதற்குள் அவள் தந்தை அருணாசலம், ராஜதுரையின் பிடியில் இருந்து திமிறியபடியே ‘சண்டாளி! இதுக்கா ஒன்ன பெத்து வளர்த்தேன்? ஒன்னை போலீஸ் விட்டாலும் நான் விடமாட்டேன். ஒன்னே என் கையால, வெட்டிப் புதைச்சால்தான் என் மனசு ஆறும், ஒண்ணு மட்டும் சொல்லுறேன். நல்லா கேட்டுக்க. நான் பெத்தது ஒரே ஒரு பையன்தான். இனிமேல், ஒனக்கும், எனக்கும் ஒட்டுமில்ல, உறவுமில்ல. போலீஸ் சாருங்களே! அவளை என்ன பண்ணனுமோ பண்ணிக்கங்க. எனக்கு சம்பந்த மில்லாதவள். ஏய் ராஜதுரை...வாடா...”

அருணாசலம், மகன் ராஜதுரையை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்தபோது, மகளை யாரும், எதுவும் செய்து விடக் கூடாதே என்று பயந்தவள் போல், கூட்டத்துள் நின்ற பகவதியம்மா. திடுதிப்பென்று ஓடி, தமிழரசியின் முன்னால் நின்று கொண்டாள். “இப்படிப் பட்ட காரியத்த நீ செய்யலாமாம்மா? ஒன்னைச் சொல்லி குற்றமில்ல. ஒன்னை இப்டி... இந்த சண்டாளி மயக்கிட்டா...’ என்று அரற்றிக் கொண்டே நின்றாள்.

அப்பாக்காரர் அருணாசலம், ராஜதுரையை பாதி வழி வரை பலவந்தமாக நகர்த்தியபடி, “வாடா... இனிமேல் நீ ஒருவன்தான் எனக்குப் பிள்ள. எவளும் எப்டியும் போவட்டும்” என்றார். தமிழரசி, தந்தையைப் பார்த்தாள். போகாதிங்கப்பா. நீங்க நினைக்கிறமாதிரி, நான் தப்புத் தண்டா பண்ணல’ என்று, தந்தையை வழி மறித்து, அவர் கால்களைக் கட்டிக் கதறவேண்டும் போலிருந்தது. அதே சமயத்தில், முட்டிகளில் கால் ஊன்றி, எழுந்திருக்க முயன்று, அது முடியாமல் போகவே, தொப்பென்று கீழே விழுந்த சித்தப்பாவையும், ஊமைக்காயங்களே ஊதியபடி, ரத்தக்காயங்களை தொட்டுப் பிதுக்கியபடி கூனிக்குறுகி நின்ற கலாவதியையும் பார்த்தாள். அவளுள், ஏதோ ஒர் ரத்த வாடை ஏற்பட்டு, அது ரத்த பாசத்தை முறியடித்தது. தந்தையைப் பார்த்து, கம்பீர மாகக் கேட்டாள்:

“இப்போ, நான் மட்டும் என்ன. ஒங்களுக்கு மகளாய் பிறந்ததுல சந்தோஷப் படவா செய்யுறேன்? அம்மாவுக்கு, தான் மட்டுந்தான் மகன், தனக்குப் பிறகு யாருமே பிறக்கலன்னு நெனச்சு, தம்பியையும் தம்பி மகளையும் அடிக்க வைக்க, போலீசிற்குப்போன நீங்க, என்ன மகளேன்னு கூப்பிட்டாலும், நான் அப்பான்னு கூப்பிடப்போறதுல்ல.”

