நேரு தந்த பொம்மை/நேரு தலையில் புறா!
டில்லி நகரில் நேஷனல்
ஸ்டேடி யத்தில் சிறுவர்கள்
எள்ளு விழவும் இடமின்றி
இலட்சக் கணக்கில் கூடினர்.
இன்று மிகவும் சிறந்தநாள்:
எங்கள் நேரு பிறந்தநாள்!"
என்று கூறி ஆடினர்;
இன்பம் பொங்கப் பாடினர்.
காரில் நேரு வருவதைக்
கண்ட வுடனே சிறுவர்கள்,
நேரு வாழ்க!” என்றனர்;
நீண்ட நேரம் முழங்கினர்.
“யுத்தம் நீங்கி உலகெலாம்
ஒன்று கூடி வாழவே
நித்தம் உழைத்த நேருவே,
நீடு வாழ்க!” என்றனர்.
அவர்க ளுக்கு நடுவிலே
அழகு வெள்ளைப் புறாவினை
ஜவஹர் பறக்க விட்டனர்.
‘சர்’ ரென் றுயரச் சென்றது,
வட்ட மிட்டுத் திரிந்தது
வானில் சிறிது நேரமே.
சட்டென் றிறங்கி வந்தது.
ஜவஹர் தலையில் அமர்ந்தது.
வெள்ளைக் குல்லா மீதிலே
வெள்ளைப் புறா அமர்ந்ததும்,
பிள்ளை யெல்லாம் மகிழ்ந்தனர்;
பெரிதும் கூச்சல் போட்டனர்.
தலையில் வெள்ளைப் புறாவுடன்
சாந்தம் தவழும் முகத்துடன்
சிலைபோல் நேரு நின்றனர்,
சிறுவர் பார்த்து மகிழவே.
நேரு பிறந்த நாளிலே
நிகழ்ந்த இந்தக் காட்சியை
நேரில் பார்த்தோர் இந்தநாள்
நினைத்துப் பார்த்தே மகிழ்கிறார்!