17

டாக்டர் நடராஜன் தம்வாக்குறுதியை நிறைவேற்றித் தந்து விட்டார்; மணி உயிர் பிழைத்து விட்டான்.

ஆனால், அவனுக்குப் பிரக்ஞை மீண்டதிலிருந்து அவன் பதறிப் பதறிப் புலம்ப ஆரம்பித்து விட்டான். அவனுக்குப்பிரக்ஞைமீண்டபோது அவனருகே டாக்டரும் சங்கரும்தான் நின்று கொண்டிருந்தார்கள். பிரக்ஞை திரும்பிக் கண் விழித்தவுடன் அவன் ஏதோ பேயைக் கண்டு மிரளுவதுபோவப்பரக்கப் பரக்க விழித்தான். மறுகணமே உடம்பெல்லாம் பதறித் துடிக்க, "டாக்டர்! டாக்டர்! அதோ அப்பா தொங்கிக் கொண்டிருக்கிறார்களே! வாருங்கள். டாக்டர்!வாருங்கள் டாக்டர்!"என்று ஆஸ்பத்திரி அறையே அதிர்ந்து குலுங்கும்படி அவயமிட்டுக்கத்தினான். கட்டிலை விட்டுக் குதித்தோட முனைபவன் போல் துள்ளித் திமிறினான்.டாக்டரும் சங்கரும் அவனை அசைய விடாத படி இறுகப் பிடித்தவாறே, அவனுக்குத் தெளிவூட்ட முயன்றனர்.

"மணி, இதோ பார், நான் தான் சங்கர். என்னைத் தெரியவில்லை?" என்று மணியின் முகத்துக்கு நேராகத் தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் சங்கர்.

மணிசங்கரைவெறிக்கவெறிக்கப் பார்த்தான்.

"நான் தான் சங்கர்!" என்று மீண்டும் அறிமுகப் படுத்தினான் சங்கர்.

"சங்கரா?என்னை ஏமாத்தப்பாக்கிறே! நீ தான் எமன்! எமன்?" என்று கத்தினான் மணி.

சங்கருக்கு மணியின் நிலைமையைக் கண்டு கண்ணில் நீர் வந்துவிட்டது. அவனுக்கு எப்படித் தெளிவூட்டுவது

எனத் தெரியாமல் திகைத்தான்; சங்கரின் நிலைமையைக் கண்ட டாக்டர் மணியின் உடம்பைப் பிடித்துக் குலுக்கியவாறே, "மணி, என்னைப் பாருங்கள்." என்று சொன்னார்.

மணி டாக்டரை‌ வெறித்துப்பார்த்தான்.

"மணி, நான் யார்?"

"நீங்களா? டாக்டர்!சார்! என் அப்பா."

டாக்டர் குறுக்கிட்டார்: "நான் தான் டாக்டர் தெரிந்ததா?"

"ஆமாம் டாக்டர்!" என்று அமைதியுடன் பதில் அளித்தான் மணி.

"மிஸ்டர் மணி, நீங்கள் இப்போது என் பேஷியண்ட், பாருங்கள். இது ஆஸ்பத்திரிக் கட்டில்; இது மருந்து பாட்டில், இது தெர்மாமீட்டர் தெரிகிறதா?" என்று ஒவ்வொரு பொருளாக அவனுக்குச் சுட்டிக் காட்டினார். மணி ஒவ்வொன்றையும் திருகத் திருகப் பார்த்தான்.

"இங்கே எப்படி வந்தேன் டாக்டர்?"என்று பதறினான் மணி.

டாக்டர் அவன் கையை எடுத்து அவன் தலையில் கட்டியிருக்கும் மண்டைக் கட்டைத் தொட்டுணரச் செய்தார்.

"உங்கள் மண்டையில் கட்டுப் போட்டிருக்கிறது. தெரிந்ததா? உங்களுக்கு மண்டையில் அடிபட்டு விட்டது! அதுதான் இங்கு கொண்டு வந்தோம்."

"டாக்டர், என் அப்பா ?"

"அப்பாதானே! உங்கள் தகப்பனார் தற்கொலை செய்துகொண்டதை நீங்கள் பார்க்கவில்லை?பார்த்தவுடன் கால் தவறிக் கீழே விழவில்லை? ஞாபகம் இருக்கிறதா?"

