பதிற்றுப்பத்து/சான்றேர்கள்

பதிற்றுப்பத்தைப்
பாடிய சான்றோர்

பதிற்றுப் பத்தைப் பாடிய சான்றோர்கள் பதின்மர். எனினும், காலக்கொடுமையால் காணாதே போயின முதல், பத்து ஆகிய புத்துக்களோடே அவற்றைப் பாடிய சான்றோர்களின் பெயர்களும் அறியவியலாதே மறைந்து போயின. இரண்டுமுதலாக ஒன்பது முடியவுள்ள பத்துக்களைப் பாடியோராகப் பதிகத்தால் அறியப்படுகிறவர்கள் எண்மர். அவர்கள், முறையே குமட்டூர்க் கண்ணனாரும், பாலைக் கோதமனாரும். காப்பியாற்றுக் காப்பியனாரும், பரணரும், காக்கைப் பாடினியார் நச்செள்ளையாரும், கபிலரும், அரிசில்கிழாரும், பெருங்குன்றூர் கிழாரும் ஆவர். இவர்களைப் பற்றிய குறிப்புக்களை மட்டும் நாம் இங்கே காண்போம். இவர்களின் விரிவான வரலாறுகள் ஆராய்தற் குரியனவாகும்.


1. குமட்டூர்க் கண்ணனார்

இவர் பாடியுள்ளது இரண்டாம் பத்து. இவராற் பாடப்பெற்றவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் இவருக்கு அளித்த பரிசில் வியத்தற்கு உரியது. உம்பற் காட்டுப் பகுதியிலுள்ள ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாக அளித்ததுடன், அவனது நாட்டுப் பகுதியுள் தென்னாட்டின் கண்ணிருந்து வந்த அரசிறை வருவாயினும் பாகம் கொடுத்தானாம் அவன்.

'குமட்டூர்' என்னும் ஊரினர் இவர். இவர் பெயர் கண்ணனார். குமட்டூர் என்பது பண்டைத் தமிழகத்து ஊர்களுள் ஒன்று. இந் நாளிலே, இப் பெயருடையதான ஊர் எங்கணும் காணப் பெறவில்லை.

'குவடு' என்பது மலையுச்சியைக் குறிக்கும் சொல். குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த ஊரான குவட்டூர் என்பதே இவ்வாறு குமட்டூர்' எனத் திரிந்தது என்பர் சிலர். இவர் ஓய்மாநாட்டுக் குமட்டூரினர் என்று; பேருரையாசிரியரான ஔவை துரைசாமிப் பிள்ளையவர்கள் கூறுவார்கள். சங்கநூற்களுள் இவர் பாடியவையாக வருவன இப்பத்துப் பாட்டுக்களே யாகும்.

இவன் காலத்தே சேரநாட்டின் பெரும்புகழ் இந்நாவலந் தீவு முற்றவும் பரவியிருந்தது. இதனைப், 'பேரிசை இமயம் தென்னங் குமரியோ டாயிடை, மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்து' என, இவர் கூறுகின்ற சேரலாதனின் மறமாண்பி னாலேயே நாம் அறியலாம்.

பகைவரை வென்று, தன் வஞ்சிநகரத்தே வெற்றியுலா வருவோனாகிய இவனைச், சூரனை வென்ற முருகன் வந்த வெற்றியுலாவோடு உவமித்துப் பாராட்டுகின்றார் இவர். போர்க்களத்தை நேரடியாகக் கண்டு, அதன் அழிபாட்டு மிகுதியை நோக்கி வருத்தமும், மறமாண்பை எண்ணிப் பெருமிதமும் கொண்டவர் இவர். இதனை, 'அருநிறம் திறந்த புண்உமிழ் குருதியின், மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து மனாலக்கலவை போல' ஆயிற்று எனவரும் உவமை விளக்கும். வேந்தர்க்கு உரியவான பலவகைச் செல்வங்களுள்ளும், பகையழித்துப் பெறப்படும் வெற்றியாகிய புகழ்ச்செல்வமே சிறந்ததாகும் என்பதனை, 'பலர் புகழ் செல்வம்' எனக் கூறுவர் இவர்.

