16

"என்னம்மா கமலா, மணியும் ஒன்பது அடிக்கப் போவுது. இன்னும் சாப்பிடாம, இப்படியே உக்காந்திருந்தா? வாம்மா சாப்பிட!" என்று கமலாவின் தலையைத் தடவிக் கொடுத்தவாறே அன்போடு கூப்பிட்டாள் தர்மாம்பாள்.

"எனக்குப் பசியில்லேம்மா" என்று கமலா துணிந்து பொய் சொன்னாள்.

"பொய்தானே சொல்றே? மத்தியானம் கூட நீ சரியாச் சாப்பிடலையே. அண்ணன் எப்பயெப்ப வர்ரானோ? வாம்மா சாப்பிட மணிக்கு ஒரு குறையும் வராது" என்று மீண்டும் தேற்றி, கமலாவை வற்புறுத்தி அழைத்தாள் தாய்.

கமலாவோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுத்து விட்டாள்.

"சொல்லத்தானே செய்யலாம். இப்படி முரண்டு பிடிச்சா?"என்று சலிப்பும் வருத்தமும் தோன்றக்கூறிவிட்டு, தர்மாம்பாள் திரும்பிச் சென்றாள்.

கமலா அந்த நாற்காலியிலேயே அசையாமல் உட்கார்ந்து, மேஜை மீதுள்ள விளக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், மேஜைமீது ஒரு புத்தகம் திறந்த வாக்கில் கிடந்தது. கமலாவின் மனமோ ஒரு நிலை கொள்ளாமல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அன்று காலையில் ஆஸ்பத்திரிக்குச் சென்று விட்டு வந்த சங்கர் மணிக்குப் பிரக்ஞை வந்து விட்டதாகவும், எனினும் அவன் ஜன்னி கண்டது போல் ஏதேதோ பிதற்றுவதாகவும், ஜுரமும் அடிப்பதாகவும் தெரிவித்தாள். அதைக் கேள்விப் பட்டதிலிருந்தே, கமலாவுக்கு மனம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி அலைக்கழியத் தொடங்கி விட்டது. மத்தியானம் அவளுக்குச் சாப்பாடே செல்லவில்லை;

அம்மாவின் வற்புறுத்தலுக்காக, வேண்டாவெறுப்பாக, சில பருக்கைகளைக் கொறித்துத் தீர்த்தாள். சாப்பிட்டு முடித்ததுமே சங்கர் ஆஸ்பத்திரிக்குச் சென்று வருவதாகச் சொல்லிப் புறப்பட்டுப் போய் விட்டான். சீக்கிரமே திரும்பி வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றவன் மணி ஒன்பது அடித்தும் வரவில்லை...

எனவேதான் கமலா என்னமோ ஏதோ என்று தவித்துக் கொண்டிருந்தாள்; சங்கர் காரணமில்லாமல் எங்கும் காலம் தாழ்த்த மாட்டான் என்று அவளுக்குத் தெரியும்.

கடந்த மூன்று தினங்களாகவே கமலாவிடமிருந்த உற்சாகம் குடியோடிப் போய்விட்டது.கைலாச முதலியார் வீட்டில் விழுந்த இரட்டைச் சாவுகளும், மணி அடிபட்டு ஆஸ்பத்திரிக்குப் போன நிகழ்ச்சியும் அவளது குதூகலத்தையெல்லாம் பறித்துக்கொண்டு போய்விட்டன.தன் தந்தை தன் கல்யாண விஷயமாய்ச் சம்மதிக்காவிட்டாலும், தன் அண்ணன் சங்கர் இருக்கும்போது தனது இஷ்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது என்று இறுமாந்திருந்த கமலாவுக்கு, சந்தர்ப்பம் செய்த சதிபோல, அந்தக் கோர நிகழ்ச்சி நடந்தேறி விட்டது. அன்றிலிருந்து மங்கள பவனத்தில் கமலாவின் கலகலப்பான பேச்சும் சிரிப்பும் கேட்கவில்லை; அவள் அடிக்கடி கேட்டு ரசிக்கும் ஹிந்தி சங்கீதம் ஒலிக்கவில்லை; மங்கள பவனத்திலிருந்த ரேடியோ அன்று முதல் ஊமையாகி விட்டது.

