பறவைகளைப் பார்/பாதுகாப்பு நிறமும் போலித் ⁠தோற்றமும்

I. பாதுகாப்பு நிறமும் போலித்
தோற்றமும்

பறவைகளை விரும்பாதவர்கள் யார்? அழகாகவும் ஒயிலாகவும் உள்ள இந்த சிறு உயிர்களை நோக்கிக் கொண்டிருப்பதே ஒரு பெரிய இன்பம். அங்கு மிங்கும் பறப்பதும், தத்தித்தத்தி நடப்பதும், ஓடுவதும், பாடுவதும், பேசுவதும், அலகினால் கோதி அழகுசெய்து கொள்வதுமாக இப்படி அவை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருக்கின்றன. அவற்றின் பேச்சிற்காகவும், அவற்றின் அழகுக்காகவும் நாம் அவற்றை விரும்புகிறோம் பறவைகள் இல்லாத உலகம் சுவை குறைந்ததாகவே இருக்கும்.

அவற்றின் இறகுகளைப் பாருங்கள். எத்தனை விதங்கள்! எத்தனை அழகான வகைகளில் அந்த இறகுகள் அமைத்திருக்கின்றன! வர்ணிக்க முடியாதவாறு இறகுகளும், சிறகுகளும் பறவைகளுக்கு அமைந்திருக்கின்றன. அழகான இந்தச் சிறகுகள் பறவைகளுக்கு ஒரு முக்கியமான நன்மையைச் செய்கின்றன. பறவை ஒவ்வொன்றும் அது வாழும் நிலத்திற்கு ஏற்றவாறும், அங்குள்ள மரஞ்செடி கொடிகளுக்கு ஏற்றவாறும், நிறத்திலும் சாயலிலும் ஒத்து இருப்பதால் அதன் நிறமே அதற்கொரு தற்காப்பாக அமைகின்றது.

உள்ளான், கானக்கோழி போன்ற பறவைகள் மரங்களிலிருந்து விழும் தழைகளின் இடையிலும், புல் பூண்டு இவற்றின் இடையிலும் வாழ்கின்றன. அவற்றின் உடல் அமைப்பு வளைந்த கோடுகளையும் திட்டுக்களையும் கொண்டதாய் எளிதில் கண்டு கொள்ள முடியாதவாறு இருக்கின்றது. வேட்டையாடப்படுகின்ற கவுதாரி, காடை போன்ற பறவைகளின் நிறம் அவை வாழ்கின்ற வயல் மண்ணின் நிறம்போலப் பழுப்பாகவும் அங்கங்கே கரும்புள்ளிகள் உடையதாகவும் இருப்பதால், பக்கத்தில் போகும்போது கூட அவற்றை எளிதில் கண்டு கொள்ள முடியாது.

கதிரவன் ஒளி பளிச்சென்று வீசும் பசுமையான தழைகள் அடர்ந்த இடங்களில் வாழும் பறவைகள் கரு நீலம், பச்சை , மஞ்சள், சிவப்பு, ஆகிய நிறங்களைக் கொண்டிருக்கின்றன. பகைவர்களின் கண்கள் கூசும்படியாக இந்த நிறங்கள் அமைந்துள்ளன.

போலித் தோற்றம் என்பது பாதுகாப்பு நிறத்தினின்றும் வேறுபட்டது. வலிமையற்ற சில பறவைகளின் உருவம் வலிமையுள்ள வேறு இனத்தைச் சேர்ந்த பறவைகளின் உருவத்தை ஒத்திருக்கும். வைரிபோலத் தோன்றும் கொண்டைக் குயில் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இப்படி உருவம் அமைவதே அதற்குப் பாதுகாப்பாக உள்ளது.