18

மணிக்கு உடம்பு குணமாகிவிட்டது.

தலையிலுள்ள கட்டை அவிழ்த்து நாலு தினங்கள் ஆகிவிட்டன. அவன் எழுந்து நடமாடத் தொடங்கிவிட்டான். எனினும் டாக்டர் நடராஜன் அவனது குடும்ப நிலைமையை உத்தேசித்தும், மணியின் மனோநிலையைக் கருதியும் அவனை மேலும் சில தினங்கள் ஓய்வு பெறுமாறு கேட்டுக்கொண்டார். எனவே அவன் ஆஸ்பத்திரியில்தான் இருந்தான். தினம்தினம் சங்கர் வந்து மணியைச் சந்தித்துப் போனான். கமலாவும் அடிக்கடி வந்து சென்றாள்.மணியின் தாய் தங்கம்மாளும் இரண்டு தடவைகளுக்குமேல் வந்து மகனைப்பார்த்துவிட்டுச்சென்றாள். இருளப்பக்கோனார் மட்டும் பகலில் மூன்று வேளைகளிலும் வந்து மணிக்கு

'என்ன வேண்டும், ஏது வேண்டும்' என்று விசாரிப்பதோடு, இரவில் மணியுடன் துணைக்காகப் படுத்தும் வந்தார்.

மணிக்கு உடல் நிலைதான் குணமாயிற்றேயொழிய மனநிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டு வந்தது. தனது உடல் நலத்தில் இத்தனை பேரும் காட்டிவந்த ஆர்வத்தையும் அன்பையும் கண்டு, அவன் மனம் ஒருபக்கம் திருப்தியடைந்த போதிலும், அந்தத் திருப்தியுணர்ச்சிக்கும் மிஞ்சிய வேறு பல பயவுணர்ச்சிகள் அவன் மனத்தை அலைக்கழித்தன. அவனுக்கு ஏற்பட்டிருந்த மன உளைச் சலை அவன் யாரிடமும் சொல்லி ஆற்றிக்கொள்ளவும் கூறினான். தன் மனக்குகையில் தோன்றிச் சுழித்துக் குமுறும் எண்ண அலைகளை, அவன் தனக்குள்ளாகவே உள்ளடக்கித் தவித்துக் கொண்டிருந்தான். இந்த மன உளைச்சல்தான் அவனிடம் நாளுக்குநாள் வெற்றிக் கண்டதே ஒழிய, அவன் அதை வெற்றி காணவில்லை. எனவே அவனுக்கு இரவில் சரியான தூக்கமில்லை. இரவில் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு ஆஸ்பத்திரியே தூங்கத் தொடங்கிய பிறகும் அவன் தூங்குவதில்லை.

இந்த மாதிரியான வேதனையால் அவனுக்கு இரவு ஏன் தான் வருகிறதோ' என்றிருந்தது.

ஆனால் நித்தம் நித்தம் இரவு வந்து கொண்டு தானிருந்தது.

அன்றிரவுமணிபத்தும் அடித்து விட்டது.

ஆஸ்பத்திரி எங்கும் அமைதி குடிகொண்டு விட்டது. எங்கோ பக்கத்து அறையில் படுத்திருந்த நோயாளி இடையிடையே 'லொக்கு லொக்கு' என்று இருமுவது மட்டும் இரவின் அமைதியைக் குளப் பாசிபோல் சில கணங்கள் சிதற விட்டது. மணி படுத்திருந்த அறைக்குள் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் இப்போதுதான் உயிர்பெற்று ஓடத் தொடங்கியது போல் 'டிக் டிக்' கென்று தாளலயம் தவறாது சப்தித்தவாறே இருளின் பயங்கரத்துக்குப்

பின்னணி இசைத்து வலுவேற்றிக் கொண்டிருந்தது. இருளப்பக் கோனார் அந்த அறையின் வாசல்புறத்தில் ஓரமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

மணிபோர்வையை இழுத்து மார்புவரையிலும் மூடிக் கொண்டு படுத்திருந்தான். அவன் கண்கள் அந்த அறையில் கவிந்து நின்ற இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன; காதுகள் கடிகாரத்தின் தாள லயத்தை உற்றுக்கேட்டு, அந்தலயத்தின் இசைவோடு அவன் மனத்தை ஒரு நிலைப்படுத்த முயன்று கொண்டிருந்தன. இடையிடையே அடி வானத்தில் வெட்டி மினுக்கி மறையும் மின்னல் தூண்டில் போட்டு இழுப்பது போல் ஆஸ்பத்திரி அறைக்குள் ஒரு கணம் ஒளியை மிதக்க விடுவதும், மறு கணமே அதைச் சுண்டி வாங்குவதுமாக இருந்தது.

