பறவைகளைப் பார்/வலசை வருதலும் வளையமிடலும்

VIII. வலசை வருதலும் வளையமிடலும்

பறவைகள் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொன்றிற்குச் செல்வதும், பிறகு திரும்புவதும் ஒரு புதிராகும். ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் வடக்கு பகுதிகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவைகள், ஒவ்வோர் ஆண்டும் இலையுதிர் காலத்திலும், குளிர் காலத் துவக்கத்திலும் தெற்கத்திய வெப்பத்தை நாடி தொலை தூரம் வலசை வருகின்றன. பிறகு இள வேனிற் காலத்திலும், கோடைத் துவக்கத்திலும் பழைய இடத்திற்குத் திரும்புகின்றன.

காலநிலைமை மோசமாக இருந்தாலொழிய குறித்த காலந் தவறாமல் அவை இப்படி வலசை வருகின்றன. அவை வரும் நாளைக்கூடத் திட்டமாகச் சொல்லி விடலாம்.

சில பறவையினங்கள் நெடுந்தூரம் செல்லாமல் பக்கத்திலேயே ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வதுண்டு. உணவு நிலைமை மாறு பாட்டாலும், வாழ்க்கை அமைதிக் குறைவாலும் எல்லாப் பறவைகளும் ஓரளவு அக்கம்பக்கங்களுக் குச்செல்லுவதுண்டு.

கோடை காலத்தில் மலை உச்சிப் பகுதியில் வாழும் பறவைகள் குளிர் காலத்தில் மலையடிவாரப் பகுதிக்கோ, சமவெளிப் பகுதிக்கோ வருவதுண்டு. இந்தியாவில் சித்து கங்கை சமவெளியின் அருகிலுள்ள மிக உயர்ந்த இமயமலைப் பகுதிகளிலே இவ்வாறு நடைபெறுகின்றது.

நெடுந்தூரம் வலசை செல்லுகின்ற பறவைகள் எத்தனையோ துன்பங்களையும் ஆபத்துக்களையும் துணிச்சலோடு தாங்குகின்றன. மலை, காடு சமவெளி முதலியவற்றின் மேலே வானிலே பறப்பதோடு மிகப் பெரிய நீர்ப்பரப்புக்களையும் அவை

கடக்க வேண்டியிருக்கும். சில வேளைகளில் திடீரென்று புயல் வீசி இப் பறவைகளைத் திசை தடுமாறும்படி செய்வதுண்டு. கடலுக்குள் மூழ்கி இறக்கும்படியும் புயல் வீசும். பிரகாசமான விளக்குகள் இரவிலே வலசை வருகின்ற பறவைகளுக்குக் குழப்பம் விளைவிக்கும்.

வலசை வரும் பறவைகள் மிக வேகமாகப் பறக்காமல் மணி ஒன்றிற்கு 48 முதல் 64 கி. மீ. வரை பறக்கும். 80 கி.மீ.க்கு அதிகமாக பறப்பது அரிதே. சிறிய பறவைகள் மணி ஒன்றிற்கு 48 கி. மீ.க்கு அதிகமாகப் பறப்பதில்லை. தரைவாழ் பறவைகள் மணி ஓன்றிற்கு 64 முதல் 80 கி. மீ. வரை பறக்கும். காட்டு வாத்துகள் 80 முதல் 96 கி. மீ. வரை பறக்கும். வலசை வரும் பறவைகள் பொதுவாக 900 மீட்டர் உயரத்திற்குக் கீழேயே பறக்கும். ஆனால் சில பறவைகள் இன்னும் அதிக உயரத்தில் பறப்பதுண்டு.

கில பறவைகள் தமது பயணத்தை மத்தியில் நிறுத்தி நிறுத்தி ஓய்வு எடுத்துக்கொண்டு செல்லும். வேறு சில பறவைகள் உணவையும் ஓய்வையும் கருதாமல் ஒரேயடியாக நீண்ட தொலைவுகள் செல்லும். சில பகலில்தான் பயணம் செய்யும். சில பகலிலும், இரவிலும் செல்லும். ஆனால் பெரும்பாலான பறவைகள் இரவிலேயே செல்லும்.

பறவைகள் சாதாரணமாகக் கூட்டங் கூட்டமாகவே பயணம் செய்யும். கொக்கு, காட்டுவாத்து

 இலை 'V' போன்ற வரிசையில் அழகாகப் பறப்பதைப் பலரும் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள்.

மாரிக் குருவி, ஈப்பிடிப்பான் முதலிய தரை வாழ் பறவைகளும், நீர் வாழ் பறவைகளும் தம் தம் இனத்தோடு முதலில் கூட்டமாகக் கூடும். பிறகு கூவிக் கொண்டும் இரைச்சலிட்டுக் கொண்டும் வானில் எழுந்து, வலசை புறப்படும்.

சாதாரணமாக ஆண் பறவைகள்தான் முதலில் போகும். சில நாட்களுக்குப் பிறகு பெண் பறவைகள் அவற்றறைத் தொடரூம்.

பருவ காலத்திற்குத் தக்கவாறு பறவைகள் இடம் பெயருவதைப் பழங்காலத்திலிருந்தே மக்கள் அறிந்துள்ளார்கள். ஆனால் அதன் காரணத்தைப் பற்றி அவர்களுக்கு விநோதமான எண்ணங்கள் இருந்தன. ஓர் பருவத்தில் ஒரு பறவையினம் ஓரிடத்தில் இல்லாமல் இருந்தால் அந்த இனம் மண்ணிலே புகுந்து குளிர் காலம் முழுவதம் உறங்கிக் கொண்டிருப்பதாக மக்கள் சொல்வார்களாம்!

