பதிற்றுப்பத்து/சேரமன்னர்கள்




பதிற்றுப்பத்தின்
சேரமன்னர்கள்

பதிற்றுப்பத்தில் இரு குடும்பத்தைச் சார்ந்த சேரவரசர்களின் புகழ்ப் பாட்டுக்களைக் காண்கின்றோம்.

முதற்குடும்பத்தினர் சேரமான் உதியஞ் சேரலாதனும் அவன் வழியினருமாவர்; ஒன்று முதலாக ஆறாம்பத்து முடிய இவர்களைப் பற்றிய பாட்டுக்கள் வருகின்றன.

இரண்டாம் குடும்பத்தினர் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழியினர். இவர்கள், 7,8,9,10 ஆம் பத்துக்களின் பாட்டுடைத் தலைவர்கள் ஆவர்.

முன்னும் பின்னுமாக அமைந்த இந்த வரிசைமுறை காலவமைதியை ஒட்டியது அன்று; முதற்கண் ஒரு குடும்பத்தினரைப் பற்றிய பத்துகளையும், அடுத்து அடுத்த குடும்பத்தினரைப் பற்றிய பத்துகளையும் தொகுத்துள்ளனர்.

இதனால், அந்நாளையச் சேரமன்னர்கள் இருகுடும்பத்தாராக விளங்கி வந்தனர் என்பதும், இருசாராருமே சுதந்திரமான அரசர்களாக விளங்கிவந்தனர் என்பதும் அறியப்படும். முதற்கண் குறிப்பிடப் பெறுவோர் தலைமைக் குடியினர் எனவும், பிற்பட்டுக் குறிப்பிடப் பெறுவோர் கிளைக்குடியினர் எனக் கொள்வதும் ஒருவாறு பொருந்தக் கூடியதே.

இனி, இவர்களைப்பற்றிய வரலாறுகள் மிகவும் விளக்கமாக எழுதப் பெறுவதற்கு உரியன ஆதலால், இங்கே சுருக்கமாகச் சில குறிப்புக்களை மட்டும் இந்நூலினை யொட்டிக் காண்போம்.


1. சேரமான் உதியஞ் சேரலாதன்

இவன் பெயர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் எனவும் வழங்கும். இவனைப் பாடியவர்கள் மாமூலனாரும், முரஞ்சியூர் முடிநாகராயரும் ஆவர். இவன் பாரதப் போரின்கண் இருதிறத்துப் பெரும்படையணிகட்கும் பெருஞ்சோறு அளித்துப் புகழ்பெற்றவன் என்று குறிப்பிடுவர். 'ஓரைவர் ஈரைம்பதின்மர் உடன்று எழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன்' என்று இளங்கோவடிகள் இவன் சிறப்பைச் சிலப்பதிகாரத்துக் கூறுகின்றனர். ’ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்' எனப் புறநானூற்றுச் செய்யுளும் (3) கூறுகின்றது. இவனை, 'ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப், போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், வலியும், தெறலும், அளியும் உடையோன்' என்பர் முரஞ்சியூர் முடிநாகராயர். 'மறப் படைக் குதிரை மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றே, இரும்பல் கூளிச் சுற்றம் குழீஇருந் தாங்கு' என, இவன் வழங்கிய பெருஞ்சோற்றை உயிரிழந்த முன்னோர் பொருட்டாகத் தெய்வங்கட்கு இடுகின்ற படையலாகக் கூறுவர் மாமூலனார் (அகம், 333). இவன் தேவி வெளியன் வேண்மாள் நல்லினி. இவர்களுக்குப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - இரண்டாம் பத்திற்கு உரியவன். உதியஞ்சேரலுக்கு உரிய முதற்பத்து கிடைக்கப் பெறவில்லை; பாடினோர் பெயரும் அறியப்படவில்லை. 'நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்' (அகம்.65) என, இவன் சேரநாட்டை விரிவுபடுத்தியதனையும் மாமூலனார் கூறுவர். 'வானவரம்பன் வெளியதது அன்ன' என வருவதனால் (அகம்.359) வெளியம் சேரநாட்டினர்க்குச் சில காலம் உரித்தாயிருந்ததும் அறியப்படும்.


