Vckulandaiswamy
பழந்தமிழ் இலக்கியங்கள்: ஆங்கில மொழி பெயர்ப்பு
தொகு=== பழந்தமிழ் இலக்கியங்கள்: ஆங்கில மொழி பெயர்ப்பு டாக்டர் வா.செ. குழந்தைசாமி ===
செவ்வியல் தன்மை [Classicism] என்ற கருத்துப் படிவம் [Concept] ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டது. இது Classicus என்ற இலத்தீன் சொல்லில் இருந்து வந்தது. அது ஃபிரெஞ்சு மொழிக்குச் சென்று, பின்னர் ஆங்கிலத்திற்கு வந்தது. ஒரு மொழிக்குச் செவ்வியல் மொழி [Classical Language] என்ற தகுதி அம்மொழியில் உள்ள பழமை வாய்ந்த இலக்கியங்களின் தரத்தின் அடிப்படையில் தான் வருகிறது. முதன் முதலாக கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகள் செவ்வியல் மொழிகளாக அறியப்பட்டன. இன்று செவ்வியல் இலக்கியம் என்பது முதல் தரமான, இலக்கிய நயம் வாய்ந்த, பண்டைய கிரேக்க இலத்தீன் இலக்கியத்தின் பண்புகளைக் கொண்ட பண்டைய [Ancient] இலக்கியம் என்று கருதப்படுகிறது. கிரேக்க இலக்கியத்தின் செவ்வியல் காலம் கி.மு. 500 முதல் கி.மு. 320 வரையில் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்து. இக்காலத்தில் இலக்கியம் படைத்தவர்கள் ஹெரடோட்டஸ் [Herodotus Ca 484 B.C – Ca 425 B.C.], டெமாஸ்தனிஸ் [Demosthenes: கி.மு. 384 - கி.மு. 322], சோஃபோகில்ஸ் [Sophocles: Ca 495 – B.C.406 B.C.] பிளேட்டோ [Plato கி.மு. 427- கி.மு. 347], அரிஸ்டாட்டில் [Aristotle கி.மு.384- கி.மு.322], போன்றவர்கள் ஆவர். கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. முதல் நூற்றாண்டு வரை இலத்தீன் மொழியின் செவ்வியல் காலமாகக் கருதப்படுகிறது. கேட்டுல்லஸ் [Catullus: Ca 84 B.C. – 54] ஜுலியஸ் சீசர் [Julius Caesar: 100 B.C.- 44 B.C.], வர்ஜில் [Vergil: கி.மு. 70 - 19], சிசிரோ [Cicero: கி.மு. 106 - கி.மு.43], ஹோரேஸ் [Horace கி.மு. 65- கி.மு. 8], லிவி [Livy: 59 BC – AD 17] செனகா [Seneca: கி.மு. 4 - கி.பி. 65] போன்றவர்களின் படைப்புகள் செவ்வியல் இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றிற்கு நீண்ட காலத்திற்குப் பின்னர் வடமொழி, ஐரோப்பியர்களால் செவ்வியல் மொழியாக ஏற்கப்பட்டது.
நாம் மேலே குறிப்பிட்ட மொழிகளோடு ஒப்பிடத்தக்க பழைமையும், தரமும், தகுதியும் உடைய இலக்கியத்தைக் கொண்டது தமிழ் ஆயினும், 20-ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் ஐரோப்பிய அறிஞர்களால் தமிழ் செவ்வியல் மொழியாக ஏற்கப்பட்டது. 21-ஆவது நூற்றாண்டின் தொடக்கத்தில் (2004) இந்திய அரசு தமிழை அதிகாரபூர்வமாகச் செவ்வியல் மொழி என அறிவித்தது. தமிழ் நூல்களைக் கொண்ட ஏடுகளில் பெரும் பகுதி, 20-ஆவது நூற்றாண்டின் பிற்பகுதி வரை தேடி எடுக்கப்படாமையும், அவ்வாறு எடுக்கப்பட்டவையும், ஆங்கிலத்திலும், மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படாமையும் தான் இந்நிலைக்கு அடிப்படைக் காரணங்களாகும். 20-ஆவது நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் பல பழந்தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. எனினும், வடமொழி நூல்களை ஆசிய சங்கம் [Asiatic Society] போன்ற நிறுவனம், டாக்டர் மேக்ஸ் முல்லர் [Dr. Max Müller] போன்ற அறிஞர்கள் செய்த மொழி பெயர்ப்புப் பணி மகத்தானது. அத்தகைய பணி தமிழுக்கு இதுவரை வாய்க்கவில்லை.