அதிர்ந்துபோன அருணாசலம், மகளை அடிப்பதற்காக ஒடப்பார்த்தார். ராஜதுரை அவரைப் பிடித்துக்கொண்டான். பகவதியம்மா ‘அய்யோ... இந்தப்பாவி முண்டையும்...பன்னாடப்பயலும்...என் குடும்பத்தை கலைச்சிட்டாங்களே... சூது வாதில்லாத என் மகளை மயக்கிட்டாங்களே” என்று ஒப்பாரி போட்டாள். அந்த ஒப்பாரியை உள் வாங்கிக்கொண்ட அருணாசலம் ‘ஏய், ஒனக்கென்னடி அங்கே வேலை? இப்போ நீ வாறீயா, இல்ல அந்த சண்டாளியோடவே இருந்துக்கப் போறீயா? ரெண்டுல ஒண்ணு இப்பவே தெரியணும்’ என்று எச்சரித்தார்.

பகவதியம்மா, கணவரின் எச்சரிக்கையை காதில் வாங்காதவள்போல் பாவித்துக்கொண்டபோது, தமிழரசி, பெற்றவளை பிறப்பித்தவள் போல் பார்த்தாள். “என்னிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் இந்த அம்மா, என்னைவிட அதிக நாட்கள் உறவாடி, எடுத்ததற்கெல்லாம் எடுபிடி வேலை செய்யும் இந்த கலாவதிபட்ட அடிகளையோ, பெற்ற அவமானத்தையோ, ஏன் ஒரு பொருட்டாக நினைக்கல? இவள் அம்மா இல்ல. தன் குஞ்சுக்கு இரைபோடுறதுக்காக கோழிக் குஞ்சைக் கொத்திக் கொண்டு போகும் கழுகு. கல் மனக்காரியின் பாசம் நாசத்தைக் கொடுக்கக் கூடியது...”

பகவதியம்மாவை, கணவர் மீண்டும் "வாறியா... இல்ல ஒரேயடியாய் நிக்கிறியா" என்று அதட்ட, அவளும் கலாவதியின் முன்னால் போய் நின்றபடி போதுமாடி... இப்பமாவது ஒன் மனசு குளிர்ந்துதாடி? சண்டாளி... கைகேயி...என்மவளுக்கு என்ன மருந்துடி போட்டு மயக்கினே? நான் பெத்தமவளையும், அந்த அப்பாவிப்பொண்ணு பொன்மணியை செய்தது மாதிரி செய்யாதடி. ஒன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன். என்னைப் பார்த்தாடி மொறைக்கே. போலீஸ்காரங்க ரெண்டு தட்டு தட்டிட்டு, ஒன்னை விட்டுட்டாங்க பாரு. நீ இன்னும் முறைப்பே, இதுக்கு மேலேயும் முறைப்பே. சண்டாளி... அடுத்துக் கெடுத்த முண்ட..." என்று அர்ச்சித்தாள்.

தமிழரசிக்கு, எப்படிக் கோபம் வந்தது என்று தெரியவில்லை. அம்மாவின் முதுகைப் பிடித்துத் தள்ளி "போம்மா... தோ... ஒனக்காகக் காத்திருக்கார்... நான் ஒனக்கு மகள் இல்ல...போ...ஒன்னை மாதிரி கல்மாசுக்காரி என்னை மகளாய் நினைக்கப்படாது...அம்மா என்கிற பாசத்துல நீ ஏதாவது செய்யனுமுன்னால் நீ இங்க இருந்து போறதுதான்’ என்றாள்.

பகவதியம்மாள், மகளை விட்டு விலகி, பாதி தூரம் நடந்தாள். மேல்கொண்டு அவளால் நடக்கமுடியவில்லை. திண்ணையில் போய் சாய்ந்து கொண்டாள். அந்தச் சமயத்தில், அவளே அதற்கு மேல் அதட்டக்கூடாது என்று நினைத்தவர்போல், அருணாசலம், ராஜதுரையுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

சப்-இன்ஸ்பெக்டர், தமிழரசியை இளக்காரமாகப் பார்த்தார். அவருக்கு, இப்படி ஒரு பெண்ணைப் பார்த்தது ஒரு ஆச்சரியம். அவளுக்கு, தனது மேலதிகாரிகள் தெரிந்திருப்பதில் ஒரு பயம். பக்குவமாகக் கேட்கலாமா. இல்ல...கடத்தல் குற்றத்திற்கு ஏற்றபடி பேசலாமா? அவர் சிந்திக்கத் துவங்கினர். இவள் முந்து முன்னால், நாம் முந்திக்கொள்ள வேண்டும். அதுதான் புத்திசாலித் தனம்...இவள், பெரிய போலீஸ் அதிகாரிகளிடம் ஒரு வேளை புகார் செய்யப்போனால், அதற்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டும்!”

