பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/119

குறுந்தொகை 320ம் பாடல் தொகு

பெருங்கடற் பரதவர் கொண்மீன் உணங்கல்
அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு
நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்
எக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொருநாள்
நக்கதோர் பழியு மிலமே போதவிழ்
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப்
புன்னையஞ் சேரி யிவ்வூர்
கொன்னலர் தூற்றந்தன் கொடுமை யானே.

பாடியவர் : தும்பிசேர் கீரனார்.

திணை : நெய்தல்.

கூற்று : அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது. [புறம் பேசும் ஊர் மக்களுக்கு அஞ்சிய தலைவி, தன்னைக் காண இல்லத்துக்கு வெளியே வந்து நிற்கும் தலைவன், தான் தோழியிடம் கூறுவது போல் அவனுக்குக் கூறுவதைக் கேட்ட பின்பாவது, தன்னை மணம் முடிப்பான் என்று கருதி, தன தோழியிடம் கூறுவது.]

கொண்டு கூட்டு : பெருங்கடல் பரதவர் கொள்மீன் உணங்கல் அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு, நிலவுநிற வெண்மணல் புலவ, பலவுடன் எக்கர்தொறும் பரக்கும் துறைவனொடு, ஒருநாள் நக்கதோர் பழியும் இலம். போது அவிழ் பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் புன்னை அம் சேரி இவ்வூர் தன் கொடுமையான் கொன்அலர் தூற்றும்.

கூற்று விளக்கம் : தலைவன் தலைவியைக் காண வந்து வீட்டுக்கு வெளியே நிற்கிறான். “நான் என் தலைவனோடு ஒரு நாள் கூடக் கூடி மகிழ்ந்தது இல்லை. ஆனால், இவ்வூரில் உள்ள மக்கள் அதற்குள் அலர் பேசத் தொடங்கி விட்டனர்.” என்று தலைவன் காதுகளில் கேட்குமாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள். தான் கூறுவதைத் தலைவன் கேட்டால், அவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தலைவி எண்ணுகிறாள்.

பொருள் : தோழி! பெரிய கடலினிடத்தே மீனவர் கொண்ட மீனினது உலர்ந்த வற்றல் நீந்துதற்கு அரிய கழியினிடத்தே அவர் கைக்கொண்ட இறா மீனின் வாடிய வற்றலொடு நிலவினது நிறத்தைக் கொண்ட வெள்ளிய மணல், புலால் நாறும்படி பல ஒருங்கே மணல் மேடு தோறும் பரவுகின்ற துறையை உடைய தலைவனோடு ஒரு நாளேனும் மகிழ்ந்து விளையாடிய பழி இல்லேம்; அங்ஙனம் இலமாகவும் செவ்வி அரும்பு மலர்ந்த பொன் போன்ற பூங்கொத்துகள்பொருந்திய வண்டுகள் ஒலிக்கின்ற கிளைகளை உடைய புன்னை மரங்களை உடைய சேரிகள் உள்ள இவ்வூரார் தம் பாலுள்ள கொடிய தன்மையினால் வீணே பழிமொழிகளைக் கூறுவர்.

உரை : பெரிய கடலிலிருந்து மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்த மீனின் வற்றலோடு (கருவாட்டோடு), நீந்துதற்கு அரிய கழிநீரிலிருந்து (back waters) அவர்கள் கொண்டு வந்த, இறால் மீனின் வாடிய வற்றலும், நிலவைப் போன்ற நிறத்தைக் கொண்ட வெண்மையான மணலில் புலால் நாற்றம் வீசும். இத்தகைய பல இடங்கள் மணல் மேடு தோறும் பரவி இருக்கின்ற துறையையுடைய தலைவனோடு, ஒரு நாள்கூட மகிழ்ந்து இருந்ததாக ஒரு பழியும் இல்லாதவர்கள் நாம். அவ்வாறு இருக்க, மொட்டுகள் மலர்கின்ற, பொன் போன்ற பூங்கொத்துக்கள் பொருந்திய, வண்டுகள் ஒலிக்கின்ற, கிளைகளை உடைய புன்னை மரங்கள் உள்ள சேரிகளில் வாழும் இவ்வூரார், தம்மிடத்தில் உள்ள கொடுந்தன்மையால் நம்மை வீணே பழித்துரைக்கிறார்கள்.

சிறப்புக் குறிப்பு : மீனவர்கள் கடலிலிருந்து பிடித்துக் கொண்டு வந்த மீனும், கழியிலிருந்து கொண்டு வந்த இறால் மீனும் மணல் முழுவதும் நாற்றத்தைப் பரப்புகின்றன என்றது, தலைவன் தன்னோடு கொண்ட நட்பால் ஊர் முழுதும் அலர் ( பழி) பரவியது என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறது.

அருஞ்சொற்பொருள் : பரதவர் = நெய்தல் நில மக்கள் (மீனவர்கள்); கொள்மீன் = பிடித்துக் கொண்டு வந்த மீன்; உணங்கல் = வற்றல் (கருவாடு); கழி = கடலோர நீர் நிலை; இற = இறால் மீன்; வாடல் = வற்றல்; புலவு = புலால் நாற்றம்; எக்கர் = மணல் மேடு; துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்; நகுதல் = நகைத்தல் (மகிழ்ச்சியோடு இருத்தல்); போது = அரும்பு; இணர் = கொத்து; மரீஇய = மருவிய (பொருந்திய); இமிழ்தல் = ஒலித்தல்; பொங்கர் = மரக்கொம்பு; புன்னை = ஒரு வகை மரம்; கொன் = வீணே; அலர் = பழிச்சொற்கள்.

மூல உரைகள் :

  1. தமிழ்ச் சுரங்கம்
  2. நல்ல குறுந்தொகை

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 06:15, 07 பிப்வரி 2023 (UTC)

Return to "சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/119" page.