பக்கம்:சோழர் வரலாறு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சோழர் வரலாறு



“நலங்கிள்ளியின் யானைகள் ஊர்களைப் பாழாக்குகின்றன; உருமேறு போல முழங்குகின்றன. உள் பகுதியில் உள்ள குழந்தைகள் பாலின்றி அழுகின்றனர்; மகளிர் பூவற்றவறிய தலையை முடிக்கின்றனர். (மகளிர் பலர் வீரர் இறத்தலால் கைம்பெண்கள் ஆயினர்; இல்லற வாழ்க்கையர் நின்னை நோக்கி ‘ஒலம்’ எனக் கூக்குரல் இடுகின்றனர். நீ இவற்றைக் கவனியாமலும் இவற்றிற்கு நாணாமலும் இனிதாக இங்கு (கோட்டைக்குள்) இருத்தல் இனியதன்று. வலிய குதிரையையுடைய தோன்றலே! நீ அறத்தை உடையை ஆயின், ‘இஃது உனதன்றோ!’ என்று சொல்லிக் கதவைத் திறந்துவிடு; மறத்தை உடையை ஆயின், போரால் திறத்தல் செய்வாயாக. இவ்விரண்டும் இன்றிக் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டிருத்தல் நாணமுடைய செயலாகும்”[1] என்று உறைக்க உரைத்தார்.

பின்னர் என்ன நடந்ததென்பது தெரியவில்லை. நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையை விட்டு ஓடி உறையூர்க் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான்.

உறையூர் முற்றுகை: “நெடுங்கிள்ளியின் பிடிவாதத்தையும் நலங்கிள்ளி அவனை விடாது பின்தொடர்ந்து சென்று உறையூரை முற்றியிருந்ததையும் கண்டு மனம் வருந்திய கோவூர் கிழார் இருவரையும் உளம் உருகப் பார்த்து,

“நெடுங்கிள்ளி அண்ணலே, உன்னோடு பொருபவன் பனம்பூ மாலை அணிந்த சேர அரசன் அல்லன்; வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனும் அல்லன். உனது கண்ணியும் ஆத்தியால் கட்டப்பட்டது. உன்னுடன் பொருவோனது கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது. ஆதலால், நும்முள் ஒருவீர் தோற்பினும் தோற்பது சோழர் குடியே அன்றோ? இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; ஆதலின் நீங்கள்


  1. புறம், 44.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/72&oldid=480662" இலிருந்து மீள்விக்கப்பட்டது