இருளையே பார்த்தவாறு கிடந்த மணியின் மனமும் எண்ணற்ற சிந்தனைக் குழப்பங்களால் ஒளி பெறுவதும் இருள் மூடுவதுமான நிலையில் தவித்துக் கொண்டு இருந்தது.

எத்தனை நினைவுகள் எத்தனை எண்ணங்கள்!

அன்று ஒருநாள் சங்கர் மணியின் தாயை அழைத்து வந்திருந்தான். வெள்ளைப்புடவையும், கும்குமமிழந்தபாழ்துதலும், மங்கல நாணை இழந்த வெறுங் கழுத்துமாக, தலைவிரி கோலமாய், அழுதழுது வீங்கிச் சிவந்த கண்களோடும், ஒளியிழந்து வாடி வதங்கிய முகத்தோடும் அவள் அந்த அறைக்குள் வந்தபோது மணியின் உள்ளத்தில் ஏதோ திடீரென்று சுளுக்கிக் கொள்வது போலிருந்தது அந்தச் சுளுக்கின் நரக வேதனையைத் தாங்கமாட்டாமல் அவன் கண்கள் கண்ணீரைப் பிதுக்கித் தள்ளின.

தங்கம் உள்ளேவந்ததும் ஓவென்று அலறிப்புடைத்து விட்டாள்.

"அப்பா மணி, மகனே! என்னை இந்தக் கோலத்திலாடா பார்க்கணும்? உங்க அப்பாவையும், தம்பியையும்

தூக்கி விட்டுட்டேண்டா! இனிமே யாரடா எனக்குத் துணை? என்னடா செய்யப் போறேன்....?"

உணர்ச்சிவசப்பட்டுக்குமுறினாள் தங்கம்.

அருகில் நின்ற கோனாரும், சங்கரும் இன்னது செய்வதெனத் தெரியாமல் திகைத்து நின்றார்கள். தாயின் கண்ணீர் பெருகுவதற்கு முன்பே, மணியின் கண்ணீர் தலையணையை நனைக்கத் தொடங்கிவிட்டது. மணி விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டான்.

நல்லவேளையாக டாக்டர் வந்து சேர்ந்தார்.

வந்ததும் வராததுமாக அவர் தங்கம்மாளைப் பார்த்து, " இதென்னம்மா சத்தம்? உங்கள் பிள்ளை நோயாய்ப் படுத்திருக்கிறார் என்பதுகூடத் தெரியாமல் இப்படி அழுகிறீர்களே, அவருக்கு நீங்கள் ஆறுதல் சொல்லித் தேற்றுவதை விட்டு விட்டு, நீங்களே இப்படி அழுதால்? அப்புறம், உங்கள் - பிள்ளைக்கு எப்படிக் குணமாகும்? மேலும் நீங்கள் அழுவதால் ஆஸ்பத்திரியிலுள்ள மற்ற நோயாளிகளுக்கும் சிரமம் வருத்தம் எல்லோருக்கும் தான் இருக்கிறது. அதை இப்படி அழுது தீர்த்துத்தான் காட்டிக்கொள்ள வேண்டுமா?" என்று கண்டனமும் பணிவும் நிறைந்த வார்த்தைகளைப் பேசி, தங்கம்மாளைச் சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தினார்.

பிறகுதான் மணியும் தன் கண்களைத் துடைத்து விட்டு, "அழாதேயம்மா நீயே அழுதால் பிறகு எனக்கு யாரம்மா ஆறுதல்?" என்று கம்மினான்.

"அழனும்ணு விதி இருக்கயிலே அழாமல் இருக்க முடியுமாடா மகனே!" என்று பொங்கிவந்த அழுகையை உள்ளடக்கிக் கொண்டு சொன்னாள் தங்கம்.

மணிக்கு அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை திகைத்தான்.

அதற்குள் டாக்டர் சங்கரைக் கூப்பிட்டு, "இந்த அம்மாளைச் சீக்கிரம் அழைத்துக் கொண்டு போய் விடுங்கள் பெண்கள் எல்லோருமே இப்படித்தான்.லகுவில் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறார்கள்" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு வெளியே சென்றார். தங்கமும் சிறிது நேரம் தன் மகனிடம் இன்னது பேசுவது என்று தெரியாமல் விசும்பி விசும்பித் தன் மனப் பாரத்தைக் குறைக்க முயன்று கொண்டிருந்தாள்.

