பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி/முன்னுரை
சென்னைப் பல்கலைக் கழகத்தார் 1964-65 ஆண்டிற்குரிய ‘கல்கி நினைவுச் சொற்பொழி’ வை ஆற்றுமாறு என்னைப் பணித்தனர். மறைந்த கல்கி அவர்களின் நினைவாக அமையப்பெற்ற நிலைத்த தொடர்ச் சொற்பொழிவு வரிசை இதுவாகும். இவ்வரிசையில் மூன்ற்றாவது ஆண்டு இது என எண்ணுகிறேன்.இந்த வரிசைக்கு ஆய்வுச் சொற் பொழிவுகள் அமைதலே சாலப் பொருத்தமாகும். இந்த அடிப்படையில் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரை நடை வளர்ச்சி’ என்ற தலைப்பில் 1965 பிப்ரவரி 15, 16, 17-ம் நாட்களில் ஆற்றிய சொற்பொழிவுகளே இன்று நூல் வடிவில் வெளி வருகின்றன.
இத்தலைப்பின் அடிப்படையில் நான் ஆராய்ந்து கண்ட இடங்கள் பல—ஏடுகள் பல—பழம் பெரு நூல்கள் பல-காணாதன. இன்னும் பலவாக இருக்கலாம். சென்ற நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்—சிறப்பாக உரை நடை இலக்கியம் வளர்ந்ததைக் காணப் பல ஆண்டுகள் தேவை. எனவே இந்நூலில் நான் அனைத்தையும் காட்டிவிட்டேன் எனக் கூற முடியாது. என்றாலும் அவற்றின் வகைகளையெல்லாம் ஒருமுகப்படுத்தி உரியவகையில் பிரித்து மூன்று சொற்பொழிவுகளால் முடித்துக் காட்டியுள்ளேன். முதற் செற்பொழிவில் தமிழ் உரைநடையின் தோற்ற வளர்ச்சியினையும் பத்தொன்பதாம் நூற்றண்டின் தலைவாயிலில் அதன் நிலையினையும் காட்டினேன். இரண்டாம் நாள் சொற் பொழிவில் வாழ்வின் பல்வேறு சமுதாயத் துறைகளில்- அரசியல், வாழ்வியல், கல்வி, பண்பாடு, ஆட்சிமுறை ஆகிய வழிகளில் உரைநடை வளர்ந்த வகையினைக் காட்டினேன். மூன்றாம் நாளில் மொழி, இலக்கியம், சமயம் ஆகிய நெறிகளில் உரைநடை வளர்ந்த வகையினைக் காட்டினேன். இவ்வாறு இயன்றவகையில் சென்ற நூற்றண்டின் உரை நடை வளர்ச்சியினை ஓரளவு காட்டியுள்ளேன். இவற்றை ஆராயும்போது அரசாங்கமும் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களும் இத்துறையில் ஆய்வு காணத் தனித்த அமைப்புக்களை நிறுவின், நாட்டுக்கும் மொழிக்கும் நல்ல அரணும் ஆக்கமும் உண்டாக்கும் என நினைத்தேன். ஆனால் அந்த நினைவைச் செயலாற்றுவது என்னல் முடியாத ஒன்றல்லவா! வல்லார் வழி காண்பாராக!
இப்பணியில் ஊக்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தாருக்கும் இந்நூலுக்கு முன்னுரை தந்து சிறப்பித்த நம் தமிழக முதலமைச்சர் உயர்திரு மீ. பக்தவத்சலம் அவர்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் .தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தமிழ்க்கலை இல்லம்: |
பணிவுள்ள, அ. மு. பரமசிவானந்தம் |