சப், யோசித்தபோது, முத்துலிங்கம் மீண்டும் திடீரென்று கூவினார்: .

“சார்! என் தங்கச்சியை கடத்துனவள் இவள்தான். நீங்க இப்போ என்ன செய்யப் போறீங்க?”

சப்-இன்ஸ்பெக்டர் அமைதியாகப் பதிலளித்தார்:

“கொஞ்சநேரம் சும்மா இருங்க சார். இவங்க படிச்ச வங்க. அந்தப் பொண்ணு மாதிரி முரண்டு பிடிக்க மாட்டாங்க. வினைதீர்த்தான் எங்கே இருக்கான்னு சொல்விடு வாங்க. இல்லன்னால் நான் ஆக்க்ஷன் எடுக்கத்தான் போறேன். ‘

தமிழரசி சீறினாள்: "இந்த ஏழைகள் மேல எடுத்த ஆக்க்ஷனுக்கு, மொதல்ல பதில் சொல்லுங்க. அப்புறம், எடுக்கப்போற. ஆக்க்ஷனைப்பற்றி யோசிக்கலாம்.’

சப்-இன்ஸ்பெக்டருக்குக் கோபம் வந்தது.

"மேடம்,நீங்க லிமிட் தாண்டுறீங்க. எங்க ஆக்க்ஷனுக்கு எப்டி பதில் சொல்லணுமுன்னு எங்களுக்குத் தெரியும். இப்போ நீங்கதான் ஏதோ கவர்மெண்ட் மாதிரி கத்தாதீங்க. இப்போ நீங்க என் முன்னால ஒரு அக்கூஸ்ட். நான் புலன் விசாரணை செய்ய வந்திருக்கிற ஒரு அதிகாரி. பிளீஸ் ... டெல்மி ... பொன்மணியும் வினைதீர்த்தானும் எங்கே இருக்காங்க? அவன், அவளை ஒரு வேளை கொலை செய்யு முன்னால, எனக்குத் தெரிஞ்சாகணும். பொன்மணியை நீங்கதானே கடத்துனீங்க?”

போலீசாருக்குப் பயந்து போய் ஒடுங்கி நின்ற முத்துமாரிப் பாட்டியால், பொறுக்க முடியவில்லை. குறுக்கிட்டாள்.

போலீஸ் எசமான்...ஒமக்கு இது அடுக்காது. தமிழரசிய மிரட்டாதேயும். தமிழரசிக்குத் தெரியு. முன்னாலயே அதுக ஜோடி சேர்ந்துட்டு. இதை நானே பல தடவ என் கண்ணால பார்த்திருக்கேன்.”

‘ஏய் கிழவி! நீ சும்மா இருக்க மாட்டே...? மேடம், என் கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லல...’

‘நான் பொன்மணியைக் கடத்தல. அப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவள் கொடுக்கல. அதோட வினைதீர்த்தானும் அவளைக் கடத்தல-’’

எப்டி?”

