நேரு தந்த பொம்மை/வீட்டிலே படிப்பு

வீட்டிலே படிப்பு


“பள்ளிக் கூடம் செல்ல வேண்டாம்”
என்று மோதிலால்
பத்து வயது முடிந்த மகனைப்
பார்த்துக் கூறினர்.
“வெள்ளைக் காரர் ஒருவர் நமது
வீட்டில் தங்கியே
விரும்பும் பாடம் யாவும் கற்றுத்
தருவார்,” என்றனர்.

பிள்ளை மிகவும் ஆர்வத் தோடு
படிக்கத் தொடங்கவே,
புரூக்ஸ் என்னும் ஆசான் மிகவும்
மகிழ்ச்சி கொண்டனர்.
கல்வி தன்னைச் சிறந்த முறையில்
கற்றுத் தந்தனர்.
கருத்தில் பதியும் வகையில் நன்கு
எடுத்துக் கூறினர்.

சிறுவர் நூல்கள் பலவும் நேரு
படித்து மகிழ்ந்தனர்;
சிறந்த உலக இலக்கி யங்கள்
விரும்பிக் கற்றனர்.

அருமை யான கவிதை நூல்கள்
ஆழ்ந்து படித்தனர்.
அவற்றைப் படித்துச் சுவைக்கும் வகையில்
பயிற்சி பெற்றனர்.

விந்தை மிக்க விஞ்ஞா னத்தை
விரும்பும் வகையிலே
வேடிக் கையாய்க் கூறி புரூக்ஸ்
ஆர்வம் ஊட்டினார்.

அந்த வீட்டில் ஆய்வுக் கூடம்
ஒன்றும் அமைத்தனர்.
அதிலே தினமும் சோத னைகள்
நடத்திப் பார்த்தனர்.
மூன்று வருடம் இந்த வகையில்
கல்வி கற்றனர்.
மேதை யாக விளங்க நல்ல
பாதை அமைத்தனர்.



ஊன்றி எதையும் படிக்க நேரு
பழகிக் கொண்டனர்.
உள்ளந் தன்னில் நல்ல தெல்லாம்
பதித்துக் கொண்டனர்.