பஞ்சும் பசியும்/015-028
15
அன்று மாலை ஆறரைமணி நேரமிருக்கும்.
அம்மன் கோயில் மண்டபத்திலுள்ள வாசக சாலையிலும் கோயிலை அடுத்துள்ள மூப்பனார் வெற்றிலை பாக்குக் கடை முன்பும், அந்த வட்டாரத்திலுள்ள நெசவாளர்கள் பலர்கூடி நின்றார்கள். வடிவேலு முதலியார் மண்டபத்தில் உட்கார்ந்து கைரேகை மயங்கும் அந்த அந்தியிருட்டு வேளையில், ஒரு பத்திரிகையைக் கண்ணுக் கெதிரே பிடித்து, எழுத்துக்களை தடம் கண்டு பிடிக்க முயன்று கொண்டிருந்தார். சுப்பையா முதலியார் மூப்பனார் கடைச் சரப்பலகையைப் பெஞ்சாக மாற்றிப் போட்டு தெருவைப் பார்க்க உட்கார்ந்தார்.
இப்போதெல்லாம் அம்மன் கோயில் முன்பு மாலை வேளைகளில் அதிகம் பேர் தென்பட்டு வந்தார்கள். வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவர்களில் சிலருக்கு உலக நடப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற புதிய ஆர்வம் ஏற்பட்டிருந்தது. எனவே, அவர்கள் அம்மன் கோயில் மண்டபத்திலுள்ள வள்ளுவர் வாசக மன்றத்துக்கு வந்து, வடிவேலு முதலியார் போன்றவர்களைப் பத்திரிகை படிக்கச் சொல்லி செய்திகளைத் தெரிந்து கொண்டார்கள். பத்திரிகையில் பட்டினிச் சாவுகளைப் பற்றியும் நெசவாளர் பற்றியும் செய்திகள் வரும்போது அவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஒரு ஆர்வமும்,தெரிந்து கொண்டபின் இன்னதெனப் புரியாதுஎங்கோயிருந்து பயமுறுத்தும் அச்சவுணர்ச்சியும் அவர் களுக்கு ஏற்பட்டன. வேறு சிலர் பத்திரிகை பார்ப்பதற்காக வராவிட்டாலும், வேறு பல காரணங்களை முன்னிட்டு அங்குக்குழுமிவந்தார்கள். சிலர் நாள் தவறாது லோகநாயகி அம்மனைச் சேவித்து, தமது கஷ்டங்களையெல்லாம் அவளோடு மானசீகமாக எடுத்துச் சொல்லி ஆத்ம சாந்தி தேடிக்கொள்ள வந்தார்கள். இன்னும் சிலர் வீடு தேடிவந்து விரட்டுகின்ற கடன்காரர்களிடமிருந்தும், வீட்டுத் தேவைகளுக்காக நச்சரிக்கும் மனைவிமார்களிடமிருந்தும், "அப்பா ஒரு காலணா" என்று அழுது புலம்பும் குழந்தைகளிடமிருந்தும், சில மணி நேரமாவது தப்பித்து விலகி நிச்சிந்தையாகயிருக்கலாம் என்று கருதி வந்தார்கள். வேறுசிலர் ஒரு வேளை வெற்றிலையை வாங்கி மென்று விழுங்கியோ அல்லது ஒரு காரச் சுருட்டை வாங்கிப் புகைத்து புகையை உள்ளிழுத்து ஜீரணிப்பதன் மூலமோ, வயிற்றுப் பசியைச் சாகடித்து மந்தித்துப் போகச் செய்து அன்றைய ராத்திரிச் சாப்பாட்டுக் கவலையைத் தீர்த்துக் கொள்ள எண்ணியும் வருவதுண்டு.
கடைக்கார மூப்பனாருக்கும் முன்பெல்லாம் சுமாராகவாவது வியாபாரம் நடந்து வந்தது. இப்போதோ? இப்போது கடைக்கார மூப்பனார் தமது வாடிக்கைக்காரர்களைப் பார்த்து "ஏனய்யா வெத்திலை தரட்டுமா? போடுதியளா? என்று வாய்விட்டுக் கேட்டு விற்பனை செய்ய முயன்றாலும் கூட பலிப்பதில்லை. "என்ன மூப்பனார் வாள்? காசு, குடுக்கிற அன்னிக்கி வாங்கிக் கிடுவியளா?” என் தான் பெரும்பாலும் அவருக்குப் பதில் கிடைத்தது. முன்பெல்லாம் காசை எதிர்பார்க்காமலே ஓசி வெற்றிலை கொடுத்து வந்தவர்களை உபசரிப்பார் மூப்பனார், நெசவாளிகளுக்கு ஓசி வெற்றிலை வாங்கிப் போடுவதற்குக் கூசிக்கொண்டே "காலணா யாபாரம், இதிலே யார் வாரிக் கட்டிக்கிட்டுப் போகப் போறோம்? என்று மெட்டாகக் கூறிவிட்டுக் காசைக் கொடுத்து விடுவார்கள். இப்போதோ ஓசிக்கு வெற்றிலைகொடுப்பதற்கும் மூப்பனார் முன் வருவதில்லை. ஏனெனில் காலணாவுக்கு வியாபாரம் நடந்தால் அது அவருக்கு ஒரு மகத்தான சாதனையாகப் பட்டது. நெசவாளிகளும் பொதுவாக வெற்றிலை வாங்கிப் போடுவதற்கு முன் வரவில்லை; ஏனெனில் அவர்களிருந்த நிலைமையில் வெற்றிலை பாக்குப் போடுவதுகூட தமது சக்திக்கு மீறிய, ஆடம்பரமான, அனாவசியமான செலவு என்றுபட்டது. சுருங்கச்சொன்னால், அந்தத் தெருவாசிகளுக்கு அங்குள்ள நெசவாளிகளுக்கு, காலணா நாணயம் மிகவும் அர்த்த புஷ்டியும், மதிப்பும் வாய்ந்த செல்வமாகி விட்டது!