இமயப் பகுதியிலே அந்நாளிலே வாழ்ந்த ஆரியவரசர் பற்றியும், ஆரிய முனிவர்கள் பற்றியும் அறிந்தவர் இவர். சேரலாதனின் மறமாண்பை வியப்பவர், அரிமான் வழங்கும் சாரல் பிறமான் தோடுகொள் இனநிரை நெஞ்சதிர்ந்தாரும் எனச் சேரலாதனைச் சிங்கவேற்றுக்கும், அவனைப் பகைத்த பிற மன்னரைப் பிறபிற விலங்கினங்கட்கும் ஒப்பிட்டுக் காட்டுவது நயம் மிகுந்ததாகும்.

சேரலாதனது வள்ளன்மையை விளக்குபவர், 'வறுமைப்பட்ட ஒரு இரவலர் கூட்டம் எவ்வாறு புத்தழகும் புது வளமும் பெற்று விளங்கிற்று' என, 'வந்தவண் இறுத்த இரும்பேர் ஒக்கல்......... வசையில் மகளிர் வயங்கிழை அணிய' என எடுத்துக் காட்டுவதன்மூலம் உணர்த்துகின்றார்.

வளமையை உணர்த்தும் சொன்னயத்திலும், அதுதான் அழிவெய்திய கொடுமையைக் காட்சிப்படுத்தும் சொல்லோவியத்திலும், இவரது செய்யுட்கள் தனித்தன்மையோடு மிளிர்கின்றன.

’நோயொடு பசியிகந்தொரீஇப் பூத்தன்று பெரும் நீ காத்த நாடே’ எனச் சேரலாதனின் நல்லாட்சியைப் போற்றுகின்ற இவர், நாட்டை ஆள்வார்க்குரிய கடமைகளை யாவை என்பதனையும் உணர்த்துகின்றனர். சேரலாதனின் அளப்பரிய பேராற்றல்களை வகைப்படுத்திக் காட்டும் இவரது 'நிலம் நீர் வளி விசும்பு' எனத் தொடங்கும் செய்யுள், பழந்தமிழகத்து அரசர்களது பெருமிதநிலையை ஓவியப்படுத்திக் காட்டும் ஒப்பற்ற செய்யுளாகும்.

இவர் காலத்துச் சேரநாடுதான் எத்துணை வளமோடு திகழ்ந்திருக்கிறது! ’கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாடு' என்று கூறி, அந்தப் பெருவளமை நிலையினைக் காட்டுகிறார் இவர். நல்லவனாகிய அரசன் உலகத்தோர்க்கு உதவுதற் பொருட்டாகவேனும் நெடுநாள் வாழ்தல் வேண்டும் என்று, 'போர்வல் யானைச் சேரலாத! நீ வாழியர் இவ் உலகத்தோர்க்கு' என்று சொல்லி மனமுவந்து வாழ்த்துகின்றார் இவர்.

பெண்மையின் சால்பை இவர் அழகாகவும் நுட்பமாகவும் எடுத்துக்காட்டுவது மிகவும் போற்றுவதற்கு உரியதாகும். ’ஆறிய கற்பின்’ அடங்கிய சாயல், ஊடினும் இனிய கூறும் இன்னகை, அமிழ்து பொதி துவர்வாய், அமர்த்த நோக்கு, சுடர்நுதல், அசை நடை' எனவும், 'எல்லும் நனியிருந்து எல்லிப்பெற்ற அரிதுபெறு பாயல் சிறு மகிழானும், கனவினுள் உறையும் பெருஞ்சால்பு ஒடுங்கிய, நாணுமலி யாக்கை வாணுதல் அரிவை' எனவும் இவர் வரைந்துள்ள சொல்லோவியம் பெண்மையின் பெருஞ்சால்புக்கே இலக்கணமாக ஒலிப்பதாகும்.

"மாரி பொய்க்குவதாயினும் சேரலாதன் பொய்யலன் நசையே" என்று சேரலாதனின் வள்ளன்மையையும், ’கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே' என்று அவனது ஆற்றலையும், இவை இரண்டும் ஒருசேர விளங்கும் அவனது சிறப்பையும் எடுத்துக்காட்டும் நுட்பமான புலமையாளர் இவர் ஆவர்.