மைய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த பின் தமிழ் மொழி மேம்பாட்டு வாரியம் [Tamil Language Promotion Board] என்ற ஓர் அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பு தமிழ்ச் செவ்வியல் காலப் படைப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் 10 திட்டங்களை உருவாக்கியது. அதில் முதன்மையான திட்டம் 41 பழந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்பது தான். இதுவரை செய்யப்பட்டுள்ள மொழி பெயர்ப்புப் பணிகளையும் தேடி, ஆய்ந்து, தொகுத்து அவற்றையும் மனத்திற் கொண்டு இப்பணியைச் செய்ய வேண்டும் என்பது வாரியத்தின் முடிவு.
தமிழிலிருந்து பழந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது என்னும் பொழுது சில முக்கியமான சிக்கல்கள் எழுகின்றன. மொழி பெயர்ப்பு என்பதே ஒரு கடினமான பணி. மூலத்தில் உள்ள கருத்தை முழுமையாக மொழி பெயர்ப்பில் கொணர்வது என்பது ஓர் இமலாயப் பொறுப்பாகும். அதிலும் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பது என்பது ஒரு பண்பாட்டைச் சேர்ந்த இலக்கியத்தை இன்னொரு பண்பாட்டைச் சேர்ந்த மொழியில் கொண்டு வருவதாகும். இந்தப் பின்னணியில் பல சொற்களுக்கு நேரான சொற்களை, மொழி பெயர்க்கப்படும் மொழியில் காண்பது இயலாது. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் Technical Terms என்பது போல, இலக்கியம் போன்ற துறைகளில் Cultural Terms தேவைப்படுகின்றன.
சான்றாக தர்மா [Dharma] என்ற வட சொல்லை எடுத்துக் கொள்வோம். அது ஒரு பொருளை மட்டும் குறிக்கும் சொல் அன்று. அது ‘ஒரு சொல் - பல்பொருள்’ வகையைச் சேர்ந்தது. இந்தியப் பண்பாட்டின் பல கூறுபாடுகளைக் குறிப்பிடும் தன்மை கொண்டது. எனவே அதை ஆங்கிலத்தில் ‘Charity’ என்றோ ‘Righteousness’ என்றோ, Justice என்றோ யாரும் மொழி பெயர்ப்பதில்லை. அது அப்படியே ஆங்கிலத்தில் Dharma என்றே இடம் பெற்றிருக்கிறது. வேதங்கள் [Vedas] என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில்லை. உபநிடதங்கள் [Upanishads] என்பதை மொழி பெயர்ப்பதில்லை. அதைப் போலவே சாணக்கியரின் ‘அர்த்த சாஸ்திரம்’ என்ற நூலைக் கூட ‘அர்த்தசாஸ்த்ரா’ என்று தான் குறிப்பிடுகிறார்களே தவிர, Science of Wealth என்று பெரும்பாலும் மொழி பெயர்ப்பதில்லை ஏனெனில் ‘அர்த்த’ என்ற சொல் ஒரு பண்பாட்டுப் பின்னணியைக் கொண்டது. இடத்திற்கேற்பப் புரிந்து கொள்ள வேண்டிய தேவையையுடையது.
மேலே கூறப்பட்டுள்ள அணுகுமுறை, வடமொழி நூல்களை மொழி பெயர்க்கும் பொழுது முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ் நூல்களின் மொழி பெயர்ப்புக்கு வரும் பொழுது ஏனோ இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுவதில்லை. சான்றாகத் திருக்குறளை எடுத்துக் கொள்வோம். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவற்றுக்கு வரும் பொழுது அறம் என்பது Virtue அல்லது Righteousness என்றும், பொருள் என்பது Wealth என்றும், காமம் என்பது Love என்றும், மொழி பெயர்க்கப்படுகின்றன. அருட்தந்தை போப் [Rev. Dr. G.U. Pope] அருட்தந்தை ட்ரூ [Rev W.H. Drew], அருட்தந்தை ஜான் லாசரஸ் [Rev John Lazarus], திரு. எல்லிஸ் [Mr. F.W. Ellis] போன்ற மேலை நாட்டினரும், திரு. வடிவேலு முதலியார்; டாக்டர் S.M. டயஸ் [Dr. S.M. Diaz], சுத்தானந்த பாரதி அடிகளார், போன்ற நம்மனோரும் இதே அணுகுமுறையையே கையாண்டிருக்கின்றனர். ராஜாஜி மட்டும் இவர்களினின்றும் சற்று வேறுபடுகிறார். அறம் என்பதை Dharma என்றும் பொருள் என்பதை Worldly Affairs என்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். Dharma என்பது ஆங்கிலச் சொல் அன்று, எனினும் ஆங்கில அகராதியில் இடம் பெற்றுவிட்ட ‘வடசொல்’.
