பதிற்றுப்பத்து/ஏழாம் பத்து



செல்வக்கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடியது.


ஏழாம் பத்து
பதிகம்



மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி அந்துவற்கு ஒருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி
வெருவரு தானைகொடு செருப்பல கடந்து 5

ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனனுறப் பெற்றுஅவற்கு
ஓத்திர நெல்லின் ஓகந்தூர் ஈத்துப்
புரோசு மயக்கி 10

மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடினார் பத்துப்பாட்டு.

பாடிப் பெற்ற பரிசில்: 'சிறுபுறம்' என்ன நூறாயிரங் காணம் பொன்னும், 'நன்றா' என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தலும். வாழியாதன் அரசுவீற்றிருந்தது : இருபத்தைந்து யாண்டுகள்.

பாட்டின் பெயர்கள்: 1. புலா அம் பாசறை, 2. வரை போல் இஞ்சி, 3. அருவி யாம்பல், 4. உரைசால் வேள்வி, 5. நாண் மகிழ் இருக்கை, 6. புதல்சூழ் பறவை, 7. வெண் போழ்க் கண்ணி, 8. ஏம வாழ்க்கை, 9. மண்கெழு ஞாலம், 10. பறைக் குரல் அருவி என்பன.

தெளிவுரை: சோம்பலற்ற மனவூக்கத்தோடு போர் மேற்சென்று, விளைந்த போர்களிலே பகைவரை வென்று சிறைப்பிடித்துத் தன் வஞ்சிநாட்டிற்குக் கொணர்ந்தவன்; நுட்பமான பரந்த கேள்வி ஞானத்தைக் கொண்டவன்; சேரமான் அந்துவன் சேரல். அவனுக்கு ஒரு தந்தை பெற்ற மகளான பொறையன்தேவி என்பாள் பெற்றுத்தந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன்.

அவன், தன் நாட்டினிடத்தே பல புதிய நகரங்களை உண்டாக்கியவன்; தன்னோடும் பொருந்தாதாரான பகைவரைக் களத்தினின்றும் தோற்று ஓடச் செய்தவன்; கேட்ட மாத்திரத்தானேயே பகைமன்னர்க்கு அச்சத்தை வருவிக்கும் பெரும்படையினைக் கொண்டோனாய்ப் பல போர்களையும் செய்து வெற்றிபெற்றவன்.

புகழ்தல் பொருந்திய பெரிய வேள்விகளை இயற்றுவித்தவன்; அவற்றைச் செய்வித்த பொழுதிலேயே அறத்துறைப்பட்ட பலவான தான தருமங்களையும் செய்தவன்; மாய வண்ணன் என்பானை மனம் பொருந்தத் தன் குருவாகப் பெற்று, அவனுக்கு உயர்ந்த திறமான நெல்விளைதலையுடைய ஒகந்தூரை இறையிலியாகத் தந்தவன்; அந்தத் தனது புரோகிதனைக் காட்டிலும் தான் அறவொழுக்கங்களிலும், சாத்திர ஞானங்களிலும் மேம்பட்டவனாகி, அவனையே மயங்கச் செய்தவன்.

ஞானவளம் செறிந்த உள்ளத்தை உடையவனாக, எத்தகையதொரு மாசும் அற்றவனாக விளங்கியவன்; அத்தகையோனாகிய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பத்துப் பாட்டுக்களாலே பாடினார்.

சொற்பொருளும் விளக்கமும்: மடியா உள்ளம் - சோம்பலற்ற மனவூக்கம். மாற்றோர் - பகைவர்; மாறுபட்டவர் மாற்றார், மாற்றோர் என்க. நெடுநுண் கேள்வி - நெடிய நுண்ணிய கேள்வி; நுட்பமான கேட்டற்குரிய பொருள்களைத் தொடர்ந்து கேட்டறிந்த ஞானநிறைவு. அந்துவன் - சேரமான் அந்துவஞ் சேரல் என்பான். ஒருதந்தை - ஒருதந்தை என்னும் பெயருடையான்; ஒரு தந்தை எனப் புகழ்பெற்றானும் ஆம். 'பொறையன் பெருந்தேவி' சேரமான் அந்துவனின் கோப்பெருந்தேவி அவன் இரும்பொறை மரபினன் ஆதலின், அவன் தேவியைப் பொறையன் பெருந்தேவி என்றனர்; இஃது அவள் பெயர் அன்று; அவள் பட்டப்பெயராகும். படுபடுத்தல் - ஊர்களை அமைத்தல். நண்ணார் - நாட்டகத்து உட்பகைவர்; அவரை நாட்டைவிட்டே ஓடச் செய்தான் என்பார், 'நண்ணார் ஓட்டி' என்றனர். ஏத்தல் - புகழ்தல். இடனுடை வேள்வி - பெரிய வேள்வி: அகன்ற யாககுண்டத் தையுடைய வேள்வி. அறத்துறைப் போதல் - அறநெறிப்பட்ட யாவும் செய்து மேம்படல். மாயவண்ணன் - மாயையே. தன் வண்ணமாகக் கொண்டவன்; திருமால்; யாகப் புரோகிதனும் ஆம். ஓத்திரநெல்; உயர்ந்த தரமான நெல்: இது தெய்வங்கட்குப் படையலிடச் சிறந்தது. ஓகந்தூர் - ஓர் ஊர். புரோசு - புரோகிதன்; அவனை மயக்கல், அவனினும் தான் அந்நூலறிவாலும் ஒழுக்கநெறியாலும் சிறந்திருத்தல். மல்லல் உள்ளம் - வளமான உள்ளம்: குறையற்ற உள்ளம். மாசு - குற்றம்; இது தன் ஒழுக்கத்தாலும் தன் அறிவு வளத்தாலும் குற்றமற்று விளங்கிய சிறப்பு.


61. புலாஅம் பாசறை !

துறை: காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. சொல்லியது: வாழியாதனின் வெற்றிச் சிறப்பும், கொடைச் சிறப்பும். பெயர்: புலாஅம் பாசறை.

[பெயர் விளக்கம்: பகைவரைப் பகற்பொழுதிற்றானே வெட்டி வீழ்த்தியதனாலே குருதிக் கறை படிந்த வாட்படைகளாலும், பகைவரைக் குத்திக் கொன்று சிறந்த போது குருதிக்கறை படிந்த கோட்டினவாய் விளங்கும் களிறுகளாலும், பாசறையே 'புலவு நாற்றம்' கொண்டதாயிற்று எனவுரைத்த சிறப்பால், இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.]


பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்;
வைத் தன்ன வினைபுனை நல்லில்
பாவையன்ன நல்லோள் கணவன்;
பொன்னின் அன்ன பூவின் சிறியிலைப் 5

புன்மால் உன்னத்துப் பகைவன் எங்கோ?
புலர்ந்த சாந்தின் புலரா வீகை


மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர இரவலர் இனைய
வாராச் சேட்புலம் படர்ந்தோன் அளிக்கென 10

இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்
ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான்
ஈத்தொறும் மாவள் ளியனென நுவலுநின்
நல்லிசை தரவந் திசினே; ஒள்வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை 15

நிலவின ன்ன வெள்வேல் பாடினி
முழவின் போக்கிய வெண்கை
விழவின் அன்னநின் கலிமகி ழானே.

தெளிவுரை: பலாமரத்திலே கனியப்பழுத்து வெடித்த பலாப்பழத்தின் வெடிப்பிலிருந்து ஒழுகும் தேனை. வாடைக் காற்றானது எடுத்துத் தூற்றும் வளமுடையது பறம்பு நாடு. அந் நாட்டிற் பொருந்திய பெரிய விறலினைக் கொண்டவன்; ஓவியத்தே எழுதினாற் போன்ற கைவினைத்திறம் பொருந்திய நல்ல மனையின் கண்ணே இருந்த கொல்லிப் பாவையைப் போன்ற அழகினையும், நற்பண்புகளையும் உடையாளின் கணவன்; பொன்போலும் நிறமுடைய பூவினையும், சிறிதான இலையினையும், பொலிவற்ற அடிமரத்தையும் கொண்ட உன்ன மரத்துக்குப் பகைவன்; எம் கோமான் பாரி. பூசிப் புலர்ந்த சந்தனத்தையும், குன்றாத கொடையினையும், அகன்ற மார்பினையும் கொண்டோனாகிய பெரிய வள்ளலான அவன்றான்,

முழவிடத்தே பூசிய மண்ணானது காய்தலுற்றுப் போகவும், அவனைப்போல வழங்குவார் இல்லாமையாலே இரவலர்கள் பெரிதும் வருத்தமுறவும், மீண்டும் இவ்வுலகத்திற்குத் திரும்பி வருதலற்ற மேலுலகிற்குச் சென்றுவிட்டான்.

ஒள்ளிய வாளேந்திய படைமறவரும், வண்மையுடைய களிறுகளும் சூழப், புலால் நாற்றம் பொருந்திய பாசறை யிடத்தே, நிலவைப்போல விளங்கும் நின் வெள்ளிய வேலைப் புகழ்ந்து பாடும் பாடினியானவள், முழங்கும் முழவின் தாள் வொலிக்கேற்பத் தாளத்தை அறுத்து, இசையமைதியோடு வெறுங்கையை அசைத்து அசைத்துப் பாடுகின்றாள். விழாக் களம் போல விளங்கும் நின் ஆரவாரமிக்க திருவோலக்கத் திடத்தே யானும் வந்தேன்.

'பாரி மறைந்தானாதலின் நீதான் என்னைக் காப்பாயாக’ என்று இரத்தற்கு நின்பால் வந்தேனில்லை. நின் புகழைக் குறைத்தோ மிகுதிப்படுத்தியோ யான் கூறவும் மாட்டேன். 'தான் கொடுத்ததனால், தன்பாலுள்ள பொருள் குறைதலைக் கருதி வாழியாதன் ஒருபோதுமே இரங்கமாட்டான்; கொடுக்குந்தோறும் கொடுக்குந்தோறும் தன் புகழ் மிகுதியாதலை நினைந்தும் தான் மகிழமாட்டான்; ஈயும் போதெல்லாம் மிகவும் வள்ளன்மையாளனாகவே விளங்குகின்றான்’ எனப் பலரும் கூறும் நினது நல்ல புகழானது, என்னையும் நின்பால் இழுத்ததனாலேயே நின்னைக் காண யானும் வந்தேன்!

சொற்பொருளும் விளக்கமும்: பசும்புண் அரியல் - புதுப் புண்போல அன்றே வெடித்த பழத்தின் வெடிப்பு வாயினின்றும் ஒழுகும் தேன். வாடை - வாடைக் காற்று; வட காற்று வாடையாயிற்று. விறல் - வெற்றிப் பெருமிதம். 'நாடு' என்றது பறம்பு நாட்டினை. ஓவம் - ஓவியம். வினை - தொழில்வினை. பாவை - கொல்லிப்பாவை. மனையின் சிறப்பை, 'ஓவத்தன்ன வினைபுனை நல்லில்' எனவும், அம் மனைக்கு உரியவளான பாரியது பெருந்தேவியின் சிறப்பை, 'பாவையன்ன நல்லோள்' எனவும் வியந்து போற்றிக் கூறினர். இதனாற் பாரிவேள் தன் காதன் மனைவியுடன் கூடி யிருந்து ஆற்றிய செறிவான இல்லற வாழ்வின் செழுமையினையும் கண்டு மகிழ்ந்தவர் கபிலரென்று கூறலாம். உன்னம் - உன்னமரம்; போருக்குச் செல்வார் இதனிடத்து நிமித்தங் காண்பர்; வெற்றியெனின் அது தழைத்தும், தோல்வி யெய்தின் அது கரிந்தும் காட்டுமென்பது மரபு. அது கரிந்து காட்டியபோதும், அஞ்சானாய் மேற்சென்று, பகைவரையும் வெற்றிகொண்டு, அதன் நிமித்தக் கூற்றையும் பொய்யாக்கியவன் பாரிவேள் என்பார், 'உன்னத்துப் பகைவன்' என்றனர் . உன்னம் - ஒருவகைக் காட்டு மரம்; மிகவும் வலிமை யுடையது. 'மார்பிற் சாந்து புலர்வதன்றி அவன் நெஞ்சத்து ஈகையான அருள் நோக்கமானது என்றும் புலராதென்பார், 'புலர்ந்த சாந்திற் புலரா ஈகை' என்றனர். மலர்ந்த மார்பு - அகன்ற அழகிய மார்பு. மாவண் பாரி - பெருவண்மையாளனாகிய பாரி. 'முழவு மண் புலரல்' மீளவும் மண்பூசுவார் இல்லாமையால். இனைதல் - வருந்திப் புலம்பல். வாராச் சேட் புலம் - மீட்டும் வாராத தொலைவிலுள்ள நாடு; மேலுலகம்; அவன் இறந்தான் என்பது குறிப்பு.

