பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்

468

ஆற்றுப் பொறியியல்

ஆழம்வரை செல்லும் அஸ்திவாரமும்,430 அடி உயரமுமுள்ள ஓர் அணை கட்டி, 27 இலட்சம் ஏக்கர்களுக்கு இரண்டு போகங்களுக்குத் தேவையான பாசனத்தை அளிப்பதோடு தற்போது பெறும் 21-1 இலட்சம் ஏக்கருக்கு நல்ல பாசன வசதிகளும் அளிக்கப்படும். இது 15 இலட்சம் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து பின் நிலத்திற்குப் படகு போக்குவரத்து வசதி செய்யவும் இது உதவும். இதனால் ஆற்றில் 320 மைல் தொலைவு போக்குவரத்து வசதியும் பெறலாம். இதற்கு 50 கோடி ரூபாய் செலவாகும்.

நாயார் அணைத்திட்டம் (உத்தரப்பிரதேசம்) : கங்கையின் உபாதியான நாயார் ஆற்றில் 600 அடி உயரமுள்ள அணை கட்டி, 106 இலட்சம் ஏக்கர் - அடி நீர் தேக்கப்படும். இதனால் தற்போதுள்ள மேல்கங்கைக் கால்வாயின் பயன் அதிகமாகும். 1,81,700 கிலோ வாட் மின்சாரமும் உற்பத்தியாகும். 27 கோடி ரூபாய் செலவாகும்.

பிப்ரி திட்டம் (உத்தரப் பிரதேசம்): சோணை ஆற்றின் உபநதியான ரீகண்டு நதியின் குறுக்கே பிப்ரீ கிராமத்தினருகே 280 அடி உயரமுள்ள அணை கட்டி, 40 இலட்சம் ஏக்கருக்குப் பாசனமும், 24 இலட்சம் கிலோவாட் மின்சாரமும் பெறப்படும். செலவு 31-2 கோடி ரூபாய்.

கங்கைப் பேரணைத் திட்டம் (மேற்கு வங்காளம்): இது ஒரு பல நோக்கத்திட்டம். கங்கையின் குறுக்கே அணை கட்டிப் பாகீரதி நதியின் இரு பக்கங்களிலும் பாசனம், போக்குவரத்து, வெள்ளக்கட்டுப்பாடு ஆகிய வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். இதனால் வங்காளத்துக்கும் அஸ்ஸாமுக்கும் கால்வாய் வழியாகப் போக்குவரத்து உண்டாகும்.

நிறைவேறிய திட்டங்கள்

மேட்டூர் அணை (சென்னை): 176 அடி உயரமுள்ளது. இது பாசனத்திற்கு உதவுவதோடு மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. இது 1934-ல்

மேட்டூர் அணை
உதவி: கே. ஆர், ராதாகிருஷ்ணன், பீ. ஈ., சென்னை.

6.8 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இது 3 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கிறது. இது ஆண்டு முழுவதும் 14,000 கிலோவாட் மின்சாரத்தைம், ஒரு பருவத்தில்மட்டும் 30,000 கிலோ வாட் மின்சாரத்தையும் அளிக்கிறது.

பெரியாற்று அணை (சென்னை) : மதுரை மாவட்டத்திலுள்ளது. 15 அடி உயரமுள்ளது. 1887-ல்கட்டப்பட்ட இது 1.75,000 ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கிறது.

தாமிரபரணி அணை (சென்னை) : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது.124 அடி உயரமுள்ளது. 21,750 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கிளென்மார்கன் அணை (சென்னை) நீலகிரி மாவட்டத்திலுள்ளது. 48,430 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணை (மைசூர்): இது 134 அடி உயரமுள்ளது. இது 2.6 கோடி ரூபாய் செலவில் 1932-ல் கட்டிமுடிக்கப்பட்டது. 3 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கவல்லது. இது 61,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

உஸ்மான் சாகர் அணை (ஐதராபாத்) : மூசி ஆற்றின் குறுக்கே உள்ளது. 112 அடி உயரமுள்ளது. வெள்ளக்கட்டுப்பாடு அளிப்பதோடு குடிநீர் வசதியும் அளிக்கிறது. இது 1920-ல் முடிவுபெற்றது.

தேகர்வாடி அணை (பம்பாய்) : ஆந்திரா ஆற்றின் குறுக்கே உள்ளது. 190 அடி உயரமுள்ளது. 1922-ல் கட்டப்பட்டது. 48,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

லாயிடு அணை (பம்பாய்) : பூனா மாவட்டத்திலுள்ளது. 168 அடி உயரமுள்ளது. 1928-ல் கட்டி முடிக்கப்பட்ட இது சுமார் 3 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கவல்லது. ஆற்றில் 12 மைல் தொலைவுவரை போக்குவரத்து வசதி அளிக்கின்றது.

முல்ஷி அணை (பம்பாய்): பூனா மாவட்டத்தில் உள்ளது. 146 அடி உயரமுள்ளது. 1,10,000 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

ராதாநாகிரி அணை (பம்பாய்) : கோலாப்பூர் மாவட்டத்திலுள்ளது, 140 அடி உயரமுள்ளது. இது 15,000 ஏக்கருக்குப் பாசன வசதியும், கோலாப்பூருக் குக் குடிநீர் வசதியும் தருவதோடு, 1,600 கிலோவாட் மின்சாரமும் உற்பத்தி செய்கிறது. ஏ.ஆர்.ஸ்ரீ.


ஆற்றுப் பொறியியல் (River Engineering): ஆறுகள், கால்வாய்கள் முதலிய நீரோட்டங்களின் இயல்புகளை ஆராயவும், அவற்றின் போக்கை மாற்றவும், கட்டுப்படுத்தவும், நீரைச் சேமித்து வைக்கவும் பயன்படும் முறைகளையும், அம்முறைகளுக்கு அடிப்படையான தத்துவங்களையும் ஆராயவும் ஏற்பட்டுள்ள பொறியியற் பிரிவு ஆற்றுப் பொறியியல் எனப்படும். ஆறுகளில் கையாளப்படும் பொறியியல் வேலை, போக்குவரத்து வசதிகளைப் பெறுதல், உள்ள போக்குவரத்து வசதிகளை அபிவிருத்தி செய்தல், மின்சார சக்தியும், பாசனமும், வடிகாலும் பெறுதல், வெள்ளத்தின் ஆபத்தைக் குறைத்தல், ஆற்று நீரினால் விளையும் வேறுவகைத் தீங்குகளைப் போக்குதல் போன்ற பல நோக்கங்களைக் கொண்டு செய்யப்படலாம். பல நோக்கங்களைக் கொண்ட திட்டங்களால் ஆற்றைக் கட்டுப்படுத்தும்முறை தற்காலத்தில் அதிகமாக வழங்குகிறது. பார்க்க: ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டங்கள்.

ஓர் ஆற்றில் இத்தகைய வேலையொன்றைத் தொடங்கும் திட்டத்தை முடிவுசெய்வதற்கு முன்னர் அதன் ஓட்டத்தையும், போக்கையும், உச்ச நீச அளவுகளையும், இவற்றைப் பற்றிய மற்ற விவரங்களையும் நெடுநாட்கள் தொடர்ந்து ஆராயவேண்டும். இதைச் செய்த பின்னரே திட்டத்தை நடைமுறையில் நிறைவேற்ற முடி-