அம்பாசமுத்திரத்திலுள்ள கைத்தறி நெசவாளர்கள் பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக நெசவுத்தொழில் செய்தும் வாழ்வில் முன்னேற்றமின்றி நித்ய மார்க்கண்டேயர்களாக வளர்ச்சியோ தேய்வோ இன்றி வாழ்ந்தும் வந்தவர்கள் அவர்களில் பெரும்பாலோர் குடியிருக்க ஒரு குச்சுவீடு அல்லது இரண்டு மரக்கால் விரைப்பாடு அல்லது மனைவியின் கழுத்தில் பத்துப் பதினைந்து பவுன் எடையுள்ள தங்க நகை போன்ற சொத்துக்கு அதிபதிகளாய் இருந்து வந்தவர்கள்; இருந்தாலும் வருஷம் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களிலும் இந்தச் சொத்து அடகிலேயோ அல்லது ஒத்தியாகவோ இருந்துவரும்.அதுவும் இல்லையென்றால் வட்டிக்குக் கடன் கொடுக்கும் உண்டியல் கடைச் செட்டியாரிடம் குறைந்த பட்சம் இரு நூறு ரூபாய்க்காவது'பிராமிசரி நோட்' என்னும் வாக்குறுதிக் கடன்பத்திரம் "தாங்கள் விரும்பும் காலத்தில் தங்களுக்கோ, தாங்கள் வாரிசுதாரர்களுக்கோ, தங்கள் அத்தாட்சிபெற்றவருக்கோ, அசலையும்வட்டியையும் தந்து கணக்கைப் பைசல் செய்து இந்தப் பிராமிசரி நோட்டை வாபீல் பெற்றுக் கொள்வேனாகவும்" என்ற உறுதி மொழியோடு அவர்களது நபர் நாணமேனும் அடகு வைக்கப்பட்டிருக்கும். எனவே அவர்கள் சீர் சிறப்போடு இருந்து சாப்பிடும் பெருவாழ்வுக்கு ஆசைப்பட முடியாமலும் இருக்கின்ற வாழ்வு தரங்கெட்டுச் சிறுமையடையாமலும், தாமும் தம் குடும்பமுமே பிரபஞ்சமாகக் கருதி, வரவினங்களைக் கோடு கிழித்து வரம்பு கட்டிச் செலவழித்து வருவார்கள். குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுவது போல், 'தொட்டுக்கொள், துடைத்துக்கொள்' என்றிருக்கும் இந்த நிதி நிலைமைக்குள்ளேயே தம் ஆயுளையும் தம் குடும்பத்தாரின் கூட நலன்களையும் பாதுகாக்கும்யோகசாதனையைத்தான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பயின்றுவந்தார்கள். எனவே அவர்கள் அரசியல் என்னும் வம்பு தும்புக் கோ, விக்கிரமசிங்கபுரம் பஞ்சாலைத் தொழிலாளர்களைப் போல் தொழிற்சங்கப் போராட்டம் என்னும் அடாபிடித்தனத்துக்கோ ஆளாகாமல் தாம் உண்டு தம் வீடு உண்டு' என்று பொது வாழ்க்கையைப் பற்றிய நிர்விசாரத்தோடும், பற்றின்மையோடும் இருந்து வந்தார்கள். எனவே அவர்கள் தமது தொழிலில் கூலி உயர்வு அல்லது சலுகைகள் பெறவேண்டு மென்றாலும் முதலாளிமார்களை அடுத்தவனுக்குத் தெரியாமல் காக்காய்பிடித்துத்தாஜாசெய்தவன் மூலமோ, அல்லது ஒருவனுக்கொருவன் அந்தரங்கமாகக் கோள் சொல்லி தத்தம் சுயகாரியத்தைச் சாதித்துக் கொள்வதன் மூலமோதான் பெற முனைவார்கள். அல்லது சமூகத்தில் நாலு பேர் துணிந்து முன் வந்து கூலி உயர்வுக்காகப் போராடும்போது அவர்களோடு சேர்ந்து போராடாமல் விலகியிருந்து, அவர்கள் வெற்றி பெற்றால் பங்குக்கு முந்துவதும் தோல்வி கண்டால் "நான் தான் அப்பவே சொன்னேனே" என்று வாய் விட்டுக் கூறி, தமது புத்திசாலிதனத்தை விளம்பரப் படுத்திக்கொள்வதும் ஆன ராஜ தந்திரத்தின் மூலமோதான் சாதித்துக்கொள்ள முயல்வார்கள்.