2. பாலைக் கோதமனார்

இவர் பாலைத்திணைச் செய்யுட்களைச் செய்வதில் வல்லவர். கோதமனார் என்னும் பெயரினர். ’கோதமன்’ கௌதமன் என்பதன் தமிழ்ச்சொல்லும் ஆகலாம். இவர், இமயவரம்பனின் தம்பியும் மாவீரனுமாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவனை. மூன்றாம் பத்தாற் பாடிப் புகழ்ந்துள்ளார். இவர் பார்ப்பனராயினும், பைந்தமிழ்ப் புலமையும், சிறந்த ஆன்மிக ஞானமும், உயரிய ஒழுக்கச் செவ்வியும் வாய்க்கப் பெற்றவராகவும், உண்மைகளைத் தெளிவுபடக்கூறும் சொல்லாட்சி படைத்தவராகவும் விளங்குகின்றனர்.

'சொற்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று ஐந்துடன் போற்றி, அவை துணையாக எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கை’யாளர் இவர் ஆகலாம். இவர் கடவுள் நம்பிக்கையிலும், யாக வேள்விகள் இயற்றிக் கடவுளரை மகிழ்வித்துப் போற்றுவதிலும் நம்பிக்கை உடையவர். ஆரிய மரபினரான சான்றோருள் தமிழ் கற்றுச் சிறந்தவருள் இவரும் ஒருவர்.

'இனனே, காமம், கழி கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை, தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து அறந்தெறி திகிரிக்கு வழியடையாகும் என்று தமிழரது அரசியல்நெறி யாதெனக் காட்டுபவரும் இவர்.

வாழ்வு எப்படி அமையவேண்டும்? 'பிறர் பிறர் ரலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது, மையில் அறிவினர் செவ்விதின் நடந்து, தம் அமர்துணைப் பிரியாது. பாத்துண்டு மூத்த யாக்கையொடு, பிணியின்று கழிய' என்று வாழ்வின் நல்லமைதியை வகுத்துக்காட்டுபவர் இவர்.

’ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்றல், ஈதல், ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம்புரி யந்தனர் வழிமொழிந் தொழுகி, ஞாலம் நின்வழி யொழுக' எனப் பாடும் இவர். அந்தக் கோட்பாட்டைத் தமிழரசர் ஏற்று நடக்கவேண்டும் எனவும் விருப்பம் கொள்ளுகின்றனர்.

இவ்வாறு, அறநெறியே நிரம்பிய உளத்தவர் இவராதலினாலே, போரால் நாட்டின்கண் உண்டாகும் அழிபாடுகளை எல்லாம், கற்பார் நெஞ்சம் கரைந்துருளுமாறு எடுத்துக் காட்டி, நிலையாமையை உணர்த்தி, நெறிநின்று வாழ்தலையும் மிக வலியுறுத்துகின்றனர்.

ஐந்திணைச் சால்புகளையும் அழகுறக் காட்டும் இவரது ’இணர்ததை ஞாழல்' என்னும் செய்யுள் கற்றுக் கற்று இன்புறுதற்கு உரிய ஒரு சிறந்த செய்யுளாகும்.

'மந்திரத்து அருந்திறல் மரபிற் கடவுட் பேணியர்’ என்று, கடவுள் வழிபாட்டை முன்னின்று நடத்திய தொழிலினரையும் இவர் செய்யுள் காட்டுகின்றது.

இவ்வாறு, இவர் செய்யுட்கள், தமிழகமருங்கிலே ஆரிய முனிவர்களது வேதவேள்வியும் நிலையாமையும் பற்றிய கொள்கைகள் பரவமுற்பட்ட நிலையையும், அவற்றைத் தமிழ் அரசருட் சிலரும் ஏற்றுப்போற்றிய மாற்றத்தையும் காட்டும் வரலாற்று விளக்கங்களாகவும் அமைந்துள்ளன.

இப்பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த குட்டுவன், 'நீர் வேண்டியது கொண்மின்' என, இவரும் 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என்றனராம். அவ்வாறே பத்துப் பெருவேள்விகளை வேட்பித்து, அவர்களைச் சுவர்க்கத்துக்கு அனுப்பினான் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்று இப்பத்தின் பதிகம் கூறுகின்றது.

இவருடைய 366ஆவது புறநானூற்றுப் பாடலும் காஞ்சித்திணைச் செய்யுளே யாகும்.


3. காப்பியாற்றுக் காப்பியனார்

இவர் காப்பியாறு என்னும் ஊரினர். காப்பியக் குடி யினராகவோ, அல்லது காப்பியன் என்னும் இயற்பெயரினராகவோ இருக்கலாம். தொல்காப்பியர் போன்றோர் இக்குடியைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்களாவர் என்பது வரலாறு. இவரால் பாடப்பெற்றவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் ஆவான்.

