பதிற்றுப்பத்து/இரண்டாம்பத்து

பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்

பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்

பாட்டு - 11 தொகு

வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
வளிபாய்ந்(து) அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்(கு)உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
5  கடுஞ்சின விறல்வேள் களி(று)ஊர்ந் தாங்குச்
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த புண்உமிழ் குருதியின்
மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண்கொன்று
10 முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர்மொசிந்(து) ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய வேஎய்
வென்(று)எறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரரி நறவின் ஆர மார்பின்
15 போர்அடு தானைச் சேர லாத
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்
பொலன்அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே
20 கவிர்ததை சிலம்பின் துஞ்சும் கவரி
பரந்துஇலங்(கு) அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னம் குமரியொ(டு) ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. (11)


பெயர் - புண்ணுமிழ் குருதி (அடி 8)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 12 தொகு

வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக்
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே
தார்அணி எருத்தின் வாரல் வள்உகிர்
5  அரிமான் வழங்கும் சாரல் பிறமான்
தோடுகொள் இனநிரை நெஞ்(சு)அதிர்ந் தாங்கு
முரசுமுழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம்வீங்கு பல்புகழ்
கேட்டற்(கு) இனிதுநின் செல்வம் கேள்தொறும்
10 காண்டல் விருப்பொடு கமழும் குளவி
வாடாப் பைம்மயிர் இளைய வாடுநடை
அண்ணல் மழகளி(று) அரிஞிமி(று) ஓப்பும்
கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி
வந்(து)அவண் நிறுத்த இரும்பேர் ஒக்கல்
15 தொல்பசி உழந்த பழங்கண் வீழ
எஃகுபோழ்ந்(து) அறுத்த வாள்நிணக் கொழுங்குறை
மைஊன் பெய்த வெண்நெல் வெண்சோறு
நனைஅமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற(கு) அன்ன
20 நிலத்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வால்அரைக் கொளீஇ
வணர்இரும் கதுப்பின் வாங்(கு)அமை மென்தோள்
வசைஇல் மகளிர் வயங்(கு)இழை அணிய
அமர்புமெய் ஆர்த்த சுற்றமொடு
25 நுகர்தற்(கு) இனிதுநின் பெரும்கலி மகிழ்வே. (12)


பெயர் - மறம்வீங்கு பல்புகழ் (8)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 13 தொகு

தொறுத்தவயல் ஆரல்பிறழ்நவும்
ஏறுபொருதசெறு உழாதுவித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்கண் எருமையின் நிரைதடுக் குநவும்
5  கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின்
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலிதெங்கின் இமிழ்மருதின்
புனல்வாயில் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்
10 நாடுகவின் அழிய நாமம் தோற்றிக்
கூற்(று)அடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந்(து) இறுத்த நீர்அழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்எனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
15 கவைத்தலைப் பேய்மகள் கழு(து)ஊர்ந்(து) இயங்க
ஊரிய நெருஞ்சி நீ(று)ஆடு பறந்தலைத்
தா(து)எரு மறுத்த கலிஅழி மன்றத்(து)
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்
துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
20 காடே கடவுள் மேன புறவே
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே அவ்வனைத்(து) அன்றியும் ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறம் தருநர் பாரம் ஓம்பி
25 அழல்சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசிஇகந்(து) ஒரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே. (13)


பெயர் - பூத்த நெய்தல் (3)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 14 தொகு

நிலம்நீர் வளிவிசும்(பு) என்ற நான்கின்
அளப்பரி யையே
நாள்கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல்
ஐந்(து)ஒருங்கு புணர்ந்த விளக்கத்(து) அனையை
5  போர்தலை மிகுத்த ஈர்ஐம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணி(வு)உடை யாண்மை
அக்குரன் அனைய கைவண் மையையே
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீ(டு) அழித்த செருப்புகல் முன்ப
10 கூற்றுவெகுண்டு வரினும் ஆற்றுமாற் றலையே
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை
வான்உறை மகளிர் நலன்இகல் கொள்ளும்
வயங்(கு)இழை கரந்த வண்டுபடு கதுப்பின்
15 ஒடுங்(கு)ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ
பலகளிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படைஏர் உழவ பாடினி வேந்தே
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடல்அக வரைப்பின்இப் பொழில்முழு(து) ஆண்டநின்
20 முன்திணை முதல்வர் போல நின்றுநீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோஇவ் வுலகமோ(டு) உடனே. (14)