ஒள்வாள் - ஒளியுடைய வாள். உரவு - வலிமை. புலாஅம் - புலால் நாற்றம்; இது போர்ப்புண்பட்டுப் பாசறைக் கண்ணே சிகிச்சை பெற்றுவரும் படைமறவரின் புண்களி னின்றும் எழும் நாற்றம் ஆகும். ஒள்வாள் பகைவரை வெட்டி வீழ்த்தி வீழ்த்தி அவர்தம் குருதிக்கறை படிந்து விளங்குதலாலும், உரவுக்களிறுகள் பகைவரைக் குத்தியும் மிதித்துத் தேய்த்தும் கொன்றதனாலே கோடுகளும் பாதங்களும் குருதிக்கறை படிந்து தோன்றுதலாலும் எழுந்த புலால் நாற்றமும் ஆம். இதனாற் போர் முடிந்தபின் சேரமானும் அவன் வீரரும் குழுமியிருந்த களத்தையடுத்த பாசறை இதுவெனலாம்; எனவே, களத்தினின்றெழும் புலால் நாற்றத்தையுடைய பாசறை எனலும் பொருந்தும். ’நிலவின் அன்ன வெள்வேல்' என்றது கறை நீக்கி நெய் பூசப்பெற்றுத் திகழும் வாளினை. அதனைச் சிறப்பித்துப் பாடினி பாடினளாதலின், 'வெள்வேல் பாடினி' என்றனர். முழவிற் போக்குதல் - முழவிசைக்கேற்பத் தாளத்தை அறுத் திசைத்தல். வெறும் கை - வெற்றுக்கை; பொருள்களை அவி நயிக்கும் தொழிற்கை யல்லாது தாளத்திற்கு இசையவிடும் எழிற்கை. பாடினி - பாடுவாளாகிய பாண்மகள். மகிழ் - மகிழ்ந்திருக்கும் திருவோலக்கம். கலி - ஆரவாரம். "பாரி இறந்தமையால் என்னைக் காப்பாயாக என்று நின்னை இரந்து பொருள்பெறக் கருதி வந்தேனில்லை" என்பார், 'இரக்கு வாரேன்' என்றனர். எஞ்சிக் கூறல் - கூட்டியோ குறைத்தோ மிகைபடக் கூறுதல். ’செய்யா கூறிக் கிளத்தல், எய்யா தாகின்று எம் சிறுசெந்நாவே (புறம். 148)' எனக் கூறினாற் போல, உண்மைப் புகழை மட்டுமே கூறிப் போற்றுதல்.

"ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்; ஈத்தொறும் மாவள்ளியன்" என்பது, வாழியாதனைப்பற்றி உலகோர் கூறும் புகழுரை. 'அத்தகைய புகழாளனாகிய நின்னைக் கண்டின்புறும் பொருட்டாகவே யானும் வந்தேன்’ என்கின்றனர் கபிலர். 'கொடுக்குந்தோறும் கொடுக்கப்படும் பொருள் தன்னிடமிருந்து செலவாகிறதென வருந்தான்; அதனாற் புகழ் வருவதெனவும் மகிழான்; அளவோடு கொடுத்தாற் போதுமென்றும் கருதாது வாரிவாரி வழங்குவான் சேரமான்' என்று உலகம் கூறுவதாகக் கூறுகின்றனர். இது வாழியாதனின் பரவிய பெருமை.

இதனாற் கபிலர் பாரியின் மறைவுக்குப் பின்னரே வாழியாதனிடம் சென்றனர் என்பதும், அவன் பாரி வள்ளலின் சமகாலத்தவன் என்பதும் நன்றாக விளங்கும். வாழியாதனைப் பாராட்டும்போது, தம் நண்பனான பாரியின் நினைவைச் சற்றும் மறவாது, பிறவரசன் முன்பேயும் எடுத்துக் கூறுவது, கபிலரின் உள்ளத்தில் பாரிபாலிருந்த பெருமதிப் பையும் உறவின் செறிவையும் காட்டும். பாரியின் மனைவியைப் பற்றியும் இச்செய்யுளுட் காணுகின்றோம்; அவள், பிற்காலத்து யாது காரணத்தாலோ இறந்தாளாதல் வேண்டும்; அல்லது பாரி இறந்ததும் அவளும் அந்நிலையே இறந்தாளாதல் வேண்டும். வரலாற்றுச் சிறப்புடைய பாட்டு இது. பாரியின் வரலாற்றில் ஒரு சிறந்த குறிப்பை இச்செய்யுளால் நாம் அறியலாம். இதனாலேயே பாரி மகளிர்க்குக் கபிலரே துணையாயின நிலையும் விளங்கும்.


62. வரைபோல் இஞ்சி !

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வரை போல் இஞ்சி. சொல்லியது : வாழியாதனின் வெற்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: புனல்பொரு கிடங்கின் வரைபோல் இஞ்சியை உடையவரான, தம் வலியாற் செருக்கியிருந்த வேந்தரும் நினக்குப் பணிந்து, நீ அவர் அரணை முற்றிய காலையில் திறை தருதலின்றி, நின்னை எதிர்த்துப் போரிடக் கருதார் என்ற சிறப்பால், இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது.]


இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு
மழையென மருளும் மாயிரும் பல்தோல்
எஃகுபடை யறுத்த கொய்சுவல் புரவியொடு
மைந்துடை ஆரெயில் புடைபட வளைஇ
வந்துபுறத்து இறுக்கும் பசும்பிசிர் ஒள்ளழல் 5
 
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்பு
இல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்
துப்புத்துறை போகிய கொற்ற வேந்தே
புனல்பொரு கிடங்கின் வரைபோல் இஞ்சி 10


அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பி
பணிந்துநிறை தருபநின் பகைவ ராயின்
புல்லிடை வியன்புலம் பல்லா பரப்பி
வளனுடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த 15

களனறு குப்பை காஞ்சிச் சேர்த்தி
அரியல் ஆர்கை வன்கை வினைநர்
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வரிவண்டு ஒப்பும்
பாடல் சான்றஅவர் அகன்தலை நாடே.

தெளிவுரை: நெற்றிப் பட்டமும் பொன்னரி மாலையு மாகிய அணிகளைப் பூண்டவாகப் பலவாகிய களிற்றின் தொகுதிகள் போருக்கு எழும். மழைமேகம் என்னும்படியாக மயக்கத்தைத் தரத் தக்கவாறு, மிகப்பெரும் பலவாகிய கிடுகுகளை ஏந்தியபடியே நின் படையணிகளும் அத்துடன் எழும். பகைவரின் வாட்படைஞரையும் வேற்படைஞரை யும் முன்னாளிலே பொருதழித்த, கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைப்படையும் அத்துடனே எழும். இவற்றோடுஞ் சென்று, பகைவரின், வலியுடையதும், பிறரால் எளிதிற் கவர்தற்கு அரியதுமாகிய கோட்டை மதில்களின் நாற்புறமும் நெருங்கச்சென்று, அவற்றை வளைத்துக் கொள்வாய். நின் நாற்படை யணிகளும் அம் மதிற்புறங்களிலே தண்டுகொண்டவாய்த் தங்கியிருக்கும். பகைவர் ஊர்களை நின் படைமறவர் கொளுத்துதலாலே, பசிய பிசிரையுடை ஒள்ளிய அழலானது, ஞாயிறு பலவாகப் பெருகியதுபோன்ற மாயத் தோற்றத்தைக் கொண்டதாய்ச் சுடரிட்டு, நாற்புறமும் மேலெழுந்து வானத்தேயும் விளங்கும். பொறுக்கவியலாத மயக்கத்தோடு முழக்கத்தைச் செய்தபடியே திரிகின்ற கூற்றத்தினது இயல்பினைக்கொண்ட, மிக்க திறலோடும் போர்த்துறை பலவற்றினும் பெருஞ்சிறப்புப் பெற்றுத் திகழுகின்ற வெற்றி வேந்தனே!

தன்னுள்ளே விளங்கும் மிக்க நீரானது கரையைப் பொருதியபடியே விளங்கும் அகழியினையும், மலையைப் போலுயர்ந்த மதிலையும் கொண்டு, வந்து எதிர்த்தாரை அஞ்சச்செய்யும் வலிமையாற் சிறந்த, பெரிய கையினராகிய நின் பகைவர், நினக்குப் பணிந்தாராக ’நின்பால் வணக்கமான மொழிகளைச் சொல்லியபடியே, நினக்குத் திறைப் பொருளையும் செலுத்துவாராயின்,

புல்வளமுடைய பரந்த புலத்தின்கண்ணே, பலவான ஆநிரைகளைப் பரவலாகச் சென்று மேயுமாறு போகவிட்டு விட்டு, வளமுடைய வயலிடத்தே விளைந்த கதிர்களினின்றும் உதிர்ந்த, களத்திற் சேர்த்துத் தூற்றப்படுவதல்லாத நெல் மணிகளின் குவியலைக் காஞ்சிமரத்தின் அடியிடத்தே சேர்த்துவைத்து, அதனைக் கள்ளுக்கு விலையாக வழங்கிக் கள்ளுண்ணலைச் செய்யும் வலிய முயற்சியினை யுடையவரான உழவர், அரிய பூவாகிய ஆம்பலைச் சூடிய சென்னியினராகத் தம்பால் மொய்க்கும் அசைகின்ற சிறகினையும் வரிகளையுமுடைய வண்டினங்களை ஓட்டியபடியே யிருக்கும், அப்பகைவரின் பரந்த இடத்தையுடைய வளநாடுகள், இனி நின் காவலுக்கு உட்படுதலின், புலவர் பாடும் புகழ் பெற்றனவாகும்.