 மணிக்கு மறந்து போன கனவு மீண்டும் திரும்புவது போல் புத்தியில் சலன அலை வீசியது.

"டாக்டர், அப்பா செத்துப்போயிட்டாங்க, டாக்டர்!

மணி கதறினான். 'அப்பா அப்பா' என்று அலறினான். அவனுக்கு மீண்டும் மயக்கம் போட்டுவிட்டது. டாக்டர் அவனைத் தாங்கிப் பிடித்துப் படுக்க வைத்தார்; நாடியைப்பரிசோதித்துப் பார்த்தார்; மயக்கம் தெளிவதற்கு ஏதோ ஒரு ஊசி போட்டு முடித்தார். ஆஸ்பத்திரி நர்சைக் கூப்பிட்டு மணியைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சங்கரிடம் திரும்பினார்.

"சங்கர், ஒன்றும் பயமில்லை ! வாருங்கள். வெளியில் இருக்கலாம்" என்று கூறியவாறே தம் அறைக்கு நடந்தார்; சங்கரும் அவரை பின் தொடர்ந்து வந்து சேர்ந்தான்.

"என்ன சங்கர், மணிக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. பயத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சிதான் நீங்கவில்லை. இரண்டு நாளைக்குள் நான் அவரைத் தன்னிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறேன்" என்று தைரியம் கூறினார் டாக்டர்.

"இயற்கையிலேயே மணி பயந்த சுபாவம் உடையவன்; அதிலும் இந்த மாதிரியான அதிர்ச்சி அவனுக்கு இதற்குமுன் ஏற்பட்டதில்லை; ஏற்படும் சந்தர்ப்பமும் இல்லை" என்றான் சங்கர்.

"அதிர்ச்சி சொல்லிக் கொண்டா வருகிறது? எதையும் தாங்கிக் கொள்ளத் தைரியம் வேண்டும்."

"தைரியம் அனுபவத்தில்தான் வரவேண்டும் டாக்டர். வாழ்க்கையையே சொப்பனம் போல் வாழ்ந்து கொண்டிருந்தால், நனவுலகத்தில் திடீர் மோதல் அதிர்ச்சியைத் தானே உண்டுபண்ணும்" என்று ஏதோ சொல்லத்தொடங்கினான் சங்கர்..  அதற்குள் ஆஸ்பத்திரி நர்ஸ் வந்து மணிக்குப் பிரக்ஞை திரும்புவதாகத் தெரிவித்தாள்; டாக்டர் அவசரமாக எழுந்து, "சங்கர் இங்கேயே இருங்கள். நான் இதோ வந்துவிடுகிறேன்" என்று சொல்லியவாறே நர்ஸைப் பின் தொடர்ந்தார்...

'ஆம். மணி சொப்பன வாழ்க்கைதான் வாழ்ந்தான்' என்று முனகியது சங்கரின் சிந்தனை. அதைத் தொடர்ந்து மாணியின் வாழ்க்கை அவள் கண்முன் விரிந்தது....

மணி பணக்காரனின் பிள்ளையாகப் பிறக்காவிட்டாலும், சுகபோகியாக எந்தவிதக் கவலையும் அற்றுத்தான் வாழ்ந்தான். கைலாச முதலியார் நெசவாளி என்ற நிலைமையிலிருந்து சிறு வியாபாரி என்ற நிலைக்கு உயர்ந்தது வரை மணிக்கு வாழ்வில் எவ்விதக் குறையும் இல்லை. அவனுக்கு அறிவு வந்தது முதல் அவன் வாழ்க்கைக் கவலைகள் எதுவுமின்றித்தான் வாழ்ந்தான். கைலாச முதலியாரும் மூத்த மகன் என்ற பாசத்தால் அவனுக்கு எவ்விதக்குறைவும் இல்லாமல்தான் பார்த்து வந்தார். மணி படிப்பில் கெட்டிக்காரன்தான்; எனினும் அவன் தன் படிப்பைத் தவிர, தன் சொந்தச் சுகதுக்கங்களைத் தவிர, வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டான். என்னவோ தான் உண்டுதன் படிப்பு உண்டு என்று இருப்பவன் போலத் தோற்றுவான். சங்கர் எப்போதாவது அவனிடம் அரசியல் அல்லது பொது விஷயங்களைப் பற்றிப் பேசினாலும்'அதெல்லாம் உனக்குச் சரி' என்று சொல்லி, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலுவான்.