இதுதான் அங்கு நிலவிவந்த பொதுவான வாழ்க்கை முறை ஆனால் சமீப காலத்திலோ இந்த வாழ்க்கை பல்வேறு விதத்திலும் தகர்ந்து உருமாறிப் போய்விட்டது. இப்போதோ அவர்கள் எல்லோருக்கும் பிழைப்புக் கெட்டுவிட்டது லோகமே. புரண்டு
வந்தாலும் தம் தொழிலுக்கு மோசமில்லை என்று பரம்பரை பரம்பரையாகக் கருதி வந்த அவர்கள் எண்ணத்தில் இடி விழுந்து விட்டது. வியாபாரிகள் எல்லோரிடத்திலும் கைத்தறி ஜவுளி தேங்கிப் போய் விட்டதால் விற்பனை மந்தமாகிவிட்டது. எனவே வியாபாரிகள் சரக்கைக் கொள்முதல் செய்யவே தயங்கினார்கள்.தறிகாரர்களும் எப்போதாவது நூல் கொடுத்து நெய்து வாங்க முன் வந்தார்களேயன்றி நிரந்தரமாக நூல் கொடுக்க முன்வரவில்லை அவர்களால் முடியவுமில்லை . இதனால் தறிகள் நாட் கணக்கில் தூங்குவதும், ஒன்றிரண்டு நாள் விழித்திருந்து இராப்பகலாய் ஓடி அமருவதுமாக இருந்தன. எனவே கைத்தறி நெசவாளர்களின் வரும்படி குறைந்து விட்டது. மேலும், நூல் விலை உயர்லாலும், மில் துணி போட்டியாலும், மக்களிடம் பணப் புழக்கம் குறைந்து விட்டதாலும், அதிக விலை கொண்ட கைத்தறி ஜவுளிகள் விற்பனையாகவில்லை. கைத்தறித் துணியை மக்களிடம் விற்க வேண்டுமென்றால் அதன் அடக்க விலையைச் சாத்தியமான அளவுக்குக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வியாபாரிகளுக்கும், மாஸ்டர் வீவர்களுக்கும் ஏற்பட்டது. நூல் விலையைக் குறைக்க வழி செய்து அடக்க விலையைக் குறைக்கவழியிருந்தால் ஜவுளி ஓரளவேனும் விலைபோகும். ஆனால் சர்க்காரின் ஜவுளிக்கொள்கையோ நூல்விலையை எந்த விதத்திலும் குறைக்கக் கூடியதாயில்லை. இதனால் வியாபாரிகள் அடக்க விலையைக் குறைப்பதற்கு நெசவாளிகள் தலையில்தான்கைவைத்தார்கள். வேலைகேட்டுப் பல்லெல்லாம் தெரிய நிற்கும் நெசவாளியின் நெருக்கடியைப் பயன்படுத்தி "வேணுமின்னா, நான் தர கூலிக்கு நெய்து கொடும்" என்று வேண்டா வெறுப்பாகச் கூறி நெசவாளிகளுக்கு வேலை கொடுத்துக் 'காப்பாற்றும்' புண்ணிய கைங்கரியத்தில் ஈடுபட்டார்கள் வியாபாரிகள். நெசவாளிகளும் கிடைக்கிற காசுக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாதேயென்று "நீயே என்னை முழுங்கிடு"என்று சொன்ன சோலகோவின் குஞ்சு மீனைப்போல், குறைந்த கூலிக்குத்தம்மை இரையாக்கினார்கள். ஆனால் நாளாரம்பத்தில் அந்தக் கூலிக்கும் கூட ஆபத்து ஏற்பட்டு விட்டது.
நெசவாளிகள் நிலைமை நாளாவட்டத்தில் கூணித்துக் கேவலமடையத் தொடங்கி விட்டது. வயிற்றுப் பசியையும் வாழ்க்கைத் தேவைகளையும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே மூடிவைத் திருக்க முடியவில்லை. நெருக்கடி முற்ற முற்ற அவர்கள் கடன் வாங்கிப் பிழைத்தார்கள்.கடன் வாங்குவதற்குள்ள வழிகளெல்லாம் அடைபட்டுப்போனபின் பண்ட பாத்திரங்களை, நகைகளை அடகு வைத்தும் விற்றும் வயிற்றைக் கழுவினார்கள்.சிலர் தங்கள் தறிச் சாமான்களையும் கூட விற்று விட்டனர். வீடு வாசல் நிலம் உள்ளவர்கள் அவற்றையும் விற்றுத்தீர்த்தார்கள். அரைப்பட்டினிகுறைப்பட்டினியோடு உடம்பில் உயிரைத் தாங்கிக் கொண்டிருந்தால் விடிவுகாலம் பிறந்ததும், மீண்டும் தளிர்த்துக் கொள்ளலாம் என்ற ஒரே நப்பாசையோடு, நம்பிக்கையோடு அவர்கள் பட்டுக் கருகிக்கொண்டு வந்தார்கள். நெசவாளிகளின் பிள்ளைகள் பள்ளிக்கூடப் படிப்பை விட்டுவிட்டு கடை கண்ணிகளில் வேலை பார்த்தார்கள்.பெண்கள் அக்கம் பக்கத்துத் தெருக்களில் பத்துப் பாத்திரம் துலக்கியும், வீட்டு வேலைகளைச் செய்தும் பிழைக்க முன் வந்தார்கள். ஒன்றிரண்டு நெசவாளிகள் வீட்டுக் கஷ்டம் தாங்க முடியாது, 'வேலை பார்த்துவிட்டு வந்து கூட்டிச்செல்கிறேன்' என்ற நம்பிக்கை மொழி ஒன்றையே தம் பெண்டு பிள்ளைகளிடம் துணையாக விட்டு, பரதேசம் சென்றுவிட்டார்கள். சுருங்கச் சொன்னால், அவர்கள் நாளுக்குநாள் அணு அணுவாகச் செத்துக் கொண்டிருந்தார்கள். செத்துக் கொண்டிருக்கும் சீவனை இழுத்து பிடித்து நிறுத்துவதற்காகப் பிச்சை எடுத்தார்கள். பிழைப்புத்தேடிச்சென்றார்கள் மோசடிகள் செய்தார்கள் என்றாலும், அவர்கள் செத்துக் கொண்டே தான் இருந்தார்கள்.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைப் பிரச்னை நெருக்கடியான கட்டத்துக்கு வந்த சமயத்தில் தான் கைலாசமுதலியார். தமது கதையைத் தாமே முடித்துக் கொண்டு விட்டார்.