சங்கர் குறுக்கிட்டு, "வாங்க அத்தை. மணிக்கு நல்ல ஓய்வு வேணும், தூங்கச் சொல்லுங்கண்ணு டாக்டர் சொல்லிட்டுப் போனார்" என்று ஒரு பொய்யைச் சொல்லி, தங்கம்மாளை அங்கிருந்து கிளப்பிக் கூட்டிக்கொண்டு சென்றாள்.

தாய் வந்து சென்றதில் மணிக்கு வருத்தமும், மகிழ்ச்சியும் கலந்து நின்று மனத்தில் தட்டு மறித்துக் கொண்டிருந்தன.

ஆஸ்பத்திரிக் கடிகாரம் பதினோரு மணி அடித்தது. அந்த மணிச் சப்தத்தினால் தடைபட்டுப் போனது போல் தோன்றிய பெண்டுல ஓசை, மீண்டும் டிக்டிக்கென்று ஒலிக்கத் தொடங்கி விட்டது. ஆனால் தாளகதி நடைமாறி லயபேதம் ஏற்பட்டது போன்ற ஒரு பிரமை மணிக்கு ஏற்பட்டது.

அவன் சிந்தனையும் தடம் மாறியது; வேறு லயத்தில் திரியத் தொடங்கியது...

மூன்று தினங்களுக்கு முன்னால் கமலா வந்திருந்தாள் அன்று அவளுடன் சங்கரோ டாக்டரோ வரவில்லை; கோனாரும் எங்கோவெளியில் சென்றிருந்தார், கமலாவைத் தனிமையில் சந்திப்பதால் உண்டாகும் இன்பவுணர்ச்சி மணியின் உள்ளத்தைச் சிலிர்க்கச் செய்தது.

"கமலா சங்கர் வரலையா?" என்று கேட்டான் மணி

"இவ்லை".

கமலாவுக்கும் இத்தனை நாட்களுக்குப் பிறகு மணியைத் தனியே சந்திப்பதில் உண்டாகும் மகிழ்ச்சியும், இடம் பொருள் முதலிய சந்தர்ப்பங்களினால் ஏற்படும் இனந்தெரியாத கலவர உணர்ச்சியும் மனத்தில் புகுந்து குறுகுறுத்தன.

"என்ன அத்தான் எப்படியிருக்கு?" என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள் கமலா.

"இப்படி உட்கார்"என்றான் மணி

கமலா அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

"பக்கத்திலேவாயேன்."

கமலா நாற்காலியை அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டாள். மணி அந்தத் தனிமையினால் ஏற்பட்ட குறுகுறுப்பினால், கமலாவின் கரத்தை எடுத்துத் தன் கன்னத்தோடு வைத்துக் கொண்டான்; அவளது சிவந்த கரத்தில் மெல்ல முத்தமிட்டான்.கமலாவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்துக் கிளுகிளுத்துக் சிலிர்த்தது. அந்த ஸ்பரிச் சுகத்திலிருந்து மீளும் துணிவோ பிரக்ஞையோ அற்றவளாக, அவள் அப்படியே மெய்மறந்து உட்கார்ந் திருந்தாள்.

"இந்த மாதிரிக் கைகளினால் எனக்கு வைத்தியம் செய்வதானால். நான் என் ஆயுள் முழுவதும் இப்படியே கழித்து விடுவேன்!" என்றான் மணி.

"அசடுமாதிரிப் பேசாதிங்க!" என்று செல்லமாகக் கூறியவாறே கையை மெல்ல விடுவித்துக் கொண்டாள் கமலா. "யாராவது வந்திடப் போறாங்க, அப்புறம்...?"

"அப்புறம் என்ன?"

கமலா பதில் கூறாமல் "குறும்பைப் பாரு!" என்று செல்லமாக மணியின் கன்னத்தில் இடித்தாள்.

இருவரும் மெல்லச் சிரித்துக்கொண்டார்கள்.

"கமலா, நீ என்னைப் பார்க்க இப்படி வந்திடுறியே, உங்க அப்பா கண்டா விடுவாரா?" என்று ஆவலோடு கேட்டான் மணி.

"அப்பாவுக்கு அம்மா எப்படியாவது பதில் சொல்லிக் கிடுவாள்!"

கமலாவுக்குத் தன் தந்தையை நினைத்ததும், அவர் மணியின் குடும்பத்துக்கு இழைத்த கொடுமை நினைவுக்கு வந்துவிட்டது.

