பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/625

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியத் தேசிய ராணுவம்

574

இந்திய நூல்நிலையச் சங்கம்

நூல்கள் இருக்கின்றன (1952). இந்த நூல்நிலையத்தைக் காக்கும் பொறுப்பு மத்திய அரசாங்கக் கல்வி இலாகாவைச் சேர்ந்தது.


இந்தியத் தேசிய ராணுவம் (Indian National Army) : அந்நிய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிக்கும் நோக்கத்துடன், இரண்டாம் உலக யுத்தத்தின்போது தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட படை இந்தியத் தேசிய ராணுவம் என அழைக்கப்படுகிறது.

1942ஆம் ஆண்டில் ஜப்பானியர் மலேயாவின்மேற் படையெடுத்து வந்தபோது அப் பிரதேசங்களில் வாழ்ந்த இந்தியர் மிகுந்த கவலையுற்றனர். போருக்கு முன் மலேயாவில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சியினால் பட்ட தொல்லைகளால் அங்கிருந்த இந்தியரிற் பெரும்பான்மையோர் அதை வெறுத்திருந்தனர். 1942 பிப்ரவரி 15ஆம் தேதி சிங்கப்பூர் வீழ்ந்தது. அதைக் கைப்பற்றிய ஜப்பானிய ராணுவ அதிகாரி இந்தியத் தலைவர்கள் சிலரை வரவழைத்து, இந்தியாவின் விடுதலைக்கு ஜப்பான் பூரண ஆதரவு தருமென்றும், இங்கிலாந்தின் வல்லமை குறைந்து வந்த அத்தருணத்தில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்குவது நலமென்றும் கூறினார். இதையொட்டி மலேயா இந்தியரது கூட்டம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, டோக்கியோவில் வாழ்ந்த ராஷ் பிகாரி போஸ் என்ற இந்தியர் இதே கருத்துடன் மலேயா இந்தியப் பிரதிநிதிகளையும், மற்ற நாடுகளின் பிரதிநிதிகளையும் டோக்கியோவில் 1942 மார்ச்சு மாத முடிவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிற்கு அழைத்தார். அதில் இந்தியாவின் பூரண சுதந்திரத்தைப் பெறுவதே நோக்கமாகக்கொண்ட இந்திய சுதந்திரக் கழகம் நிறுவப்பட்டது. கிழக்கு ஆசியாவிலிருந்த இந்தியத் துருப்புக்களையும், மற்றோரையும் கொண்டு இந்தியத் தேசிய ராணுவம் ஒன்றை அமைப்பதென்றும், இந்தியாவின்மேல் படையெடுக்கும் வேலையை இந்தியரது தலைமையில் இந்த ராணுவமே செய்யவேண்டும் என்றும் இம் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

அவ்வாண்டு ஜூன் மாதத்தில் பான்காக்கில் நடைபெற்ற மற்றொரு மாநாட்டினால் இந்த இயக்கம் வலுப்பெற்றது. ஆனால் இந்த இயக்கத்தின் சுயேச்சைப் போக்கு ஜப்பானியருக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் அவர்கள் இதன் வளர்ச்சியைத் தடைசெய்ய முயன்றனர்.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து மறைந்த சுபாஷ் சந்திரபோஸ் 1943 ஜூலையில் சிங்கப்பூரை அடைந்து, இந்தியச் சுதந்திரக் கழகத்தின் தலைமையை ஏற்று, இந்தியத் தேசிய ராணுவத்தின் பிரதம சேனாதிபதியானார். இதன் பின்னரே தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த இந்தியரது பேராதரவுடன் இந்தியத் தேசியராணுவம் வளர்ந்தது. நூற்றுக்கணக்கில் மக்கள் இதில் சேர்ந்தனர். பல இடங்களில் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டன. ஏராளமான பெண்களும் படையில் சேர்ந்தனர். 'ஜான்சி ராணி ரெஜிமென்ட்' என்ற பெண்கள் பிரிவு அமைக்கப்பட்டது. இதற்குத் தேவையான பணத்தையும் மற்றப் பொருள்களையும் இந்தியர் மனமுவந்து ஏராளமாகக் கொடுத்தனர். அந்த ஆண்டு அக்டோபரில் சுபாஷ் போஸின் தலைமையில் சுதந்திர இந்தியாவின் தாற்காலிக அரசாங்கம் நிறுவப்பட்டது. 1944 ஜனவரியில் இதன் இருப்பிடம் இரங்கூனுக்கு மாற்றப்பட்டது.

