பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழகுக் கலைகள்

241

அழிசி நச்சாத்தனார்


அழகுக் கலைகள் : கலை என்பதற்குத் திவாகர நிகண்டு 'கல்வி' என்று பொருள் கூறுகிறது. மனிதனால் செய்யப்படாதவற்றை இயற்கை என்றும், மனிதனால் செய்யப்படுவனவற்றைக் கலை என்றும் கூறுவது பொதுவான வழக்கம். மனிதன் செய்வதை எல்லாம் கலை என்று கூறுவதில்லை. அறிவும் பயிற்சியும் கொண்டு செய்வதையே கலை என்பர். அத்தகைய கலைகள் அறுபத்து நான்கு என்று இந்திய நூல்கள் கூறும். ஐரோப்பிய வரலாற்று மத்திய காலத்தில் மேனாட்டார் இலக்கணம், தருக்கம், அணியியல், வானவியல், இசை, கணிதம் ஆகிய ஏழையும் கலைகளாக வகுத்திருந்தனர். இக்காலத்துப் பல்கலைக் கழகங்கள் கல்வியைக் கலைக்கல்வி என்றும் விஞ்ஞானக்கல்வி என்றும் பிரித்திருப்பதில் கலைக்கல்வி என்பது மேற்கூறியவற்றைக் குறிக்கும்.

ஆனால், பொதுவாக மக்கள் கலை என்று கூறும் போது அழகுக் கலைகளையே குறிப்பிடுவர். அழகுக் கலை என்பது அழகுணர்ச்சியை எழுப்புவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருப்பதாகும். அத்தகைய அழகுக் கலைகள் சிற்பம், ஓவியம், கட்டடச்சிற்பம், இசை, கவிதை, நாடகம், நடனம் முதலியனவாம். நகைகள் செய்தல், நந்தவனம் வைத்தல், ஆடை நெய்தல், கலங்கள் வனைதல் போன்ற தொழில்களும் அழகுணர்ச்சியை எழுப்பக் கூடியனவாக அமையின் அழகுக் கலைகளாகவே கருதப்படும். ஆனால் அவற்றை அறிஞர்கள் இரண்டாந்தரத்து அழகுக் கலைகள் எனவே மதிக்கிறார்கள்.

அழகுக் கலையின் நோக்கம் அழகுணர்ச்சியை உண்டாக்குவது ஒன்றே என்றிருப்பினும், சில வேளைகளில் அவற்றைப் பயன் கருதிப் பயில்வதுமுண்டு. வியாபார விளம்பரத்துக்காக ஓவியங்களும், புரட்சி செய்யுமாறு மக்களைக் கிளப்புவதற்காகப் பாடல்களும் பயன்படுத்தப்படுகின்றன.

அழகுக் கலைகளிடம் ஆன்ம எழுச்சி, பரந்த தன்மை என்ற தலையாய இரண்டு இயல்புகள் காணப்படும். அழகுக் கலையை உண்டாக்குவதும் நுகர்வதும் ஆன்ம எழுச்சியின் விளைவேயாகும். மதுரைக் கோயிற் கோபுரத்தைக் கட்டிய கலைஞன் பக்தி நிறைந்தவன் என்பதில் ஐயமில்லை. அதுபோல், பக்தி சிரத்தை நிறைந்தவர்களே அதன் அழகு முழுவதையும் துய்க்க முடியும். அழகுக் கலைகள் எல்லா நாட்டு மக்களுக்கும் இன்பம் தரும். தாஜ்மகால் முஸ்லிம்களால் அமைக்கப் பட்டிருப்பினும் உலக மக்கள் அனைவரும் அதைக் கண்டு வியக்கின்றனர்.

சிற்பம், ஓவியம், கட்டடச் சிற்பம் ஆகியவை ஆதியில் மனிதன் குகைகளில் வாழ்ந்த நாளிலேயே தோன்றியுள்ளன. அவ்வுண்மையை அவர்கள் குகைகளில் வரைந்துள்ள ஓவியங்களிலிருந்தும், இறந்தோரைப் புதைத்துக் கற்குவியல்கள் அமைத்திருப்பதிலிருந்தும் அறிந்துகொள்ளலாம்.

அழகுக் கலைகள்-கட்டுரைகள் : இத் தலைப்பின்கீழ் இசை, ஓவியம், சிற்பம், நாடகம் முதலிய பகுதிகள் தரப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் உள்ள முக்கியமான கட்டுரைகளைப்பற்றி உரிய இடங்களில் குறிப்புப் பார்க்க.

அழகு முத்துப்புலவர் (19ஆம் நூ. இறுதி) மெய்கண்ட வேலாயுத சதகம், மெய்கண்ட திருப்புகழ் முதலிய நூல்கள் இயற்றியவர். தஞ்சைவாசி.