உலகப் பிரச்னைகளில் அவன் கவனம் எப்படித் திரும்பவில்லையோ, அதுபோல் அவனுக்குத்தன் உள் வீட்டு நிலைமைகளிலும் கவனம் கிடையாது. தன் தந்தையின் வியாபாரம் நாளுக்குநாள் கணித்து வந்ததைக்கூட அவன் உணரவில்லை. அதனால்தான் ஒருநாள் அவன் ஸீஸன் டிக்கட் எடுப்பதுபற்றி, தந்தையிடம் நடத்திய வாக்கு வாதத்தைப் பற்றி சங்கரிடம் பிரமாதமாகச் சொல்லிக் கொண்டான். கமலாவுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட நட்பு நீண்ட நாள் தொடர்பாலும், மணியின் குணநலங்களாலும் உரம் பெற்றிருந்தது. அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கத் தன்னால் ஆனதை செய்வதாக, சங்கர் கூறியபோது கூட அவன் அந்தத் திருமணம் நடப்பதற்கான சூழ்நிலையின் சாதக பாதகங்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கவில்லை. என்னவோ கல்யாணமே நிச்சயமாகிவிட்டது போல் கனவுலகில் நீந்தத் தொடங்கிவிட்டான் மணி.

சுருங்கச் சொன்னால் மணி எதையும் எதிர்த்துப் போராடும் சக்தியோ தைரியமோ அற்றவனாக வளர்ந்து வந்திருந்தான். கமலாவிடமும், சங்கரிடமும் காணப்பட்ட தைரியமோ, தனது விருப்பத்துக்கு எதிரானவற்றை எதிர்த்துப் போராடும் மனப்பான்மையோ மணியிடம் இல்லை. வெற்றி என்பது தானே தன்னை வந்து சேரவேண்டும் என்று கருதுபவன் போலிருந்தான் மணி;அதனால்தான் தாதுலிங்கமுதலியார் கமலாவைத் தனக்குத் தரச் சம்மதிக்கவில்லை என்று தெரிந்தபோது, தன் காதலுக்கு முடிவு காலம் வந்து விட்டதென்றே கருதிப் பயந்தான்; எத்தனை தாதுலிங்க முதலியார்கள் எதிர்த்த போதிலும், தான் விரும்பும் கமலாவைத் தான் மணந்தே தீருவேன் என்று சொல்லக்கூடிய வைராக்கிய சித்தம், தைரியம் அவனுக்கு ஏற்படவில்லை . கமலாவும் சங்கரும் தான் அவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட முயன்று வந்தார்கள்.

உலகப் போக்கின் நெளிவு சுழிவுகளைப் பற்றியும், தன்மைகளைப் பற்றியும் மணிக்குத் தெளிவான அபிப்பிராயமில்லை யென்றாலும், அவற்றைப் பற்றிய பிரக்ஞைகூட இருந்ததில்லை, 'மணியின் குணாதிசயங்களுக்கும் புத்திக் கூர்மைக்கும் அவன் மட்டும் உலகத்தைப்பற்றிக் கவலை கொண்டால் பிரத்தியட்ச வாழ்க்கையின் குரூர வசீகரங்களைக் கண்டுணர்ந்தால் அவன் உள்ளத்திலே புதைந்து கிடக்கும் தர்மாவேசம், உலகில் சத்தியத்தை நிர்த்தாரணம் செய்வதற்காகச் சீறியெழுந்தால் என்றெல்லாம் சங்கர் நினைத்ததுண்டு.

'ஆனால் வாழ்க்கை என்பது கற்றுக்கொடுத்து வருவதில்லை; சூழ்நிலைதான் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும்.'

"அப்படியானால், மணிக்கு இப்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை, இப்போது ஏற்பட்டுள்ள அதிர்ச்சி, அவனுக்கு உலகைப்பற்றிய பிரக்ஞையைக் கொண்டுவருமா?மணியின் கண்களை அவனது தந்தையின் மரணம் திறந்து விடுமா...?'

சங்கர் மணியைப்பற்றி ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தான்.

"என்ன சங்கர், பலத்த யோசனை?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் டாக்டர்.