‘அறம்’ என்பது ஒரு சாதாரண உரையாடல் சொல் அன்று. தமிழ் நாகரிகத்தின், பண்பாட்டின், ஆத்மாவைக் குறிக்கும் ஒரு மரபு வழக்கு, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி ‘அறம்’ என்ற சொல்லுக்கு தருமம், புண்ணியம், தகுதியானது, சமயம், ஞானம், அறச்சாலை, நோன்பு, சாபம், தருமதேவதை யமன் போன்ற பத்துப் பொருள்களைப் பட்டியலிடுகிறது. அறத்துப்பாலில், அறம் என்ற சொல்லின் பொருள்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் பொருந்தத்தக்க தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. எனவே அறம் என்பதை Virtue என்றோ Righteousness என்றோ மொழி பெயர்ப்பது அறவே பொருந்தாது. அது அறத்துப்பாலின் பரிமாணத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும். ராஜாஜி அவர்கள் பயன்படுத்தியுள்ள Dharma [தர்மம்] என்ற மொழி பெயர்ப்புப் பேரளவு பொருந்துவதாகும். ஆனால் அறம் என்பதும் ‘தர்மம்’ என்பதும் முழுயைமாக ஒன்றன்று. தர்மம் என்பது கூட, முழுமையான மொழி பெயர்ப்பு அன்று. கலாநிதி பண்டித மணி K. கணபதி பிள்ளை அறத்துள் தர்மம் அடங்கும். ஆனால் தர்மத்துள் அறம் அடங்காது என்று கூறுகிறார். ஆங்கிலத்தில் அறம் என்றே ரோமன் வரி வடிவத்தில் எழுத வேண்டும். அறம் என்பதன் முழுப் பரிமாணத்தையும் ஒரு குறிப்பின் மூலம் விளக்க வேண்டும். எப்படி Dharma என்ற வடசொல்லை அப்படியே பயன்படுத்தி, ஆங்கில அகராதியில் இடமளிக்கப்பட்டிருக்கிறதோ, அதே போல ‘அறம்’ என்றே ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும். ‘அறம்’ என்ற தமிழ் வழக்கின் பொருள் விரிவாக விளக்கப்பட வேண்டும்.
சரியான ஆங்கில மொழி பெயர்ப்பு என்று வரும் பொழுது பொருட்பால் என்ற பகுதியில் வரும் ‘பொருள்’ என்ற சொல்லை Wealth என மொழி பெயர்ப்பது மிக, மிகத் தவறானது என்றே கூறலாம். தமிழ்ப் பண்பாட்டில் ‘பொருள்’ என்ற சொல்லுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அது தமிழர் வாழ்க்கை முறையோடு ஒன்றிய பல கூறுபாடுகளைத் தன்னுள் கொண்டது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி ‘பொருள்’ என்ற சொல்லுக்கு 27 பொருள்களைக் குறிப்பிடுகிறது. அதில் Wealth என்பது ஒரு பொருள் மட்டுமே. மேலும் பொருட்பாலில் வரும் 70 அத்தியாயங்களில் வள்ளுவர் செல்வத்தைப் பற்றி மட்டுமே பேசவில்லை. இறைமாட்சியில் தொடங்கி, கல்வி, கேள்வி, மேலாண்மை, அரசியல், சமுதாயம், ஆட்சிமுறை, நிர்வாகத்தின் அங்கங்கள், தகவல் தொடர்பு, பாதுகாப்பு, படை, ஒற்றர், தூதர், தனிமனித ஒழுக்கம் எனப் புற வாழ்வு தொடர்பான வாழ்க்கைப் பரிமாணங்கள் அனைத்தைப் பற்றியும் பேசுகிறார். பொருட்பாலில் வரும் ‘பொருள்’ என்பதைச் செல்வம் என மொழி பெயர்ப்பது எந்த அடிப்படையிலும் ஏற்புடைத்து அன்று. ராஜாஜி ‘Worldly Affairs’ என்று மொழி பெயர்த்திருக்கிறார். அது Wealth என்ற மொழி பெயர்ப்பை விடப் பன்மடங்கு சிறந்த மொழி பெயர்ப்பு, ஆனால் உண்மையில் ‘பொருள்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் இல்லை. சாணக்கியர் வடமொழியில் எழுதியுள்ள அர்த்த சாஸ்திரத்தை Artha Sastra என்று தான் ஆங்கிலத்தில் எழுதுகிறார்களே தவிர The Science of wealth என்றோ Science of Economics என்றோ மொழி பெயர்க்கவில்லை. எனவே பொருள் என்பதை ஆங்கிலத்தில் Porul என ஒலி பெயர்த்துத் தான் எழுத வேண்டும். அதற்கான விளக்கத்தை ஆங்கில அகராதியில் கொடுக்க வேண்டும்.