"மூன்று நாட்களாகியும் இன்னும் அத்தானைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே. நாளையாவது கொடுத்து வைக்குமா? இல்லை சங்கர் சொன்னதைப் பார்த்தால் இனிமேல் அந்தப் பாக்கியமே எனக்குக் கிட்டாமல் போய் விடுமா?"

கமலாவின் மனம் குரங்குப் பிடிக்குள் சிக்காமல் தப்பித் தப்பி ஓடிக் கொண்டிருந்தது; அதன்

நிறுத்துவதற்காக, கமலா புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள். அதில் கறுப்பு மையம் வெள்ளைத் தாளும் தான் தெரிந்தனவேயன்றி எழுத்துக்கள் தெரியவில்லை; எழுத்துக்கள் தெரிந்தாலும், அதன் வாக்கியச் சேர்க்கைகளோ பொருள் அமைதியோ அவள் மண்டைக்குள் ஏறவே இல்லை . கமலா 'ஆயிரம் தடவை' புத்தகத்தை திறந்தாள் ஆயிரம் தடவை மூடினாள். புத்தகத்தில் மனம் செல்லாதனால் புத்தகத்தை மூடிவிட்டு, விளக்கையும் அணைத்து விட்டு இருளின் துணையிலே இருந்தாள்.

அறையிலிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக, தெருவிலுள்ள மின்சாரக்கம்பவிளக்கு புகை மூட்டம் போல் ஒளி செய்தது; வெளியே சினுசிணுத்துப் பெய்து கொண்டிருந்த சிறுதூற்றல்கன்ணாடி ஜன்னல் மீது துளித்துளியாகப் படருவதும், பின்னர் அந்தத் துளிகள் ஒன்று சேர்ந்து தாரை தாரையாக மாறுவதும் அவள் கண்ணைக் கவர்ந்தது. எனினும் அந்தக் காட்சியைக் கண்டெழுந்த அவளது கற்பனை மீண்டும் அவள் மனத்தைக்கட்டவிழ்த்து விட்டது; "ஒருவேளை இதோ அழுது சிணுங்கி, ஜன்னல் கண்ணாடிமீது தாரை தாரையாகக் கண்ணீர் சிந்தும் மழைநீர் எனக்கு வரவிருக்கும் ஆபத்தின் அறிகுறி தானோ?."

கமலாவுக்கு இந்த மாதிரியான மூடத்தனங்களிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. எனினும் அவள் இருந்த நிலையில் தனது மூடத்தனத்தைப் பற்றியோ, புத்திசாலித் தனத்தைப் பற்றியோ ஆராய்ச்சி செய்ய இயலவில்லை.

எனவே கமலா அந்தக் கண்ணாடியிலிருந்து கவனத்தை வேறு பக்கம் திரும்பினாள். சங்கர் வரும் காலடி ஓசை கேட்கிறதா என்றுகாதைத் தீட்டிவைத்துக் கொண்டு காத்திருந்தாள். ஆனால் மழைத்தண்ணீர் சொட்டுச் சொட்டென்று முற்றத்திலிருந்த விசிறி வாழையிலைகளில் விழும் சப்தத்தையும், உள்வீட்டிலிருந்த கடிகாரம் தாள அளவோடு சப்திக்கும் ஒலியையும் தவிர வேறு அரவமே இல்லை.

சங்கர் கமலாவை ஒன்பதரைமணி வரையிலும் தவிக்கவிடவில்லை; அதற்குள் வந்து சேர்ந்து விட்டான். செருப்பின் ஓசையைக் கேட்டதும் 'அண்ணன் தான்' என்று தெரிந்து கொண்டவளாய் கமலா வெளியே ஓடி வந்தாள்.