"எப்படி இருக்கிறது டாக்டர்?" என்று தன்னிலை திரும்பிய சங்கர் ஆத்திரத்தோடு கேட்டான்.

"ஒன்றும் பயமில்லை தம்பி இறந்த விஷயம் கூட அவருக்குத் தெரிந்து விட்டது. இனிமேல் ஒன்றும் ஆபத்தில்லை. அவருக்குத் தூக்க மருந்து கொடுத்திருக்கிறேன். நன்றாகத் தூங்கட்டும், நாளை அல்லது நாளை நின்று எல்லாம் சரியாகிவிடும்" என்று கூறினார்.

சங்கருக்கு மனம் நிம்மதியடைந்தது.

டாக்டர் கூறியது போலவே மணிக்கு இரண்டு நாட்களில் சித்தம் தெளிந்துவிட்டது. அன்று மாலையில் அவன் தூங்கி விழித்தபோது எதிரே டாக்டர் நடராஜன் தான் நின்று கொண்டிருந்தார்.  டாக்டர்!" என்று கூறியவாறே அவரைப் பரிதாபகரமாகப் பார்த்தான் மணி.

"என்ன வேண்டும்?" என்று அன்புடன் கேட்டார் டாக்டர்.

"என் குடும்பத்துக்கு நேர்ந்தகதியைப் பார்த்தீர்களா,டாக்டர்?" என்று கண் கலங்கினான் மணி.

"மணி. தைரியமாயிருங்கள். வீணாய்க் கவலைப்பட்டு உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தைரியம் வேண்டும். தைரியம் இல்லாத காரணத்தால்தான் நீங்கள் மண்டையிலடிபட்டு இந்தக் கோலத்துக்கு ஆளாகிவிட்டீர்கள்."

டாக்டர் கூறியதற்கு இன்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திகைத்தான் மணி.

"டாக்டர், நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே இருங்கள். எனக்குப் பயமாயிருக்கு" என்றான் மணி.

"இங்கேதானே இருக்கிறேன். இப்போதுதானே சொன்னேன், தைரியமாயிருங்கள் என்று" என்று செல்லக் கண்டனத்தோடு கூறினார் டாக்டர்.

“இருக்கேன் டாக்டர்' என்று உள்ளுக்குள் அடங்கிய குரலில் பதில் தெரிவித்தான் மணி. பிறகு சிறிது நேரம் கழித்து, "எனக்கு எல்லாரையும் பார்க்கணும் போலே இருக்கு" என்று ஆசையோடு தெரிவித்தான்.

"எல்லாரையும் வரச்சொல்கிறேன். போதுமா?"

"டாக்டர் "

'பேசப் பேசக் களைப்புத்தான் தோணும். கண்ணை மூடிக்கொண்டு படுத்திருங்கள்."

"சரி, டாக்டர்." மணி அன்றிரவு நன்றாகத் தூங்கினான்.

ஆஸ்பத்திரிக் கடிகாரம் ஏழுமணி அடித்தது, காலை இளஞ்சூரியனின் நீளக்கதிர்க் கரங்கள் ஜன்னலின் வழியாக நீண்டு வந்து மணியை உசுப்பி எழுப்பின; நெடுமூச்சு வாங்கி நிம்மதியாய்த் தாங்கிக் கொண்டிருந்த மணி கதிரொளியின் கதகதப்பால் தன்னுணர்வு பெற்றுத் தூக்கம் கலைந்தான்; எனினும் பலவீனப்பட்டு உள்ளுக்குள் குளிரால் நடுக்குவது போன்றிருந்த அவன் உடம்புக்கு, சூரிய ஒளி புது வலுவையும் புதுச் சுகத்தையும் ஊட்டுவது போலிருந்தது. தன்னைப் போர்த்திக் கிடந்த போர்வையின் ஸ்பரிச சுகத்தையும், போர்வையைத் தாண்டி உடலை வந்து தொட்டுத் தடவும் கதகதப்பின் இன்ப அரவணைப்பையும் அனுபவித்து உள்ளம் குளிர்ந்தவனாக அவன் கண்களைத் திறந்தான்.

பொழுது புலர்ந்து ஆஸ்பத்திரி எங்கும் ஒளிப் பிரவாகம் நிரம்பி வழிந்தது.