இவர் திருமாலின் திருத்துழாய் மாலையினையும், திருமால் வழிபாட்டு மரபையும் அழகொழுகக்கூறியுள்ளார். ஆதலின் இவரைத் திருமால் அன்பர் எனச் சொல்லினும் பொருந்தும். 'வண்டன்' என்பான் இவருக்கு மிகவும் உதவியவொரு வள்ளல் ஆவான். இதனால், இவர் நார்முடிச்சேரலின் சிறப்பைக் கூறும்பொழுதும், ’வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து, வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்டன் அனையை' என்றி கூறியே சிறப்பிக்கின்றார்.

சேரன்மாதேவியைப்பற்றி உரைக்குங் காலத்து, 'விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி' என்று உரைப்பது, அவளது கற்பு மேம்பாட்டையும், இவரது தெய்வ நம்பிக்கைகளையும் காட்டுவதாக அமையும்.

'ஆண்கடன்'; 'புறக்கொடை'; 'துளங்கு குடி'; 'முடந்தை நெல்': 'மல்லல்' உள்ளம்'; 'குருதிச் செம்புனல்'; 'பகைவர் நகைவர்' போன்ற பல அரிய சொல்லாட்சிகளை இவரது செய்யுட்களுள் காணலாம். மேலும், இவர்தம் செய்யுட்களை அந்தாதித் தொடையாகவும் அமைத்துப் பாடியுள்ளனர்.

'நார்முடி' என்பது எப்படி இருந்தது என்பதையும் இவர் நயமாக ஓவியப்படுத்திக் காட்டுகின்றார். 'அலந்தலை வேலத்து உலவை அஞ்சினைச் சிலம்பி கோலிய அலங்கற் போர்வையின், இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்து, அவிரிழை தைஇ மின்னுமிழ்பு இலங்கச், சீர்மிகு முத்தந் தைஇய நார்முடிச் சேரல்' என்பார் இவர்.

'பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன் யானைபட்ட வாள் மயங்கு கடுந்தார்' என்பது போன்ற போர்க்கள உவமை நயங்களையும் இவர் செய்யுட்களுள் காணலாம்.

படைஞரின் கடமையை ’நகைவர்க்கு அரணமாகிப் பகைவர்க்குச் சூர்நிகழ்ந் தற்று நின் தானை' என்பதனால் மிகமிக அருமையாக உரைப்பார் இவர்.

நார்முடிச் சேரலின் நல்லியல்புகளையும், மறமாண்புகளையும் பிறசிறப்புக்களையும் இவர் வியந்துபோற்றும் நயம் கற்று இன்புறற்கு உரியதாகும்.

இவ்வாறு சீரோடு செய்யுள் செய்து போற்றி வாழ்த்திய காப்பியனார்க்கு அச்சேரலும், நாற்பது நூறாயிரம் பொன்னும் தான் ஆள்வதிற் பாகமும் கொடுத்துச் சிறப்பித்தான் என்பது வரலாறு.

4. பரணர்

இவர் 'கபில பரணர்' எனச் சான்றோராற் போற்றப் பெறுகின்ற சால்புடைய இருவருள் ஒருவர். இவராற் பாடப்பெற்றோன் சேரன் செங்குட்டுவன். இவர் பாடியது ஐந்தாம் பத்து. இவர் செய்யுட்கள் பலவும் வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றை நமக்கு உணர்த்துவன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய பிற சங்க நூற்களிலும் இவர் செய்யுட்கள் நிரம்பக் காணப்படும்.

அகத்துறைச் செய்யுட்களில் இவர் வடித்துக் காட்டும் உயிரோவியங்களும், உவமைச் செறிவுகளும், காட்சிக் கவின்களும் அளவிலவாகும். இவர் வரலாறும் புலமைநலமும் தனி நூலாக எழுதிக் காணும் அளவுக்குச் சுவையும் சிறப்பும் உடையதாகும். ஏறக்குறைய எழுபதுக்கும் மேற்பட்ட பழந்தமிழ்த் தலைவர்களைப் பற்றிய செய்திகளை அறியத் துணை நிற்பன இவர் செய்யுட்களே யாகும். 'ஊருண் கேணி உண் துறைத் தொக்க பாசியற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே - (குறுந். 399)' என்னும் செய்யுள், பிரிவுத் துயரத்து மகளிரைப் பற்றிய ஒப்பற்ற ஓவியமாகும்.