சொற்பொருளும் விளக்கமும்: இழை - நெற்றிப்பட்டமும் பொன்னரிமாலையும் போல்வனவாகிய அணிகள். எழு தரும் - போரிடலைக் குறித்து எழுந்து செல்லும். தொழுதி - தொகுதி; அணியணியாகச் செல்லும் படையமைப்பு. மழை - மழை மேகம். தோல் - கிடுகு ; அதனையுடைய தானை மறவரைக் குறித்தது. எஃகு படை - வேலும் வாளும் ஆகிய படைக்கலன்களைத் தாங்கிய பகைவரின் படைமறவரைக் குறித்தது, இவரைச் சிதைத்து விரைய மேற்செல்லும் பேராண்மைமிக்க புரவிப்படை என்பார். 'எஃகு படையறுத்த கொய்சுவற் புரவி' என்றனர்; இப் பகைமறவர் பகைவரின் கோட்டைப் புறக்காவலர் எனவும், இவரை முதற்கண் அழித்து மேற்சென்று கோட்டை மதிற்புறத்தை முதற்கண் சென்றடைவது விரைந்த செலவையுடைய புரவிப்படை எனவும் கொள்க. மைந்து - வலிமை; பகைவர் எயிலின் வலிமை தோன்ற, 'மைந்து உடைய ஆர் எயில்' எனவுரைத்து அதனை அழித்து வென்ற வாழியாதனின் வாளாண்மையைப் போற்றி உரைக்கின்றனர். பசும்பிசிர் ஒள்ளழல் - பசிய பிசிரையுடைய ஒள்ளிய நெருப்பு; இது கோட்டைப் புறத்திருந்த பகைவரிடங்களை எல்லாம் எரியிட்டுக் கொளுத்தியதனாலே எழுந்தது. 'ஞாயிறு பல்கிய மாயம் - சுட்டெரிக்கும் வெம்மையுடைய ஞாயிறு பலவாக எழுந்ததுபோன்ற அழலின் வெம்மை மிகுதியாகிய மயக்கம். மடங்கல் - கூற்றம்; ஊழிப்பெருந்தீயாகிய வடவைத்தீயெனவும் உரைப்பர். பாடு இமிழ்பு இழிதரும் - முழக்கத்தைச் செய்தபடியே திரியும்; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிலே பட்டுப் படீர்படீரென வெடிக்கும் பல பொருள்களோடு நாற்புறமும் பரவும் தீயினை, முழக்கத்தோடு அனைத்தையும் எரித்தொழிக்கப் புகும் கூற்றத்திற்கு ஒப்பாக்கினர். வாழியாதனின் பசையழிக்கும் கடுந்திறலின் கொடிய தன்மைக்குப் 'பசும்பிசிர் ஒள்ளழல் ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு, ஒல்லா மயலொடு பாடிமிழ்பு இழிதரும் மடங்கல் வண்ணங்கொண்டு எழுதலை' உவமையாகக் கூறினராகவும் கொள்ளலாம். அதுதான் எதிரிட்ட அனைத்தையுமே அழித்துத் தானே எங்கணும் வெம்மையோடு மேலோங்கி நிற்றலைப்போல, வாழியாதனும் எதிரிட்ட பகைப்படையனைத்தையும் அழித்துத் தானே எப்புறத்தும் மேலோங்கி நிற்கவல்ல கடும் போர்த்திறலினை உடையவன் என்பதாம். துப்பு - வலிமை. கொற்றம் - வெற்றி. சுவல் - பிடரிமயிர்; அது கொய்யப் பெற்று ஒழுங்குபடுத்தப் பெறுதலின் 'கொய்சுவல்' என்றனர்; இன்றும் இவ்வாறு கொய்து அழகுபடுத்துதல் மரபு.

'புனல் பொரு கிடங்கு' என்றது அகழியின் நிர்ப் பெருக்கையும் அகலத்தையும் உணர்த்தும்; அதனாலேயே அதன்பால் அலையெழுந்து கரையை மோதிப் பொருதியபடி இருந்ததென்று கொள்க. அணங்குறுத்தற்கு ஏதுவான பெருவலியினை ’அணங்கு' என்றனர். தோட்டி செப்பல் - தோட்டி போல உடலை வளைத்துப் பணிந்தவராகப் பணிவான சொற்களை மொழிதல். அவர் படைச் செருக்கு அழிந்து போக, உயிரைப் பேணும் கருத்தினராக அஞ்சிப் பணிந்து வாழமுற்பட்டுத் தொழுதுநின்ற நிலை இது.

'பகைவர் பணிந்து திறையளப்பின், அவர் நாடு புலவர் பாடும் புகழுடைய பெருவளத்தினதாகும்' என்றனர். இன்றே இதுதான் அழிந்து பாழ்படும் என்பது தேற்றம். ’வளனுடைச் செறு’ என்றது, வயல்களின். வளமான நெற்பயிரின் தன்மை தோன்றக் கூறியதாகும். ’விளைந்தவை உதிர்ந்த களனறு குப்பை' என்றது. உரியவர் கதிரறுத்துப் போயினபின், வயல்களிற் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளை. இவற்றைத் துடைப்பத்தால் பெருக்கிச் சேர்த்து, ஆநிரை மேய்ப்பாரும் பிறரும் கள்ளுக்கு விலையாக தந்து கள்ளுண்டு களிப்பர் என்பதாம். இதனால், அந்நாட்டின் விளைவு மிகுதி பற்றிக் கூறினர். அரியல் - கள். ’வன்கை வினைஞர்' என்றது, உதிர்ந்த மணிகளைத் தொகுத்தற்கு எடுத்துக்கொள்ளு கடுமையான உடல் உழைப்பைக் குறித்துக் கூறியதாம். பாடல்சான்ற - புலவர் பாடும் புகழ் பெற்றன. அவர்தாம் தம் நாட்டினை இத்தகைய வளமுடையதாகக் காணல் வேண்டின், தம்மிற் செருக்காது. நினக்குப் பணிந்துபோதலே செயத்தக்கது என்று கூறுவதன்மூலம், செல்வக் கடுங்கோவின் வெற்றி மேம்பாட்டைப் போற்றிப் புகழ்கின்றார் கபிலர். அரசரது பிறவாகிய பல புகழினுங் காட்டில், பகை யழித்து மேம்படுதலாகிய களவெற்றியால் வந்தடையும் வெற்றிப்புகழே சாலச்சிறந்ததென்பது பண்டைத் தமிழரசர் போற்றிய மரபாகும்.

63. அருவி யாம்பல் !

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: அருவி யாம்பல். சொல்லியது: வாழியாதனின் பல குணங்களையும் ஒருங்கே உரைத்து வாழ்த்தியது.

[பெயர் விளக்கம்: அடை யடுப்பு அறியா அருவியாம்பல் என, ‘ஆம்பல்' என்னும் பேரெண்ணைக் குறித்த சிறப்பால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது.]

பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா உள்ளமொ டணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கமழ் அகலம்
மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே 5

நிலம்திறம் பெயருங் காலை யாயினும்
கிளந்த சொல்நீ பொய்ப்பறி யலையே;
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி 10

ஒருமுற்று இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே!
ஆடுபெற் றறிந்த மள்ளர் மாறி
நீகண் டனையேம் என்றனர்; நீயும்
நும்நுகம் கொண்டினம் வென்றோய் : அதனால் 15

செல்வக் கோவே! சேரலர் மருக!
கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி
நனந்தலை உலகம் செய்தநன்று உண்டெனின்
அடையடுப்பு அறியா அருவி ஆம்பல் 20
ஆயிர வெள்ள ஊழி
வாழி யாத, வாழிய பலவே!

தெளிவுரை: அறுவகைப்பட்ட ஒழுக்கங்களையும் பேணி வாழ்தலை உடையவரான பார்ப்பார்க்கு அல்லாது பிறருக்குப் பணிதலை நீதான் என்றுமே அறிந்தவனல்லை! பணிதலென்ப தற்ற உள்ளவெழுச்சியோடு, நின்னுடன் அழகுறப் பொருந்தி யிருக்கும் நின் உயிரனைய நண்பர்க்கல்லாது பிறருக்குக் கண்ணோட்டஞ் செய்து அஞ்சவும் மாட்டாய்! வளைந்த இந்திர தனுசைப் போன்ற மாலையானது கிடந்து வருத்தியபடியே யிருக்கின்ற தன்மை கொண்டது, நினது நறுஞ்சாந்து பூசப் பெற்றதனாலே மணங் கமழ்ந்துகொண்டிருக்கும் பரந்த மார்பகம். அதனை, நின் உரிமை மகளிர்க்கல்லாது பிறருக்கு விரித்துக் காட்டுவதனையும் நீதான் அறிந்திலை! நிலவகைகள் தத்தம் இயல்புகளிலே நின்றும் திரிந்து கெடுகின்ற வறட்சிக் காவத்தே யானாலும், சொல்லிய சொல்லினைப் பொய்யாக்கு தலையும் நீதான் அறியமாட்டாய்!

மிகச் சிறிய இலைகளைக் கொண்டதான உழிஞைப் பூவின் மாலையைச் சூடியபடியே, பகைப்புலத்தே யிருந்து கொள்ளத் தக்க செல்வம் மிக வுண்டாகுமாறு, தண் தமிழ் மறவர்களாகிய படையினைச் செலுத்திச் சென்று, குன்றுகள் நிலை தளர்விக்கும் இடியேற்றைப்போலச் சீற்றம் கொண்டு, ஒரு வளைப்பிலேயே பகை மன்னர் இருவரைத் தோற்றோடச் செய்த, ஒள்ளிய வாட்படை மறவரால் செய்யப்படுகின்ற வாட்போரிலே மேம்பட்ட தானையினையும், வெற்றிப் போரையும் உடையோனே!

முன்னர்ப் பல போர்களையும் செய்து வெற்றி பெற்றவராக இருந்தும், நின்னோடு செய்த போரிலே அப் பகை மறவர்கள் தம் வலியழிந்து தோற்றனர். தம் பகைமை எண்ணத்தினின்றும் மாறியவராக, ’நீ கருதியதையை இனிச் செய்வோம் பெருமானே!' எனத் தாழ்மொழி கூறியவாறு நின்னைப் போற்றிப் பணிந்தனர். நீயும், நின் முன்னோரைப் போன்றே வன்மையும் கண்ணோட்டமும் கொண்டனையாய், மேலும் பல போர்களைச் செய்று பகைவரை வென்றனை.

அதனால், சேரவரசர்களின் குடிப் பிறந்தோனே! செல்வக் கடுங்கோ வாழியாதனே! காற்றாலே எடுக்கப்பெறும் அலைகளின் முழக்கமாகிய குரலையுடைய கடலினையே வேலியாகக் கொண்ட, பரந்த இடத்தையுடையது இவ்வுலகம். இவ்வுலகத்தவர் செய்த நற்செயல்கள் என்பது உண்டாயிருக்கு மானால், இலைகள் அடுக்கியிருத்தலை அறியாத அரும் பூவின் பேராகிய ஆம்பல் என்னும் பேரைக் கொண்ட பேரெண்ணின் மேலும், 'ஆயிரவெள்ளம்' என்னும் ஊழியளவும், வாழியாதனே, நீதான் பல புகழோடும் கூடியவனாக நெடிதிருந்து வாழ்வாயாக!