வந்ததும் வராது துமாய் "அண்ணா , அத்தானுக்கு எப்படியிருக்கு?" என்று ஆவலோடு கேட்டாள்.

"ஒன்னும் பயமில்லை, கமலா. காய்ச்சல் இறங்கி விட்டது" என்று விஷயத்தைச் சொன்னான் சங்கர்.

சங்கர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே வெளிவந்த தர்மாம்பாள், "வாடாப்பா! அண்ணனைக் காணாமல் சாப்பிடவே மாட்டேன்னு ஒரே சாதனையாய் சாதிச்சித் தீர்த்துட்டா, உன் தங்கச்சி இப்பவாவது நல்ல வார்த்தை கொண்டாந்தியே!" என்று நிம்மதி நிறைந்த பெருமூச்சுடன் சொன்னாள் தர்மாம்பாள்.

கமலாவின் முகத்தில் ஒரு அசட்டுப் புன்னகை மலர்ந்து கூம்பியது.

"அசடு, இவ்வளவு நேரமும் சாப்பிடாமலா இருந்தே? மணிக்கு ஒரு ஆபத்துமில்லைன்னு அன்னிக்கி டாக்டர் நடராஜனே உங்கிட்ட சொல்லலியா?" என்று செல்லமாகக் கடிந்து கொண்டான் சங்கர்.

"சரி, சரிவாங்கரெண்டுபேரும், சாப்பிடலாம்" என்று கூறியவாறே உள்ளே திரும்பினாள் தர்மாம்பாள்.

'போம்மா, வர்ரேன் " என்று சொல்லிவிட்டு, கைகால் கழுவுவதற்காகக் குழாயடிக்குச் சென்றான் சங்கர்; கமலா அவனைத் தொடர்ந்து குழாயடிக்குத் தானும் சென்று விட்டாள்.

"அண்ணா, அத்தானை நாளைக்காவது பார்க்கலாமா?"என்று கொஞ்சும்குரலில் கேட்டாள் கமலா.

"இன்னம் ரெண்டு நாளைக்கு டாக்டர் யாரையுமே

அனுமதிக்க மாட்டாராம். மீண்டும் மணிக்கு ஏதேனும் அதிர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அவர் பயப்படுகிறார். இத்தனை நாள் பொறுத்திருந்தவள் இன்னம் இரண்டு நாளைக்குப் பொறுத்திருக்கக் கூடாதா?" என்று கூறியவாறே முகத்தைத் துடைத்து கொண்டான் சங்கர்.

கமலாவுக்குத் தோன்றிய புது உற்சாகத்தால், அவள் மேலும் பேச முனைந்தாள்.

"நீ வருகிற வரையிலும், எனக்கு ஒண்ணுமே ஓடலை, ஏன் அண்ணா , வர்ரதுக்கு இவ்வளவு நேரம்?"

"உனக்கு நல்ல செய்தி கொண்டு வரணும்கிறதுக்காக, மணிக்கிக் காய்ச்சல் இறங்குகிற வரையிலும் ஆஸ்பத்திரியிலேதான் இருந்தேன். அப்புறம் வர்ர வழியிலே, நம்ம ஊருத் தறிகாரங்க எல்லாம் என்ளை நிறுத்திட்டாங்க. மணி வீட்டிலே நடந்த விஷயம் அவங்க கண்ணைத் திறந்து விட்டிருக்கு. சங்கம் வச்சிப் போராடினாத்தான் விமோசனம் என்ற எண்ணம் இப்போதுதான் அவங்களுக்குப் புரிய ஆரம்பிச்சிருக்கு. அதுதான் வர நேரம் ஆயிட்டுது" என்று விளக்கிச் சொன்னான் சங்கர்.