கைலாச முதலியார் - காலமாகி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. |
கைலாசமுதலியாரின் அஸ்தி தாமிரபரணிநதியோடு கலந்து போய்விட்டது; தங்கம்மாளின் கழுத்தில் கிடந்த தாலி அகற்றப்பட்டு விட்டது; தர்மகர்த்தா ஸ்தானம் காலி விழுந்து விட்டது; மைனர் முதலியாரின் கனவு ஈடேறி விட்டது.
எனினும், அம்பாசமுத்திரம் வாசிகளிடையே, குறிப்பாக நெசவாளர்களிடையே, கைலாசமுதலியாரைப் பற்றிய பேச்சுத்தான் இருபத்திநாலு மணி நேரமும் நடந்து கொண்டிருந்தது. எங்கும் எப்போதும் இதைப்பற்றியே பேச்சு; ஏனெனில் எல்லோருடைய மனதிலும் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பாகத்தை எச்சரிக்கையை, பயபீதியை அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திவிட்டது.
அம்மன் கோயில் மண்டபத்திலும், மூப்பனார் கடை முன்பும் கூடிநின்ற நெசவாளிகள் கைலாச முதலியாருக்கு ஏற்பட்ட தூக்கத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"ஊரையே கலங்க வச்சுப்பிட்டாரே, மனுசன். இருந்திருந்து கைலாச முதலியார் இந்த வேலையா செய்வாரு? மனுசன்னா கஷ்டங்கள் வரது தான், போரது தான். அதுக்காக? இப்போ நாமெல்லாம் செத்தா போயிட்டோம்?"
”அட, சரிதான். இப்படி அணுவணுவா நித்த நித்திம் செத்துக் கொண்டுக்கிறதைவிட இப்படிச் செஞ்சிட்டா அலுப்பு விட்டதுன்னு போகும். நம்மவர்களே இன்னம் யார் யாருக்கு எந்த ஆறுகுளம் குடுத்து வச்சிருக்கோ? யார் கண்டா?" என்று பதிலுக்குச் சலித்துக் கொண்டார் ஒருவர். "சீ! அவசகுனம் புடிச்சாப்பிலே பேசாதியும்! எல்லாம் நல்ல காலம் புறக்காமலா போகப் போவுது?" என்று சிந்தையில் தோன்றிய உள்ளரிச்சலோடுவாய் விட்டுக்கூறித் தம்மைத்தாமே தேற்றிக் கொண்டார் வேறொருவர்.
"நல்ல காலமா? அதைத்தான் நம்ம வடிவேலு முதலியார் தினம் தினம் படிச்சிக் காட்டுதாரே, ஆத்திலே. விழுந்து செத்தான், குளத்திலே விழுந்து செத்தான், மருந்தைத்தின்னு செத்தான், மாயத்தைத்தின்னுசெத்தான், பட்டினி கிடந்து செத்தான், செத்தான் செத்தான்னு வார சேதிதானே இப்ப பேப்பரிலே மலிஞ்சிக்கிட்டு வருது. நமக்குன்னு மட்டும் சொர்க்கம் கீழே இறங்கி வந்துவிடப் போவுதா?" என்று குறுக்கிட்டுப் பேசினார் இன்னொரு நெசவாளி.
"எல்லாம் அந்தத் தாதுலிங்க முதலியார் பண்ணின வேலை. இல்லேன்னா, நாம எல்லாம் பிழைச்சிக் கிடக்கயிலே, கைலாச முதலியாருக்கு மட்டும் இந்தக் கெதி வருவானேன்?" என்று தமது பல்லவியைத் தொடங்கினார் வடிவேலு முதலியார்.
சுப்பையா முதலியாருக்கு உடனே அதற்குப் பதில் கொடுக்கவேண்டுமென்று நினைப்பு வந்தது. எனினும் தமது கட்சிக்குப் பலமில்லை என்பதை உணர்ந்து, மௌனமாக உட்கார்ந்து கொண்டார்.