சொற்பொருளும் விளக்கமும்: பார்ப்பார் - 'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்றாற்போல, அறுவகை ஒழுக்கத்தானும் நிரம்பிய சான்றோர். இவரைப் போற்றிப் பணிதல் பண்டையோர் போற்றிய மரபு. 'இறைஞ்சுக பெரும நின் சென்னி, சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே’ என வரும் புறப்பாட்டு அடிகளும் இம் மரபினைக் காட்டும் (புறம்.6).'பணியா உள்ளம்' என்றது, செருக்கிய பகைவர்க்குப் பணிந்துபோக நினையாத மனவூக்கத்தை; நட்பு நிலையில் தாழ்வு படாத உள்ளமும் ஆம். கெழீஇ பொருந்தி. கண் - கண்ணோட்டம் - தாட்சணியம்; நண்பர்க்குத் தாட்சணியத்திற்காக அஞ்சுதலன்றிப் பகைவர்க்கு ஒருபோதும் அஞ்சாய் என்பார், 'நட்டோர்க்கல்லது கண் 'அஞ்சலை' என்றனர். நட்டோர் தம் உரிமையாற் சிலபோது கடிந்து கூறினும், அவர்க்குப் பணிந்து போதலையே இவ்வாறு கூறினர். தார், வளைந்த இந்திர தனுசைப்போல மார்பிடத்தே விளங்குதலின், 'வணங்கு சிலை' என்றனர். அகலம் - மார்பு. மகளிர் - உரிமை மகளிர். 'மலர்ப்பு' என்றது, தழுவிக் கொள்ளத் தருதலை; இது பிறர் யாரும் பொருதற்கு முன்வராததனால், நீதான் போகத்துக்கு இடமாக அல்லாதே பொருதற்கென்று மலர்வித்தலை அறியாய் என்றதாம். நிலம் திறம் பெயர்தல் - நிலவகைகள் தத்தம் தன்மை கெட்டிட அழிதல். அத்தகைய ஒருந்தாயக் காலத்து அனைத்துயிரும் தம் நிலைகெடுதல் கூடுமெனினும், வாழியாதன் சொன்ன சொற்களைப் பொய்ப்பதிலன் என்பதாம். இது அவன் வாய்மையையும், அவன் நாட்டு வளமையையும் கூறியதுமாம்.

’உழிஞைத் தெரியல் சூடி' என்றது, நிகழ்ந்தது உழிஞைப் போர் என்பதற்காம். கொண்டி - கொளப்படும் பொருள். தமிழ் - தமிழ் மறவர். செறித்து - நிறைந்து. 'கொண்டி மிகைப்பட’ என்றது, பகைவருடைய மிக்க பெருஞ் செல்வ வளம் அனைத்தையும் கைக்கொண்டு என்பதாம். 'தமிழ்’ தமிழ் மறவரைக் குறிப்பதனைத் 'தமிழ் தலைமயங்கிய தலை யாலங்கானத்து' எனவரும் புறப்பாட்டடியும் காட்டும் (புறம். 19.); தென்தமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய அரசர் (சிலப்.26: 161.)' எனச் சிலம்பும் பகரும். முற்று வளைப்பு. இருவர் - இரு பகைவர்; தமிழ் செறித்து இருவர் சுட்டிய என்றதனால், அவர் தமிழரல்லாத பிறமொழி பேசும் நாட்டினராகலாம்.

ஆடு - வெற்றி. அழிந்த - தோற்ற. மள்ளர் - வீரர். மாறி - பகை நீங்கி. நீ கண்டனையேம் - நீ நினைத்தது போன்றே செய்தலை உடையோம். நுகம் - வலிமை. இனும் - மேலும்.

மருகன் - குடியிற் பிறந்த மகன். சேரலர் - சேரர். கால் - காற்று : 'கால் எடுத்த திரை' என்று கொள்க: ‘கால் எடுத்த முழங்கு குரல்' என்றது கடலைக் குறித்தது; வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. வெளி - எல்லை. நன்று - நற்செயல்; இதனைப் புண்ணியம் என்பர். அடை - இலை. அடுப்பு - அடுக்கியிருத்தல். 'அருவீ' என்பதன் 'வீ' குறுகி நின்றது; 'அரிய மலர்' என்பது பொருள். வெள்ளம் - ஓர் பெரிய எண். ஆம்பல் - ஓர் பெரிய எண். அல்லி. மிக்க நெடுங்காலம் வாழியாதன் உயிர் வாழ்வதற்கு உலக மக்கள் புண்ணியஞ் செய்திருக்க வேண்டும் என்பதாம்; இது அவரை அவன் தன் காவல் மேம்பாட்டினாலே இன்ப வாழ்வின ராக்குதலால்.


64. உரைசால் வேள்வி!

துறை:காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: உரைசால் வேள்வி. சொல்லியது: வாழியாதனின் கொடைச் சிறப்பினை, அவனது வெற்றிச் சிறப்பினோடும் சேர்த்து உரைத்தது.

[பெயர் விளக்கம்: ”அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த வேள்வி யந்தணர்" என, அந்தணரின் கேள்விச் செவ்வியையும், வேள்விப் புகழையும் கூறிய சிறப்பாலே இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது.]


வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் அம்ம!
அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு 5

இருஞ்சே றாடிய மணல்மலி முற்றத்துக்
களிறுநிலை முனைஇய தாரருந் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி
அலங்கும் பாண்டில் இழையணிந் தீமென 10

ஆனாக் கொள்கையை ஆதலின் அவ்வயின்
மாயிரு விசும்பின் பன்மீன் ஒளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு, மாற்றார்
உறுமுரண் சிறைத்தநின் நோன்தாள் வாழ்த்திக்
காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல்! 15

மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி; அதனால்
பசியுடை ஒக்கலை ஓரீய
இசைமேந் நோன்றல்நின் பாசறை யானே! 20

தெளிவுரை: வெற்றிச் சிறப்புப் பொருந்திய வீரமுரசத்தையும், வாட்போரால் வாய்த்த போர் வெற்றியையும் உடையவரான பொற்பூணணிந்த வேந்தர்கள், இவ்வுலகிற் பலர் உள்ளனர்; எனினும்,

அறநெறிகளையே உரைத்தபடி விளங்கும் செவ்விய நாவினையும், விளங்கிய புகழாற் சிறந்த வேள்விகளை இயற்றி முடித்த பெருமையினையும் கொண்ட வேதக்கேள்வியினரான அந்தணர், நீ வழங்கும் அரிய அணிகலன்களை ஏற்றுக்கொள்ளுமாறு, நீ நீர்வார்த்து அவற்றை அவர்களுக்கு வழங்குவாய். அங்ஙனம், நீ வார்த்த நீர் படுதலாலே மணல்மலிந்த நின் அரண்மனை முற்றமும் பெரிதும் சேறுபட்டுப் போகுமே!

அதனாலே, அம் முற்றத்தின்கண் நிற்றலைத் தாம் வெறுத்தவாய், நின்னுடைய யானைகள், நிலைகொள்ளாதே அசைந்தபடியிருக்கும். அத்தகைய கோயில் முற்றத்தையும், ஒழுங்கான அமைப்பையும், பரிசிலரன்றிப் பிறர் செல்லுதற் கரிய காவலையுமுடைய மதிற்புறத்தையும் கொண்ட திருக் கோயிலில் உள்ளவனே! நின் திருமாளிகையின் மதிற்புறத்தே வருகின்ற கூத்தர்களைக் காணின், ”விரைவாகவே அவருக்குக் கத்தரிகையால் கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகளையும், அசைந்து செல்லும் தேர்களையும் அவ்வவற் றிற்குரிய அணிகளை எல்லாம் அணிந்து கொடுப்பீராக" என்று நின் ஏவலர்க்குக் கூறியுள்ளோனே! அத்தகைய கொடுக்கும் கொள்கையாளன் நீயாதலின், அவ்விடத்தே -

மிகப்பெரிதான வானத்திடத்தேயுள்ள பலவான விண் மீன்களின் ஒளியும் மழுங்கிப் போகும்வண்ணம் ஞாயிறு எழுந்து தோன்றினாற்போல, நின் பகைவரின் மிக்க மாறு பாட்டை எல்லாம் சிதைத்த நின் வலிமைமிக்க முயற்சியை வாழ்த்தி, நின் பாசறைக் கண்ணேயே நின்னைக் காணும் பொருட்டாக யானும் வந்தேன்.

கழலவணிந்த வீரவளையினையுடைய தலைவனே! கருமை பொருந்திய மலர்களையுடைய கழியின் கண்ணே மலர்ந்து, நெய்தற்பூவின் இதழது வனப்புப் பொருந்திய தோற்றத்தோடு வானத்தே மேலெழுந்த கார்மேகத்தினும் காட்டில், நீதான் பெரிதான நற்பயனை இவ்வுலகுக்குப் பொழிகின்றனை!

ஆதலினாலே, பசியினையுடைய எம் உறவினரது துன்பத்தைப் போக்கிய புகழால் மேம்பட்ட தோன்றலே! நின் பாசறையிடத்தேயும் நின்னைக் காண்பதற்காக யானும் வந்தேன், பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: வலம்படு முரசம் - வெற்றிச் சிறப்புப் பொருந்திய தன் முழக்காலேயே பகைவரைப் பணியச்செய்து வெற்றி தேடித்தருகின்ற முரசமும் ஆம். வாய்வாள் கொற்றம் வாளாண்மையாலே வாய்த்த வெற்றி. பொலம்பூண் - பொற்பூண். அறங்கரைத்து வயங்கிய நா: அறமே எஞ்ஞான்றும் கூறிக்கூறி முழக்கிய, அற விளக் கத்தையுடைய நாக்கு. பிறங்குதல் - விளங்குதல். உரைசால். புகழ் நிறைந்த. கேள்வி - வேதம்; குருவிடம் கேட்டே அறியப்படுவது. ஏற்று - நிற்க. மணல்மலி - மணல்நிரம்பிய. முணைஇய- வெறுத்த. தார் - ஒழுங்கு. தகைப்பு - மதிற்சுவர். புறஞ் சிறை - மதிற்புறம்; புறமதிற் பக்கம். வயிரியர் - கூத்தர். அலங்கும் - அசையும். பாண்டில் - தேர். கொள்கை - கோட்பாடு. மாயிரு விசும்பு - மிகக் கருமை படர்ந்த வானம். உறுமுரண் - மிக்க மாறுபாடு. நோன்தாள் - வலிய முயற்சி. கழல் தொடி- கழல்வணிந்த வளைகள். மை படு - கருமை பொருந்திய. உயர்ந்த - வானின்மேலே உயர்ந்தெழுந்த. மழை - மேகம். பயம் - பயன். இசைமேந் தோன்றல் புகழால் மேம்பட்ட தலைவனே!

இதனாற் செல்வக் கடுங்கோ வாழியாதனின் கொடை மேம்பாடும் மறமேம்பாடும் கூறி, அவனைப் போற்றினர் கபிலர்.

அந்தணர்க்கு நீர்வார்த்து ஊரும் பொருளும் வழங்குதல் அக்காலத்தே மிகப் புகழுடையதொரு செயலாகச் சிலராற் கருதப்பட்டது என்பதும் இதனாலே விளங்கும். கபிலர். அந்தணாளராதலின், இவ்வாறு அந்தணர்க்கு வாழியாதன் வழங்கிய பெருங்கொடையினைப் போற்றினர் என்பதும் கருத்தாகும்.

அக்காலத்து அந்தணரும் தம்முடையவான ஓதல் ஓதுவித்தல் போலும் நெறிகளையே பேணி வாழ்ந்தவர் ஆவர். ஆதலின் அவர்தம் வாழ்வியலுக்கான வசதிகளை அரசரும் செல்வரும் செய்தனராதல் வேண்டும்.


65. நாள்மகிழ் இருக்கை !

துறை:பரிசிற்றுறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: நாள் மகிழ் இருக்கை. சொல்லியது: வாழியாதனது திருவோலக்கச் சிறப்போடு சேர்த்து; அவன் செல்வச் சிறப்பும் கூறினார்.

[பெயர் விளக்கம்: காலைப்பொழுதில் அரசன் வந்து கொலுவீற்றிருக்கும் மகிழ்வான திருவோலக்க இருக்கையை 'நாள் மகிழ் இருக்கை' என்றதனால், இப்பாட்டு இப்பெயர் பெற்றது.]


எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின்
பரியுடை நன்மா விரியுளை ஓட்டி
மலைத்த தெவ்வர் மறம்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வில்லோர் மெய்ம்மறை! சேர்ந்தோர் செல்வ! 5


பூணணிந்து எழிலிய வனைந்துவரல் இளமுலை
மான்வரி யல்குல் மலர்ந்த நோக்கின்
வேய்புரைபு எழிலிய விளங்கிறைப் பணைத்தோள்
காமர் கடவுளும் ஆளும் கற்பின்
சேணாறு நறுநுதல் சேயிழை கணவ! 10

பாணர் புரவல! பரிசிலர் வெறுக்கை !
பூணணிந்து விளங்கிய புகழ்சால் மார்ப! நின்
நாள்மகிழ் இருக்கை இனிதுகண் டிகுமே!
தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்குச் 15

சேறுசெய் மாரியின் அளிக்கும் நின்
சாறுபடு திருவின் நனைமகி ழானே!

தெளிவுரை: போர்க்களத்திலே வெட்டுண்டு கிடக்கும் பிணங்களின்மேலே கால் இடறியதனால் சிவந்த குருதிக் கறை படிந்த குளம்பினையும், விரையச்செல்லும் செலவினையு முடைய நல்ல குதிரைக்கு, விரிந்த தலையாட்டத்தைச்சூட்டி தம்மோடு வந்து பொருதிய பகைவரின் வீரங் கெட்டழியுமாறு வென்றவரும், யாக்கை நிலையாமையை எப்போதும் தம் முடைய நெஞ்சிலே நீங்காமற் கொண்டிருப்பவருமான போர் வீரர்களின் தலைவனே! விற்படையாளருக்கு கவசம் போன்றவனே! நின்னைச் சேர்ந்தோருக்கு நீயே பெறற்கரிய பெருஞ் செல்வமாக விளங்குபவனே!

பூண்கள் அணியப்பெற்று விளங்குவனவும், முலைக் கோலம் தீட்டப்பெற்றவுமான, புடைத்து வருதலையுடைய இளையவான மார்பகங்களையும், மாட்சியான ரேகைகள் பொருந்திய அல்குல் தடத்தையும், மலர்ச்சி பெற்று விளங்கும் கண்களையும், மூங்கிலைப்போன்று அழகுபெற்று விளங்கும் விளக்கம் பொருந்திய மூட்டுக்களை உடையவு மாகிய பணைத்த தோள்களையும், விரும்பத்தக்க அருந்ததி யையும் ஆட்சிசெய்யும் கற்பினையும், நெடுந்தொலைவுக்கும் மணம் வீசுகின்ற நறிய நுதலையும் கொண்டவளான, செம்பொன் அணிகளைப் பூண்டுள்ள அரசமாதேவியின் கணவனே !

பாடிவரும் பாணர்களைப் பேணிப் பாதுகாப்போனே! வந்திரக்கும் பரிசிலர்க்கு அவரது செல்வமாகவே விளங்குவோனே! முத்தாரம் போன்ற அணிகளை அணிந்து, அதனாலே ஒளியுற்று விளங்கிய புகழ்நிறைந்த மார்பினை உடையோனே! இபிராகத் தொடுத்தலையுடைய நரம்புகளைக் கொண்டதான பாலையாழை இசத்தலிலே வல்லவன் ஒருவன், துன்பத்தைச் செய்யும் உறுப்பினைக் கொண்ட பாலைப்பண்ணை மாறிமாறி இசைத்தாற்போல, சேற்றினைச் செய்யும் மழையைப்போல மதுவை இடையறாது வார்த்து அளிக்கின்ற சிறப்புடையதும், விழவின் தன்மை பொருந்தியதும், மகிழ்ச்சியை உடையதுமான நின் நாளோலக்கச் செல்வச் சிறப்பினை, யாமும் இப்போது இனிதாகக் கண்டோம், பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: எறிதல்- வெட்டி வீழ்த்துதல். செம்மறு - சிவப்பான குருதிக்கறை. பரி - விரைவு; குதிரைக் கதிகளுள் ஒன்று. நன்மா - நல்ல சாதிக் குதிரை. விரியுளை - விரிந்த தலையாட்டம். மலைத்த - போரிடலில் ஈடுபட்ட. தெவ்வர் - பகைவர். மறம்தப - வலிமைகெட காஞ்சி சான்ற - நிலையாமை நிறைந்த. வயவர் - போர் மறவர். வில்லோர் - வில்லேந்திப் போரிடுகின்ற படைமறவர். பூண் - அணிகல வகை. எழிலிய - அழகு பெற்று விளங்கு கின்ற. வனைதல் - அழகுற எழுதுதல். வரல் - வளர்தல் ; குங்குமக் குழம்பினாலே மகளிர் தம் முலைமுற்றத்தும் தோள்களிலும் வரையும் கரும்பு வில் போன்ற சித்திரங்களை வனைதல் என்றனர்; இதனைத் தொய்யில் எழுதுதல் எனவும் உரைப்பர். மாண் - அழகு. வரி - இரேகைகள். அல்குல் - இடையின் பின்புறத்துத் தேர்த்தட்டுப்போலத் தோன்றும் பகுதி. நோக்கு - கண்கள். இறை - மூட்டுவாய்; சந்து. பணை - பருத்த. காமர் கடவுள் - மகளிர் விரும்பத்தக்க கடவுளான அருந்ததி. ஆளுதல் - வென்று தனக்கு அடிமைப்படுத்துதல்: அவளினும் சிறந்த கற்பினாள் என்பதாம். 'சேயிழை' என்றது வாழியாதனின் தேவியைக் குறித்தது.

புரவலன் - காத்தலிலே வல்லவன். வெறுக்கை - செல்வம். சால - நிறைந்த. நாள் - காலைப்பொழுது. மகிழ்-மகிழ்ச்சியுடைய. இருக்கை - வீற்றிருத்தல். கண்டிகும் - கண்டோம். தீந்தொடை - இனிதாகத் தொடுத்தல். பாலை - பாலையாழ். பையுள் - துன்பம். 'பண்' என்றது பாலைப்பண்ணை. பெயர்த்தல் - மாறி மாறி இசைத்தல். வெவ்வேறு சுவையைக் கொண்ட மதுவுக்குப் பாலைப்பண்ணின் வெவ்வேறு இசை அமைதிகளும் உவமை. சாறுபடு - விழாவின் தன்மை பொருந்திய. நனை - கள்; மதுவுக்குப் பொதுப்பெயரும் ஆம். 'மாரியின்' என்னும் உவமம் மதுக்களில் ஒரோவொன்றைக் கொடுக்கும் மிகுதிக்கு உவமம்” எனவும், ’சாறுபடு திருவின்’ என்ற உவமம் "அம் மதுக்களைப் பானம் பண்ணுங் காலத்து அலங்காரமாகக் கூட்டும் பூவும் விரையும் முதலாய பொருள்களுக்கு உவமம்" எனவும், 'சாறு' என்றது விழாவின் தன்மையை எனவும், 'மகிழ்' என்றது மகிழ்ச்சியையுடைய திருவோலக்க இருப்பினை எனவும் பழைய உரைகாரர் கூறி யுள்ளனர்.

’காஞ்சி சான்ற வயவர் பெருமகன்' ஆகலின், தான் தேடிய செல்வத்தை வழங்கியும், காதன் மனையாளோடு சுகித்தும், மதுவைப் பெருக வழங்கிக் களித்தும், அவன் உலகியலின்ப நுகர்விலும் ஈடுபட்டுச் சிறந்தனன்’ என்றனர்.


66. புதல்சூழ் பறவை !

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. சொல்லியது: அவன் வென்றிச் சிறப்புடன் படுத்துக் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

[பெயர் விளக்கம்: புதல்சூழ் பறவை - கிழித்துக் குறுக் நறுக்கி வாகையோடு இடை வைத்துத் தொடுத்த பனங்குருத்து முல்லை முகைக்கு ஒப்பாகவும், வாகைப்பூ அம் முல்லையைச் சூழ்ந்த வண்டிற்கு ஒப்பாகவும் உவமம் கொள்ள வைத்துள்ள சிறப்பால், இதற்குப் 'புதல்சூழ் பறவை' என்பது பெயராயிற்று.]


வாங்கிரு மருப்பின் தீந்தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல!
இடியிசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார்
வேலுடைக் குழூஉச்சமம் ததைய நூறிக் 5

கொன்றுபுறம் பெற்ற பிணம்பயில் அழுவத்துத்
தொன்றுத்திறை தந்த களிற்றொடு நெல்லின்
அம்பண அளவை விரிந்துறை போகிய
ஆர்பதம் நல்கும் என்ப கறுத்தோர்
உறுமுரன் தாங்கிய தாரருந் தகைப்பின் 10


நாள்மழைக் குழூஉச்சிமை கடுக்கும் நோன்றல்
தோல்மிசைத் தெழுநரும் விரிந்திலங்கு எஃகின்
நார்புரிந் தன்ன வாளுடை விழவின்
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்பப் 15

பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின்
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. 20

தெளிவுரை: வளைவான கரிய கொம்பினையும், இனிய நரம்பின் தொடர்ச்சி முதிர்ந்த செவ்வியைக் கொண்ட இசை பிறத்தற்கு உரிய இடத்தையும் பெற்ற, பேரியாழினிடத்தே பாலைப்பண்ணை அமைத்து வாழியாதனிடம் பரிசிலை நாடிச் செல்வோனாகிய, முதிய வாய்மையினையுடைய இரவலனே!

இடிபோல முழக்கஞ் செய்யும் போர்முரசத்தோடு, நானும் வஞ்சினங்கூறிச் சென்று, பகைவரது வேற்படை மறவரின் கூட்டம் நிறைந்த போர்க்களத்தே அவரின் ஆற்றல் கெடுமாறு அவரை அழித்துக் கொன்று, அவர்களுள் எஞ்சியோரைப் புறங்கொடுத்து ஓடச் செய்தனன். பிணங்கள் மலிந்த அந்தப் போர்க்களத்தின் பரப்பிலே, அப்பகைவர் தோற்றுப்பணிந்து பழைய திறையாகத் தந்த களிறுகளோடு, நெல்லின் மரக்காலால் அளந்து கணக்கிடவியலாத பெரும் நெற்குவியல்களையும், தன்னை வந்து இரந்தோர்க்கு உணவுப் பொருளாகவும் வாழியாதன் தருவான் என்பர்.

தன்னைப் பகைத்து வந்தாரான பகைவரது மிக்க மாறுபாட்டைத் தடுத்து நிறுத்த வல்லதும், பகைவரால் வெல்லுதற்கு அரியதுமான படைவகுப்பினை உடையவன் வாழியாதன் பருவகால மேகக்கூட்டங்கள் தங்கியுள்ள மலைச்சிகரத்தைப் போன்ற தோற்றத்தையுடைய கேடகங்களுக்கு மேலெழுந்து சென்று, ஒளிபரந்து விளங்கும் வேல்களைக் கொண்ட வேல் மறவரை உடையவன், மாலை அசைவதுபோல அசைகின்ற வாட்களையுடைய வாள் மறவரை உடையவன், போரிடைக் கலந்து கொள்ளும் இவ்வீரர்கள் விழாக்கோலம் கொண்டனர். பனங்குருத்தை இடையிடையே வைத்துத் தொடுத்த வெற்றியிலக்கும் விரும்பும் வாகையின் மென்மலர்களாற் கட்டப்பெற்ற மாலையினை அணிந்திருந்தனர். இம் மாலைகளைப் போலத் தோற்றங் காட்டிப் பூத்திருந்த முல்லைப்புதர்களிலே வண்டினங்கள் மொய்த்தபடி இருந்தன. பின்னர், அவை அதனைவிட்டு அக்காட்டிடத்தேயுள்ள பிடாவினது மாலை போலப் பூத்துள்ள பூங்கொத்துக்களிலே சென்று தங்கியிருக்கும். அவ்வாறு அவை தங்குவதற்கு இடமாயிருப்பதும் வெண்பளிங்குக் கற்களோடு சிவந்த பரற்கற்களும் விரவிச் கிடப்பதுமான வலிய மேட்டு நிலத்திலே, விளங்கும் ஒளி பொருந்திய சிவந்த இரத்தினக் கற்களைப் பெறுவதற்கு இடமாயிருப்பதுமாகிய அகன்ற இடத்தைக் கொண்டதான ஊர்களையுடைய நாட்டிற்குத் தலைவனும் வாழியாதல் நியே ஆவாய்.