  • மைனர் பெண்ணைக் கூட்டிச் சென்றால்தான் கடத்தல். பொன்மணிக்கு இப்போ பத்தொன்பது வயசு முடியப் போவுது. வேணுமானல் பள்ளிக்கூடத்து ரிக்கார்ட்சையோ, கிராம அதிகாரியோட ரிக்கார்ட்சையோ செக்கப் பண்ணுங்க. அவள் மைனர் பெண்ணல்ல. வினைதீர்த்தானோடு அவள் மனப்பூர்வமாய் போயிருக்காள். வினைதீர்த்தானுக்கு அவள் மேல்தான் ஆசையே தவிர, அவள் மேல் இருந்த நகைங்க மீதல்ல. பொன்மணி, காதுல போட்டிருந்த கம்மலைக்கூட கழட்டி வச்சுட்டுப் போயிருக்காள். மிஸ்டர் முத்துலிங்கத்திடம் உண்டா இல்லியான்னு கேட்டுப் பாருங்க...”

"எப்டியோ பாதி உண்மையை ஒத்துக்கிட்டிங்க. இப்போ. அவங்க எங்கே இருக்காங்கன்னு சொல்லிட்டிங்கன்னால் எல்லாருக்கும் நல்லது. அதாவது ஒங்களுக்கும்...’

"அவங்க இருக்கிற இடத்தை... நீங்களும் கண்டு பிடிக்கப் பாருங்க. நானும் பார்க்கிறேன். அவங்களை எப்போ பார்க்கலாமுன்னு எனக்கும் ஆசையாய் இருக்கு...’

சப்-இன்ஸ்பெக்டருக்கு, கோபம் போலீஸ்தனமாக வந்தது. இப்போது அதட்டினர்.

‘ஆல்ரைட்...நீங்க சொன்னதை ஒரு ஸ்டேட்மென்டாய் கொடுங்க...”*

“மொதல்ல...மிஸ்டர் முத்துலிங்கத்திடம் புகார் மனுவை வாங்குங்க. அப்புறம் என்கிட்ட அபிஷியலாய் கேளுங்க...”

"கேட்கத்தான் போறேன். இந்தாய்யா-அந்தப் பொண்ணு-ஏய் . ஒன் பேரு என்ன- கலாவதியா? .. ஆம். கலாவதியையும், அந்தக் கிழவனையும் பிடிச்சு வண்டிக்குள்ள தூக்கிப் போடுங்க. ஸ்டேஷன்ல விசாரிக்கிற விதமாய் விசாரிக்கலாம்...”

போலீஸ்காரர்கள், தமிழரசியைப் பார்த்தபடி, கலாவதியையும், மாடக்கண்ணுவையும் நெருங்கப் போனார்கள். அவர்களோ பயந்துபோய் தமிழரசியை நெருங்கினார்கள். தமிழரசி, இடுப்புச் சேலையை இறுக்கிக் கொண்டான். விழுந்த கொண்டையை போட்டுக் கொண்டாள்.

"இன்னும்கூட ஒங்களுக்கு மனசாட்சி வரலியே? இன்னோருத்தன் வீட்ல வாழப்போற பெண்ணே பகிரங்கமாய் அவமானப் படுத்துறது மாதிரி அடிச்சிட்டிங்க. இது கற்பழிப்பைவிட மோசமானது. கற்பழிப்பாவது, வெளில தெரியாமல் போயிடலாம். ஆனால் ஒரு ஏழைப் பெண் பிரஜையை கண்ட கண்ட இடத்துலல்லாம் அடிச்சு, அவளோட 'டிக்னிட்டியை’ போக்கிட்டிங்க. இது போதாதுன்னு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்பிடுறீங்களா? ஒங்க புலன் விசாரணையைப்பற்றி எங்களுக்குத் தெரியாதா? ஏழை பாளைகளுடைய... கண், காது, மூக்கு முதலிய ஐம்புலன்களையும்...லத்திக் கம்பால விசாரிக்கிறதைத்தான் நீங்க புலன் விசாரணைன்னு சொல்றீங்க...”