கண்ணை விழித்தவாறு படுத்திருந்த மணியை 'கீச் கீச்' என்ற ஒரு ஜோடி அடைக்கலாங் குருவிகளின் சத்தம் கவர்ந்திழுத்தது. ஆஸ்பத்திரி ஜன்னலுக்கு மேலே காற்று வரப்போக வைத்திருந்த ஒரு வட்டப் பொந்தில் அந்தக் குருவிகள் கூடு கட்ட முயன்று கொண்டிருந்தன. எங்கு இருந்தோ வைக்கோல் துரும்புகளைக் கொண்டுவந்து சேர்ப்பதும், அந்தத் துரும்புகள் எத்தனை முறை கீழே தவறி விழுந்த போதிலும் விடாமுயற்சியோடு அவற்றை மீண்டும் மேலே கொண்டு போய்ச் சேர்ப்பதுமாக இருந்தன. அந்தக் குருவிகள் கீச் கீச் சென்று கத்திக் கொண்டு. அவை அங்குமிங்கும் ஜிவ்வென்று பறந்து திரிவதை மணி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இந்தக் குருவிகளுக்குள்ள தைரியமும் விடா முயற்சியும் எனக்கிருந்தால்." என்று தன்னையும் மறந்து அவன் உள்ளம் ஒருகணம் ஏங்கியது. மறுகணமே டாக்டர் சொன்ன புத்திமதி ஞாபகத்துக்கு வந்தது. தைரியமாய் இருங்கள்”. டாக்டரே பக்கத்திலே வந்து நின்று அப்படிச் சொல்லுவது போல் அவனுக்குப் பட்டது.

கட்டிலில் படுத்திருந்தவாறே மணி சென்றுபோன விஷயங்களைச் சிந்தித்துப்பார்த்தான். தந்தை தற்கொலை செய்து கொண்டார்; தம்பி இறந்துவிட்டான். நானும் இப்படி வந்து விழுந்து கிடக்கிறேன். அம்மா தன்னந்தனியாக என்ன பாடுபட்டாளோ? என்ன அவதிப்படுகிறாளோ?_ இனிமேல் நான் எப்படி உயிர் வாழப் போகிறேன்? தைரியம் வேண்டும். டாக்டர் சொல்வது போல், அன்று மட்டும் நான் தைரியத்தோடு இருந்திருந்தால், செத்துப்போன என் தம்பியையும், தந்தையையும் பார்க்கக்கூட கொடுத்து வைக்காத இந்த அவல நிலைக்கு ஆளாயிருக்க வேண்டாம் என் தைரியக் குறைவுதான் என்னை இருந்தும் இல்லாதவனாகச் செய்து விட்டது.ஆனால், இத்தனை அலங்கோலங்களுக்குப் பிறகு, எனக்குத் தைரியம் எங்கிருந்து வரும்...?'

இரவு முழுவதும் சரியான தூக்கமின்றி விடிந்தபிறகு தான் கண்விழித்த இருளப்பக் கோனார் திடுக்கிட்டு விழித்தெழுந்து மணியின் கட்டிலருகே வந்தார். கோனாரைக் கண்டதும், மணி தன் படுக்கையை விட்டு எழுந்திருக்க முயன்றான்.

"தம்பி தம்பி, எந்திரிக்கக் கூடாது, படுத்தே இரிங்க" என்று கூறியவாறு அவனை எழவிடாமல் தடுத்து நிறுத்திப் படுக்க வைத்தார், மணியைப் பார்த்ததும், இருளப்பக் கோளாருக்குக் கண்கள் இரண்டும் கலங்கிச் சிவந்தன. என்ன பேசுவது என்று தெரியாமல் அவரது உதடுகள் உணர்ச்சி வசப்பட்டுத் துடித்தன; வயோதிகம் புகுந்துவிட்ட அவரது மெலிந்தவுடல் முளைக்கீரைத் தண்டு போல் நடுங்கியது.

"கோனாரே " மணியின் குரல் கரகரத்தது; அவன் கரைகளில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

"பயப்படாதீங்க, தம்பி நடந்தது நடந்து விட்டது. இந்தக் கட்டை உசுரோடே இருக்கிறவரையில், கவலையேபடாதீங்க, தம்பி" என்று ஆறுதல் கூற முனைந்தார் கோனார்.