"அத்தான், அப்பாவாலே தானே உங்களுக்கு இந்தக் கதி? அதை நினைச்சி, நீங்க என்னோடு எங்க முகங் கொடுத்துக்கூடப் பேசமாட்டியளோன்னு பயந்துக்கிட் டிருந்தேன்."

மணி ஆழ்ந்தபெருமூச்சு விட்டான். அதுக்கு நீ என்ன செய்வே?"

"அதுக்குத்தான் அப்பாவைப் பழி வாங்கிற மாதிரி, நான் உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேனே!" என்று வெட்கமும் வேடிக்கையும் கலந்த குரலில் உற்சாகத்தோடு கூறினாள் கமலா,

"அதெப்படி முடியும், கமலா?" என்று கவலையோடு கேட்டான் மணி. "இனிமேல் மட்டும் அவர் சம்மதிப்பாரா? அதிலும் எங்க குடும்பம் இவ்வளவு கேவலப்பட்டு, சந்தி சிரிச்ச பிறகு?"

மணியின் கண்கள் எதையோ பறி கொடுக்கப் போவது போல் கலங்கி மிரண்டன; அவனுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை.

"அப்பா என்ன சொன்னாலும் சரி நம் கல்யாணம் நடந்தே தீரும்!"

"அதுமுடிகிறகாரியமா,கமலா?"

"ஏன் முடியாது? என் தந்தையையே நான் புறக்கணிக்கத் துணிந்தால்?"

அவளுடைய பேச்சில் தொனித்த உறுதியைக் கண்டு மணி மலைத்தான்; அவளுக்குள்ள உறுதிகூடத் தனக்கு இருக்குமா என்பதை அவன் சிந்தித்துப் பார்க்கக் கூடத் தயங்கினான்.

"எனக்காக நீ உன் சொத்துச்சுகத்தையொல்லாம்விட்டு விடுவதா?" கேள்வியைக் கேட்ட பிறகுதான் அதை ஏன் கேட்டோம் என்றிருந்தது. அவனுக்கு

"அத்தான் எனக்குச் சொத்துச் சுகம் பெரிதல்ல; என் லட்சியம்தான் பெரிது. ஆதை அடைவதற்காக நான் எதையும் விட்டு விடுவேன். அண்ணா கற்றுக் கொடுத்த பாடம் அது!"

கமலாவின் தைரிய மொழியால்தான் மணியின் மனம் ஆறுதல் அடைந்தது. அவன் தனது இதயத்தில் முட்டிக்கொண்டிருந்த அன்பையெல்லாம்வாரிப்பொழிந்தவனாய், "கமலா!" என்று கம்மியடங்கிய குரலில் அவள் கையைப் பிடித்துக்கண்களில் ஒற்றிக்கொண்டான்,

செருப்புச் சத்தம் கேட்ட கமலா "யாரோ வர்ராங்க" என்று கூறியவளாய் கைக்களை விசுக்கென்று பிடுங்கிக் கொண்டு இடத்தை , விட்டு எழுந்தாள்; டாக்டர்தான் வந்தார். கமலா டாக்டருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, விடைபெற்றுச் சென்றாள்.

கமலா வந்து சென்றதில் புதிய உற்சாகமும், 'அவள் கூறிய தைரியத்தால் நம்பிக்கையுணர்வும், கூறியபடி அவள் நடக்க முடிமா என்ற சந்தேகத்தால் சிறு கலக்கமும் மணியின் மனத்தில் புகுந்து ஊடாடின,

ஆஸ்பத்திரிக் கடிகாரம் மணி பன்னிரண்டு அடித்தது.

இருளப்பக் கோனார் தூக்கம் கலைந்து எழுந்து வெளியே சென்று விட்டு வருவதற்காகக் கதவைத் திறந்தார். கதவு திறக்கும் சப்தம் கேட்டு மணி, "யாரது கோனாரா?" என்று கேட்டான்.

"என்ன தம்பி, இன்னுமா தூங்கலே?"

"இல்லே இப்பதான் விழிச்சேன்!"

"தூங்குங்க தம்பி.கண்முழிச்சா உடம்புக்கு ஆகாது"

கோனார் வெளியே சென்றுவிட்டுத் திரும்பி வந்து படுத்ததும் மணிக்குத் தெரியும், எனினும் அவன் மீண்டும் குரல் கொடுத்துத் தன்னைத்தானே காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. இருளப்பக்கோனாரின் குறட்டைச்சப்தம் சிறிது நேரத்தில் மெதுவாக இழையத் தொடங்கியது. மணி நெடிய பெருமூச்செறிந்தவாறே ஜன்னலுக்கு வெளியே பரவிக் கிடந்த இருட்பிரவாகத்தைப் பார்த்தான்.