“எங்கேயோ ஒரு ஊர்ல போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராய் இருக்கிற இதோ மிஸ்டர் தாமோதரன், தன்னோட குடும்ப விவகாரத்திற்காக ஒங்களைப் பயன்படுத்தி இருக்கார். நீங்களும் அவர் பேச்சுக்குப் பம்பரமாய் ஆடியிருக்கீங்க. இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். தாய்க்குலம் என்று எல்லாக் கட்சிகளும் பேசுற இந்தக் காலத்துல, ஒரு ஏழைப் பெண்ணை...முண்டைன்னு வேற திட்டியிருக்கீங்க. ஊர் வம்புக்குப் போகாத இந்த அப்பாவி மனிதரை, எப்படி அடிச்சிருக்கீங்க பார்த்தீங்களா? கிராமத்துல ஒருவர் அடிபட்டால், அது மரண தண்டனையை விட மோசமான தண்டனை. இவ்வளவு அநியாயத்தையும் செய்துட்டு, அது நடக்காதது மாதிரியும், நான் செய்யாத ஒன்றை நானே நடத்துனது மாதிரியும் ஜோடிக்கிறீங்க. காலம் மாறிட்டு சார். போலீஸ்காரங்க ஏழைங்க பக்கம் நிற்க வேண்டிய காலம் வருது சார். நாங்க... இப்போ டி. ஐ. ஜி. கிட்ட ஒங்க மேலேயும்...ஒங்க சப்-இன்ஸ்பெக்டர் சகா மிஸ்டர் தாமோதரன் மேலேயும், கிரிமினல் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போறோம். ஒங்க நடவடிக்கைகளுக்குப் பழி வாங்கிக் காட்டாவிட்டாலும், பதில் வாங்கிக் காட்டப் போறோம். நீங்க ரெண்டு பேருமே... இப்பவே ...வேற வேலைக்கு ஏற்பாடு செய்துக்கங்க, எந்த லாக்கப்புல ஏழை பாளைகளை இழுத்துப் பூட்டுவீங்களோ, அந்த லாக்கப்பில இருந்து பழகிக்கிங்க, சித்தப்பா!! எழுந் திருங்க... ஏய். கலாவதி நடடி... இந்தக் கூட்டத்துல, அக்கிரமத்திற்கு அடிபணியக் கூடாதுன்னு நினைக்கிற யார் வேணுமுன்னாலும் வரலாம். முடியுமுன்னால் .. எங்களைத் தடுங்க பார்க்கலாம்...”

கூட்டம் வேகப்பட்டது. “புறப்படுங்க...புறப்படுங்க... இவங்க யாரை வேண்டுமானாலும் நினைச்சால் அடிக்கலாம் என்கிற காலத்தை மாற்றிக் காட்டணும்’ என்ற அர்த்தத்தில், கெட்ட வார்த்தைகளாய் தங்கள் கருத்துகளைச் சொல்லிக் கொண்டு, முண்டியடித்தது. முணுமுணுப்புக்கள், வெடிப்புக்களாய் ஆகிக் கொண்டிருந்தன.

சப்.இன்ஸ்பெக்டரையே பார்த்த போலீஸ்காரர்களுக்கு, அவரைப் போலவே முகங்கள் கூம்பின. தமிழரசியை அண்ணாந்து பார்த்தார்கள். இதற்கு முன்பு தாங்கள் சந்தித்த தலைவர்களையும், மனதில் வரித்துப் பார்த்தார்கள். நேற்று, தமிழரசி செல்வாக்குள்ளவள் என்று முத்துலிங்கம், தன் தரப்பை வலுவாக்குவதற்காகச் சொன்னது, இப்போது பூதாகாரமாய்த் தோன்றியது. அழகாகத் தென்படும் இந்த தமிழரசி, இப்போது, நினைத்த போதெல்லாம் அகோர வடிவெடுக்கும் ஆதிபராசக்தி போல் தோன்றியது. இந்த இக்கட்டான தருணத்தில் சப்-இன்ஸ்பெக்டர், தாமோதரனையே நம்பியிருப்பது போல், அவனையே பார்த்தார். அவனோ தலைகுனிந்து நின்றான். அவன் பார்வையில் படாமல் இருக்க, நகர்ந்து நகர்ந்து போன தமிழரசி, அவனையும் எப்படியோ பார்த்தாள். அவனும், முத்துலிங்கம் மாதிரி கத்தியிருந்தால், அவளுக்கு ஆவேசம் அதிகமாகியிருக்கலாம். ஆனால், அவனே தலையை நிமிர்த்தவில்லை. ஒரு தடவை மட்டும் தமிழரசியை ஏற்றமாகப் பார்த்துவிட்டுக் கண்களை இறங்கிக் கொண்டான். தமிழரசிக்கு என்னவோ போலிருந்தது. காரியங்கள் அவனை மீறி நடந்திருக்கலாம் என்றும் ஒரு எண்ணம் ஏற்பட்டது. அவன் எதுவும் பேசாமல் இருப்பதை, தனக்குக் காட்டும் சலுகையாக நினைத்தாள். காதலனை இழந்தாலும், காதலை இழக்காதவள் போல், அவனைத் தாபமாய் பார்த்தாள்.

