பக்கம்:நற்றிணை 1.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

397


உரைக்கப் பெற்றுளது. இவன் 'இளந்திரையம்' என ஒரு நூலைச் செய்தனன்; அந் நூலைப்பற்றிய குறிப்பினை இறையனாரகப் பொருள் உரையால் அறியலாம். தொண்டையர் வேந்தனாக விளங்கிப் புலவர்களைப் புரந்து வந்த சிறப்பினனாக வாழ்ந்த இவன், தானே பெரும் புலவனாகவும் விளங்கினனாதல் வேண்டும். நற்றிணையுள் வரும் இச் செய்யுட்களுடன் புறநானூற்று 185 ஆவது செய்யுளையும் செய்துள்ளவன் இவன் ஆவான். 'தன் வயின் ஆர்வம் உடையராகி மார்பணங் குறுநரை அறியாதோன் என்ன மகன் கொல்?' எனத் தலைவி கூற்றாக இவன் சொல்லும் நயம் தலைவியின் ஏக்கத்தை நன்கு எடுத்துரைப்பதாகும் (90), 'பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ வாகலின் மலர்ந்தன பலவே (99)' என்று தோழி கார்கால வரவை மறுத்துக் கூறுவதாக உரைத்துள்ள சொன்னயமும் சிறப்புடையதாகும். உலகாளும் முறைமையை இவன் எடுத்துரைக்கும் திறத்தினை இவனுடைய புறநானூற்றுச் செய்யுளாற் காணலாம். 'கலந்தான் அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப் படின் ஊறு பாடில்லாதே இனிதாக வழியைக் கடந்து செல்லும்; அவன் இனிதாகச் செலுத்தும் தொழிலை அறியானாயின் அதுதான் பகையாகிய செறிந்த சேற்றில் அழுந்திப் பல தீமைகளை அடையும்' என்கின்றான் இவன். இவ்வுவமையினை அரசியற்றலைமை பூண்டோருக்குப் பொருத்திப் பொருள் நயம் கண்டு போற்றுதல் வேண்டும்.

இளந்தேவனார் 41

இவரை மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் எனவும் குறித்துள்ளனர். மதுரைப் பேரூரிலே பல பண்டங்களையும் கொண்டுவிற்று வாணிகத்தொழிலினைச் செய்தோரான இவர், சிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்திருக்கின்றனர். இவர் பாடியவாக அகநானூற்றுள் மூன்று செய்யுட்களும் காணப்படும் (58, 298, 328). உன்னைத் தழுவிக் கூடி இன்புறுவதினுங் காட்டில், உன்னை நினைந்தேமாய்க் காத்திருக்கும் அதுவே மிக்க இனிமை உடையது' எனத் தலைவியொருத்தி கூறுவதாக இவர் அகநானூற்றுச் செய்யுளுள் உரைக்கும் (58) தன்மை, அத் தலைவியின் ஏக்கமிகுகியை நன்குகாட்டுவதாகும். 'முயங்குதொறு முயங்குதொறு முயங்க முகந்துகொண்டு அடக்குவமன்னோ தோழி... நாடன் சாயல் மார்பே' என்று தலைமகளின் காதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/398&oldid=1708223" இலிருந்து மீள்விக்கப்பட்டது