’கடவுள் நிலைய கல்லோங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆகத்
தென்னங் குமரியொ டாயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவன்'

என்று கூறும் இவர், செங்குட்டுவனின் மறமாண்போடு, அற்றைத் தமிழ் மறவர் இமயமுதற் குமரிவரை வென்று பேரரசு செலுத்தி வாழ்ந்திருந்த பெருமிதநிலையையும் காட்டுகின்றனர். மற்றும் செங்குட்டுவனது வெற்றிச்செயல்கள் பலவற்றையும் இவர் எடுத்துக்காட்டியுள்ளனர். 'அனைய பண்பின் தானை மன்னர் இனி யார் உளரோ? நின் முன்னும் இல்லை' என்று செங்குட்டுவனைப் புகழால் நிலைபெறுத்தியுள்ளவர் இவர்.

'படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர் செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே’ என்று இவனது வள்ளன்மையையும் இவர் எடுத்துக் காட்டுவர்.


5. காக்கை பாடினியார் நச்செள்ளையார்

'செள்ளை’ என்பது இவர் பெயர். 'விருந்து வரக்கரைந்த காக்கையது பலியே' என வரும் இவரது திண்தேர் நள்ளி என்னும் குறுந்தொகைச் செய்யுள் தொடரால், இவரைக் காக்கைபாடினியார் என்றனர். இவர் பெண்பாலராயினும், நுணுகிய புலமையம் தமிழ்நலமும் செறியக்கொண்டு சிறந்தவர். வேண்மாள் அந்துவஞ் செள்ளை என்பாள் இளஞ்சேரல் இரும்பொறையின் தாயும், குட்டுவன் இரும்பொறையின் தேவியும் ஆவள். ஆகவே, இவ்வம்மையும் அவ்வாறே அரசகுடியிற் பிறந்தவராக இருத்தலும் பொருந்துவதாகும். இச்செய்யுட்களால் இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடியுள்ளார்.

இவர் செய்யுட்கள் பலவும் விறலியரின் ஆடல் பாடல் இசைபோலும் அக்காலக் கலைமேம்பாடுகளைத் தெளிவுறக் காட்டுவனவாக அமைந்துள்ளன. கடற்றுறைகளின் தன்மைகளைத் தெளிவுபட வருணித்துக் காட்டுவதனால் இவரைக் கடற்கரை நாட்டவர் எனக் கருதுதலும் கூடும்.

’சுடர்நுதல், மடநோக்கின், வாள்நகை, இலங்கு எயிற்று, அமிழ்துபொறி துவர்வாய், அசைநடை விறவியர்’ எனவும், ’உயலும் கோதை, ஊறல்அம் தித்தி, ஈரிதழ் மழைக்கண் பேரியல் அரிவை, ஒள்ளிதழ் அவிழகங் கடுக்குஞ் சீறடிப், பல, பல கிண்கிணி சிறுபரடு அலைப்பக், கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்று' எனவும், 'வீங்கு இறைத் தடைஇய அமைமருள் பணைத்தோள், ஏந்தெழில் மழைக்கண், வனைந்து வரல் இளமுலைப், பூந்துகில் அல்குல், தேம்பாய் கூந்தல், மின்னிழை விறலியர்' எனவும், மகளிரை உயிரோவியப்படுத்தும் இவரது சொன்னயம் சொல்லி மகிழ்வதற்கு உரியதாகும்.

'சாவே இல்லாதே நீதான் நெடுநாள் வாழ்வாயாக’ என்று வாழ்த்தும் இவரது வாழ்த்துரைதான் எத்துணைத் திட்பம் செறிந்து விளங்கிச் சேரலாதனின் சிறப்பையும், அதனை வியந்துபாடும் இவரது புலமையையும் காட்டுகின்றது? ’உயர்நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று, இருநில மருங்கின் நெடிது மன்னியரோ' என்று வாழ்த்துகின்றார் இவர்.

'நல்ல மனைவியுடைமையும் ஆடவர்க்குத் தனியான சிறப்பாகும்' என்பதனை, ’ஆன்றோள் கணவ!' என்று மிக அழகாகக் குறிப்பார் இவர்.