"அப்போ, இனிமேல் நம்ம அப்பா முன்னே மாதிரி கொள்ளையடிக்க முடியாதுன்னு சொல்லு!" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் கமலா.

இதற்குள் தர்மாம்பாள் உள்ளேயிருந்து கூப்பிடும் சப்தம் கேட்டது.

"ரெண்டு பேரும் என்னத்தைத்தான் பேசிக்கிட்டு இருக்கிய? வாங்க சாப்பிட வயிறு பசிக்கலையா?" என் கூப்பிட்டாள் தர்மாம்பாள்.

சங்கரும், கமலாவும் வீட்டுக்குள் சென்று சாப்பிட உட்கார்ந்தார்கள்.

தர்மாம்பாள் இருவருக்கும் பரிமாறிக்கொண்டே

"ஏண்டாப்பா சங்கர், மணிக்கு ஒண்ணும் பயமில்லையே!" என்று கேட்டாள்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லேம்மா. இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே அவன் ஆஸ்பத்தியிலேருந்து வந்திடுவான்" என்று கூறிக்கொண்டே, சோற்றை வாயில் வைக்கப்போன சங்கர் ஏதோ நினைத்தவனாக மீண்டும் பேசினான்: "அப்பாவின் பேராசை ஒரு குடும்பத்தையே சீர்குலைத்துவிட்டது. இன்னும் எத்தனைகுடித்தனங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளப் போகிறார்களோ?அம்மா, ஜனங்கள் என்றைக்கும் இப்படியே இருக்க மாட்டார்கள். அவர்கள் விழிப்படையும் காலத்தில்...."

சங்கர் அந்தக் காலத்தை மனத்தில் கற்பனை செய்து பார்த்தவனாகப் பெருமூச்செறிந்தான்.

தன் கணவனைப்பற்றிக்குறை கூறுவதைக் கண்டதும் தர்மாம்பாளின் உள்ளுணர்ச்சி பதிவிசுவாசத்தால் ஒரு கணம் குன்றியது. அதை அவள் வெளிக் காட்டிக் கொள்ளாமலே. "சங்கர், என்ன இருந்தாலும், நீ இப்படியெல்வாய் பேசி, அப்பா மனசைப் புண்படுத்தக் கூடாது. மணியோட அப்பா விசயமாய் இவ்வளவு கடுமையாய் நடந்திருக்கக் கூடாதுன்னு நான் கூட அப்பாக்கிட்டே சொன்னேன்." என்று பேசத் தொடங்கினாள்.

சங்கர் தன் தாயின் மனவுணர்ச்சியை உணர்ந்தவனாகவோ, அவள் கூறுவதை நம்புபவனாகவோ காணப்படவில்லை. வாயில் போட்டிருந்த சாதத்தை மென்று விழுங்கி விட்டு, ஒரு மடக்குத் தண்ணீரும் குடித்துவிட்டு, தர்மாம்பாளுக்குப் பதில் சொல்ல முனைந்தான்.

"என்னம்மா சொன்னே? பணக்காரனுக்கு என்றைக்கும் பரிதாப உணர்ச்சி பிறந்து விடாது, அம்மா. பணத்தின் பேராசை இந்த உலகத்து மக்களை எத்தனை முறை யுத்தத்துக்கு ஆளாக்கிரத்தம் குடித்திருக்கிறது தெரியுமா?

பணக்காரனுக்கு வெளி நாக்கு சர்க்கரை; உள் நாக்கு விஷம் அம்மா, விஷம்! தெரியுமா?"

தர்மாம்பாளுக்கு அவன் பேச்சைக்கேட்க என்னவோ போலிருந்தது.

"சரிதாண்டாப்பா, சங்கர். சீக்கிரம் சாப்பிட்டுட்டு எழுந்திரு. நல்லாத்தான் பேசறே? இலை முன்னாலே உக்காந்துக்கிட்டு, ரத்தம், விஷம் அப்படி இப்படின்னு" என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

தன் தாயின் பதிலைக் கேட்டுக் 'களுக்'கென்று சிரித்தாள் கமலா.