சொற்பொருளும் விளக்கமும்: வாங்குதல் - வளைதல். இருமறுப்பு - கரிய கொம்பு; யாழின் தண்டு. தீந்தொடை இனிய நரம்புத்தொடர்ச்சி. 'இடன்' என்றது, இசை பிறத் தற்கு உரிய இடனை. பேரியாழ் - யாழ்வகையுள் ஒன்று. பாலை - பாலைப்பண். படர்ந்தனை - நினைத்தாயாக. முதுவாய் - முதிய வாய்மை; என்றும் வாய்மையே பேசிவரும் முதிர்ந்த தன்மை. இடியிசை முரசம் - இடியோசைபோல ஓசையெழுப்பும் முரசம். ஒன்று மொழிந்து - வஞ்சினங் கூறி. ஒன்னார் பகைவர். குழூஉ - கூட்டம். சமம் ததைய - போர்ச்செயல் கெடுமாறு. நூறி - அழித்து. புறம்பெறல் - பகைவரைப் புறமிட்டு ஓடச்செய்தல். பயில் - நெருங்கிய. அழுவம்- போர்க்களப் பரப்பு. தொன்று திறை - பழைய திறை; முன்னர்த் தரவேண்டிய திறைப்பொருள். அம்பணம் - மரக் கால். விரிதல் - மிகுதல். உறைபோகிய - கணக்கிடவியலாத ஆர்பதம் - மிக்க உணவு.

கறுத்தோர்- சினந்து போர் மேற்கொண்டவரான பகைவர். உறுமுரண் - மிக்க மாறுபாடு. தங்கிய - தடுத்து நிறுத்திய. தார் - ஒழுங்கு. தகைப்பு - படைவகுப்பு. நாள் மழை - பருவகால மேகம். குழூஉ - கூட்டம். கடுக்கும் - ஒக்கும். தோன்றல் தோல் - தோற்றத்தைக் கொண்ட கேடகங்கள். மிசைத்து - மேற்பட்டு. எழுதரும் - எழுந்து தோன்றும். எஃகு - வேல். வேல்கள் கேடகங்கட்கு மேலாக உயர்ந்து தோன்றுதலைத் 'தோல்மிசைத்து எழுதரும் எஃகு என்றனர். தார்புரிந்தன்ன மாலையசைவதுபோல. 'வாளுடைய விழவின்' என்றது, வாள் மறவரும் வேல்மற வரும் ஆகியோர் தம்முள் திறமைதோன்ற மகிழ்வோடும் போரிட்டுப் பயில்கின்ற விழா நாளை யாம். இதனைக் காணும் பகைவர் தாமே அஞ்சிப் பணிதலோடு, வீரர்க்கும் இதனால் ஊக்கமிகுதி பிறக்கும் என்பதுமாம். போர்படு - போர் செய்தற்குக் காரணமான. போந்து - பனங்குருத்து.

'கடவுள்' என்றது, வெற்றித் திருமகளை யாகலாம்; கொற்றவை எனினும் பொருந்தும். துய்வீ - மெல்லிய பூ; தூய்யையுடைய பூவுமாம். புதல் - புதர். 'பறவை' என்றது வண்டினத்தை. முல்லை முகைக்குப் பனந்தோடும், அதனைச் சூழ்ந்துள்ள வாகை மலருக்கு வரிகளையுடைய வண்டினமும் உவமையாகக் கொள்க. வெற்றி பெற்றார் சூடுதல் வாகைப் பூவாதல் பற்றி, அதனை வெற்றிக்குரிய கடவுள் வாழும் வாகை என்றனர்.

'வெற்றிவிழாக் கொண்டாடியிருக்கும் காலம் ஆதலால், இரவலனே, நீயும் வாழியாதனிடமிருந்து பெரும் பரிசில் பெறுவை' எனக் கூறி வழிப்படுத்தியதாம்.


67. வெண்போழ்க் கண்ணியர்!

துறை:பாணாற்றுப்படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வெண்போழ்க் கண்ணி. சொல்லியது: வாழியாதனின் கொடைச் சிறப்பு இதனாற் கூறப்பட்டது.

[பெயர் விளக்கம்: தொடுத்தற்குரிய பூவல்லாத பனங்குருத்தைத் தொடுக்கப்படும் கொன்றையோடு சேரத்தொடுத்தது பற்றி, நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணி எனக் கூறினர்; இந்த அடைச்சிறப்பால் இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது.]


கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபின் கைவல் பாண!
தென்கடல் முத்தமொடு நன்பலம் பெறுகுவை
கொல்படை தெரிய வெல்பொடி நுடங்க 5


வயங்குகதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்பப்
பல்களிற் றினநிரை புலம்பெயர்ந்து இயல்வர்
அமர்க்கண் அமைந்த அவிர்நிணப் பரப்பில்
குழூஉச்சிறை எருவை குருதி ஆரத்
தலைலுமிந்து எஞ்சிய ஆண்மலி யூபமொடு 10

உருவில் பேய்மகள் கவலை கவற்ற
 நாடுடன் நடுங்கப் பல்செருக் கொன்று
நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர்
வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
நெறிபடு மருப்பின் இருங்கன் மூரியொடு 15

வளைதலை மாந்த தாழ்கரும் பாசவர்
எஃகாடு ஊனம் கடுப்பமெய் சிதைந்து
சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன்
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
படும்பறைத் நும்பி ஞர்நசைத் தாஅய்ப் 20

பறைபண் அழியும் பாடுசால் நெடுவரைக்
கல்லுயர் நேரிப் பொருநன்
செல்வக் கோமான் பாடினை செலினே.

தெளிவுரை: செய்யத்தகுந்த கடமைகளை யறிந்த மரபினையுடைய யாழிசைத்தலிலே வல்ல பாணனே! நீதான் வாழியாதனைப் பாடிச் சென்றனையானால், கொடுமணம் என்னும் ஊரிடத்தே செய்யப்பட்ட நல்ல அணிகலன்களோடு, பந்தர் என்னும் பேரூரிலேயிருந்து பெறப்பட்ட தெளிந்த கடலிலிருந்து கிடைத்த முத்துக்களையும், மிக்க புகழையுடைய நின் சுற்றத்தாரோடு நீயும் பெறுவாய்.

படைத்தலைவர்கள் எதிரிகளைக் கொல்லுவதற்குரிய படைக்கலன்களை ஆராய்ந்தபடி இருந்தனர். அவன் வெற்றியைச் சொல்லும் கொடியும் அசைந்து பறந்துகொண்டிருந்தது. விளக்கமான ஒளியுடைய ஊதுகொம்புகளோடுங்கூடி வலம்புரிச்சங்குகளும் ஒலித்துக் கொண்டிருந்தன. பலவாகிய போர்க்களிறுகளின் கூட்டம் கூட்டமான வரிசைகள் தாமிருந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்து களத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. போரிடுதற்குரிய இடமாக அமைந்ததும், வெட்டுண்ட வீரர்களின் நிணக்குவியல் கிடப்பதுமான போர்க்களப்பரப்பிலே, சிறகுகளையுடைய எருவைகளின் கூட்டங்கள் குருதியை நிறைய உண்டுகொண்டிருந்தன. தலைகள் வெட்டுப்பட்டுப்போய் எஞ்சிக் கிடந்த ஆண்மை மிக்கவையான மறவர்களின் குறையுடம்புகளோடு, அழகற்ற வடிவத்தையுடைய பேய்மகள் காண்போர்க்கு வருத்தத்தைச் செய்தபடி இருந்தாள். இவ்வாறு, பகைவரின் நாடுகள் அனைத்தும் ஒருசேர நடுக்கங் கொள்ளுமாறு, பல போர்களிலும் ஈடுபட்டுப் பகையரசரைக் கொன்றவன் வாழியாதன்.

மணம் வீசுகின்ற கொன்றை மலர்களோடு சேர்த்துத் தொடுத்த வெள்ளிய பனங்குருத்தும் கொண்ட தலைக் கண்ணியை உடையவர்கள்; வாளின் வாய் வெட்டியதனால் அமைந்த வடுக்களாகிய மாட்சிமைப்பட்ட கோடுகள் பொருந்திய உடலினைக் கொண்டவர்கள்; முறுக்குண்ட கொம்புகளையும் கரிய கண்களையும் கொண்ட ஆட்டுக்கிடாய்களோடு, வளைந்த தலைகளையுடைய பிற விலங்குகளின் தாழ்வான இழிந்த இறைச்சிகளையும் விற்பவர்கள்; ஊனை வைத்து வெட்டரிவாளால் வெட்டிச் சிதைக்கப் பயன்படுத்தும் மணைக்கட்டையைப் போன்று விளங்கும் பகைப்படையால் புண்பட்டுச் சிதைந்த மார்பினை உடையவர்கள்; அம் மார்புகளிற் பூசப்படும் சந்தனக்குழம்பையும் மறைத்தபடி அவ்வடுக்கள் தோன்ற விளங்குபவர்கள்; வாழியாதனுடைய படை மறவர்கள். அவர்களுடைய தலைவன் அவன்!

மலர்ந்துள்ள காந்தட்பூக்களைத் தெய்வத்திற் உரியவை எனக் கருதி அகன்று போகாதே, அவற்றையும் ஊதித் தேனுண்ட பின்னர், விரைந்து அவ்விடத்திலிருந்து பறக்கும் வண்டுகள், அப்பூக்களைத் தெய்வமானது விரும்புதலை யுடைத்து ஆயினமையாலே, தம்முடைய பறக்கும் பண்பினை இழந்துபோய்விடுவன வாகும். அத்தகைய பெருமை நிறைந்த நெடிய பக்கமலைகளை யுடையதாக, மிகவுயர்ந்து விளங்கும் நேரிமலைக்குரிய தலைவனும், செல்வத்தாற் சிறந்த கோமானுமாகியவன் செல்வக்கடுங்கோ வாழியாதன். அவனைப் பாடினையாகச் சென்றாயானால், நீதான் தெண்கடல் முத்தமொடு பிற நன்கலமும் பெறுகுவை.

சொற்பொருளும் விளக்கமும்: கொடுமணம் - ஓர் ஊர்; அணிகலன் செய்யும் தொழிலிற் பேர்பெற்றது. நெடுமொழி - பெரும்புகழ். ஒக்கல்- சுற்றத்தார். பந்தர் - ஓர் ஊர்; முத்துக்களுக்குப் பெயர் பெற்றது. கடன் - கடமை. வாளன் யாழிசைக்கும் தொழிலிலே வல்லானாகிய பாணன். தெண்கடல் - தெளிந்த கடல். கொல்படை - பகைவரைக் கொல்லுதற்கேற்ற படைக் கருவிகள். தெரிய - ஆராம். வெல்கொடி - வெல்லுங்கொடி; கொடியின் எழுச்சியைக் கண்டதுமே பகைவர் அச்சமுற்று நடுங்கிப் போவர் என்பதனால் 'வெல்கொடி' என்றனர். வயுங்கு கதிர் - விளங்கும் ஒளிக்கதிர். வயிர் - ஊது கொம்பு. வலம்புரி - வலம்புரிச் சங்கம். ஆர்ப்ப - ஒலிக்க. பல்களிற்று இன்நிரை - களிறுகளின் பலவாகிய கூட்டங்களின் வரிசை. 'புலம் பெயர்ந்து இயல்வர' என்றது, தாம் கட்டப்பெற்றிருந்த பந்தியை கட்டுக் களத்தை நோக்கிச் செல்பவாயின என்றதாம். அமர்க்கண் - போரிடற்கு உரிய இடம்; போரிடத்தும் ஆம். அவிர்நிணம் - நிணம் விளங்குகின்ற. எருவை - பருந்துச் சாதியுள்ள ஒன்று. துமிந்து - வெட்டுப்பட்டு. யூபம் – தூண்; இங்கே இது தலையற்ற முண்டங்களைக் குறித்தது. உருவில் - அழகற்ற. கவலை - வருத்தம். செரு - போர். கொன்று - பகைவரைக் கொன்று.