கோனாரின் ஆறுதல் மணிக்குச் சிறிது தெம்பு அளித்தது; ஆழ்ந்த பெருமூச்செறிந்தவாறே கண்களை மூடிக்கிடந்தான். சிறிது நேரம் கழித்து மணி கண் விழித்தான். விழித்ததும் கோனாரை நோக்கி, "சங்கர் வந்தானா?"என்றுகேட்டான்.

"அவுக தினம் தினம் வந்து உங்களைப் பார்த்துட்டுத் தானே போறாக. தம்பி, சங்கரய்யாவைச் சும்மா சொல்லக் கூடாது அவுகதான் இந்த சமயத்திலே நமக்கு ஒத்தாசையா இருந்தாக. இன்னிக்கி அவுக தங்கச்சியையும் கூட்டிக்கிட்டு வரனும்னு சொல்லிட்டுப் போனாக" என்று உற்சாகத்தோடு பதிலளித்தார் கோனார்.

கமலாவைப் பற்றிக் கேள்விப்பட்டதும், மணியின் மன வேதனை குறைவது மாதிரித் தோன்றியது.

"அம்மாவையும் பார்க்கணும் போலே இருக்கு"என்று கூறி. அவள் இருக்கக்கூடிய அமங்கலக் கோலத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்துக் கூசிச் சாம்பினான் மணி. "அப்பாவின் பிரேதத்தைக் கூடச் சரியாகப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு. கொள்ளி வைக்கிறதுக்கு ரெண்டு பிள்ளைகள் இருந்தும், ரெண்டும் உதவாமல் போகணும்கிறதுதான் அப்பாவின் தலையெழுத்து போல் இருக்கு" என்று கம்மியடைந்த குரலில் தேம்பினான்.

"அவுக அவுக தலையெழுத்துப் போல ஆச்சி. அன்னிக்கு எழுதினவன் அழிச்சா எழுதப் போறான்?"என்று தமக்குத் தெரிந்த வேதாந்தத்தைக் கூறி மணியைச் சாந்தி செய்ய முயன்றார் கோனார். மணி இதயமே உடைந்துவிட்டது போல் பலத்த பெருமூச்சு விட்டான். அவனுக்குச் சோர்வு தட்டியது. சிறிது நேரத்தில் மீண்டும் அந்தக் குருவிகளின் கீச்சுக் குரல் அவனைக் கவர்ந்தது. வைக்கோல் பொறுக்குவதற்காக வெளியே சென்றிருந்த அந்த ஜோடிக் குருவிகள் திரும்பி வந்துவிட்டன,

'உலைந்து உருக்குலைந்து போன எங்கள் குடும்பத்தை இந்தக் குருவிகளைப் போல் இனிமேல் நான் தான் உருவாக்க வேண்டும் போலிருக்கிறது' என்று அவன் தனக்குத்தானே சிந்தித்துக் கொண்டான்.

'இந்தக் குருவிக் காதலியைப் போல் எனக்கும் ஒத்தாசையாக இருக்க, கமலா வந்து சேருவாளா? அவள் தந்தை அவளை எனக்குக் கட்டிக்கொடுக்கச் சம்மதிக்கவில்லை என்று அவள்தான் சொன்னாள், இப்போதோ? நான் சொத்துச் சுகமிழந்த, தற்கொலை செய்து கொண்டு இறந்து போன ஒருவரின் பிள்ளை. அப்போதே முடியாது என்றவர் இப்போது மட்டும் மாறவா போகிறார்?.விதி விட்டபடி நடக்கிறது.ஆனால், எங்கள் குடும்பத்தையே சீரழித்தவர் அவர்தானே அவர் குடும்பத்திலா சம்பந்தம்?... அதற்குக் கமலா என்ன செய்வாள்? கமலா என்னை ஒரு நாளும் மறக்க மாட்டாள். ஆனால் நான்தான் அவளை மறந்து விடுவேனோ? சேச்சே!. ஏன் இந்த அதைரியம்? ஏன் இந்த அவநம்பிக்கை ....?"

அவன் மனத்தில் மீண்டும் டாக்டர் வந்து நின்று தைரியம் காட்டுவது போல் தோன்றியது.