2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

இவனை ஆசிரியர் குமட்டூர்க் கண்ணனார் இரண்டாம் பத்துச் செய்யுட்களால் போற்றிப் பாடியுள்ளனர். இவன் உதியஞ்சேரலுக்கும் வெளியத்து வேண்மாள் நல்லினிக்கும் பிறந்த மகன். 58 ஆண்டுகள் அரசுவீற்றிருந்து மறப் பண்போடும், பிற சிறப்போடும், நாடும் நல்லோரும் போற்ற வாழ்ந்தவன் இவன். இவன் உடன் பிறந்தவன் பல்யானைச் செல்செழு குட்டுவன். இவன் மக்கள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மறமாண்பினர் ஆவர்.

இவன் காலம், வடபுலத்தே ஆரியப் பேரரசுகள் வலுப்பெற்றிருந்த காலம் ஆகும். நந்தமரபு வலிகுன்றி; மோரிய மரபு தோன்றிய காலவெல்லையை இவன் காலமாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவார்கள். இவன் வடபுலத்து வேந்தர் பலரையும் வெற்றிகொண்டு, இமயம்வரை தன் மறமாண்பை உணரச்செய்து, 'இமயவரம்பன்' என்னும் விருதுப்பெயரையும் பெற்றுச் சிறந்தவன். கழாஅத் தலையார், பரணர் ஆகியோர் பாடியுள்ள குடக்கோ நெடுஞ்சேரலாதனும், காப்பியாற்றுக் காப்பியனார், மாமூலனார் ஆகியோர் பாடியுள்ள ’சேரலாதன்’ என்பானும் இவனே என்பர்.

பல துறைகளுள் சீரும் சிறப்பும் புகழும் மறமேம்பாடும் கொடைக் குணமும் கொண்டு விளங்கிய இவன், தன் முதுமைப் பருவத்திலும் போர்செய்தலைக் கைவிடாதானாக விளங்குகின்றான். சோழன் வேற்பஃறடக்கைப் பொருநற் கிள்ளியோடு போர்ப்புறத்து நடந்த பெரும்போரில், 'பெரும் புண்பட்டு அந்நிலையினும் தன்னைப் பாடிய கழாஅத் தலையாருக்கு தன் மார்பின் ஆரத்தை வழங்கிய சிறப்பினன் இவன் (புறம்.368). வெண்ணிக்குயத்தியாரின் புறப்பாட்டு (66) ’இவன் புறப்புண் நாணி வடக்கிருந்து மிகப் புகழ் உலகம் எய்தினான்’ எனக் கூறும்.


3. பல்யானைச் செல்கெழு குட்டுவன்

இவனைப் பற்றிய செய்திகளைப் பாலைக் கௌதமனார் பாடியுள்ள இப்பதிற்றுப்பத்துச் செய்யுட்களால் மட்டுமே அறிகின்றோம். பிற சங்க நூற்களுள் இவனைப் பற்றிய செய்திகள் எதுவும் காணப்பெறவில்லை. இவன், பாலைக் கௌதமனாரின் விருப்பத்திற்கு இணங்கப் பத்துவேள்விகளை இயற்றி அவரையும் அவர் மனைவியையும் சுவர்க்கத்துக்கு அனுப்பியவன். இவர் பாடிய புறநானூற்று 366 ஆம் செய்யுளும் இவனைப் பற்றியதாகவே தோன்றுகின்றது. 'அறவோன் மகனே!' என்ற குறிப்பை வைத்துத் தவறாகத் தருமபுத்திரனைப் பாடியதெனக் கூறியிருக்கலாம். 'அறவோன்!' உதியஞ்சேரலே என்பது அவனைப்பற்றிய செய்திகளால் விளங்கும். இவன் உம்பற் காட்டுப் பகுதியை வென்று தன் ஆட்சியை நிலைபெறுத்தியவன்; அகப்பா என்னும் கோட்டையை அழித்தவன்; மண் வகுத்து ஈத்தவன்; கடுங்களிற்று யானைப் புணர் நிரை நீட்டி இருகடல் நீரும் ஒருபகல் ஆடியவன்: அயிரையைப் பரவியவன், இவனுடைய குரு நெடும்பாரதாயனார் என்பவர். இவன் புகழோடு 25 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதன் பின்னர், தன் குருவோடு காடுசென்று தவமியற்றி உயர்நிலை உலகம் சென்றனன். இவனுடைய பலவான சிறப்புக்களையும் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் விரிவாக உரைத்துப் போற்றுகின்றன. ’பூழியர் கோ' எனவும், ’மழவர் மெய்ம்மறை' எனவும், 'வெல்போர்க் குட்டுவ’ எனவும், 'அயிரைப் பொருநன்' எனவும் இவன் குறிக்கப்படுகின்றான். ’வேயுறழ் பணைத்தோள் இவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பலவே' என வாழ்த்தலால். இப்பாட்டுகளைப் பாடிய காலத்து இவன் தேவியும் இருந்தாளாதல் வேண்டும். இவன் வழியினர்பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அறியப்படவில்லை. இவன் நாடுகாவற் சிறப்பினை எல்லாம் அருமைப்பட இச்செய்யுட்கள் உரைக்கின்றன.

4. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

இவனை நான்காம் பத்தாற் பாடியவர் ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார் ஆவர். இவன் சேரலாதனுக்கு வேளாவிக்கோமான் பதுமன்தேவி ஈன்றமகன் என்கிறது பதிகம். இவன் 25 ஆண்டுகள் அரசு வீற்றிருந்தவன். பதிற்றுப்பத்தின் அமைப்பு, இவன் செங்குட்டுவனுக்கு மூத்தோன் எனக் காட்டுகின்றது. இவனைப் பாடிய பிற புலவர் கல்லாடனார் ஆவர். பூழிநாட்டுப் படைச்செலவு, கடம்பின் பெருவாயில் நன்னனைத் தோல்வியடையச் செய்தது போன்றவை இவன் மறமாண்பு குறிக்கும் படையெழுச்சிகள் ஆகும். 'இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாட் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்' என்று அகநானூற்றுள் (199) கல்லாடனார் இவன் சிறப்பைக் கூறுகின்றனர். அவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியவர். இதனால், இவனையும் அக்காலத்தவனாகக் கொள்ளலாம். இப்பத்து இவனது மறமாண்பையும், கொடை மாண்பையும், செங்கோன்மைச் செவ்வியையும் விரிவாக உரைத்துப் போற்றுகின்றன. 'விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி' என இவள் தேவியையும் போற்றுகின்றனர்.

'உலகத்தோரே பலர்மற் செல்வர்' என்னும் செய்யுள் இவனது குணநலத்தையும், பிறர்க்கென வாழ்ந்த பேராண்மைத் திறத்தையும் காட்டுகின்றது.

5. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

இவன் பரணர் பெருமான் பாடிய ஐந்தாம் பத்தின் தலைவன் ஆவான். 'குடவர் கோமான் நெடுஞ்சேரலாதனுக்குச் சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன் இவன்' என்று கூறுகிறது இப்பத்தின் பதிகம். இவனே கடவுட் பத்தினிக்குப் படிமம் அமைத்த சிறப்பினை உடையவன்; ஆரிய அரசர்களை வீழ்த்தியவன்; வியலூர், கொடுகூர், பழையனின் போவூர் போன்றவற்றை அழித்தவன்.

இவன் 55 ஆண்டுகள் வீற்றிருந்தவன். செருச் செய் முன்போடு முந்நீர் முற்றி, ஓங்கு திரைப் பௌவம் நீங்க ஓட்டிய நீர்மாண் எஃகம்' என இவன் கடலிடத்துப் பகைவரை வெற்றிகொண்டதனை அகநானூற்றுச் செய்யுளும் கூறும் (அகம்.212). சிலப்பதிகாரத்து வஞ்சிக்காண்டமும் இவன் மற மாண்புகளை விளக்கும்.

’ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்' (அகம். 396) இவன். இவன் கரிகால் வளவன் காலத்தவன் என்பதனைப் பரணர் பாட்டுக்கள் வலியுறுத்தும். இவனது வடபுல வெற்றியும், கடலிடைவெற்றியும் கருதினால், கிரேக்க மாவீரனான அலெக்சாந்தரின் போர் மறத்தோடு ஒப்பிட்டுக் கூறலாம். அண்ணல் யானை அடு போர்க் குட்டுவ'னாகிய இவன், 'கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயமாகத் தென்னங் குமரி யொடு ஆயிடை' அரசர் அனைவரினும் மேம்பட்டு விளங்கியவனும் ஆவன். 'மோகூர்ப் பழையனை இவன் வென்றதும், எழுமுடி மார்பின் எய்திய சேரல் இவன் என்பதும், 'உடை திரைப் பரப்பிற் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன் இவன் என்பதும், இப்பாட்டுக்களால் அறியப்படுகின்றன. இவன், 'வணங்கிய சாயலும் வணங்கா ஆண்மையும் கொண்டவன். இவன் சிறப்புக்களைத் தொடுத்து உரைப்பது 'வெருவரு புனற்றார்' என்னும் செய்யுள். 'வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்' இவன் தந்தை. இவனோ, அவன் புகழையும் நிலைபெறுத்தி, மேலும் பெருக்கிய பேராளனாக விளங்கி 55 ஆண்டுகள் வீற்றிருந்தவன். இவன் மகன் குட்டுவன் சேரல் என்பது பதிகத்தால் அறியப்படும் செய்தியாகும். பெறற்கரிய தன் மகனும், இளவரசனுமாகிய குட்டுவன் சேரலையும் பரணர்க்குப் பரிசிலாகத் தந்து மகிழ்ந்த பெருங்கொடையாளன் இவன்.


6. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடிய ஆறாம்பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவன் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் பிறந்தவன். தண்டகாரணியத்துக் கோட்பட்ட வருடையை மீட்டுத் தொண்டியுட் கொண்டு தந்தவன். 'வான வரம்பன்' எனப் பேர் இனிது விளக்கியவன். 'குழவி கொள்வாரின் குடிபுறங் காத்தவன்'. முப்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தவன். இவனது போர்மறத்தை, ’மழைதவழும் பெருங்குன்றத்துச், செயிருடைய வரவெறிந்து, கடுஞ்சினத்த மிடல் தபுக்கும், பெருஞ்சினப் புயலேறு அனையை' என்பதனாற் குறிப்பிட்டுள்ளனர். இவன் கலையுணர்வும் கொண்டவன் ஆதலைச் 'சிறுசெங்குவளை' என்னுஞ் செய்யுளால் அறியலாம். இவனது கொடைச்சிறப்பை, 'உயர்நிலை உலகத்துச் செல்லாது, இவணின்று இருநிலமருங்கின் நெடிது மன்னியரோ' என வாழ்த்துதலால் அறியலாம். அறிவும் சால்பும் அன்பும் பண்பும் கொடைமையும் வெம்மையும் ஒருங்கே பெற்று விளங்கிய சிறப்பினன் இவனாதலை, இச்செய்யுட்கள் பலவும் விளங்கக்கூறி இவனைப் போற்றுகின்றன.


7. செல்வக் கடுங்கோ வாழியாதன்

இவன் இரும்பொறை மரபினன். சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், ஒருதந்தை ஈன்ற மகள் பொறையன் பெருந்தேவிக்கும் மகனாகப் பிறந்தவன். 'மாயவண்ணன்’ இவனது புரோகிதனாக விளங்கியவன். வேள்விகள் இயற்றியும், அறம்பல செய்தும் புகழோடு 25 ஆண்டுகள் வீற்றிருந்தவன் இவன். இவனுடைய பல்வகைக் குணமேம்பாடுகளையும் ’அருவி யாம்பல்' என்னும் செய்யுள் விளக்கிக் கூறுகின்றது. 'ஆயிர வெள்ள ஊழி, வாழியாத வாழிய பலவே’ என்று மனந்திறந்து வாழ்த்துகின்றார் கபிலர் பெருமான். 'மழையினும் பெரும்பயம்’ பொழிந்தவன் இவன். அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு இருஞ்சேறு ஆடியபடி விளங்கியது இவன் அரண்மனை முற்றம். இவனுக்கு உரித்தாயிருந்தது நேரிமலை; அதனால் இவனை நேரிப்பொருநன் எனவும் கூறுவர். 'அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும் மணங் கமழ்' மார்பனும் இவனாவான்.

இவன் காலத்து இருந்த மற்றொரு சேரமான். 'கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ யாவான். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தை ஒட்டியவன் இவன். ’ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேரலாதன்' எனவும் இவனைக் கபிலர் போற்றுகின்றனர் (புறம் 8). இவனைப் பாடிய மற்றொரு புலவர் குண்டுகண் பாலியாதனார் ஆவர் (புறம் 387). இவன் சிக்கற்பள்ளிப் போரில் உடல் துறந்து, புகழால் நிலைபேறு பெற்றவன்.

