பஞ்ச தந்திரக் கதைகள்/இளைஞனைக் காப்பாற்றிய நண்டு


14. இளைஞனைக் காப்பாற்றிய நண்டு

ஓர் இளைஞன் தன் ஆசிரியனின் வேலையாக ஒருமுறை வெளியூர் செல்ல நேர்ந்தது. புறப்படுமுன் தன் தாயிடம் விடை பெற்றுக் கொள்ள வீட்டுக்கு வந்தான். வெளியூர் போவதென்றால் ஒரு துணை யோடு போ’ என்று தாய் கூறினாள். 'எனக்குத் துணைவரக் கூடியவர்கள் யாரும் இல்லையே’ என்று இளைஞன் கூறினான்.

அதைக் கேட்ட தாய் , ஒரு நண்டைப் பிடித்து ஒரு கலயத்துக்குள் போட்டு இதைத் துணையாகக் கொண்டு போ’ என்று சொல்லிக் கொடுத்தாள். அவனும் அதை வாங்கிக் கொண்டு போனான்.

போகும் வழியில் அவன் களைத்துப் போனதால் இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் தங்கினான்.

நண்டிருந்த கலயத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு அவன் தூங்கினான். அப்போது அந்தப் பக்கமாக ஒரு நல்ல பாம்பு வந்தது. அது அவனைத் தீண்டு வதற்காக நெருங்கியது.

அப்போது ஊர்ந்து ஊர்ந்து கலயத்துக்கு வெளியே வந்த நண்டு, நல்ல பாம்பைக் கண்டு விட்டது. உடனே அது பாம்பை நெருங்கி வந்து தன் கால் கொடுக்கால் இடுக்கி அந்தப் பாம்பைக்கொன்று விட்டது. நெடுநேரம் சென்று தூங்கி

எழுந்த இளைஞன் செத்துக்கிடந்த பாம்பைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனான். அதைக் கொன்றது யார் என்று ஆராய்ந்தபோது தான் கொண்டு வந்த நண்டுதான் என்று தெரிந்து கொண்டான்.

‘தாய் சொல்லைத் தட்டாமல் என் தலைமேற் கொண்டு நடந்ததால் அல்லவா நான் உயிர் பிழைத் தேன்’ என்று தன் அன்புக்குரிய தாயை நன்றி யோடு நினைத்துக் கொண்டான்.

முற்றும்.