மாலையில் டாக்டர், சங்கர், கமலா மூவரும் வந்து சேர்ந்தார்கள், காலடிச் சப்தம் கேட்டதுமே மணி ஆர்வத்தோடு தலையை உயர்த்தி அவர்களைப் பார்த்தான், கமலாவின் வருகையைக் கண்டதும் மணியின் முகத்தில் களை தட்டியது. மெல்லிய புன்னகையுடன் அவர்களை வரவேற்றான்,  நடராஜன் மணியின் அருகே வந்தவுடன்", "என்ன" மணி, இப்போ எப்படியிருக்கும்?” என்று கேட்டார்.

“தேவலை ஸார். களைப்புத்தான் அதிகமாயிருக்கு" என்றான் மணி. "மணி, இனிமேல் உங்களுக்கு என் மருந்தே தேவையில்லை. அதோ உங்கள் உள்ளத்துக்குத் தெம்பளிக்கும் டானிக்!" என்று கமலாவைத் தூண்டிக் காட்டி, மணியைக் களிப்பூட்ட முயன்றார் டாக்டர்.

மணி கமலாவைக் கடைக்கண்ணால் பார்த்தான். ஆனால் கமலாவோ அவன் எதிர்பார்த்ததற்கு விரோதமாக மாலை மாலையாகக் கண்ணீர் சிந்தி நின்றாள். மணி தன்னைப் பார்ப்பதைக் கண்டவுடன் அவளுக்கு அழுகையே வந்து விட்டது, விசித்து விசித்து அழத் தொடங்கினாள். மணியின் கண்களில் ததும்பிய களிப்புக் குடியோடிக் கண்ணீர் தளும்பியது.

உடனே சங்கர் எழுந்திருந்து கமலாவிடம் சென்று "அசடே! எதுக்கு அழறே? மணிக்குத் தைரியமூட்டுவதை விட்டுவிட்டு, இப்படிக் கண்ணீர் சிந்தினால்?" என்று கண்டித்தான்.

கமலாவுக்கு அப்போதுதான் தன் தவறுபுரிந்தது. அழ வேண்டும் என்பது அவள் விருப்பமில்லை. எனினும் மணியைப் பார்த்ததும், அவனது வெளிறிய முகத்தையும், கட்டுப்போட்ட தலையையும் கண்டவுடன், அவர்கள் குடும்பத்துக்குத் தன் தந்தையால் நேர்ந்த அவலநிலை ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

சங்கர் கண்டித்தவுடனேயே அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மணியிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஆனால், "அத்தான்!" என்று ஏங்கிக் குமுறிய ஒரே வார்த்தையோடு அவள் வாய் அடைத்துப் போய்விட்டது. மணியிடம் என்னென்னவோ பேச வேண்டும். என்றுதான் அவள் விரும்பி வந்தாள். ஆனால், அந்த நிலையில் அவளால் எதுவுமே பேச இயலவில்லை. சங்கர் மட்டும் மணியைத் தைரியமாயிருக்கச் சொல்லிப் பலவாறு தேற்றினான். சங்கரின் தைரிய மொழிகள் மணிக்குத் தெம்பும் ஆறுதலும் தருவன வாயிருந்தன.

"நீ உன் குடும்பத்துக்கு நேர்ந்த கதியைப்பற்றிவீணாய் மனத்தை அலட்டிக்கொள்ளக் கூடாது. இது தான் என் வேண்டுகோள்" என்று கூறி முடித்தவாறே சங்கர் புறப்படத் தயாரானான்.

"அப்போ -நான் வரட்டுமாமணி?" என்றான் சங்கர்.

கமலா அப்போதுதான் திடீரென்று ஞாபகம் வந்தவளாக தன்வசமிருந்த பையை எடுத்தாள். "அத்தான், உங்களுக்குக் காஷ்மீர் திராசஉன்னா ரொம்பப் பிரியமேன்னு வாங்கிக்கிட்டு வந்தேன்" என்று கூறியவாறே இரண்டுகுலை திராவசைப்பழங்களை எடுத்துக்கட்டிலுக்கு அருகே கிடந்த மேஜை மீது வைத்தாள்.

அந்தப் பழங்களைக் கண்டு ஆச்சரியமடைந்த சங்கர் "அடேடே, இதை நீ என்னிடம்கூடச் சொல்லவில்லையே. பங்குக்கு வந்துவிடுவேன் என்று பயமா?" என்று கூறிச் சிரித்தான்.

