நேரு தந்த பொம்மை/ஆனந்த பவனம்



ஆனந்த பவனம்

வக்கீல் தொழிலில் மோதி லாலும்
வருவாய் அதிகம் பெற்றார்;
மிக்க பேரும் புகழும் பெற்று
மேதை யாகத் திகழ்ந்தார்.

மெத்தப் பெரிய வீட்டை அவரும்
விலைக்கு வாங்க லானார்;
புத்தம் புதிதாய் அதனை அமைத்துப்
புதுமை பலவும் செய்தார்.

அந்த நாளில் அந்த ஊரில்
அந்த வீட்டில் மட்டும்
விந்தை யாக மின் விளக்கு
வீடு முழுதும் எரியும்.

அழகு மிக்க தோட்டம் தன்னில்
அருமை நீச்சல் குளமாம்.
பழகு வார்கள் நீந்து தற்கே
பலரும் அங்கே தினமும்.

பத்து வயது ஜவஹர் நீந்தப்
பழகிக் கொண்டார் நன்கு.
நித்தம் இரண்டு மூன்று முறைகள்
நீந்தி மகிழ்வார் அங்கு .

நேரு வோடு நண்பர் சிலரும்
நீந்து வார்கள் குளத்தில்;
யாரும் செய்யா வித்தை யெல்லாம்
நேரு செய்வார் அங்கே.

தண்ணீ ருக்குள் மூழ்கி மூழ்கி
‘தம்’ பிடித்தே இருப்பார்.
என்ன நேர்ந்த தென்று நண்பர்
எண்ணும் போதே எழுவார்.

மூச்சை அடக்கிப் பலகை போல
மிதப்பார் நீரின் மீதே!
நீச்சல் குளத்தைச் சுற்றி மக்கள்
நின்று பார்த்து மகிழ்வார்.

வசதி பலவும் நிறைந்த நல்ல
வளமை யான வீடு.
அசதி இல்லா நேரு வாழ்ந்த
அழகு கொஞ்சும் வீடு.

இந்த நாடே எனது வீடு,
என்று நினைத்த நேரு.
சொந்த வீட்டை நாட்டி னுக்கே
சொந்த மாக்கி விட்டார்!

அந்தப் பெரிய மாளிகை
ஆனந்த பவனமாம்.
இந்தி யாவில் மட்டுமா?
எங்கும் தெரிந்த ஒரு பெயர்!