அதற்குள் வடிவேலுமுதலியாரை ஆதரித்து,"கஷ்டப் படுகிற காலத்திலே மனுசனுக்கு மனுசன் உதவுகிறதுதான் மனுசத்தனம். இவரானா, சமயம் பார்த்துக் கழுத்தை அறுத்துட்டாரே!" இன்னம்யார் யார் தலையிலே கொள்ளி வைக்கப் போறாரோ?" என்று வயிறெரிந்து கொண்டார் ஒருவர்.
"மாமன் மச்சான் ஆனா என்ன? அண்ணன் தம்பி ஆனா என்ன? பணக்காரன் பணக்காரன் தான்; ஏழை ஏழைதான். இதுதான் தம்பி எனக்குப் பட்டது என்று ஒருவயது முதிர்ந்த நெசவாளி தமது அனுபவத்தைச் சூத்திர வடிவாக்கினார்.
இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, சங்கர் அந்த வழியாக வந்து கொண்டிருந்தான்.
சங்கரைக் கண்டதும், வடிவேலு முதலியாரை ஆதரித்துப் பேசிய நெசவாளி, சங்கரைச் சுட்டிக் காட்டி, "இவன் இன்னும் என்னென்ன கூத்துக்கு வாரானோ? இவனும் அவருக்குப் புறந்தவன்தானே!" என்று தம் பக்கத்திலிருந்தவரிடம் மெதுவாகக் கூறினார்.
இதற்குள் வடிவேலு முதலியார் குறுக்கிட்டு, "சேச்சே! தம்பியை அப்படிச் சொல்லாதிங்க. இவன் என்னமோ அந்தக்குடும்பத்திலே தப்பிப் பிறந்துட்டான்.இவன்தானே கைலாச முதலியார் செத்த அன்னிக்கு செலவுக்கில்லாம் பணம் கொடுத்துஒத்தாசையாஇருந்தான். இவனைப்போல தங்கமான பிள்ளையைப் பார்க்க முடியுமா?" என்று புகழத் தொடங்கினார்,
"அப்படியா?" என்று மூக்கின்மீது விரலை வைத்து வியந்தார் அந்த முதியவர்.
இதற்குள் சங்கர் வந்து சேர்ந்துவிட்டான்.
சங்கரைக் கண்டதும் வடிவேலு முதலியார் 'என்னப்பா சங்கர்? எங்கேயிருந்து வாரே?" என்று அருமையோடு கூப்பிட்டார்.
"ஆஸ்பத்திரியிலேயிருந்து" என்று பதில் கூறியவாறே அருகில் வந்தான் சங்கர்.
"ஆமா,மணிக்கு எப்படி இருக்கு"
"தேவலை."
"என்ன சங்கர், உன் தகப்பனார் செஞ்ச வேலையைப் பாத்தியா? ஒரு குடும்பமே பாழாப் போச்சு!" என்று ஆவலாதி கூறுவதற்கு முந்திக் கொண்டார் முதியவர்.அவரது பேச்சைக் கேட்டதும், சங்கருக்கு உள்ளம் குமைந்தது;ரத்தம் கொதித்தது; வெட்கம்பிடுங்கித்தின்றது. இன்னபதில் சொல்வதெனஓடாமல்ஒருகணம் உள்ளுக்குள் குமுறினான். ஆனால் மறுகணமே அவனது வாய்ப்பூட்டு உடைந்து விட்டது.
"பெரியவரே, என் அப்பாவின் பணத்தாசைதான் கைலாச முதலியாரின் உயிரையே குடித்தது என்பது எனக்குத்தெரியும். அதை நினைத்து நினைத்து நானும்தான் வருத்தப்படுகிறேன்; நெஞ்சு குமுறுகிறேன். இப்படிப்பட்ட ஈவிரக்கமற்ற மனிதர் எனக்குத் தந்தையாக வந்து வாய்த்தாரே என்று வெட்கமடைகிறேன். ஆனால், நீங்களும் நானும் சேர்ந்து என் தந்தையைத் திட்டுவதன் மூலம் ஆகப்போவது என்ன? அதனால் உங்கள் கவலை தீர்ந்து விடுமோ? கைலாசமுதலியார் ஒருவர் மட்டும்தானா கஷ்டப்பட்டார்? இப்போது நீங்களெல்லாம் கஷ்டப்படவில்லையா? உங்கள் பிழைப்பு ஏன் இந்த அங்கோலத்துக்கு வந்தது என்று யோசித்துப் பார்த்தீர்களா?" என்று மளமளவென்று உணர்ச்சி வசப்பட்டவனாய்ப் பேசி முடித்தான் சங்கர்.
அவன் பேச்சைக் கேட்டதும் அங்கிருந்த யாருக்கும் மறுவார்த்தை சொல்ல ஓடவில்லை. பிரமை பிடித்தவர்கள் போல் பேசாது இருந்தார்கள். சில கணங்கள் அங்கு அர்த்த புஷ்டியுள்ள ஒரு அமைதி நிலவியது.