1944 பிப்ரவரியில் இந்தியத் தேசிய ராணுவம் போரில் இறங்கியது. மார்ச் 18ஆம் தேதியன்று அது அஸ்ஸாமில் இந்திய எல்லைக்குள் புகுந்து, பல இடங்களைக் கைப்பற்றி, இம்பால் நகரை வளைத்துக்கொண்டது. போதிய படைக்கலங்களும், டாங்கிகள் முதலிய சாதனங்களும் இல்லாமலிருந்தும், இப் படையின் வீரர்கள் இறுதிவரை தீரத்துடன் போர் புரிந்தனர். விமான ஆதரவு இல்லாததாலும், பருவமழையினால் தளவாடங்களைப்பெற இயலாததாலும் இப்படை பின்வாங்க நேரிட்டது. பிரிட்டிஷ் துருப்புக்கள் பர்மாவின்மேல் படையெடுத்த பின்னரும், இந்தியத் தேசிய ராணுவம் அவர்களை எதிர்த்துப் போராடியது. ஜப்பானியர் கைவிட்டுச் சென்ற இடங்களில் இந்தியரைப் பாதுகாக்கும் பொறுப்பை இது ஏற்று, அதை மிக்க திறமையுடன் வகித்தது.

போரில் வெற்றி பெற்றபின் பிரிட்டிஷார் இந்தியத் தேசிய ராணுவத்தின் அதிகாரிகள் பலரை ராணுவ நீதிமன்றங்களில் விசாரணை செய்து தண்டித்தனர். இந்த விசாரணைகளில் மேஜர்-ஜெனரல் ஷா நவாஸ், கர்னல் சைகால், கர்னல் தில்லான் ஆகிய மூவரின்மேல் டெல்லிச் செங்கோட்டையில் நடைபெற்ற விசாரணை நாட்டில் பிரபலமடைந்தது. புகழ்பெற்ற வழக்கறிஞர் புலாபாய் தேசாய் இவர்கள் சார்பில் வழக்காடினார். அப்போது தண்டிக்கப்பட்ட இவர்கள் பின்னர் விடுதலை பெற்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்தியத் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த பலர் இந்தியப் படையில் இடம் பெற்றனர்.


இந்தியத் தேசிய விஞ்ஞானச் சங்கம் (National Institute of Science of India) விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்கும், அவ்வறிவைத் தேசியப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துவதற்கும் 1935-ல் நிறுவப்பட்டு,1945-ல் அரசாங்கத்தின் மதிப்புப் பெற்றுள்ளது. அரசாங்கத்துக்கு விஞ்ஞானப் பிரச்சினைகள் பற்றி ஆலோசனைகள் கூறும் நிலையமாக இருந்து வருகிறது. இதில் சிறந்த விஞ்ஞானிகள் உறுப்பினராக இருக்கிறார்கள். அயல்நாட்டு விஞ்ஞானப் பெரியார்கள் சிலர் கெளரவ உறுப்பினராக இருக்கிறார்கள். இச்சங்கம் இரண்டு இதழ்கள் வெளியிடுகின்றது.


இந்திய நாட்டு இசை : பார்க்க : இசை-இந்தியநாட்டு இசை.


இந்திய நூல்நிலையச் சங்கம் (Indian Library Association) நாடு முழுவதும் நூல்நிலையங்கள் நிறுவுதல், நூல்நிலையப் பணிப் பயிற்சி அளித்தல், நூல்நிலைய வியல் பற்றிய ஆராய்ச்சியை வளர்த்தல் என்னும் நோக்கங்களுடன் 1933-ல் டெல்லியில் நிறுவப்பெற்றது. இதன் உறுப்புக்களாக இராச்சிய நூல்நிலையச் சங்கங்களும் நூல்நிலையங்களுமிருக்கின்றன ; தனிப்பட்ட உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இது அப்கிலா என்ற பெயரால் ஓர் இதழ் வெளியிடுகிறது. இது உலகத்திலுள்ள சிறந்த நூல்நிலைய இதழ்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் நூல்கள் வெளியிடப்படுகின்றன. நூல்நிலையவியல் உரைகள் பற்றிய ஆங்கில நூல்களைச் சமஸ்கிருத சூத்திரங்களாக மொழிபெயர்த்து, அவற்றிற்கு இந்தியில் எழுதி வெளியிடுகிறார்கள். இப்படிச் செய்வதால் எல்லா இந்திய மொழிகளிலும் ஒரேவிதமான நூல்நிலையக் கலைச்சொற்கள் எழ முடியும் என்று கருதுகிறார்கள். இந்திய நூல்நிலையச் சங்கம் சர்வதேச நூல்நிலையச்