நேரு தந்த பொம்மை/நல்ல கதைகள்
இந்திய நாட்டின் பெருமையெலாம்
எடுத்துக் காட்டும் கதைகளையே
அன்னையும் பெரிய தாயாரும்
அன்பாய்க் கூறுவர் ஜவஹரிடம்.
இராமா யணமும் பாரதமும்
இன்னும் பலப்பல கதைகளுமே
சீராய்ச் சிறப்பாய்க் கூறிடுவர்;
சிறுவர் நேரு கேட்டிடுவர்.
முபாரக் அலிஎனும் ஒருபெரியார்
வீட்டில் கணக்குகள் எழுதுபவர்,
அபார மாகக் கதைசொல்வார்.
அவரை மிஞ்சவே ஆள் இல்லை!
அரபுக் கதைகள் அவர்சொல்வார்;
‘அற்புதம்' என்பார் ஜவஹர்லால்.
இரவில் சிறிதும் தூங்காமல்
எத்தனை யோகதை கேட்டிடுவார்;
தீரரின் கதைகள் கேட்டிடுவார்.
தியாகிகள் கதையும் கேட்டிடுவார்.
நேரினில் காண்பது போல் அந்த
நிகழ்ச்சிகளெல்லாம் உணர்ந்திடுவார்.
ஆங்கில நாட்டார் இந்தியரை
அடிமைப் படுத்திய கதைகேட்டார்.
தீங்குகள் எல்லாம் எவ்வாறு
செய்தனர் என்றும் தெரிந்திட்டார்.
வெள்ளையர் இரக்கம் இல்லாமல்
மிகவும் கொடுமைப் படுத்தியதை
உள்ளம் நொந்தே கேட்கையிலே
உணர்ச்சி பொங்கும் ஜவஹருக்கே.
அப்பாவுக்கே அடுத்தபடி
அலியை நேரு மதித்திடுவார்.
எப்போ தும் அவர் பக்கத்தில்
இருந்திட மிகவும் விரும்பிடுவார்.