காமத்துப்பாலுக்கு வரும் பொழுது Love என்ற ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படுகிறது. Pleasure என்ற சொல்லையும் பயன்படுத்துவாருளர். களவியல், கற்பியல், மட லேறுதல், ஊரில் அலர் பரவுதல் போன்ற, அகத்துறைக் கூறுபாடுகள் அனைத்தும் கொண்டது காமத்துப்பால். Love அல்லது Pleasure என்ற சொல் தகுதியுடையது தானா என எண்ணிப் பார்க்க வேண்டும். I have made a brief reference to this aspect in my foreword to the English translation of Tirukkural in two volumes by Dr. S.M. Diaz (2000). I have also discussed this issue in detail later in my articles.
பொதுவாகத் தமிழ் நூல்களில் வரும் அறம், பொருள், அகம், புறம், சால்பு, கற்பு சான்றோர் போன்ற பல சொற்கள் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியவை. அவற்றிற்கு நேரான ஆங்கிலச் சொற்கள் இல்லை. ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் இச்சொற்களின் முழுப் பரிமாணங்கள் வெளி வருவதில்லை. இத்துறையில் நமக்கு வடமொழிச் சொற்களின் ஒலி பெயர்ப்புகள் வழிகாட்டுகின்றன. மைய அரசு 2004-இல் தமிழின் செவ்வியல் தன்மையை அங்கீகரித்தபின் தொடர் நடவடிக்கையாக, நவம்பர் 2005-இல் டாக்டர் வா.செ. குழந்தைசாமி தலைவராகவும், நடுவண் அரசின் இந்திய மொழிகள் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் உதய நாராயண் சிங் செயலராகவும் 17 உறுப்பினர்களும் கொண்ட தமிழ் மொழி மேம்பாட்டு வாரியம் [Tamil Language Promotion Board] என்ற நிறுவனத்தை உருவாக்கியது. இதன் முதல் கூட்டத்தில் [10.12.2005] செவ்வியல் தமிழ் மேம்பாடு, ஆய்வு தொடர்பாக 10 திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் இரண்டாவது திட்டம்: Translation of Ancient Tamil Works into English and Indian Languages என்பதாகும். இதன் கீழ் முதல் கட்டமாக 41 பழந்தமிழ நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. அவை பின் வருமாறு:
1. தொல்காப்பியம் 2. பத்துப்பாட்டு 3. எட்டுத்தொகை 4. பதினெண்கீழ்க்கணக்கு 5. முத்தொள்ளாயிரம் 6. இறையனாரகப்பொருள் 7. சிலப்பதிகாரம் 8. மணிமேகலை
மைசூர் நடுவண் அரசின் இந்திய மொழிகள் நிறுவனத்தில் இருந்த Centre of Excellence for ‘Classical Tamil’ அமைப்பில் முதலில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சென்னைக்கு மாற்றப்பட்டு செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனம் [Central Institute of Classical Tamil] என்ற பெயரில் செயல்படுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் ஆங்கில மொழி பெயர்ப்புகளைச் செம்பதிப்பாகக் கொண்டு வரும் மாபெரும் பணியை மேற்கொண்டிருக்கும் செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனம் தமிழ்ப் பண்பாட்டின் நீண்ட பாரம்பரியத்தின் பரிமாணம் முழுமையும் தன்னுள் தாங்கி நிற்கும் சொல் ஒவ்வொன்றையும் அடையாளம் கண்டு. ஆங்கில மொழி பெயர்ப்பில் ஒலி பெயர்க்கும் திட்டத்தை முறையாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கருத்தை ஒரு கட்டுரை வடிவில் முன் வைத்தேன். அது ஏற்கப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள 41 நூல்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு முழுமையான செம்பதிப்பாக வெளி வரும் பொழுது பல தமிழ்ச் சொற்கள் ஒலி பெயர்க்கப்பட்டு ஆங்கில அகராதிகளில் இடம் பெறுவதற்குக் கால்கோள் இடும் என எதிர்பார்க்கலாம்.