வந்தவர்கட்கு, மறாது வழங்கி வாழ்ந்த வள்ளல்கள் பலர். ஆனால் சேரலாதனோ அதற்கும் ஒரு நிலையில் உயர்ந்தவனாக, 'வாராராயினும் இரவலர் வேண்டித் தேரில் தந்து அவர்க்கு ஆர்பதம்! நல்கும் சிறப்பினன்' என்கிறார் இவர்.

இவ்வாறு, இவர் புலமையும், மக்கள் நிலைகளை நுட்பமாகக் கண்டுகூறும் சொல்லாற்றலும் அமைந்து விளங்கும் தனிச்சிறப்பைக் காண்கின்றோம்.

போர்மறவரின் மறமாண்பை, 'இன்று இனிது நுகர்ந்தனம்; ஆயின் நாளை, மண்புனை இஞ்சி மதில் கடந்தல்லது உண்குவம் அல்லேம் புகா' எனக் கூறுவதன் மூலம் காட்டும் நுண்மான் நுழைபுலப் பெரும்புலவரும் இவராவர்.

6. கபிலர்

சங்க நூற்களுள் காணப்படும் புலமைச் செறிவும், ஒழுக்க மேம்பாடும், அருளின் செவ்வியும், நட்பின் சால்பும், செம்மையின் சிறப்பும் அமைந்து விளங்கிய சான்றோர்களிற் குறிப்பிடத்தக்க சிலருட் கபிலர் பெருமானும் ஒருவர் ஆவார். இந்நூலிலுள்ள ஏழாம்பத்து இவர் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடியது ஆகும். இவர் செய்யுட்கள், வரலாறு இரண்டும் தனித்து ஆராயவேண்டிய சிறப்பும் விரிவும் கொண்டவாகும். அந்தப் பெரும்பணியை மேற்கொண்டு இவர் வரலாற்றை நயமும் செறியும் உடையதாகக் செய்து அளித்துள்ளனர், பெரும்புலவரான நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள். அதன்கண் கபிலர் வரலாறு பற்றிய எல்லாச் செய்திகளையும் இனிதே கற்று இன்புறலாம்.

இவர் குறிஞ்சித்திணைச் செய்யுட்களைச் செய்வதில் வல்லவர். ஐங்குறு நூற்றிற் குறிஞ்சிபற்றிய நூறு செய்யுட்களும், குறிஞ்சி கலியும், குறிஞ்சி பாட்டும் அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஆகியவற்றுள் குறிஞ்சிபற்றிய பல செய்யுட்களும் இவர் செய்தவை. புறநானூற்றுள்ளும் 28 செய்யுட்களை இவர் செய்துள்ளனர்.

ஆழ்ந்த தமிழ்ச் செறிவும், அமைந்த பண்பு நலமும். அழகிய காட்சி யோவியங்களும், வளமையான வரலாற்றுச் செய்திகளுமாகத் தமிழ்வரலாற்றுக் கருவூலப் பெட்டகம் போலத் திகழ்வன இவரது செய்யுட்கள்.

பாரியின்பால் கெழுதகை நட்பினராகத் திகழ்ந்து, அவன் மறைவுக்குப் பின்னரும், அவன் பெண்களை மணஞ்செய்வித்து வாழ்வளித்தபின், வடக்கிருந்து உயிர் நீத்த ஒப்பற்ற நட்பின் சால்பும் உடையவர் இவர்.

'இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்' என்று, இவர் தமது நிலையை உரைப்பது பொருத்தமாகவே விளங்குகின்றது. 'பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே! நட்டோர்க் கல்லது கண்ணஞ்சலையே! மகளிர்க்கல்லது மணங்கமழ் அகலம் மலர்ப்பு அறியலையே! நிலந்திறம் பெயரும் காலை யாயினும், கிளந்தசொல் நீ பொய்ப்பு அறியலையே!' என்று வாழியாதனின் குணநலன்களைக் கூறி, 'நனந்தலை உலகம் செய்த நன்று உண்டு எனின், அடையடுப்பு அறியா அருவி யாம்பல் ஆயிர வெள்ள வூழி, வாழியாத, வாழிய பலவே’ என்று வாழ்த்துகின்ற நயம் பெரிதும் இன்புறற் பாலதாகும். அந் நாளைய அந்தணரின், 'ஒழுக்கம் உயிரின் மேலதாப் பேணும் உயரிய தன்மையை, அறம் கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தணர் என இவர் கூறுவதனால் அறியலாம்.