பறவைகள் இடம் பெயருவதைப் பற்றித் திட்டமிட்ட ஆராய்ச்சி பிற்காலத்தில்தான் தொடங்கியது, அவற்றின் பழக்கங்களை ஆராய்ந்தும் அவற்றிற்குக் கால்களில் வளையமிட்டும் பல உண்மைகளை அறியத்தொடங்கினர்.

ஒரு பறவையை உயிரோடு பிடித்து அதன் ஒரு காலில் ஒரு வளையத்தை மாட்டி விடுவார்கள். இந்த வளையத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணும், தேதியும் அதைக் கண்டுகொள்வதற்கான அடையாளங்களும் இருக்கும். அந்தப்பறவையைக் கைப்பற்றியவர்கள் இந்த வளையத்தை அனுப்ப வேண்டிய முகவரியும் இருக்கும். இவ்வளையத்தை மாட்டியபின் பறவையை விட்டுவிடுவார்கள். இப் பறவை சுடப்பட்டோ, தானாகவே இறந்தோ பிடிபடும் இடத்தைக் கொண்டு இது எந்தத் திசையில் எந்தப் பகுதிக்கு வலசை செல்லுகின்றது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இலையுதிர் காலத்தில் வடக்கிலிருந்து தெற்கே வலசை வருவதையும், இளவேனிற் காலத்தில் திரும்பிச் செல்வதையும் இச் சோதனையின் மூலம் கண்டு பிடித்துள்ளனர். வடமேற்கில் சைபீரியாவில் உள்ள பைகால்ஏரிப் பகுதியிவிருந்தும், ஆரல் ஏரிப் பகுதியிலிருந்தும் இந்தியாவுக்குப் பல பறவைகள் வருகின்றன. சில வகைக் கொக்குகள் மேற்கு ஜெர்மனியிலிருந்தும் வருகின்றன.

மங்கோலியாவிலிருந்தும் சீன துருக்கிஸ்தானத்திலிருந்தும் வடகிழக்கு இமயமலைத் தொடரிலுள்ள கணவாய்களின் வழியாக வருகின்ற பறவைகளும் உண்டு. இமயமலையின் வடமேற்கு, வட கிழக்குச் சரிவுகளில் உள்ள கணவாய்களே இந்தியா

விற்குள் நுழையும் முக்கியமான வழிகளாகும். ஆனால் சில பறவைகள் இயமலைச் சிகரங்களின் மேலேயே நேராகப் பறந்து வருகின்றன.

வளையமிடும் பரிசோதனையிலிருந்து பறவைகள் நெடுந்தொலைவு வலசை செல்லுகின்றன என்றும் தெரியவந்துள்ளது. இமயமலையிலிருந்து நீலகிரிக்குள்ள 2,400 கி. மீ. தொலைவிலே எங்கும் நில்லாமல் கானக்கோழி பறந்து வருகின்றதாம்! மத்திய ஆசியாவிலிருந்தும், சைரீரியாவிலிருந்தும் 3,200 முதல் 4,800 கி. மீ. தொலைவு வரை இமயமலைச் சிகரங்கள் வழியே பறந்து காட்டு வாத்து நமது ஏரிகளை வந்தடைகின்றது. சிட்டுக்குருவியின் அளவேயுள்ள வாலாட்டிக் குருவி மத்திய ஆசியாவிலிருந்தும் இமயமலைப் பகுதியிலிருந்தும் சமவெளிகளை நோக்கி வருகின்றது. கதிர்க் குருவி ஒவ்வொரு குளிர்காலத்திலும் 3,200 கி.மீ. பயணம் செய்து நம்மை யடைகின்றது. (இது சிட்டுக் குருவியின் பாதியளவே யிருக்கும்!)

கொண்டைக் குயில்

வழியிலே பல பறவைகள் உயிரிழக்க நேரிடுகிறது. அப்படியிருந்தும் பறவைகள் வலசை வருவதற்குக் காரணம் என்ன? முக்கியமாகக் கடுங் குளிரிலிருந்து தப்பித்துக் கொள்வதும், அக்காலத்தில் உணவு கிடைப்பது அரிதாவதுமே காரணங்களாகும். தண்ணீர் உறைந்து போய் விடுவதால் கடலிலிந்து மீன் முதலிய உணவு எதுவுமே நீர்வாழ் பறவைகளுக்குக் கிடைக்காது. கூடு கட்டும் இடங்கள் நன்கு கிடைப்பதாலும், கோடைகால வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளக் கருதியும், இளவேனிற் காலத்திலே பறவைகள் மீண்டும் திரும்பிப் பயணம் செய்கின்றன.

பறவைகளின் வலசை பற்றிய ஆராய்ச்சி மிகுந்த சுவையுள்ளதாகும். ஆனால் இதிலே இன்னும் விளங்காத பல பிரச்சினைகள் உள்ளன. எப்பொழுது புறப்படுவதென்று பறவைகளுக்கு எப்படித் தெரிகின்றது? அடையாள நிலப் பகுதியே இல்லாத கடலிலே அவை எப்படி வழி கண்டுபிடிக்கின்றன? ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட ஒரே இடத்திற்கே அவை எப்படி. வருகின்றன? கொண்டைக் குயில்கள் முட்டையிட்டு விட்டு இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் வந்துவிடுகின்றன. அப்படியிருந்தும் பல வாரங்களுக்குப் பிறகு இளங் கொண்டைக் குயில்கள் தம்மை வளர்த்த பறவைகளை விட்டுவிட்டு வலசை வந்து எப்படி முன்னாலேயே வந்த கொண்டைக் குயில்களோடு சேர்ந்து கொள்ளுகின்றன? இவை போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் தீர்வு காணவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.