பெயர் - சான்றோர் மெய்ம்மறை (12)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்


பாட்டு - 15 தொகு

யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்(து) இறுத்து
முனைஎரி பரப்பிய துன்னரும் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதில்மரம் முருக்கி
நிரை களிறுஒழுகிய நிரைய வெள்ளம்
5  பரந்(து)ஆடு கழங்(கு)அழி மன்மருங்(கு) அறுப்பக்
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
அழல்கவர் மருங்கின் உருஅறக் கெடுத்துத்
தொல்கவின் அழிந்த கண்அகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
10 பீர்இவர்பு பரந்த நீர்அறு நிறைமுதல்
சிவந்த காந்தள் முதல்சிதை மூதின்
புலவுவில் உழவின் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பின் புலம்சிதை அரம்பின்
அறியா மையான் மறந்துதுப்(பு) எதிர்ந்தநின்
15 பகைவர் நாடும் கண்டுவந் திசினே
கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்நாட்டு
விழ(வு)அறு(பு) அறியா முழ(வு)இமிழ் மூதூர்க்
கொடுநிழல் பட்ட பொன்உடை நியமத்துச்
20 சீர்பெறு கலிமகிழ் இயம்பு முரசின்
வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை
தார்அணிந்(து) எழிலிய தொடிசிதை மருப்பின்
போர்வல் யானைச் சேர லாத
நீவா ழியர்இவ் வுலகத் தோர்க்(கு)என
25 உண்(டு)உரை மாறிய மழலை நாவின்
மென்சொல் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த
வெய்துற(வு) அறியாது நந்திய வாழ்க்கைச்
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோ(டு)
ஒன்றுமொழிந்(து) அடங்கிய கொள்கை என்றும்
30 பதிபிழைப்(பு) அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின்
நீபுறந் தருதலின் நோய்இகந்(து) ஒரீஇய
யாணர்நன் நாடுங் கண்டுமதி மருண்டனென்
35 மண்உடை ஞாலத்து மன்னுயிர்க்(கு) எஞ்சா(து)
ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின்
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
நெடியோன் அன்ன நல்இசை
40 ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே. (15)


பெயர் - நிரைய வெள்ளம் (4)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 16 தொகு

கோ(டு)உறழ்ந்(து) எடுத்த கொடுங்கண் இஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்
துஞ்சுமரக் குழாஅம் துவன்றிப் புனிற்றுமகள்
பூணா ஐயவி தூக்கிய மதில
5  நல்எழில் நெடும்புதவு முருக்கிக் கொல்லு(பு)
ஏனம் ஆகிய நுனைமுரி மருப்பின்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
மரங்கொல் மழகளிறு முழங்கும் பாசறை
நீடினை ஆகலின் காண்குவந் திசினே
10 ஆறிய கற்பின் அடங்கிய சாயல்
ஊடினும் இனிய கூறும் இன்நகை
அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கின்
சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியள்
பாயல் உய்யுமோ தோன்றல் தாவின்று
15 திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமோ(டு) உறழ்ந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
புரையோர் உண்கண் துயிலின் பாயல்
பாலும் கொளாலும் வல்லோய்நின்
20 சாயன் மார்பு நனிஅலைத் தன்றே. (16)


பெயர் - துயிலின் பாயல் (18)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 17 தொகு

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பெரிய தப்புநர் ஆயினும் பகைவர்
பணிந்துதிறை பகரக் கொள்ளுநை ஆதலின்
துளங்குபிசிர் உடைய மாக்கடல் நீக்கிக்
5  கடம்(பு)அறுத்(து) இயற்றிய வலம்படு வியன்பணை
ஆடுநர் பெயர்ந்துவந்(து) அரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்உறூஉம் தொடித்தோள் இயவர்
அரணம் காணாது மாதிரம் துழைஇய
நனம்தலைப் பைஞ்ஞிலம் வருகஇந் நிழல்என
10 ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின்
அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக்
கடும்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப பாடினி வேந்தே. (17)


பெயர் - வலம்படு வியன்பணை (5)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 18 தொகு