இதற்குள் டாக்டர் நடராஜன் குறுக்கிட்டு, "என்னம்மா கமலா, என்னுடைய அனுமதியில்லாமல் என் பேஷியண்டுக்கு நீங்கள் பழம் வாங்கிக் கொடுக்கிறீர்களே. இது நியாயமா?" என்று கேலியாகக் கேட்டார்.

"அதற்கென்ன? ஒரு குலையை வேண்டுமானால் நீங்கள் அபராதமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி களுக்கென்று சிரித்தாள் கமலா.

அங்கு நிலவிய குதூகலத்தைக் கண்டு மணிக்குக் கவலையெல்லாம் மறைந்து இன்பவுணர்ச்சிதோன்றுவது போலிருந்தது. சங்கர் விடைபெற்றுத் திரும்பும்போது "சங்கர், நான் அம்மாவைப் பார்க்கணும்" என்று கேட்டுக் கொண்டான் மணி.

"அதற்கென்ன?கூட்டி வருகிறேன்" என்று கூறிவிட்டுத் திரும்பினான் சங்கர்.

அவர்கள் அனைவரும் வெளியேறினர். டாக்டர் விடைபெற்றுக் கொண்டு தமது அறைக்குச் சென்றார். இருளப்பக் கோனார் வாசல்வரையிலும் வந்து சங்கரையும் கமலாவையும் வழியனுப்பிவிட்டு, "போயிட்டு வாங்க தம்பி" என்று அருமையோடு கூறியவராய் உள்ளே திரும்பினார்.

சங்கர் ஏதோ ஞாபகம் வந்தவனாகக் கோனாரைக் கூப்பிட்டான்.

கோனார் திரும்பிவந்தார்.

சங்கர் தன் சட்டைப் பையிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டுக்களை எடுத்து இருளப்பக் கோனாரிடம் கொடுத்து, "இதை வைத்துக் கொள்ளுங்கள் டாக்டரிடம் கேட்டு, மணிக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள். மற்றச் செலவுக்கும் இருக்கட்டும்" என்று கூறியவாறே தன் காரில் ஏறி உட்கார்ந்தான்.

கார் புறப்படப் போகும் போது, கமலா இத்தனை நேரமும் தன்னுள் அடக்கி வைத்திருந்த கேள்வியைச் சங்கரிடம் கேட்டுவிட்டாள்."என்னண்ணா ,டாக்டரிடம் நீ இதையெல்லாமா சொல்லி வைக்கிறது?"

"எதை" என்று தெரியாததுபோல் கேட்டான் சங்கர், எனினும் அவன் முகத்தில் அரும்பிய குறுஞ்சிரிப்பு அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது.

"போ அண்ணா !" என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டாள் கமலா.

கார்‌ புறப்பட்டுச்சென்றது.

இருளப்பக்கோனார், அவர்கள் எதைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள் என்றுபுரியாதவராய் அவர்கள் இருவரின் அன்பையும் சௌஜன்யத்தையும் வியந்து போற்றி,

மனத்தால் ஆசீர்வதித்தவராக உள்ளே திரும்பி வந்தார். அவர். வந்த போது மணி, கமலா கொண்டு வந்திருந்த திராகூைப் பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து வாயிலிட்டுச் சுவைத்துக் கொண்டிருந்தான்.

அவனது நாக்கில் தட்டுப்படும் இனிமையைப் போலவே அவன் மனத்திலும் சங்கர், கமலா, டாக்டர், கோனார் முதலியோரின் அன்பையும் பரிவையும் பற்றிய எண்ணம் தோன்றி இனித்துக் கொண்டிருந்தது, எல்லாவற்றையும்விட, கமலா தன்மீது கொண்டுள்ள மாறாத அன்பைக்கண்டு அவனுக்குத்தன் நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டன. எனினும் மறுகணமே அவனுக்குக் கமலாவை மணந்து கொள்ள இயலுமா என்ற சந்தேகமும், தனது குடும்பத்துக்கு நேர்ந்த அவக்கேடும், தனது தைரியமற்ற தன்மையும், தன்னை எதிர்நோக்கி நிற்கும் பொறுப்புணர்ச்சிகளைப் பற்றிய பயப்பிராந்தியும், உள்ளத்திலே குடி புகுந்து, அந்த இனிப்பைப் புளிக்க வைத்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/017-028&oldid=1684105" இலிருந்து மீள்விக்கப்பட்டது