பக்கம்:நற்றிணை 1.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

395


வராவர். 'மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லை. தாம் வாழும் நாளே' எனப் புறநானூற்றின் பொருள்பொதிந்த 188ஆம் செய்யுளைச் செய்தவர் இவரேயாவர். நட்பிற்கு ஒருவரெனப் போற்றப்பெறும் பிசிராந்தையாராற் பொருண்மொழிக் காஞ்சி பாடப் பெற்றவர். 'தலைவியைப் புனங்காவலில் அச்சுறுத்தித் தோழி ஈடுபடுத்தும் கூற்றாக' அமைந்த இவரது அகநானூற்றுச் செய்யுள் மிக்க நயமுடையதாகும் (அகம் 28). இவருடைய குறுந்தொகைச் செய்யுளும் (230) பொருள்நலம் மிக்கதாகும்.

ஆலம்பேரி சாத்தனார் 152

மதுரையைச் சார்ந்த ஆருலவிய நாட்டு ஆலம்பேரியென்னும் ஊரினைச் சார்ந்தவர் இவராவர்; இவர் பெயர் 'சாத்தனார்' என்பதாகும். அகநானூற்று 47, 81, 143, 175 ஆம் செய்யுட்களையும், நற்றிணையுள் 152, 255, 303, 238 ஆகிய செய்யுட்களையும் பாடியவர் இவர். நெய்தனிலத்தும் பாலைநிலத்தும் நன்கு பழகியவர் என்பதனை இச்செய்யுட்களால் நாம் அறியலாம். 'துன்பங்கள் பலவாக வந்தன; அனைத்திற்கும் தலைவிபாற்கொண்ட காதலே காரணம்' எனத் தலைவன் கூறுவதாக இச்செய்யுளுட் காட்டுந்திறம் சிறப்புடையதாகும். அகநானூற்றுச் செய்யுட்களுள் கடலனது விளங்கிலென்னும் ஊரையும், பிட்டனது குதிரை மலையினையும், திருத்தலையானங்கானத்தையும், நெவியன் என்னும் கொடையாளியையும் இவர் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

இடைக்காடனார் 142

இடைக்காடு என்னும் ஊரினர்; இவரது இயற்பெயர் தெரிந்திலது. இடைக்காடு குமரி மாவட்டத்து ஓர் ஊராகும். தஞ்சை மாவட்டத்தும் இடைக்காடென்னும் ஓர் ஊர் உளதென்பர். இவர் பாடியவாகக் கிடைத்துள்ள செய்யுட்கள் 10 ஆகும். (நற் 142, 316: புறம்; 42, அகம் 139, 194, 274 284, 304, 374; குறு. 251). இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியவராதலின், அவன் காலத்தவராகக் கொள்ளப்படுவர். இவருடைய செய்யுட்களுள் முல்லையின் எழிலும் இனிமையும் சிறப்பாக உரைக்கப்பட்டுள்ளன. இச் செய்யுளுள் இவர் எடுத்துக்காட்டும் இடையனது நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/396&oldid=1708219" இலிருந்து மீள்விக்கப்பட்டது