இதற்குள், முத்துலிங்கம் சவாலிட்டார்.

"யார் வேண்டுமானாலும் எங்க வேணுமுன்னாலும் போகட்டும். எங்க குடும்பத்துக்கு அவமானம் உண்டு பண்ணுண்வங்களை போலீஸ் விட்டாலும், நாங்க விடப் போறதில்ல. எவ்வளவு பெரிய பொம்பிளயாய் இருந்தாலும் கவலயில்ல. சட்டப்படி பார்ப்போம், சரிப்பட்டு வராட்டால் என்ன வேணுமுன்னாலும் செய்வேன்...”

தமிழரசி, முத்துலிங்கத்தை நிமிர்ந்து பார்த்தாள். பயந்து போய் தன்மேல் சாய்ந்த கலாவதியின் தலையில் திரண்டு ஊறிப்போயிருந்த ரத்தக் கட்டியில் ஒரு துண்டு, தன் ஜாக்கெட்டில் பட்டிருப்பதைப் பார்த்தாள். ரத்த வெறியோ...நியாய வெறியோ-அவள் வெறி பிடித்தவளானாள்.

"கலாவதி... எட்டி நடடி... இன்னைக்கு ஒன்ன அடிச்சாங்க... நாளைக்கு என்ன செய்வாங்களோ? உம். புறப்படுங்க ...”*

தமிழரசியின் இரு புறமும் மாடக்கண்ணுவும், கலாவதியும் சூழ, தமிழரசி திரிசூலியாய் நடக்கப் போனாள். மகளிடம் வரப்போன பகவதியம்மா, கூட்டத்துள் சிக்கிக் கொண்டாள். கூட்டத்தினர், அவளைக் கோபத்தில் நைப்பது தெரியாமல் நைத்துக் கொண்டிருந்தார்கள். கூட்டம் எதிர்த்துப் பேசி, போலீசாரையும், முத்துலிங்கத்தையும் பகைத்துக் கொள்ளும் அளவிற்கு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும்,உள்ளூற வெப்பம் போல் உஷ்ணப்பட்டு நடந்தது. ஏதாவது செய்து நிலைமையை சமாளிக்கும்படி, சப்-இன்ஸ்பெக்டர், தாமோதரன் கையை அழுத்தினார். அவன் சொன்னால் தமிழரசி கேட்பாள் என்பது, அவள் அவனைப் பார்த்த விதத்திலேயே அவருக்குப் புரிந்துவிட்டது. தாமோதரன் கைகளை மீண்டும் அழுத்தி "பிளிஸ்.டூ... சம்திங்’ என்றார்.

ஆனால்---

தாமோதரனோ தலையை நிமிர்த்தாமல், கண்களை உயர்த்தாமல், தரையையே பார்த்துக் கொண்டு நின்றான். தமிழரசி முன்னால் நடக்க, கூட்டம் முரண்படாமல் அவள் பின்னால் நடந்தது.