அடி வானவட்டத்தில் மின்னல் பளீர் பளீர் என்று ஜோதி வீசிக் கண்ணைப் பறித்தது. வான விளிம்பில் திரண்டிருந்த மேகக் கருமை, மின்னல் ஒளியில், திரை சாய்ந்து படுத்துறங்கும் காட்டானைக் கூட்டம் போல் தோற்றம் அளித்தது. அத்துவானக் காட்டுக்குள்ளிருந்து சோர்ந்து பிளிறும் களிற்றைப் போல் இடி முழக்கம் மெல்ல முனகி ஓய்ந்தது.

மணியின் சிந்தனையில் சங்கரின் நினைவு பளிச்சிட்டது.

ஒருநாள் மாலையில் சங்கர் மணியுடன் அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தான். நடந்தது நடந்து விட்டது. இனி நடக்கவேண்டியதை யோசனை செய் என்று ஆறுதல் கூறினான்; என் அப்பா தன் பணத்தைத் தான் கட்டியாள முடியுமே தவிர, என்னையோ கமலாவையோ கட்டியாள முடியாது என்று தைரியம் கூறினான். அதற்குப் பிறகு. மணியின் சிந்தனையில் அந்த வார்த்தைகள் தாம் மின்னலைப் போல வெட்டி மினுக்கின.

"மணி, நான் இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். நீ என்னவோ இதுநாள் வரை பொது வாழ்க்கையிலேயே ஈடுபட மறுத்து வந்தாய். நான் ஏதாவது உன்னிடம் பேசமுனைந்தாலும் நட்புரிமைக்காகக் காதுகொடுப்பாயே தவிர, உன் மனம் அதைப் பற்றிக் கவலை கொண்டதில்லை. என்னவோ உன் காரியத்தை மட்டும் நீ ஒழுங்காகப் பார்த்துக்கொண்டு போவது போல் நடந்து கொண்டாய். ஆனால், இன்றாவது நீ யோசித்துப் பார். உன்னைக் கேட்காமலே உலகநிலை உன்னை இக்கோலத்துக்கு ஆளாக்கிவிட்டுவிட்டது. தந்தையை இழந்தாய்; தம்பியைப் பறிகொடுத்தாய், இவையெல்லாம் உன் இஷ்டப்படியா நடந்தன? நாம் என்னென்ன கனவுகள் கண்டாலும், எப்படித்தான் வாழ முயன்றாலும் உலகப் போக்கைப்பற்றி பிரக்ஞை இல்லாதவரை நம் வாழ்க்கை நாம் நினைப்பது போல் நடப்பதில்லை; நம் கனவுகள் நிறைவேறுவதில்லை. இதை நீ இப்போதாவது உணர்கிறாயா?

"இன்று உலகநிலை, நம் நாட்டின் நெருக்கடி உன்னை நேரடியாகப் பாதித்து விட்டது. உன் தந்தையின் கோர மரணம் உனக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால் இதுபோல் உலகில் தினம் தினம் எத்தனை சம்பவங்கள் நடக்கின்றன தெரியுமா?அவை உன் அனுதாபத்தைக் கூடக் கவரவில்லை. இல்லையா?_

சங்கர் கூறுவதை மணி கவனத்தோடு கேட்டான்; ஆனால் அவனது இதயம் அந்த வார்த்தைகளின் அர்த்த பாவத்தைச் சரிவர வாங்கிக் கொள்ளவில்லை; அவனுக்குச் சங்கர் கூறுவது புரியவில்லை.

"நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?" என்று குறுக்கிட்டான் மணி. 'மணி, இந்தச் சம்பவம் உன் குடும்பத்துக்கு மட்டும் நேர்ந்த கதி என்று எண்ணாதே. தறியை நம்பிப் பிழைத்து வந்த ஜனங்கள் எல்லோருமே இன்று இந்தக் கதிக்குத்தான் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். நமது ஊரிலேயே ஜனங்களின் நிலைமை என்ன தெரியுமா? அவர்களும் உன் தந்தையைப் போல் தற்கொலை செய்து கொள்ளத் துணியவில்லையென்றால் அவர்களுக்கு வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கை, பற்றுதல் குன்றிவிடவில்லை என்றுதான் அர்த்தம். இங்குமட்டுமல்ல, இமயம் முதல் குமரி வரை இதே நிலைமை.

"இந்த நிலைமையை மாற்றும் பணியில் நீ இனிமேலாவது ஓரளவு பங்கு பெறக் கூடாதா?..."