வாள்முகம் - வாளின்வாய். பொறித்த - கிழித்த. மாண்வரி - மாட்சியமைந்த தழும்புகளாகிய கோடுகள். நெறிபடு மருப்பு - முறுக்குடைய மருப்பு. இருங்கண் மூரி - கருங் கண்களையுடைய எருது; இதனை ஆட்டுக்கிடாயாகவேனும், மானேறாகவேனும் கொள்க. ஊனம் - இறைச்சியை இட்டு வெட்டும் கட்டை புண்பட்ட வீரர்தம் தழும்போடு விளங்கும் மார்புக்கு உவமை. சாந்தெழில் - சந்தனத் தேய்வை பூசுவதாற் பெறும் அழகு. சான்றோர் - படை மறவர். மாறாது- அதனை விட்டு நீங்காது. கடும்பறை - கடிதாகப் பறத்தலையுடைய. தும்பி - வண்டுகள். 'சூர்' என்றது முருகனை; காந்தள் என்றது செங்காந்தளை. பறைபண் அழியும் - பறக்கும் இயல்பினை இழக்கும். பாடுசால் - புகழ் நிறைந்த. வரை – பக்கமலை. நேரி - நேரிமலை. பாடுசால் நெடுவரை நேரி எனவும், கல்லுயர் நேரி எனவும் கூட்டுக.

தெய்வத்திற்குரிய காந்தளென விட்டுவிலகாது சென்று ஊதும் தும்பியினம், தம்முடைய விரையப் பறக்கும் தன்மையை இழப்பதுபோலச், சேரலாதனின் அருளுடைமை யால் மெலியனென மயங்கிச்சென்று மோதும் பகைவரினம், தம் வலியிழந்து ஒடுங்கும் என்பதாம்.

68. ஏம வாழ்க்கை !


துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு:செந்தூக்கு. இதனாற் சொல்லியது: காமவேட்கையின் ஓடாத அவன் வென்றி வேட்கைச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: துன்பம் இடைவிரவின இன்பமன்றி, இடையறாத இன்பமேயாய்ச் சேறலான வாழ்க்கை ஏம வாழ்க்கை; இவ்வாறு சொன்ன சிறப்பால் இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]

கால்கடிப் பாகக் கடம்ஒலித் தாங்கு
வேறுபுலத் திறுத்த கட்டூர் நாப்பண்
கடுஞ்சிலை கடவும் தழங்குகுரல் முரசம்
அகலிரு விசும்பின் ஆகத்து அதிர
வெவ்வரி நிலைஇய எயில்எறிந் தல்லது 5
 
உண்ணா தடுக்கிய பொழுதுபல கழிய
நெஞ்சுபுகல் ஊக்கத்தர் மெய்தயங்கு உயக்கத்து
இன்னார் உறையுள் தாம்பெறின் அல்லது
வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு
கள்கொடி நுடங்கும் ஆவணம் புக்குடன் 10
 
அருங்கள் நொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வடபுல வாழ்நரின் பெரிறமர்ந்து அல்கலும்
இன்னகை மேய பல்லுறை பெறுபகொல்
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ 15

நெடுமண் இஞ்சி நீள்நமர் வரைப்பின்
ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல எழுதிச்
செவ்விரல் சிவந்த அவ்வரிக் குடைச்சூல்
அணங்கெழில் அரிவையர்ப் பிணிக்கும்
மணங்கமழ் மார்ப! நின் தாழ்நிழ லோரே. 20

தெளிவுரை: நின்னைக் காதலித்த மகளிர், நின்பிரிவால் வருந்தித் துயிலாதிருந்தமையால், அவர்களணிந்திருந்த பசும்பொன் அணிகள் நெகிழ்ந்து வீழுமாறு உடலிழைத்தனர். மண்ணாலே அமைக்கப்பெற்ற நெடுஞ்சுவர் அமைந்த பெரிய அரண்மனைப் பக்கத்தேயுள்ள ஓவியங்களைப்போலச் செயலழிந்தவராக, நெடுஞ்சுவரிடத்தே நீ பிரிந்துசென்ற நாட்களின் எண்ணிக்கையைப் பலகாலும் எழுதினவராகி, அதனாலே இயல்பிலேயே சிவந்த விரல்கள் மேலும் சிவக்கப் பெற்றாருமாயினர். அழகிய தேமலையும், சிலம்பினையும், கண்டாரை வருத்தும் அழகையும் கொண்ட அம்மகளிரது உள்ளங்களை, அவ்வாறு நின்பாற் பிணித்துக் கொள்ளும் மணங்கமழுகின்ற மார்பினை உடையோனே!

நின் தாழ்நிழலையே தமக்குப் புகலாகக் கொண்டு வாழும் நின் மறவர்கள்—

காற்றே குறுந்தடியாக மோதுதலினாலே கடலாகிய முரசம் ஒலிசெய்தாற்போல, மிக்க ஒலியையுடைய முரசமானது மிகப்பரந்த வானத்திடத்தினும் சென்று அதிர்வைச் செய்யுமாறு சென்று, வேற்று நாட்டிடத்தேயுள்ள கட்டூராகிய பாசறையின்கண்ணே தங்கியுள்ளனர். விரும்பத்தக்க கோடுகள் நிலைபெற்றுள்ள பகைவரின் மதிலை அழித்தல்லது உண்ணுதலைச் செய்யோம் என்று உரைத்த வஞ்சினத்திற்கேற்ப, அவர் உண்ணாதே கழித்த அடுக்கிய பொழுதுகளும் பலவாகக் கழிந்தன. எனினும் மனம் விரும்பும் ஊக்கத்தை உடையவராகவும், உடல் தளரும் வாட்டத்தை உடைய வராகவுமே, பகைவர் உறையுளைத் தாம் கைக்கொள்ளும் வரையினும், அவர்கள் தம் பொழுதைக் கழிப்பார்கள்.

பகைவேந்தர் ஊர்ந்து செலுத்தும் யானையது வெண் கொம்பைப் பறித்துக்கொண்டு, கள்ளுக்கடைகளை அறிவிக்கும் கொடிகள் பறந்துகொண்டிருக்கும் கடைத்தெருவுக்குள் புகுந்து, அரிய கள்ளிற்கு அக்கொம்புகளை விலையாகத் தந்து குடித்து முடித்த பின்னர், அதனாலே களிப்பு மிகுந்தவர்களாவார்கள். அச்சத்தை அறியா இன்பவாழ்க்கையினையுடைய வடபுலத்தே வாழ்வாரினும் பெரிதாக விரும்பி, நாள்தோறும் இனிய மகிழ்ச்சி பொருந்திய பல நாட்களையும் அவர்கள் பெறுவார்களோ! அவர்கள் அது பெறினன்றி நின்னைக் காதலித்த மகளிரும் இன்னகை மேய பல்லுறை பெறுதலும் அரிதாகுமே!

சொற்பொருளும் விளக்கமும்: கால் - காற்று. கடிப்பு- குறுந்தடி. வேறுபுலம் - வேற்றரசர் நாடுகள். இறுத்த - தங்கிய. கட்டூர் - பாசறை, நாப்பண் - நடு. சிலை – ஒலித்தல். கடவும் - செலுத்தும். தழங்கு குரல் - ஒலிக்கின்ற ஓசையினையுடைய. அகலிரு - மிகப் பரந்த. ஆகத்து - அகத்து; நீட்டல் விகாரம் பெற்றது. வெம்மை வரி - விரும்பத்தகுந்த வரிகள். நிலைஇய - நிலையாக வமைந்த; வரிகள் என்றது கோட்டைச்சுவரின் மீது தீட்டப்பெறும் பட்டைகளை. எயில் - மதிற்சுவர். அடுக்கிய பொழுது - ஒன்றடுத்து ஒன்றாக வரும் பொழுதுகள். புகல் - விரும்பும். தயங்கு உயக்கம் - தளரும் மெலிவு. ஆவணம் - கடைத்தெரு. நொடைமை - விலைப் பொருள். மகிழ் சிறந்த - கள்வெறியாலும் வெற்றிக் களிப் பாலும் மகிழ்ச்சி - மிகுந்தவராகி. நாமம்-அச்சம். ஏமம்- இன்பம். வடபுல வாழ்நர் என்றது போகவுலகத்துத் தேவரை. நகை - மகிழ்ச்சி. மேய - பொருந்திய. உறை உறைதற்குரிய நாள். பெறுப கொல் - பெறுவாரோ. பாயல் உறக்கம். பாசிழை - பசும்பொன் அணிகள். இஞ்சி - மதிற்சுவர். நகர் - அரண்மனை. அவ்வரி - அழகிய ரேகைகள். குடைச்சூல் - சிலம்பு. தாள் நிழலோர் - தாள் நிழல் வாழ்வோரான படைமறவர்.


69. மண்கெழு ஞாலம் !

[ துறை:வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். சொல்லியது: வாழியாதனின் ஆள்வினைச் சிறப்பினை அவன் குடிவரலாற்றோடு படுத்துச் சொல்லியவாறு.

[பெயர் விளக்கம்: பொன்ஞாலமன்றி இம் மண்ஞாலம் முழுவதும் ஆண்டார் என்பது தோன்ற, 'மண்ஞாலம்' என்ற சிறப்பால் இப்பெயர் அமைத்தனர்.]



மலையுறழ் யானை வான்தோய் வெல்கொடி
வரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்
கடல்போல் தானைக் கடுங்குரல் முரசம்
காலுறு கடலின் கடிய வுரற
எறிந்துசிதைந்த வாள்
இலை தெரிந்த வேல்
பாய்ந்தாய்ந்த மா 5


ஆய்ந்துதெரிந்த புகல்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே! 10
நின்போல்,
அசைவில் கொள்கைய ராகலின் அசையாது
ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம்!
நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணியப்
பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப
விசும்புமெய் அகலப் பெயல்புரவு எதிர 15

நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்த
இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே.

தெளிவுரை: மலையொத்த யானையின் மீதுள்ள, வானைத் தடவுவதுபோல விளங்கும் வெற்றிக் கொடிகள், மலைமீதினின்றும் வீழ்கின்ற அருவிகளைப்போல இடந்தோறும் விளங்கி அசைந்தபடி இருக்கும். கடலைப்போல ஆர்த்தெழும் தானைப் பெருக்கத்தின் கடுங்குரலை எழுப்பும் போர்முரசங்கள், காற்றாலே தாக்கப்பெற்ற கடலினது அலையொலியைப் போலக் கடுமையாக ஒலிக்கும். இவ்வாறு பகைமேற்சென்று போரிட்ட காலத்தே, பகைவரை வெட்டி வீழ்த்தியதனாலே சிதைவுற்ற வாள்களோடும். பகைவரைக் குத்தியதனாலே இலைவடிவிற் குருதிக்கறை படிந்து தோன்ற விளங்கிய வேல்களோடும், பகைப்படையைப் பாய்ந்து பாய்ந்து தாக்கியதனாற் சோர்ந்த குதிரைகளோடும், ஆராய்ந்து தெரிந்தெடுக்கப் பெற்ற போரைவிரும்பும் மறவரோடும் சென்று, மீளவும் எதிர்த்தாரான பகைவரது பட்டுவீழ்ந்த பிணக்குவியல்கள் எப்புறமும் விளங்க அவரையும் கொன்று, அப்பகைவரது கொடுங் கோலாட்சியால் கெட்டுப்போன குடிமக்களை மீளவும் அந்நாட்டிலேயே பயின்று அமைதியாக வாழுமாறு செய்த கொற்ற வேந்தனே!