அங்குநிலவிய அமைதியை வடிவேலு முதலியார் தான் கலைக்க முன்வந்தார். "வா தம்பி, இப்படி உட்காரு" என்று சங்கரை அழைத்து, தமக்கு அருகில் உட்காரச் சொல்லியவாறே, "தம்பிசொல்றதும் சரிதானே.நாம என்னைக்காவது யோசிச்சுப் பார்த்தோமா?" என்று அங்கு கூடியிருந் தோரைப் பார்த்து ஒரு கேள்வியைப் போட்டார். பிறகு அவர். சங்கரிடம் திரும்பி, "சங்கர் உனக்குத்தான் எல்லா விசயமும் தெரியுமே. இப்ப இருக்கிற நிலைமை எப்பப்பா மாறும்?" என்று பரிதாபத்தோடு கேட்டார்.சங்கர் அந்தக் குரலில் தொனிந்த திக்கற்றதன்மையை உணர்ந்து கொண்டே, "மாறும், மாறும் நீங்க எல்லாரும் மனசு வச்சா!" என்று பதில் கூறினான்.
"விளங்கச் சொல்லு, தம்பி அழிப்பாங்கதை போடுதியே" என்று அந்த முதியவர் கேட்டுக் கொண்டார்.
"தாத்தா, உங்க கஷ்டம் இருக்கே, இது அவ்வளவு லேசிலே தீருகிற விஷயமில்லே. இந்த சர்க்காரோடே ஜவுளிக் கொள்கை மாறினால் ஒழிய, நிலைமை மாறப் போறதில்லை. அதுதான் சொன்னேன்" என்றார் சங்கர்.
"அப்படின்னா ?", என்று கேட்டு நிறுத்தினார், வடிவேலு.
சொல்கிறேன். ஒரு தாதுலிங்க முதலியார் தான் கைலாச முதலியாரின் பிழைப்பைக் கெடுத்தாரா? இந்த நாட்டிலுள்ள எத்தனை எத்தனையோ தாதுலிங்க முதலியார்கள் நூலைக் கள்ள மார்க்கட்டில் விற்றுக் கொள்ளையடிக்கும் பணக்காரர்கள், எத்தனையோ குடும்பங்களை நாசமாக்கவில்லையா? நீங்களும்தான் பேப்பர் பார்க்கிறீர்களே, இன்னிக்கு எத்தனை நெசவாளிக் குடும்பங்கள் சீரழிந்து தெருவில் நிற்கிறார்கள்; பிச்சை எடுக்கிறார்கள்! நமது பெண்கள் தங்கள் மானத்தையே விற்கிறார்களே. இல்லையா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஊராரின் மானத்தையெல்லாம் காப்பதற்காக, நீங்கள் துணி நெய்து கொடுத்தீர்கள். ஆனால் இன்று உங்கள் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள உங்களுக்கு வழி இருக்கிறதா?
சங்கரின் கேள்வி அங்கிருந்தநெசவாளிகள் அனைவர் மனதிலும் புதியதொரு ஒளியைப் பாய்ச்சியது. தங்கள் தொழிலின் மேன்மையையும், அந்த சமயம் தாங்கள் அடைந்துள்ள தாழ்வையும் பற்றி அவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் கர்ப்போட்டம் போன்று ஒரு உணர்ச்சி சில்லிட்டுப் பரவுவதை அவர்கள் உணர்ந்தார்கள். குன்றிக் கிடந்த அவர்களது ஆத்ம சக்தி ஏதோ தளையறுபட்டு விடுதலை பெற்றது போல் ஒருகணம் நிமிர்ந்து சுடர் விட்டது.
"ஆமா தம்பி, ஆமா. நீ சொல்வது சரிதான்" என்று தமது எண்ன உலகிலிருந்து இறங்கி, பிரக்ஞை பெற்ற வடிவேலு முதலியார் பெருமூச்செறிந்து கொண்டார்.
அங்கிருந்தவர்கள் முகத்தில் தெரியும் ஆர்வத்தை உணர்ந்தவனாக, சங்கர் உற்சாகத்தோடு பேசத் தொடங்கினான்:
"இந்த சர்க்கார்தான் உங்கள் கஷ்டத்துக்கெல்லாம் காரணம்; பொறுப்பாளி. கைத்தறித் துணியின் ஏற்றுமதியைத் தடை செய்து அமெரிக்க நாட்டிலிருந்து அதிக விலைக்கு பஞ்சைவாங்கி நூல்விலையைக் கொள்ளை கொள்ளையாக ஏற்றுவதற்கு வழி செய்தது இந்த சர்க்கார். அதனால்தான் கைத்தறி ஜவுளியெல்லாம் விற்காமல் தேங்கிப் போய்விட்டது. உங்களுக்கும் பிழைப்புக் கெட்டுப் போயிற்று. கஷ்டப்படுபவர்கள் நீங்கள் மட்டும் அல்ல. இந்த நாட்டிலுள்ள ஆறு லட்சம் நெசவாளிகளையும், அவர்களை நம்பிப்பிழைக்கும் லட்சோபலட்சக்கணக்கான பெண்டு பிள்ளைகளையும் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் தெரிந்ததா?"
சங்கரின் உக்கிரமான பேச்சு ஆங்காங்கு நின்று கொண்டிருந்த நெசவாளிகளையும் மண்டபத்துக்கருகே கவர்ந்து இழுத்தது. நெசவாளிகள் அனைவரும் தமது நிலைமையைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமும், தெரிந்து கொண்டதால் உண்டாகும் கவலையும் ஏககாலத்தில் முகத்தில் பிரதிபலிக்க, சங்கரின் வாயையே பார்த்துக் கொண்டுநின்றார்கள்.