உண்மின் கள்ளே அடுமின் சோறே
எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே
வருநர்க்கு வரையாது பொலம்கலம் தெளிர்ப்ப
இருள்வணர் ஒலிவரும் புரிஅவிழ் ஐம்பால்
5  ஏந்துகோட்(டு) அல்குல் முகிழ்நகை மடவரல்
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே
பெற்ற(து) உதவுமின் தப்(பு)இன்று பின்னும்
மன்உயிர் அழிய யாண்டுபல துளக்கி
மண்உடை ஞாலம் புர(வு)எதிர் கொண்ட
10 தண்இயல் எழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவ(து) ஆயினும்
சேர லாதன் பொய்யலன் நசையே. (18)


பெயர் - கூந்தல் விறலியர் (6)
துறை - இயன்மொழி வாழ்த்து
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 19 தொகு

கொள்ளை வல்சிக் கவர்கால் கூளியர்
கல்உடை நெடுநெறி போழ்ந்துசுரன் அறுப்ப
ஒண்பொறிக் கழல்கால் மாறா வயவர்
தின்பிணி எஃகம் புலிஉறை கழிப்பச்
5  செங்கள விருப்பொடு கூலம் முற்றிய
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசம் கண்பெயர்த்(து) இயவர்
கடிப்(பு)உடை வலத்தர் தொடித்தோள் ஓச்ச
வம்புகளை(வு) அறியாச் சுற்றமோ(டு) உடம்புதெரிந்(து)
10 அவ்வினை மேவலை ஆகலின்
எல்லும் நனிஇருந்(து) எல்லிப் பெற்ற
அரிதுபெறு பாயல்சிறுமகி ழானும்
கனவினுள் உறையும் பெருஞ்சால்(பு) ஒடுங்கிய
நாணுமலி யாக்கை வாள்நுதல் அரிவைக்(கு)
15 யார்கொல் அளியை
இனம்தோ(டு) அகல ஊருடன் எழுந்து
நிலம்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
வாழ்தல் ஈயா வளன்அறு பைதிரம்
அன்ன ஆயின பழனம் தோறும்
20 அழல்மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாள் மடங்க அறைநர்
தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த
இன்றோ அன்றோ தொன்றோர் காலை
25 நல்லமன் அளிய தாம்எனச் சொல்லிக்
காணுநர் கைபுடைத்(து) இரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே. (19)


பெயர் - வளனறு பைதிரம் (18)
துறை - பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்


பாட்டு - 20 தொகு

நும்கோ யார்என வினவின் எம்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
5  நெடுஞ்சேர லாதன் வாழ்கஅவன் கண்ணி
வாய்ப்(பு)அறி யலனே வெயில்துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணின் உவந்து நெஞ்(சு)அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்(பு)அறி யலனே
10 கனவினும், ஒன்னார் தேய ஓங்கி நடந்து
படியோர்த் தேய்த்து வடிமணி இரட்டும்
கடாஅ யானைக் கணநிரை அலற
வியல்இரும் பரப்பின் மாநிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்குபுகழ் நிறீஇ
15 விரிஉளை மாவும் களிறும் தேரும்
வயிரியர் கண்ணுளர்க்(கு) ஓம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
நெடுமதில் நிலைஞாயில்
அம்(பு)உடை யார்எயில் உள்அழித்(து) உண்ட
20 அடாஅ அடுபகை அட்டுமலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன்உயிர் அழிய யாண்டுபல மாறித்
25 தண்இயல் எழிலி தலையா(து) ஆயினும்
வயிறுபசி கூர ஈயலன்
வயிறும்ஆ(சு) இலீயர்அவன் ஈன்ற தாயே. (20)


பெயர் - அட்டுமலர் மார்பன் (20)
துறை - இயன்மொழி வாழ்த்து
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்


பதிகம் தொகு

மன்னிய பெரும்புகழ் மறுஇல் வாய்மொழி
இன்இசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன்
அமைவரல் அருவி இமையம் வில்பொறித்(து)
5  இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேர்இசை மரபின் ஆரியர் வணக்கி
நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ
10 அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிறல் மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி
அமையார்த் தேய்த்த அணங்(கு)உடை நோன்தாள்
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.
15 அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல்,
சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல்,
வலம்படுவியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர்மார்பன்
இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து
20 முப்பத்தெட்டுயாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான்.
இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டுயாண்டு வீற்றிருந்தான்.


[பிரமதாயம் = அந்தணர்களுக்கு விடப்படும் இறையிலி நிலம்]