பஞ்ச தந்திரக் கதைகள்/அகப்பட்டவனை விட்டு விட்ட அரக்கன்

13. அகப்பட்டவனை விட்டு விட்ட அரக்கன்

நண்டகாரணீயம் என்ற காட்டில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் அங்கு வந்த பார்ப்பனன் ஒருவனைப் பிடித்து, அவன் தோள்மேல் ஏறிக் கொண்டான். பார்ப்பனன் அந்த அரக்கனைச் சுமந்து கொண்டு திரிந்தான். அவனுக்கு இது பெரும் வேதனையாய் இருந்தது. எப்போது இந்த அரக்கனிடமிருந்து தப்புவோம் என்று காலத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தான்.

அந்த அரக்கனுடைய காலடிகள் மிகவும் மென்மையாக இருக்கக் கண்ட பார்ப்பனன் ஒரு நாள் அரக்களைப் பார்த்து, 'உனக்கு ஏன் காலடி இவ்வளவு மெல்லியதாய் இருக்கிறது?' என்று கேட்டான்.

அதங்கு அந்த அறிவில்லாத அரக்கன் 'நான் நீராடிய பின் என் காலில் இருக்கும், ஈரம் முழுவதும் காய்ந்தபின் தான் நடப்பேன். அதனால் தான் என் காலடிகள் மெல்லியனவாக அமைந்துள்ளன' என்றுகூறினான்.

ஒரு நாள் அரக்கன், பார்ப்பனன் தோளிலிருந்து இறங்கி நீராடச் சென்றான், குளிர்ந்த நீர் திறைந்த ஒரு பொய்கையில் அவன் நீராடிக் கொண்டிருந்தான். அவன் நீராடிய பின் காலில் ஈரம் காயும் வரை நிலத்தில் காலூன்றி நடக்க மாட்டான்

எபன்தை அறிந்த பார்ப்பனன், அப்பொழுதே ஓடி விட்டால் நல்லது என்று எண்ணினான். அவ்வாறே அரக்கன் நீராடி முடிக்கு முன்பே அவன் ஓடி மறைந்து விட்டான். நீராடி முடித்துக் காலீரம் காய்ந்தபின் அரக்கன் பார்ப்பனனைத் தேடிக் கொண்டு வந்தான்.

பார்ப்பனனைக் காணாத அரக்கன் தான் அறி வில்லாமல் தன்னைப் பற்றிய உண்மைகயைக் கூறியதால் அன்றோ அந்தப் பார்ப்பனன் தப்பியோடி விட்டான் என்று எண்ணி வருந்தினான்.

யாரிடம் எதைச் சொல்லுவது என்று ஆராய்ந்து சொல்லாதவர்கள் இப்படித்தான் துன்பமடைவார்கள்.