பஞ்சடைந்து ஒளியிழந்து போன கண்களோடு பரிதாபமாய்க்காட்சியளித்த ஒரு நெசவாளி,"தம்பி, இதுக்கு விமோசனமே கிடையாதா? இப்படி நித்த நித்தம் செத்துப்பிழைப்பதுதான் எங்க தலைவிதியா?" என்று கரகரத்துக் கேட்டார்.
சங்கர் மெல்ல இளநகை புரிந்து கொண்டான். "விதியை நினைத்துச் சாவை வரவேற்பது கோழைத்தனம். நீங்கள் எல்லோரும் சாகவாவிரும்புகிறீர்கள் வாழத்தானே விரும்புகிறீர்கள். அப்படியானால், நீங்கள் தான் உங்கள் விதியை மாற்ற, சாவைத் தவிர்க்க வழிசெய்ய வேண்டும்" என்றான் சங்கர்.
"எப்படியப்பா விதியை மாத்தறது? அன்னிக்கி எழுதினவன் அழுச்சி எழுதப் போறானா?" என்று அந்த முதியவர் குழந்தை போலக்கேட்டார்,
"என்ன தாத்தா, சாவித்திரி எமனோடேயே போராடி, தன் புருஷன் விதியை மாத்தலையா? இன்று உங்கள் பிழைப்புக்கு எமனாகவுள்ள ஜவுளிக் கொள்கையை நீங்களும் எதிர்த்துப் போராடினால், உங்கள் விதியும் தானே மாறிவிடும் தாத்தா?” என்றான் சங்கர்.
"நீ என்ன சொல்லுதே?" என்று ஆர்வத்தோடு ஒரு குரல் கேட்டது.
"இன்னிக்குள்ள ஜவுளித் தேக்கம் போகவும் நூல் விலை இறக்கவும் நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, சங்கம்வைத்து சர்க்காரின் போக்கைக்கண்டிக்க வேண்டும். உங்கள் கோரிக்கைகளைப் பூர்த்திசெய்யுமாறு நிர்ப்பந்திக்க வேண்டும்; உங்கள் ஒற்றுமையும், உறுதியும்தான் உங்களைக் காப்பாற்றும் மருந்து;உங்கள் விதியை மாற்றும் ஆயுதம்."
"என்னது? சங்கம் வைக்கிறதா? இந்தா பாருங்க தம்பி சின்னப்புள்ள, என்னமோ வாய்க்கு வந்ததைச் சொல்லுவான், அதை நம்பி, வம்பிலே தும்பிலே மாட்டிக்கிடக் கூடாது" என்று எடுத்த எடுப்பில் நெசவாளிகளை எச்சரிக்க முன் வந்தார் சுப்பையா முதலியார்.
சங்கர் சட்டென்று அவர் பக்கம் திரும்பினான். "சங்கம் வைப்பது என்ன தப்பான காரியமா? நூல் வியாபாரிகளும், முதலாளிகளும் தமக்கென்று சங்கம் வச்சிக்கிறபோது, நீங்க மட்டும் வைக்கக் கூடாதா? சமூக சேவைக்கென்று தொடங்கிய பத்திரிகையைக்கூட, முதலாளிகள் தங்கள் சௌகரியத்துக்குத்தானே உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்! இதெல்லாம் உங்களுக்குத் தெரியாத விஷயமா,என்ன?"
"அதெல்லாம் முதலாளிமாருங்களுக்குச் சரி தம்பி. நாமளும் அந்த மாதிரி செய்யப்படுமா?" என்று கேட்டார் சுப்பையா முதலியார்.
வடிவேலு முதலியார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கச் சுப்பையா முதலியார் மீது சீறி விழுந்தார்.
"வே.சப்பையா முதலியார்! முதலாளிக்கு ஒரு வழக்கு, நமக்கு ஒரு வழக்கா? வாயைப் பொத்திக்கிட்டு ஒரு இடத்தில கிடையும். உம்மை மாதிரி, இருக்கிறவன் காலைச் சுத்திவந்து, எச்சிப் பிழைப்புப் பிழைக்க நாங்க தயாராயில்லெ. உபகாரம் இல்லாவிட்டாலும் உபத்திரமாவது பண்ணாமெ இரியும்!"
எங்கே வார்த்தை தடித்து விடுமோ என்று பயந்த அங்கிருந்த பெரியவர் இருவரையும் கையமர்த்தி, "எதுக்கு வாயைக் குடுத்து வாயை வாங்குதிய? தம்பி கிணத்திலே விழுங்கன்னு சொன்னா, உடனே நாம விழுந்துடவா போறோம்? நாலும் யோசிச்சி நல்லதுன்னா செய்வோம். இதுக்கு ஏன் வீன்சண்டை என்று சாவதானமாகப் பேசிச் சமரசம் செய்து வைத்தார்.