மணியின் மனத்தில் சங்கரின் இந்த வேண்டுகோள் விடை காண முடியாமல் அலைக்கழித்தது; சங்கரின் ஆறுதல் அவனுக்கு நம்பிக்கையைத்தந்தது. ஆனால் அவன் விளக்கிய உலக நிலையோ மணியின் மனத்தில் தனது எதிர்காலத்தைப்பற்றிய இருள் மண்டலத்தைத் தான் கவியச் செய்தது...

இருளின் அமைதியைக் குலைத்து எங்கிருந்தோ இரவில் ரோந்து சுற்றும் ஒரு போலீஸ்காரனின் விசில் சப்தம் கீச்சிட்டது; தொடர்ந்து ஒரு நாய் பிலாக்கணம் வைத்து ஓலமிடும் அழுகுரல் அந்தகார அமைதியைச் சிலிர்த்து நடுங்க வைத்தது; கடிகாரம் நிர்விசாரமாக இடைவிடாது சப்தித்துக் கொண்டிருந்தது.

மணி தன் தாயைப்பற்றி நினைத்தான்,

இரண்டு தினங்களுக்கு முன் தங்கம்மாள் வந்திருந்தாள். அன்று அவள் மணியிடம் வீட்டு நிலைமைகளைப் பற்றியெல்லாம் பேசிவிட்டுச் சென்றாள்...

"அப்பா மணி, கோனாரும் அவரு பொஞ்சாதியும் தான் எனக்குத் துணை. சொல்லி அழனும்னாக்கூட அவ ஒருத்திதான் பக்கத்திலே இருக்கா. ஆனா அவங்க கஷ்டம் நமக்குத் தெரியாதா? என்னமோ விசுவாசத்துக்காக இவ்ளவும் செய்தாங்க. எல்லாம் நீ எந்திரிச்சி வந்த பிறகு தாம் ஒழுங்குபடுத்தணும். அன்னிக்கி சங்கர் வந்திருந்தான். இந்தச் சமயத்திலே அவன் உதவியில்லாட்டி, நாம் நாறிப் போயிருப்போம். அவன் தங்கம்னா தங்கம்தான். அவனைக் கொண்டு ஒங்க அப்பா வச்சிட்டுப்போன கணக்கு வழக்கையெல்லாம் பார்க்கச் சொன்னேன். வீடு அந்த மைனர்கிட்டே அடமானத்திலே இருக்கு; நிலம் வாங்கின கடனுக்கே முங்கிப் போச்சி, இன்னும் வேறெ பாக்கி கிடக்கு மிச்சம் ஒண்ணையும் காணம். அந்த மைனர் பொல்லாத மனுசன், அவன் பாக்கியை எப்படியாவது அடைச்சி வீட்டைத் திருப்பணும்.

"கமலா கூட அன்னிக்குவந்து உன்னைப் பாத்துட்டுப் போனதாக, சங்கர் சொன்னான். பாவம், அது அறியாப் பொண்ணு அவ இங்கே வந்தான்னவுடனே ஏன் வந்தான்னு தான் தோணிச்சி. ஊரிலே நாலும் பேசுவாங்க, ஊர் வாயை மூட முடியுமா? அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா, புள்ளேன்னு கூடப் பார்க்காம, குழியை வெட்டி இறக்கினாலும் இறக்கிப் போடுவாரு. அவரை உனக்குத் தெரியாதா? நீ.அவளை மறந்திரு.கல்யாணம் கில்யாணம் பண்ணனும்ணு நினைச்சிக்கிட்டு இருக்காதே. மல்லாந்து படுக்க ஆசை கூடாது. சங்கரும் கமலாவும். நமக்கு என்ன பகையான்னு கேப்பே. அதுக ரெண்டும் சின்னஞ்சிறிசு. துணிஞ்சி எதுவும் சொல்லும், அதை நம்பி ஏமாறாதே. வீணா அந்தப் பொண்ணு ஆசையை வளர்த்து அதையும் ஏமாறச் செய்றதை விட, இது மேல்...

"உங்க அப்பா தரமறிஞ்சி கடனைக் கிடனை வாங்கிப் போட்டு யாபாரம் பண்ணாததினாலே தான் நமக்கு இந்தக் கதி நீயாவது புத்தியோடு புழைக்கப் பாரு. உன்னைத் தான் நான் நம்பியிருக்கேன் நம்ம கைதான் நமக்கு உதவும். நாலு வீட்டிலே தூத்திப் பெருக்கிப் புழைச்சாலும் புழைக் கலாம்.ஒருத்தன் தயவியே வாழப்படாது; அதை நம்பவும் கூடாது."

