புறநானூறு/பாடல் 41-50
01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
101-110 111-120 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200
201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
பாடல்: 41 (காலனும்)
தொகு- (காலனுக்கு மேலோன்!)
பாடியவர்: கோவூர் கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
- திணை
- வஞ்சி.
- துறை
- கொற்ற வள்ளை.
காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,
வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா, நனவின்
செருச்செய் முன்ப,! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே.
பாடல்: 42 (ஆனாஈகை)
தொகு- ஈகையும் வாகையும்!
பாடியவர்: இடைக்காடனார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
- திணை
- வாகை.
- துறை
- அரச வாகை.
- (சிறப்பு
- சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச் சிறப்பும். )
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்,
புரைதீர்ந் தன்று; அது புதுவதோ அன்றே;
தண்புனற் பூசல் அல்லது, நொந்து,
‘களைக, வாழி, வளவ! ‘ என்று, நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
புலிபுறங் காக்கும் குருளை போல,
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்,
பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்,
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி,
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்,
புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு,
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.
பாடல்: 43 (நிலமிசை)
தொகு- (பிறப்பும் சிறப்பும்!)
பாடியவர்: தாமப்பல் கண்ணனார்
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
- திணை
- வாகை.
- துறை
- அரசவாகை.
- (குறிப்பு
- புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , 'சோழன் மகன்அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.)
நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்,
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,
கால்உண வாகச், சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
‘ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு?’ என வெறுப்பக் கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
‘தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்’ எனக்
காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
பாடல்: 44 (இரும்பிடித்)
தொகு- (அறமும் மறமும்!)
பாடியவர்: கோவூர் கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் நெடுங்கிள்ளி.
- திணை
- வாகை.
- துறை
- அரச வாகை.
- (குறிப்பு
- நலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான்; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு பாடியது, இச் செய்யுள்.)
இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ,
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து,
அலமரல் யானை உருமென முழங்கவும்,
பாலில் குழவி அலறவும், மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!
அறவை யாயின்,’நினது’ எனத் திறத்தல்!
மறவை யாயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லை யாகத்,
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.
பாடல்: 45 (இரும்பணை)
தொகு- (தோற்பது நும் குடியே!)
பாடியவர்: கோவூர் கிழார்.
தொகு- பாடப்பட்டோர்
- சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.
- திணை
- வஞ்சி.
- துறை; துணை வஞ்சி.
- (குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது.)
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!
===== # தலைப்பு
- தலைப்பு எழுத்துக்கள் =====
பாடல்: 46 (நீயேபுறவின்)
தொகு- (அருளும் பகையும்!)
பாடியவர்: கோவூர் கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
- திணை
- வஞ்சி.
- துறை; துணை வஞ்சி.
- (குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது.)
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்,
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,
விருந்திற் புன்கண்நோ வுடையர்;
கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!
பாடல்: 47 (வள்ளியோர்ப்)
தொகு- (புலவரைக் காத்த புலவர்!)
பாடியவர்: கோவூர் கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.
- திணை
- வஞ்சி.
- துறை; துணை வஞ்சி.
- (குறிப்பு: சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தான் என்று கொல்லப் புகுந்தவிடத்துப், பாடி உய்யக் கொண்ட செய்யுள் இது.)
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
‘நெடிய’ என்னாது சுரம்பல கடந்து,
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,
பெற்றது மகழ்ந்தும், சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே; திறம்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.
பாடல்: 48 (கோதைமார்பிற்)
தொகு- ('கண்டனம்' என நினை!)
பாடியவர்: பொய்கையார்.
தொகு- பாடப்பட்டோன்
- சேரமான் கோக்கோதை மார்பன்.
- திணை
- பாடாண்.
- துறை
- புலவராற்றுப் படை.
கோதை மார்பிற் கோதை யானும்,
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்,
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்,
கள்நா றும்மே, கானல்அம் தொண்டி;
அ·துஎம் ஊரே; அவன்எம் இறைவன்;
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
‘அமர்மேம் படூஉங் காலை, நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம்’ எனவே.
பாடல்: 49 (நாடன்என்கோ)
தொகு- (எங்ஙனம் மொழிவேன்?)
பாடியவர்: பொய்கையார்.
தொகு- பாடப்பட்டோன்
- சேரமான் கோக்கோதை மார்பன்.
- திணை
- பாடாண்.
- துறை
- புலவராற்றுப் படை.
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும்,
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!
பாடல்: 50 (மாசறவிசித்த)
தொகு- (கவரி வீசிய காவலன்!)
பாடியவர்: மோசிகீரனார்.
தொகு- பாடப்பட்டோன்
- சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
- திணை
- பாடாண்.
- துறை
- இயன் மொழி.
- (குறிப்பு
- அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன்சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.)
மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?