பதிற்றுப்பத்து/பெயர்விளங்கா
பெயர் விளங்காப்
பதிற்றுப்பத்துச் செய்யுட்கள்
1. இருங்கண் யானையொ டருங்கலந் தெறுத்துப்
பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர்
வணங்கா ராதல் யாவதோ மற்றே!
உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக்
கண்ணதிர்பு முழங்கும் கடுங்குரல் முரசமொடு
5
கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முளை
எரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து
நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி
நீர்துளைந் நன்ன செலவின்
நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே!
10
2. இலங்குதொடி மருப்பின் கடாஅம் வார்ந்து
நிலம்புடையூஉ எழுதரும் வலம்படு குஞ்சரம்
எரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக்
கால்கிளர்ந் தன்ன கடுஞ்செலல் இவுளி
கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோடு
5
ஊன்வினை கடுக்கும் தோன்றல் பெரிதெழுந்து
அருவியின் ஒலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
கன்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக்
கதித்தெழு மாதிரம் கல்லென ஒலிப்பக்
கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப
10
நெடுமதில் நிரைஞாயிற்
கடிமிளைக் குண்டு கிடங்கின்
மீப்புடை யாரரண் காப்புடைத் தேயம்
நெஞ்சுபுகல் அழிந்து நிலைதளர்பு ஓரீஇ
ஒல்லா மன்னர் நடுங்க
15
நல்ல மன்ற இவண் வீங்கிய செலவே.
3. வந்தனென் பெரும கண்டனென் செலற்கே
களிறு கலிமான் தேரொடு சுரந்து
நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை
மாரி என்னாய் பனியென மடியாய்
பகைவெம் மையின் அசையா வூக்கலை
5
வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறுநிலை தேய
மைந்துமலி ஊக்கத்த கந்துகால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும்
இடாஅ ஏணிநின் பாசறை யானே!
10
4. பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும்
என்னொடு புரையுநள் அல்லள்
தன்னொடு புரையுநர்த் தானறி குநளே!
இவை புறத்திரட்டிலும், தொல்காப்பிய உரைகட்கிடையிலும் காணப்பெற்றவை.