தாயின் பேச்சையெல்லாம் மணி மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். எனினும் அவள் கூறிய விஷயங்கள் அவன் மனத்தில் பல்வேறு உணர்ச்சிகளைக் கிளறிவிட்டன.

நிராசை - பயம் - பொறுப்பு - வெறுப்பு - கடமை - எத்தனை உணர்ச்சிகள்! . அந்த உணர்ச்சிகளை இழுபறிக்கு ஆளாகிச் சிக்கித் தவித்தான் மணி.

மணி ஒன்று அடித்த்து.

எங்கோ ஒரு ஆந்தை பலமுறை தொடர்ச்சியாக ஓய்ந்தது. திடீரென்று ஆஸ்பத்திரி அறைக்குள் திசை தவறிப் புகுந்து விட்ட வௌவால் படபடவென்று சிறகடித்து வளையமிட்டுத் திரிந்தது; இரண்டாம் காட்சி சினிமா விட்டுத் திரும்பி வரும் எவனோ ஒருவன் வீதிவழியே தன்னிச்சையாகத் தெம்மாங்கு பாடிச் செல்லும் பாட்டுக்குரல், இருளின் நிச்சுவாச நிலைக்கு உயிர்ப்புத் தந்தது. மீண்டும் நிலவிய அமைதியினூடே பெண்டுல ஓசை தன் தாளத்தைச் சாதகம் பண்ணத் தொடங்கியது...

மணிக்கு தூக்கமே வரவில்லை. தன்னைப் பிணித்து இறுக்கும் எண்ணற்ற சிந்தனை வலைகளைச் சிக்கெடுத்துச் சீராக்கி, அவற்றின் பிடியிலிருந்து மீண்டு வரும் மார்க்கத்தை அவகார் கண்டுகொள்ள இயலவில்லை; மேலும் மேலும் சிக்கல்கள் பலப்படுவது போலத்தான் தோன்றியது.

"என் இந்த மன அவஸ்தை"

வாழ்க்கைப் பிரச்னைகள் தன்னை நாலாபுறத்திலும் சூழ்ந்து கொண்டு பயமுறுத்துவதுபோல் அவனுக்குத் தோன்றியது. அடிவானத்தில் மின்னிய மின்னலைப் பார்க்கக் கூசும் கண்களைப் போல் அந்தப் பிரச்னைகளை ஏறிட்டுப் பார்க்கவே அவன் மனம் கூசியது. ஏறிட்டுப் பார்க்கா விட்டாலோ, பாரம் தாங்கமுடியாத இருள் மண்டலம் தன் மீது விழுந்து தன்னை அமுக்குவதுபோல் அவனுக்குத் தோன்றியது.

அவன் சிந்தித்தான்; சிந்தித்துச் சிந்தித்துக் குழம்பினான்.

கமலா காதல் மொழி பேசி மயக்குகிறாள்; சங்கர் வசிய பாதையில் கைபிடித்து இழுக்க முயல்கிறான்; அம்மா நடைமுறை உலகைக்காட்டிமிரட்டுகிறாள். நானோ எல்லாவற்றையும் கண்டு நடுங்குகிறேன். அப்படித்தானா?_

என்னை மறக்காதே என்கிறாள் அம்மா; நம்மை மறக்காதீர்கள் என்கிறாள் கமலா; நாட்டை மறக்காதே என்கிறான் சங்கர். நானோ நான் என்னை மறக்கவே வழி தேடுகிறேன் அப்படித்தானா?_

ஏன்? ஏன் இந்த பயம்? ஏன் இந்த அதைரியம்? அவ நம்பிக்கை?_

மணியின் சிந்தனை காரண காரியத் தொடர்போடு பிரச்னைகளின் சம்பந்தா சம்பந்தத்தை ஆராயவில்லை. அவன் பிரச்னைகளைக் கண்டு பயந்தான்; வெகுண்டான்; ஏதோ உலகமே தன்னைப்பார்த்துத் தன் கோரப்பற்களைக் காட்டிப் பயமுறுத்துவதாகக் கருதினான்; திடீரென்று தன் மீது பாறைகளைப்போல் சரிந்துவிழும் பொறுப்புணர்ச்சிகளை தாங்கிக்கொள்ளத் தயங்கினான்; தப்பித்துக் கொள்ள விரும்பினான்.

