பக்கம்:நாடகக் கலை 2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

1925-ஆம் ஆண்டின் இறுதியில் திரு.எம்.கந்த சாமி முதலியார் தமது புதல்வர் திரு.எம். கே. ராதா அவர்களுடன் எங்கள் நாடக சபைக்கு ஆசிரியராக வந்து சேர்ந்தார். மேற்குறித்த ஜே. ஆர். ரங்கராஜு வின் நாவல்களோடு, வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா என்னும் நாவலையும் நாடகமாக்கி இவர் எங்களுக்குப் பயிற்றுவித்தார்.

நடிப்புக் கலையைப் பயிற்றுவிப்பதில் இவர் நியு ணர். மாதக் கணக்கில் ஒத்திகைகள் நடத்திய பிறகே நாடகங்களை அரங்கேற்றுவார். இவர் வேறு பல நாடக சபைகளுக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறார். பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சுகுணவிலாச சபையிலேதான் இவர் பெண் வேடதாரியாக முதன் முதல் நடித்தார். அதன் பிறகு பாலாமணி அம்மையார் நாடக சபையில் ஆசிரியராகி மனோகரா நாடகத்தைத் தயாரித்தார். இதே நாடகத்தைத் திரு. பி. எஸ். வேலு நாயர் நாடகக் குழுவிற்கும் இவர் பயிற்றுவித்தார். பொதுவாகப் பம்மல் சம்பந்தமுதலியாரின் நாடகங்களையும் ஏனைய சமுதாய நாவல் நாடகங்களையும், தொழில் முறை நாடக சபைகளிடம் பரப்பியவர் இவரேயாவார். 1939-ல் சென்னையில் இவர் தமது 67-வது வயதில் காலஞ்சென்றார். இப்பெரியாரை நாடக மறுமலர்ச்சித் தந்தை என்ற சிறப்புக்குரிய அடை மொழியிலேயே நாங்கள் குறிப்பது வழக்கம்.

கன்னையா கண்ட காட்சிப் புதுமை

காட்சி அமைப்பு முறையிலே தமிழ் நாடக உலகில் மகத்தான மாறுதலை உண்டாக்கியவர் திரு.சி. கன்னையா அவர்களாவார். இவரது தசாவதாரம், ஆண்டாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/53&oldid=1540596" இலிருந்து மீள்விக்கப்பட்டது