’அயிரை நெடுவரை போலத் தொலையாதாக நீ வாழும் நாளே’ என வாழ்த்துவார் கபிலர், இவனை. இவன் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும், இவன் தேவி வேளாவிக் கோமான் பதுமனின் மகளும் என்று அறியப்படுகின்றன.


8. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

இவனைப் பாடியவர் அரிசில்கிழார். இவர் பாடிய பாட்டுக்களால் பெரிதும் மகிழ்ந்தானாகிய இவன், தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று, ’கோயிலுள்ளவெல்லாம் கொண்மின்’ என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தொடு அரசு கட்டிலும் கொடுத்துப் பெரும்புகழ் அடைந்தவன்.

இவனது போர்ச்செயல்களுள் சிறப்பானது தகடூர் அதியமானை வென்றது ஆகும். அந்தப் போர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதற்குத் 'தகடூர் யாத்திரை' என்ற தனிநூலின் எழுச்சியே சான்றாகும். முரசுகட்டிலில் அறியாது ஏறிய மோசிரேனாரைத் துயில் எழுந்துணையும் கவரிவீசி நின்று போற்றிப் புகழ்பெற்று, அவரால் பாடப்பெற்றவனும் இவனே யாவான். பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பானும் இவனே என்பது ஆன்றோர் முடிபு: அதனை இவனது தமிழ்கனியும் நெஞ்சச் செவ்வி நன்கு காட்டும்.

’இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது உயர் நிலை உலகத்து உறையுள் இன்மையை' நன்கு தெளிந்து, அறமும் மறமும் அறிவும் பண்பும் செறிய வீற்றிருந்து சிறப்புற்றவன் இவன். இவன் பகைவர்க்கு ’மடங்கல் தீயின்’ அனையவன். 'புகார்ச் செல்வன்' எனவும், 'பூழியர் மெய்ம் மறை’ எனவும், 'கொல்லிப் பொருநன்' எனவும், 'கொடித் தேர்ப் பொறையன்' எனவும் இவனைப் போற்றுவர். இவன் புதல்வனை இவன் தேவி பெற்று நல்கிய சிறப்பை 'நலம்பெறு திருமணி' என்னும் செய்யுளால் அறியினும், அவன் யாவன் என்பது அறியப்படாதே உள்ளது. 'கடவுள் அயிரை நிலைஇக் கேடிலவாக’ இவன் புகழ் என்றும் விளங்கும் தகைமைத்து ஆகும்.


9. இளஞ்சேரல் இரும்பொறை

இவன் பெருங்குன்றூர் கிழார் பாடிய ஒன்பதாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். குட்டுவன் இரும்பொறைக்கும் வேண்மாள் அந்துவஞ் செள்ளைக்கும் பிறந்தவன். 16 ஆண்டுகள் அரசு வீற்றிருந்தவன். 'மையூர் கிழான்' இவன் அமைச்சன். பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தையாண்ட இளம்பழையன் மாறனையும் வெற்றிகொண்டவன். மந்திரமரபில் தெய்வம் பேணியும், சதுக்கபூதரை வஞ்சியில் நிறுவியும், சாந்தி வேட்டுச் சிறந்தவன் இவன்.

இவன் தேவியின் வனப்பையெல்லாம் 'நிழல்விடு கட்டி’ என்னுஞ் செய்யுளால் அறியலாம். மருதம் பாடிய இளங்கடுங்கோ இவனே எனவும் கூறுவர். பாடுநர் கொளக் கொளக் குறையாச் செல்வத்தையும், செற்றோர் கொலக்கொலக் குறையாத் தானையையும், சான்றோர் வண்மையுஞ் செம்மையும் சால்பும் அறனும் புகன்று புகழ்ந்து அசையா நல்லிசையையும் கொண்டு, ’நிலந்தரு திருவின் நெடியோனைப் போல' விளங்கியவன் இவன். இவனை 'விறன் மாந்தரன் விறல் மருக' என்று கூறுவதும் கவனிக்கத்தக்கது. இதனால் இவனை மாந்தரஞ் சேரலின் மகனாகவும் கொள்வர். இவன் சிறப்புக்களை எல்லாம் இந்நூலின் 90ஆம் செய்யுள் (வலிகெழு தடக்கை) ஒருங்கே தொகுத்து உரைக்கின்றது.