நிலமெல்லாம் சிறந்த விளைவைத் தரவும். கதிரவனது வெம்மையான கொதிப்புத் தணியவும், உலகிற்குப் பயன்பொருந்திய வெள்ளியானது நல்ல கோள்களுடன் சேர்ந்து நிற்கவும், வானத்திடம் அகலவும், மழையானது பெய்து உலகைக் காத்தலை மேற்கொள்ளவும், நால்வேறான திசைப் பகுதிகளும் ஒருப்போலவே செழிப்படையுமாறு, விளங்கும் கதிர்களோடு கூடிய ஆணைச்சக்கரத்தைச் செலுத்தியவர்கள் நின் முன்னோர்.

அவரும், நின்னைப் போலவே, மாறுதலில்லாத சிறந்த கொள்கையாளர்கள். ஆதலினாலே, இம் மண்பொருந்திய உலகினைத் தளர்ச்சியின்றி ஆண்டுவந்தனர்!

சொற்பொருளும் விளக்கமும்: மலையுறழ்யானை - மலைகளைப் போலத் தோன்றும் பெரிய யானைகள். வெல்கொடி வெற்றிக் கொடி. வயின் வயின் - இடங்கள் தோறும். கால்- காற்று. கடியவுரற் - கடுமையாக ஒலிக்க. எறிந்து - பகைவரை வெட்டி வீழ்த்தி. 'இலை தெரிந்த வேல்' என்றது, இலை கறைப்பட்டுத் தோன்றிய வேல் என்றதாம். ஆய்ந்த – ஓய்ந்த, இவர்களிடையே ஆய்ந்து தெரிந்த, மேலும் போரை விரும்பும் மறவரோடு மேற்சென்று என்க. பிறங்க - விளங்க. பயிற்றிய - நாட்டிற் பயின்று வாழச் செய்த.

அசைவு - தளர்ச்சி. கொள்கை - கோட்பாடு. அசையாது- தளராது. மண்கெழு தளராது. மண்கெழு ஞாலம் - மண்ணணுச் செறிந்த உலகம். பயம் - விளைவு. சுடர் - ஞாயிறு. வெள்ளி - சுக்கிரன். ஆரியம்- நலந்தரும் பிறகோள்கள். விசும்பு மெய் அகல - விசும்பிடம் விரிவடைய. பெயல் - மழை. புரவு எதிரல் - உயிர்களைக் காத்தலை மேற்கொள்ளல்; நனந்தலை - பரந்த இடம்; என்றது, நாற்றிசைப்பகுதி நாடுகளையும். நந்த - விளைவால் பெருக்கமடைய ; பகையின்றி விளங்க என்பதுமாம்.

தூக்கு விளக்கம்: 'எறிந்து சிதைந்த’ என்பது முதலாக, மறவரொடு என்பது ஈறாக நான்கடி வஞ்சியடியாய் வந்தமையால் வஞ்சிதூக்கும் ஆயிற்று.


70. பறைக்குரல் அருவி !

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். இதனாற் சொல்லியது: வாழியாதனின் வென்றிகூறிய திறத்தானே, அவனுக்குள்ள சிறப்பினைக் கூறிப் பின்னர் வாழ்த்திய வாறும் ஆம்.

[பெயர் விளக்கம்: அருவியின் ஒலிக்குப் பறையோசையை உவமை கூறினமையானும், அதுதான் இவ்வுலகிற்கேயன்றி அவ்வுலகிற்கும் கேட்கலாயிற்று என்ற சிறப்பானும், இதற்குப் 'பறைக்குரல் அருவி' என்பது பெயராயிற்று.]


களிறுகடைஇய தாள்
மாவுடற்றிய வடிம்பு
சமம்ததைந்த வேல்
கல்லலைத்த தோள்
வில்லலைத்த நல்வலத்து 5

வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு
தீஞ்சுனை நீர்மலர் மலைந்து மதஞ்செருக்கி
உடைநிலை நல்லமர் கடந்து மறங்கெடுத்துக்
கடுஞ்சின வேந்தர் செம்மல் தொலைத்த 10

வலம்படு வான்கழல் வயவர் பெரும!
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரைதீர் ஒண்மைப்
பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்
கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதல் 15

புரையோள் கணவ! பூண்கிளர் மார்ப!
தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற
வேள்வியிற் கடவுள் அருத்தினை! கேள்வி
உயர்நிலை உலகத் தையரின் புறுத்தினை
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை 20

இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்!
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக்குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதோறும் துவன்றும் 55

அயிரை நெடுவரை போலத்
தொலையா தாக! நீ வாழும் நாளே!

தெளிவுரை: களிறுகளைச் செலுத்திய கால்களையும், விரையச் செலுத்துதற்பொருட்டுக் குதிரைகளை வருத்திய காலின் ஓரங்களையும், பகைவரது போர்கெடுத்தற்குக் காரணமான வேலினாற் பெற்ற வெற்றியையும், உலக்கல்லை வருத்திய தோள்களையும், வில்லாற் பகைவரை வருத்திய நல்ல வெற்றியையும் உடையோனே!

வண்டினம் இசைப்பாட்டைப் பாடாத குளிர்ந்த பனையினது குவிந்த மொட்டுப்போன்ற கூரிய வெண்மையான பனங்குருத்தைச் சேர்த்துக் கட்டிய, இனிய சுனை நீரிலே மலர்ந்த குவளைமலர் மாலையை அணிந்து, வலிமிக்கு மிக்க சினத்தையுடையவரான பகையரசரது நிலையான நற்போரையும் வெற்றி கொண்டு, அவரது மறத்தையும் கெடுத்து, அவர்தம் தலைமையையும் ஒழித்தவனே! வெற்றிச் சிறப்புப் பொருந்திய சிறந்த வீரக்கழலை அணிந்தோரான சிறந்த வீரர்களின் பெருமானே!

விளையாட்டாகவேனும் பொய் சொல்லாத வாய்மையினையும், பகைவர் புறத்தே தன்னைப் பழித்தார் என்று கூறினும், அதனை கேட்டுச் சினவாத குற்றமற்ற சிறந்த அறிவினையும் கொண்டோனே!

பெண்மைப் பண்புகள் நிறைந்தவளும், பெரிய மடமென்னும் தன்மை நிலைத்திருக்கப் பெற்றவளும், கற்பாகிய திண்மை தங்கியிருக்கப் பெற்றவளும், மணங்கமழும் ஒளி சுடரும் நெற்றியினை உடையவளும் ஆகிய உயர்ந்தோளின் கணவனே! பூணாரம் கிடந்து ஒளிவீசும் மார்பினைக் கொண்டோனே! நீங்காத கோட்பாட்டைக் கொண்ட அமைச்சர் முதலான அரசச்சுற்றம் சூழ்ந்திருக்க, வேள்வியின் மூலமாகத் தேவர்களையும் அவியுணவால் உண்பித்தனை! வேதங்களை ஓதுவதன்மூலம் உயர்நிலை உலகத்தேயுள்ள முனிவர்களையும் இன்புறச் செய்தனை!

அன்பரிடத்தே வணக்கமான மென்மையினையும், பகைவரிடத்தே வணங்காத ஆண்மையினையும் உடையோனே! இளந்துணைவர்களாகிய புதல்வர்களைப் பெற்றதன்மூலம் இறந்த நின் முன்னோரைக் காத்தவனே! மற்றும் இல்லறத்திற்கே உரியவாக வரும் பழங்கடன் அனைத்தையும் செய்து முடித்தவனே! வெற்றிப் போரையுடைய தலைவனே!

சிறந்த செல்வங்களை உடைய தேவர்கள் வாழும் வானுலகத்திடத்தும் கேட்குமாறு, இழுமென்னும் ஒலியோடு வீழ்ந்துகொண்டிருக்கும், பறையோசை போன்ற குரலை யுடைய அருவியானது உச்சியிடத்துள்ள பெரிதான சிகரங்கள் தோறும் நெருங்கித் தோன்றுதற்கிடமான நின் அயிரை என்னும் நெடிய மலைபோலவே, நின் வாழ்நாளும் என்றும் அழிவில்லாததாகுக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : கடைஇய - செலுத்திய. மா - குதிரை. உடற்றிய - வருத்திய. வடிம்பு - கால்களின் ஒரம். சமம் - போர். ததைந்த - சிதைதற்குக் காரணமான, அலைத்த - வருத்திய. 'கல்' என்றது, இளவட்டக் கல் என்னும் லலிமையளக்கத் தூக்கிப் போடப்படும் கல்லை. கடாவா - பாடாத. பனம் போந்தை - பனையாகிய போந்தை; ஒரு பொருட்பன்மொழி. முகிழ் - அரும்பு. ஊசி - ஊசிபோற் கூர்மையான. வெண்தோடு - குருத்து. மலைந்து - சூடி, மதம் - வலி. செருக்கி - மிகுந்து. உடைநிலை - உடைய நிலை. கடந்து - வென்று. செம்மல் - தலைமை. வலம்படு - வெற்றி பொருந்திய. வான் - சிறந்த. வயவர் . வீரர்.

நகை - விளையாட்டு. புறஞ்சொல் - புறங்கூறும் பழிச்சொல். புரைதீர் - குற்றமற்ற. ஒண்மை - ஒள்ளிய அறிவு நலம். பெண்மை - பெண்மைப் பண்புகள். சான்று - நிறைந்தது. பெரூமடம் - பெரிதான மடம். கற்பு இறைகொள்ளல் - கற்பு நிலையாகத் தங்குதல். புரையோள் - உயர்ந்தோள். பூண் - பூணுரம். கொள்கை - கோட்பாடு. தொலையா - நீங்காத. சுற்றம் - அரசச் சுற்றம். கடவுள் அருத்தினை - தேவரை அவியுணவால் உண்பித்தனை. உயர் நிலை உலகம் - தேவருலகம். ஐயர் - முனிவர். கேள்வி - வேதம்.

சாயல் - மென்மை. ஆண்மை - மறமேம்பாடு. முதியர் - குலத்து முன்னோர். கடன் - கடமை. இறுத்த - செய்து முடித்த. அண்ணல் - சிறந்தோன். மாடு - செல்வம் மாடோர் - செல்வம் உடையவர்; சங்கநிதி பதுமநிதி என்னும் அழியாச் செல்வத்தை உடையவர் என்பதனால் தேவர்களை 'மாடோர்' என்றனர் என்பர். முழுமுதல் மிசைய - பெரிய மலையின் உச்சியிலுள்ள. கோடு - சிகரம். துவன்றும் - நெருங்கித் தோன்றும். அயிரை - அயிரை மலை.

அயிரை நெடுவரை என்றும் நிலையாக இருப்பதுபோல நீயும் அழிவின்றி என்றும் நற்புகழோடு சிறப்புற்றனையாய் இவ்வுலகிலே புகழோடும் நிலைத்திருப்பாயாக என்பதாம்.