நேரு தந்த பொம்மை/சிறந்த நாள்

சிறந்த நாள்

இன்று மிகவும் சிறந்தநாள்:
எங்கள் நேரு பிறந்தநாள்;
அன்பு மாமா உலகிலே
அவத ரித்த புனிதநாள். [இன்று]

சின்னஞ் சிறுவர் நடுவிலே
சிரித்துப் பேசி மகிழுவார்;
கன்னம் தொட்டுக் கிள்ளுவார்;
கையைப் பிடித்துக் குலுக்குவார் [இன்று]

அன்று சிறிய குழந்தையாய்,
அலகா பாத்தில் பிறந்தவர்,
என்றும் நமது நெஞ்சிலே
இருந்து வாழும் உத்தமர். [இன்று]

சின்னஞ் சிறுவர் நம்மையும்
சிவந்த ரோஜா மலரையும்
என்றும் மறந்தி டாதவர்;
எவரும் போற்றும் அல்லவர். [இன்று]

கண்ணைப் போல நாட்டினைக்
காத்து வளர்த்து வந்தவர்;
எண்ணம், வாக்கு செயலிலே
என்றும் தூய்மைஉடையவர்.
[இன்று]


பார தத்துக் குழந்தைகள்
பண்பு பெற்றுச் சிறக்கவே
நேரு கனவு கண்டனர்;
நிறைவு செய்வோம்
நாமுமே. [இன்று]


பிறந்த நாள்


குழந்தை யெல்லாம் கூடுவோம்;
கூடிக் குதித்தே ஆடுவோம்;
மழலை மொழியில் பாடுவோம்;
மகிழ்ந்து தாளம் போடுவோம்.

“குழந்தை யோடு பழகவும்,
குழந்தை யோடு பேசவும்.
குழந்தை யோடு ஆடவும்
கொள்ளை ஆசை உள்ளது.”