"ஆமா தம்பி, சர்க்காரோடே போராடணும். அப்படியிப்படிங்கிறியே அதென்ன நடக்கிற காரியமா?" என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார் ஒரு நெசவாளி,
சங்கர் அவர்களது கேள்விகளுக்கெல்லாம் உற்சாகத் தோடு பதில் கூறத் தயாராயிருந்தான்; அவர்கள் கேள்வி கேட்கக் கேட்க அவனது உற்சாகமும் உவகையும் அதிகரித்தன.
"ஏன் நடக்காது? சர்க்காரிடம் அதிகார பலம், ஆயுத பலம் எல்லாம் இருப்பதால் தானே அது நம்மை ஆளுகிறது? அதனாலதானே நீங்கள் பயப்படுகிறீர்கள்? யோசித்துப்பாருங்கள். நாமில்லாமல் இந்த சர்க்கார் ஆகாயத்திலிருந்து குதித்து வந்து விட்டதா? சர்க்காரிடம் அதிகார பலம் இருக்கலாம்; உங்களிடமோ மக்கள் பலம் இருக்கிறது. மக்கள் கோடிக்கால் பூதம் போன்றவர்கள். நீங்கள் ஒன்று சேர்ந்து நிர்ப்பந்தித்தால் சர்க்கார். இணங்கித்தானாக வேண்டும். நீங்கள் ஒன்றுபடவேண்டும் என்பதற்காகத்தான் சங்கம் வையுங்கள் என்கிறேன்" என்றான் சங்கர்.
நெசவாளிகள் எல்லோரும் சங்கருக்குப் பதிலே சொல்லாமல் ஒருவரையொருவர் பார்த்தனர்: சங்கர் சொல்லுகிறபடி நடந்தால் விமோசனமுண்டா என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனத்திலும் தளிர்விட்டது.
"யானைக்குத் தன் பலம். தெரியாததால்தான் அது மாவுத்தனுக்குப் பயப்படுகிறது. அதுபோல் நீங்களும் பயந்து பின்னடைகிறீர்கள். ஆனால் உங்கள் ஒற்றுமையின் பலத்தை நீங்கள் உணர்ந்துவிட்டால், பிறகு சாவு உங்களுக்கல்ல. ஒன்றுபட்ட மக்களின் சக்தியை எந்த சர்க்காராலும் நசுக்க முடியாது. இது சரித்திரம் கண்ட உண்மை"! என்று ஆணித்தரமாகக் கூறி முடித்தான் சங்கர்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் சங்கரின் உறுதி வாய்ந்த பேச்சின் வசிய சக்தியால் கட்டுப்பட்ட நாகங்கள் போல் பேசாது உட்கார்ந்திருந்தனர். வடிவேலு முதலியார் தான் நெசவாளிகள் அனைவரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு, ஆத்திரத்தோடு பேச முன்வந்தார்.
"என்னையாபேசாம இருக்கீங்க" அழுதபிள்ளைதான் பால் குடிக்கும் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் சங்கம் வச்சா, கழுத்துக்கு கத்தி ஒண்ணும் வந்திராது. மதுரையிலே சங்கம் வச்சி என்னமா வேலை செய்யறாங்க தெரியுமா? நானும் ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டுதான் இருந்தேன். நாமும் சங்கம் வச்சிற வேண்டியதுதான். இப்படி நித்த நித்தம் பைத்தியம் பிடிச்ச நாய் மாதிரி சுத்தி சுத்தி வந்து சாகிறதை விட, வாழ வழி தேடும் போராட்டத்திலே செத்துத் தொலைஞ்சாலும் பரவாயில்ல.சாவாவது நல்ல சாவா இருக்கும்!"
வடிவேலு முதலியாரின் உணர்ச்சியும் உத்வேகமும் நிறைந்த வார்த்தைகள் அங்கிருந்தவர்கள் உள்ளங்களையெல்லாம் மின்சாரத்தால் தாக்கியது போல் உலுக்கிக் குலுக்கி விட்டன.
"அதுவும் சரிதான்" என்று மெல்லிய குரலில் ஆமோதித்தார் பெரியவர்.
அதே நேரத்தில் அம்மன் கோயில் ஓதுவார் மூர்த்தி அந்த நேர பூஜை செய்து மணியடிக்கும் ஓசையும் கண கணவென்று விம்மி ஒலித்துப் பரவியது.
"அம்மன்கூட வாக்குக் குடுத்திட்டா, பயப்படாமெ, தம்பி சொல்றபடிக் கேளுங்க" என்றார் முதியவர்.
எல்லோருடைய முகத்திலும் திடீரென்று ஒரு நிம்மதியும் தெளிவும் பிறந்தது.
"அப்ப சரி, சங்கரா! சங்கம் வைக்கிறதுக்கு நீதான் எல்லாம் சொல்லிக் கொடுக்கணும் தெரிஞ்சிதா?" என்று சங்கரை வேண்டிக் கொண்டார் வடிவேலு முதலியார்,
பூரணப் பொலிவும் திருப்தியும் நிறைந்த முகத்தோடு, 'நான் எப்பவும் தயார்' என்று கூறியவாறே சங்கர் மண்டபத்தைவிட்டு எழுந்தான்.
கீழ்த் திசை வானத்தில் பூர்ண சந்திரோதயத்தின் செக்கர் ஒளி மெல்ல மெல்ல இருளை விரட்டியடித்துக் கொண்டு மேலேறத் தொடங்கியது.