அழற்சி (Inflammation) என்னும் சொல் உடம்பில் ஏதேனும் ஒரு பகுதியில் திசுக்களில் சிவத்தல் வீங்குதல், நோதல், சுடுதல் ஆகியவற்றுடன் கூடி மாறுதல் ஏற்படுவதைக் குறிப்பதாகும். இந்த நான்கு குறிகளுமே முக்கியமானவை என்று செல்சஸ் என்னும் லத்தீன் மருத்துவர் கி. பி. 34-ல் கூறினார். இப்போது வேலை பழுதுபடுதல் (Loss of functions) என்பது ஐந்தாவது குறியாகச் சேர்க்கப்பட்டி.ருக்கிறது. உடம்பில் திசுக்களைச் சேதப்படுத்தும் பாக்டீரியாவையோ, நஞ்சுகளையோ, அல்லது வேறு அன்னியப் பொருள்களையோ உடம்பானது தன்னிடமிருந்து அப்புறப் படுத்துவதற்காக முயலுகின்ற செயலே அழற்சியாகும். அழற்சி பாக்டீரியாவினால் ஏற்பட்டால் அப்போது மேற்கூறிய நான்கு குறிகளும் தோன்றும். அதனுடன் சில வேளைகளில் கட்டிகளும் உண்டாகலாம். பாக்டீரியா இல்லாமல் திசுக்கள் சேதம் அடைந்து அழற்சி ஏற்பட்டால் வேதனையும் வீக்கமும் குறைவாகவே இருக்கும்.

அழற்சி காணும் இடத்தில் இரத்தக்குழாய்கள் விரிந்து இரத்தம் மிகுதியாக வந்து சேரும். அந்த இடம் சிவந்து தோன்றுவதும், சூடாயிருப்பதும் அதனால்தான். இரத்தக் குழாய்கள் விரிவதும், இரத்தம் வந்து சேர்வதும், உணர்ச்சி நரம்புகளை அழுத்தி வலி உண்டாகும்படி செய்கின்றன. இரத்தம் மிகுதியாக வந்து பாயும்போது இருதயத்தின் துடிப்பு இரத்தக் குழாய்களிலும் பரவி விண் விண் என்று துடித்து நோவு தரும். இரத்தக் குழாய்களில் அதிக இரத்தம் வந்து சேரும்போது அவைகளிலிருந்து கசிவு ஏற்படுகிறது. கசியும் இரத்த நீரும் அதில் உள்ள இரத்த வெள்ளணுக்களும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி உடையவை. இவ்விரண்டு உயிர்களும் இடும் போரின் விளைவே சீழ். சிதைந்தும் சிதையாமலும் இருக்கும் இவ்வணுக்களையும் பாக்டீரியாவையும் மைக்ராஸ்கோப் வாயிலாகக் காணலாம்.

சிகிச்சை : உடம்பிலுள்ள இரத்த வெள்ளணுக்கள் பாக்டீரியாவைக்கொன்று அழற்சியை நீக்க முயலுகின்றன. அவற்றிற்கு உதவுவதே மருத்துவர் செய்யக் கூடிய சிகிச்சையின் நோக்கம். அழற்சி உண்டான பகுதியை அசையாமல் வைத்துப் பாக்டீரியாவை அழிக்கவும், அவைகளிலிருந்து உண்டாகும் நஞ்சை முறிக்கவும் கூடிய மருந்துகளைப் பயன் படுத்தவேண்டும். தோலில் அழற்சி கண்டால் நஞ்சுகொல்லி மருந்துகளை வைத்துக் கட்டுக் கட்டவேண்டும். மூக்கில் கண்டால் மருந்து நீரைக்கொண்டு கழுவவும், வாயில் கண்டால் மருந்து நீரைக் கொப்பளிக்கவும், உணவுப்பாதையில் கண்டால் ஆன்டிபயோட்டிக்குகள் (Antibiotics) போன்ற மருந்துகளை உண்ணவும் வேண்டும். நுண்ம நஞ்சுமாற்றி (Antitoxin), நச்செதிர்ப்புச் சீரம் (Antiserum) ஆகியவற்றை ஊசிகுத்துவதுமுண்டு. அழற்சி வேகத்தைக் குறைப்பதற்காகவும் சீழ் உண்டாவதைக் குறைப்பதற்காகவும் சுருக்கு மருந்துகளைப் (Astringents) பயன்படுத்துவர். என். சே.

அழிசி : இவன் ஒரு சிற்றரசன்; சிறந்த வீரன்: இவன் ஊராகிய ஆர்க்காடு வரலாற்றுத் தொடர்புடையது. இங்கு அழிசி வடவருடன் போர் நிகழ்த்தினான். ஆர் என்பது ஆத்தி. ஆத்திமாலை சோழர்க்குரியது என்று வருவதால் இது சோழராட்சிக்குட்பட்டிருந்தது என்று அறியலாம். அழிசியின் பெயரால் அழிசிகுடி என்னும் ஊர் விருத்தாசலத்தைச் சார்ந்த சேத்தியார்தோப்பு அணைக்கட்டுக்குக் கிழக்கே உள்ளது (நற். 190, குறுந். 258).

அழிசி நச்சாத்தனார் சங்ககாலப் புலவர். அழிசி என்பது ஊரா அல்லது தந்தையின் பெயரா

91