இவன் மனைவியையும், 'பூண் அணிந்து எழிலிய வனைந்து வரல் இளமுலை, மாண்வரி அல்குல், மலர்ந்த நோக்கின், வேய் புரை பணைத்தோள், காமர் கடவுளும் ஆளும் கற்பின், சேண் நாறு கற்பின் சேயிழை' எனப் போற்றுவர் இவர்.

'அயிரை நெடுவரை போலத் தொலையாதாக நீ வாழும் நாளே’ என்று வாழியாதனை வாழ்த்திய இவர் வாக்கின்படி, அவனும் புகழோடு வாழும் பெருநிலை பெற்று விளங்குகின்றனன்.

வாழியாதனைப் புறநானூற்று 8, 14,ஆம் செய்யுட்களாலும் இவர் போற்றிப் பாடியுள்ளனர்.


7. அரசில் கிழார்

இவர் இயற்பெயர் தெரிந்திலது. 'அரிசில்' என்னும் ஊரினர், வேளாண் குலத்தவர்; பெரும் புலமையும் அரசியறிவும் பெற்றவர் என்பன மட்டுமே நம்மால் அறியக்கூடி யனவாகும். இவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை இப்பதிற்றுப்பத்தின் எட்டாம்பத்தால் பாடியுள்ளதுடன், குறுந்தொகையின் 193ஆம் செய்யுளையும், புறநானூற்று 146, 230, 281, 300, 304, 342ஆம் செய்யுட்களையும் பாடியுள்ளனர். தகடூர் யாத்திரைச் செய்யுட்களிலும் இவர் செய்யுட்கள் காணப்படுகின்றன.

'செந்நெலின்' அளவை உறை குவித்தாங்கு' என இவர் கூறுவதுகொண்டு, மரக்காலுக்கு 'அம்பணம்' என்னும் பெயரும், நெற்குவியலுக்கு ’உறை' என்னும் வழக்கும் வழங்கிவரும் தென்பாண்டி நாட்டவர் இவராகலாம் என்பர். சோணாட்டார் எனவும், மைசூர் நாட்டு அரிசிக்கரை யூரினர் எனவும்; அரியலூரினர் எனவும் பலவாறு கூறுவர்.

’மடங்கடல் தீயின் அனையை, சினங்கெழு குருசில், நின் உடற்றிசினோர்க்கே' எனவும், 'பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறைகொண்டு பெயர்தி' எனவும், இரும்பொறையுன் படையாண்மைப் பாராட்டுவார் இவர்.

'நின் வயின் பிரிந்த நல்லிசை; கனவினும் பிறர்நசை யறியா' என்றும் புகழின் மேல் வைத்து இவன் புகழைக் காட்டுவர் இவர். 'கடவுள் அயிரையின் நிலைஇக் கேடிலவாக, பெரும நின் புகழே' எனவும் மனங்கலந்து வாழ்த்துகின்றார் இவர்.

இரும்பொறையின் அமைச்சராக விளங்கியும், படைத் துணை ஏற்றும், புலமையோடு பிறபிற ஆண்மையும் பெற்றும் மிகச்சிறந்த பெரியோர் இவர் ஆவர்.


8. பெருங்குன்றூர் கிழார்

இவர் வேளாண் மரபினர். மற்றொருவர் மலைபடுகடாம். பாடியவர்; அவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரினர். இவர் எந்தப் பெருங்குன்றூரினர் என்பது அறிதற்கு இயலவில்லை. வையாவிக் கோப்பெரும்பேகனை அவன் மனைவி காரணமாகப் பாடியவருள் இவரும் ஒருவர். அகநானூறு. குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள்ளும் இவர் பாடிய சில செய்யுட்கள் காணப்படும். குன்றடுத்த ஊர்கள் பலவும் 'குன்றூர்’ எனவும், 'குன்றத்தூர்' எனவும் வழங்கப்படுதல் தமிழ்நாட்டு மரபு. இந்நூலுள் இவர் பாடியவாக வருவன ஒன்பதாம் பத்துச் செய்யுள்கள். பாடப்பெற்றோன் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையாவான்.