இருள் மண்டிக்கிடந்த மணியின் மனக்குகையில் திசை தேடித் திரிந்த சிந்தனை ஏதோ ஒரு புதிய ஒளியைக் கண்டு விட்டது போல் துள்ளிக் குதித்தது; அவன் இதயம் சுடிகாரத்தின் பெண்டுல ஓசையோடு போட்டி போட்டுக் கொண்டு, அதன் சப்த கதியையும் மிஞ்சி வேகமாகத் துடித்துப் புடைப்பதுபோல் படபடத்தது; திடீரென்று அவன் தன்மீது கிடந்த போர்வையை எட்டி வீசிவிட்டு, படுக்கையை விட்டு எழுந்தான், அவனது முடிவை ஆட்சேபிப்பது போல், அந்த இரும்புக் கட்டில் கிரீச்சிட்டு முனகியது.

பொழுது புலரத் தொடங்கியது. அருணோதயத்துக்கு வழி பாடி வரவு கூறுவது போல் எங்கோ ஒரு சேவல் குரலெடுத்துக் கூவியது; பக்கத்து வார்டிலிருந்து தூக்கம் கலைந்து எழுந்த ஒரு கைக்குழந்தையின் அழுகுரல்கேட்டது விடிவு காலத்தை உணர்ந்து உலகம் துயில் நீங்கி எழத் தொடங்கியது; காலைக் கதிரவனின் பச்சைப் பசும் இளங்கதிர்கள் ஆஸ்பத்திரிக் கட்டிடத்தினுள் நுழைந்து துழாவின_

இருளப்பக் கோனார் தூக்கம் கலைந்தெழுந்து சோம்பல் முறித்துவிட்டு மணியின் கட்டிலின் பக்கம் திரும்பினார்.

மணியைக் காணவில்லை!

காணவில்லை என்றவுடனேயே அவருக்கு இல்லாத சந்தேகங்களெல்லாம் தோன்றின; நெஞ்சு படபடத்துத் துடித்தது. ஆஸ்பத்திரி எங்கும் தேடினார்; வாசலில் காவல் காத்து நின்ற காவலாளியைக் கேட்டார்; இவருடைய சந்தேகம் ஊர்ஜிதமாக அதிகநேரம் ஆகவில்லை.

மணி போயே போய்விட்டான்!

இருளப்பக் கோனாருக்கு இன்னது நடந்திருக்கும்' என்று ஊகிக்கவும் முடியாமல் சிந்திக்கவும் முடியாமல், மனம் எண்ணாததெல்லாம் எண்ணி அலமலந்தது.கைலாச முதலியார் தொங்கிய ஒருமுழக் கயிறு கண்முன் தோன்றி ஊசலாடியது?. ஆற்றுப் பாலத்துக்கடியில் சுழித்து நுரைத்துக் கொண்டு ஓடும் தாமிரபருணிப் பிரவாகம் திரை விரித்துச் சிரித்தது; பளபளக்கும் தண்டவாளங்களின் மீது ராஜ கம்பீரத்தோடு ஓடிமறையும் ரயில் வண்டி கடகடத்து மறைந்தது. "மணி, மணி." என்று புலம்பியது. அவர் வாய், அவர் மனம்.

மறுகனமே.அவர் ஆஸ்பத்திரியில் கால் தரிக்காமல் ஒட்டமும் நடையுமாக மணியின் வீட்டை நோக்கி ஓடினார். வழியில் கண்டவர்களையெல்லாம் நிறுத்திவைத்து, "மணி ஐயாவைப் பாத்திங்களா?" என்று கேட்டுக்கொண்டே ஓடினார்.

திடீரென்று அவரெதிரில் எதிர்ப்பட்ட வடிவேலு முதலியார் கோனாரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தார்.

"முதலியாரையா, மணி ஐயாவைக் காணோம். எங்கேயோ போயிட்டாங்க_" என்று சொல்லத் தொடங்கினார்.

அதற்குள் வடிவேலு முதலியார் குறுக்கிட்டு என்னது மணி ஓடிப் போயிட்டானா? சேச்சே என்ன காரியம் செஞ்சிட்டான்? பயந்தாங்கொள்ளி! கவலையும் கஷ்டமும் எல்லாத்துக்கும்தான் இருக்கு. அதுக்காக, இப்படிக் கோழை மாதிரி ஓடிப் போறதாவது? அப்படி ஓடுறதானா, இந்த ஊரிலே ஒருத்தன் பாக்கியிருக்க மாட்டானே." என்று ஏதேதோ பேச முனைந்தார். ஆனால் இருளப்பக் கோனாரோ அவருடைய பேச்சைக் கேட்பதற்காக நிற்கவில்லை. அவர் தம்மால் முடிந்த அளவு வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/018-028&oldid=1684103" இலிருந்து மீள்விக்கப்பட்டது