"அண்ணா , உன்னைப் பேச்சிலே மடக்க முடியாதுன்னு பெருமை அடிச்சிக்கிடுவியே, இப்போ அம்மா உன்னை மடக்கிப்புட்டாளே!" என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினாள் கமலா.

"வாயாடி" என்று கூறி நிலைமையைச் சமாளித்தான் சங்கர்.

சாப்பிட்டு முடிந்தபின் மூவரும் நடுஹாலுக்கு வந்தனர். சங்கர் கமலாவைப் படுக்கப் போகச் சொல்வி விட்டு, தன் தாயிடம் திரும்பி, "அம்மா நான் மணி வீட்டு வரையிலும் போய், தங்கம்மா அத்தைக்கு மணியைப் பத்தி தகவல் தெரிவிச்சிட்டு வந்திடுறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.

"உன் அத்தையை நீதான் மெச்சிக்கிடணும். அன்னிக்கி நான் துட்டிகேக்கப்போனதும், அவள் என்னை முகம் கொடுத்துக்கூடப் பார்க்கலெ!" என்று சொல்லிப் பெருமூச்செரிந்தாள் தர்மாம்பாள்.

"எப்படியம்மா பார்ப்பாள்? நம்ம அப்பா வாலேதானே அவளுக்கு இந்தக் கதி நேர்ந்தது?”

சங்கரின் பேச்சு மீண்டும் பழைய தடத்துக்குச் செல்வதையுணர்ந்த தர்மாம்பாள், "சரி, சரி, போயிட்டு, சீக்கிரமா வந்து சேரு மணி பத்தாச்சு" என்று சொல்லி அவனை வழியனுப்பிவைத்தாள்.

சங்கர் சென்ற சிறிது நேரத்துக்குள்ளாகவே தாதுலிங்க முதலியார் வந்து சேர்ந்தார். வரும்போதே, "சங்கர் எங்கே?” என்ற கேள்விதான் அவர் வாயிலிருந்து பீறிட்டு வெடித்தது.

"ஏன்? என்ன விசயம்?” என்று கேட்டு நிறுத்தினாள் தர்மாம்பாள்.

"என்ன விசயமா? இப்பதான் அந்தச் சுப்பையா முதலி ஸ்டோருக்கு வந்து சொல்லிட்டுப் போனான். இவன் என்னமோ தறிகாரங்களையெல்லாம் கூட்டி வச்சிக்கிட்டு, சங்கம்வைக்கணும், அதுவைக்கணும், இது வைக்கணும்ணு சொல்லிக்கிட்டிருந்தானாம். என்னைப்பத்தி வேறே, என்னென்னமோ சொன்னானாம் இருந்திருந்து எனக்குன்னு வந்து முளைச்சானே, இவன்! ஒத்தைக்கு 'ஒரு பிள்ளையேன்னு பார்க்கிறேன். இல்லேன்னா, தொலைச்சித் தலை முழுகிட்டு 'அக்கடா'ன்னு. இருந்திருவேன். எங்கே அவன்?" என்று படபடத்துப் பேசினார் தாதுலிங்க முதலியார்,

"அவன் இன்னம் வரலெ" என்று துணிந்து பொய் சொன்னாள் தர்மாம்பாள்.

அறைக்குள்ளிருந்து இத்தனையையும் ரகசியமாகக் காது கொடுத்துக் கேட்டிருந்த கமலா "அப்பா! இனிமேல் நீங்கள் ஜனங்களையும் ஏமாற்ற முடியாது, என்னையும் ஏமாற்ற முடியாது!"என்று குதூகலத்துடன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

உள் வீட்டுக் கடிகாரம்'டங்'கென்று பத்தரை அடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/016-028&oldid=1684111" இலிருந்து மீள்விக்கப்பட்டது