இவரது செய்யுட்கள் காட்சிவருணை நயங்கொண்டும் கருத்துச் செறிவுகொண்டும் விளங்குவன. போர்மறமே பெரிதாகப் பாசறையோனாக இருக்கும் சேரலை, அவன் மனைவியது பிரிவுத்துயரத்தைக் கூறி, வீடு திரும்புமாறு இவர் பாடியுள்ள 'நிழல்விடு கட்டி' என்னும் செய்யுள் மிகவும் இலக்கியச் சுவை உடையதாகும். 'துஞ்சா வேந்தரும் துஞ்சுக; விருந்துமாக நின் பெருந்தோட்கே' என்னும் சொற்களிலே தான் எத்துணை உயிரிரக்கம் செறிந்து ஒளிர்கின்றது என்பதை உணர்ந்து இன்புறல் வேண்டும். 'பசும்பிடி' என்பது 'பச்சிலை' என்று கூறப்பெறும் ஒரு மணமுள்ள தழை; இதனை நயமாகக் காட்டியுள்ளவர் இவர். 'பாடுநர் கொளக்கொளக் குறையாச் செல்வமும், செற்றோர் கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோரையும் உடையவன்' இளஞ்சேரல் எனவும், 'வண்மையும் செம்மையும் சால்பும் அறனும் புகன்று புகழ்ந்து அசையா நல்லிசை நிலந்தரு திருவின் நெடியோன்’ எனவும் இவர் சேரனைக் காட்டுகின்றனர். அவன் உயர்வை உளமாரப் போற்றுகின்றனர்.

காக்கைக்கு விருந்து செய்யும் மரபுபற்றிக் காக்கைப் பாடினியார் வரலாற்றுள் அறிந்தோம். இவரோ 'கார் காலத்து வருவேன்' எனப் பிரிந்துசென்ற காதலனின் வரவை நினைந்து வருந்தியிருக்கும் மகளிர், மழைமேகத்தின் தோற்றங் கண்டதும், அதனைப் பராவிப் பலியிட்டு வழிபடுவதுபற்றித் தம் நற்றிணைச் செய்யுளுள் குறிப்பிடுகின்றார். குறிஞ்சித்திணையின் காட்சிகளை இயற்கையழகு கொஞ்சித் துளும்ப அமைத்துப் பாடியவர் இவர் என்பதனை இவரது அகத்துறைச் செய்யுட்கள் பலவும் காட்டும்.

'சுரும்பார் சோலைப் பெரும் பெயர்க் கொல்லி' எனக் கொல்லிமலையை இவர் வியந்து கூறுவர். கபிலர் பெருமானின் சிறப்பையும், அவர்க்குப் பெரும்பரிசில் அளித்துப் போற்றிய செல்வக்கடுங்கோ வாழியாதனின் வள்ளன்மையையும் போற்றுவார் இவர். 'மாகஞ் சுடர மாவிசும்பு உகக்கும் ஞாயிறுபோல விளங்குதி பன்னாள்' என்ற வாழ்த்துரையிலே, இளஞ்சேரலின் மாண்பும் வள்ளன்மையும் எழிலோடு ஒளிர்கின்ற செவ்வியைக் காணலாம்.

'பயங் கடை அறியா வளங்கெழு சிறப்பின், பெரும்பல் யாணர்க் கூலங்கெழுமி, நன்பல்லூழி நடுவுநின்று ஒழுகப், பல்வேல் இரும்பொறை நின்கோல் செம்மையின், நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த, உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ, அரசியல் தழையாது செருமேந் தோன்றி, நோயிலை யாகியர் நீயே' என்னும் வாழ்த்துரை அறவுரை யாவும் விளங்குதலைக் கண்டு இன்புறலாம்.

இவ்வாறு நயமும் செம்மையும் நல்லறிவு விளக்கமும் ஒருங்கே இணைந்து கலந்து இனிமையூட்டும் வகையால் சிறப்போடு விளங்குவன இவர் செய்யுட்கள் ஆகும்.

இளஞ்சேரல் பரிசில் நீட்டித்தபோது மனம் வெதும்பியவராக, 'நும்மனோரும் மற்று இனையர் ஆயின், எம்மனோர் இவண் பிறவலர் மாதோ' என்று கூறுகின்றதனால், இவரது வாழ்வியல் நிலையையும், புலமைச் செவ்வியையும், உறுதிப் பாட்டையும் நாம் அறியலாம்.