பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி/முன்னாள் தமிழக முதல்வரின் முன்னுரை

முன்னாள் தமிழக முதல்வரின் முன்னுரை


அமிழ்தினும் இனிய தமிழ்மொழி இலக்கிய வளம் மிகுந்தது. நம் முன்னேர்களாகிய புலவர் பெருமக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சங்கம் வைத்து மொழியை வளர்த்தார்கள். காப்பியங்கள் இயற்றி மொழியின் இலக்கிய வளத்தைப் பெருக்கினர்கள். நவரசங்கள் ததும்பும் இக் காப்பியங்கள் மட்டுமன்றி, மக்களை நல்வழிப்படுத்துவதற்கென்றே நீதி நூல்கலையும், பக்தி மார்க்கத்துக்கு அடிப்படையான தோத்திரப் பாடல்களையும் பாடித் தந்தார்கள். இலக்கண நூல்களையும் உருவாக்கினர்கள். அவர்கள் மொழியின் வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு, ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட்டதால் தான் இன்று தமிழ்மொழி இவ்வளவு இலக்கிய, இலக்கண வளங்களோடு திகழ்கிறது.

ஒருமொழியின் வளர்ச்சி என்பது பல அம்சங்களோடு கூடிய பெரிய காரியம். ‘வாழ்க’ ‘வளர்க’ என்ற வெறும் வாழ்த்துக்களால் மட்டும் ஒரு மொழி ஒருபோதும் வளர்ச்சியடையாது. பழைய நூல்களைப் பாதுகாப்பது, வளர்ந்துவரும் மக்களினத்தின் சிந்தனைகளுக்கேற்பப் புதுமையான நூல்களை உருவாக்குவது, இலக்கண வரம்புகள் நசித்து விடாமல் கட்டிக் காப்பது, அந்த மொழியின் இலக்கிய, இலக்கண நயங்களைப்பற்றி ஆராய்ச்சி நூல்கள் எழுதுவது ஆகிய பல்வேறு வகைப்பட்ட பணிகளால்தான் மொழியை வளர்க்க முடியும்.

தழிழ் மொழியில், மொழி ஆராய்ச்சி நூல்களும், இலக்கிய வரலாற்று நூல்களும் போதுமான அளவு இல்லை என்பது அனைவர்க்கும் வெகுகாலமாக இருந்துவரும் ஒரு மனக்குறையாகும். ஆங்கிலமொழியில் இத்தகைய நூல்கள் அளவில்லாமல் இருக்கின்றன. ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வோர் இராஜ வம்சத்தினரின் ஆதிக்கத்திலும் ஆங்கிலம் எத்தகைய மாறுதல் அடைந்தது, எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதையெல்லாம் ஆரய்ந்து பல நூல்கள் அம் மொழியில் எழுதப்பெற்றுள்ளன. ஆங்கில மொழி அறிஞர்கள் இந்தத்துறையில் எடுத்துக் கொண்ட முயற்சியே இதற்குக் காரணம் ஆகும். அதேபோல் தமிழ்மொழியிலும் இத்தகைய நூல்கள் எழுதப் பெறவேண்டும் என்ற எண்ணம் சிறிது காலத்துக்கு முன்புதான் நம் நாட்டில் தோன்றியது. கால அளவு சிறிதாயினும், அந்தத்துறையில் இப்போது கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது பெருமைப் படத்தக்க ஒன்று.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் ஏற்பட்ட உரைநடையின் வளர்ச்சி பற்றிய இலக்கிய வரலாற்றை இந்த நூல் விவரிக்கிறது. தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ அ. மு. பரமசிவானந்தம் தெளிந்த ஆராய்ச்சியோடும் தீர்க்கமான சிந்தனையோடும் பல நுட்பமான விஷயங்களை இதில் தந்திருக்கிறர். ஒரு வடிவம் பெற்ற உரைநடை யென்பது வெகு காலத்துக்குப் பிறகுதான் தமிழ் மொழியில் தோன்றத் தொடங்கியது. இருப்பினும் இன்று அது மகத்தான வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியின் ஆரம்பம் பத்தொன்பதாம்நூற்றாண்டிலேயே மலரத் தொடங்கியது. இதை, பல கட்டுரைகள், பெரியோர் எழுதிய கடிதங்கள் ஆகியவற்றைக் கொண்டு அழகாகச் சித்திரிக்கிறார் ஆசிரியர்.

இலக்கிய வரலாறுகளை எழுதும் புதிய முயற்சியில் இந் நூல் ஒரு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சாதனை. இதற்காக ஸ்ரீ அ. மு. பரமசிவானந்தம் அவர்களைப் பாராட்டுகிறேன் இதேபோல் இவர் இன்னும் பல ஆராய்ச்சி நூல்களைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தரவேண்டும்.

மொழி ஆர்வம் மிகுந்து வரும் இந்நாளில் மக்கள் இத்தகைய நூல்களுக்கு நல்ல வரவேற்புத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பக்தவத்ஸலம்

24—2—66