பறவைகளைப் பார்/இணை கூடுதல்

VI. இணை கூடுதல்

இராவேனிற் காலத்திலே புத்துயிர் பிறக்கின்றது. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் காலமும் அதுவே. பொதுவாக ஆண் பறவைகள்தான் பெண் பறவைகளை நேசித்து இணைகூட முயலும். அதற்காகத் திருமணக்கோலம் பூண்டு அவை பல வண்ணங்களையுடைய இறகுகளோடு விளங்குகின்றன. கொண்டை, தாடி, நீண்ட கழுத்திறகுகள், வால் தோகைகள், அங்கங்கே நல்ல நிறங்களையுடைய உடல் தோலின் தோற்றம், ஒளிபொருந்திய நிறங்களுடைய அலகுகள், கால்கள் இவற்றைக் கொண்டு அவை வாலிவோடு கவர்ச்சியாகத் தோன்றுகின்றன.

ஒவ்வொரு ஆண் பறவையும் தனக்கென ஒரு நிலப் பகுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறது. பெண் பறவைகளைக் கவர்ச்சி செய்து அழைக்கிறது. போட்டிக்கு வரும் பறவைகளோடு சண்டையிடுகிறது. பிறகு இணை கூடுகிறது. இதைத் தொடர்ந்து கூடு கட்டுதல், குஞ்சுகளைப் பேணுதல் முதலிய கடமைகள் துவங்குகின்றன.

பெண் பறவை கவர்ச்சியற்ற நிறத்துடனேயே இருக்கும். இப்படி இருப்பதால் இது அடைகாக்கும்போது தீங்கு நேராமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிகிறது. பகைவர்கள் கண்ணில் இது படுவதில்லை. ஆனால் உள்ளான், காடை முதலிய இனங்களில் பெண் பறவைகள்தான் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இந்த இனப் பெண் பறவைகள் முட்டையிட்ட பிறகு ஆண் பறவைகளே அடைகாத்துக் குஞ்சுகளைக் காக்கின்றன! நமது தேசீயப் பறவையான மயில், பெட்டையைக் கவர்ச்சி செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? பெண் மயிலுக்கு முன் தோகையை விரித்து கம்பீரமாக ஆடும். மயில் தோகை விரித்து ஆடுவதே ஒரு தனி அழகு. எத்தனை வண்ணங்கள் ! எத்தனை ஜொலிப்புக்கள்!

பல வண்ணங்கொண்ட தனது தோகையை ஆண் மயில் விரித்து ஆடிப்பெண் மயிலைக் கவர்ச்சி செய்ய முயல்கிறது. அந்த வண்ணங்களெல்லாம் தங்கம் போலவும், நீலமாகவும், பச்சையாகவும் பிரகாசிப்பதைக் கண்டு மயங்காமலிருக்க முடியுமா?

இணை கூடுவதற்காக நேசிப்பதில் பலவகை உண்டு. அழகிய வண்ணங்கொண்ட கால்களை உடைய பறவைகள் வானில் எழுந்து பெட்டைக்கு முன்னால் தம் கால்கள் தோன்றும்படி மெதுவாகக் கீழே இறங்குகின்றன. சில பறவைகள் தமது அழகிய இறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு பெட்டையை நெருங்குகின்றன.

உள்ளான்

கூடு கட்டும் இடத்தை ஒவ்வொரு பறவையும் நன்கு ஆராய்ந்த பிறகே தேர்ந்தெடுக்கும். குஞ்சுகளுக்குப் போதுமான உணவு அருகிலேயே கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தையும் அது முக்கியமாகக் கொண்டிருக்கும்.

கூடு கட்டும் இடத்திற்காகப் பெரிய போராட்டாம் திகழ்வதுண்டு. போராட்டம் ஒரு வகையாக முடிந்த பிறகு ஒவ்வொரு ஆண் பறவையும் தான் வெற்றிகண்ட இடத்தைச் சொந்தமாக்கிக் கொள்கிறது. பிறகு அமைதி நிலவும். பெண் பறவையை அது நேசித்து இணை கூடும். அதன் பிறகு கூடு கட்டுவதும், குஞ்சுகளைக் காப்பதுமான பணிகள் தொடங்குகின்றன.