பல்லவர் வரலாறு/20. சமயநிலை

20. சமயநிலை

சமண வீழ்ச்சிக்குக்காரணம்

இடைக்காலப் பல்லவர் காலத்தில் தமிழகம் நுழைந்த திகம்பர சமணத் துறவிமார் ஆடையின்றிக் திரிந்தமை, நீராடாது அழுக்குப் படிந்த மேனியராய் அலைந்தமை, இயற்கைக்கு மாறுபட்ட முறையில் தனித்துத் துறவு நிலையில் முற்ற இருந்தமை, கடுமையான நோன்புகள் நோற்றமை, சமயத்தின் பெயரால் தற்கொலை செய்து கொண்டமை இன்ன பிறவும் தமிழர் முன் இந்நாட்டிற்காணாத காட்சிகள் அல்லவா? இவை அனைத்தும் தமிழர் மரபுக்கே மாறுபட்டவை. பல்லவர் காலத் தமிழ் மக்கள் அகம் - புறம் கண்ட சங்கத் தமிழர் மரபினர்: சைவ-வைணவ வழிபாடு கொண்ட மரபினர். இயற்கையின் ஒரு கூறாகிய பெண்ணை (தாய்மையை)க் கடியத் தலைப்பட்ட சமணத்துறவிமாரை அத்தமிழ்மக்கள் எங்ஙனம் நேசித்தல் கூடும்? முதலிற் சமண முனிவருடைய கல்வி கேள்விகளிலும் பிற நற்பணிகளிலும் உவந்து சமணரான மக்கள், இம் மாறுபாடுகளை உணர்ந்த பின்னர் உள்ளுர வெறுத்தது வந்தனர்; அப்பர் துணிந்து வெளிப்பட்டவுடன் சிலர் வெளிப்போந்தனர்; அரசனே மாறியவுடன் தொண்டை நாடே சமயம் மாறியதென்னலாம். இந்நிலைமையே பாண்டிநாட்டிலும் இருந்து, சம்பந்தரால் மாறியது.

உடனே இம் மாறுபாடு எப்படி உண்டானது?

அப்பர்க்கு முன்னரே நாயன்மார் பலர் சமணரைப் பின் பற்றி, மக்களைத் தம்வழித் திருப்பத் தண்ணிப் பந்தர் வைத்தல், மடங்கள் வைத்துச் சமயக் கல்வியைப் புகட்டல், சமயப் போர் வீரரைத் தயாரித்தல், திருப்பணிகள் செய்ய மாணவரைத் தயாரித்தல். அடியார்கட்கு அன்னமளித்தல், அடியார் எப்பொழுது, வந்தாலும் உபசரித்து வேண்டின தருதல் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுப் பொதுமக்கள் உள்ளத்தைப் படிப்படியாகத் தம் பழைய சமயத்திற்கு ஈர்த்து வந்தனர். கோவில்களில் ஆடல் பாடல்கள் தோன்றின; நாடகங்கள் நடிக்கப் பெற்றன; பலவகைப் படைப்புப் பொருள்கள் (பிரசாதங்கள்) அடியார்க்குத்தரப்பெற்றன; இறைவர்மீது உள்ளத்தை உருக்கும் பதிகங்கள் இசைக்கருவிகள் துணையுடன் பாடப்பட்டன. ‘உலக வாழ்க்கை இன்பமானது; ஆண் - பெண் வாழ்வதே இன்ப வாழ்க்கை. இதுவே இறைவன் ஆணை: உலக இன்பங்களை நுகர்ந்து கொண்டே இறைவன்பால் பக்தி பூண்டு அவரவர் நிலைக்கேற்பத் திருப்பணிகளும் துயவாழ்வும் நடத்திப் போதலே போதும்’ என்று சைவரும் வைணவரும் கூறத் தொடங்கினர். மக்கள் மனம் தெளிவுற்றது; அச்சமற்றது. இந்த எளிய போதனையே பொதுமக்கள் விரும்புவதன்றோ? அதனால், சைவர் தொகை பெருகலாயிற்று: அதன் பயனாகச் சமணர் தொகை குறையலாயிற்று. சமணர் யாதுதான் செய்வர்? அரசன் அரவணைப்பும் ஒழியவே, சமண முனிவர் - பலர் பெருந்திய உள்ளம் உடையவராய்க் கங்கநாடு புக்கனர். அங்குத்தம் சமய இலக்கியப் பணிகளைச் செய்து புகழ் பெற்று வந்தனர்.[1]

சைவ சமயம்

வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் பிறவற்றிலும் வல்ல மறையவர் நூற்றுக் கணக்காகப் பல்லவர் நாட்டிற் குடியேற்றம் பெற்றனர். இங்ஙனம் மறையவர் தொகை பெருகப் பெருக, அவரது வைதிக சமயம் பழந்தமிழ்ச்சைவசமயத்தோடு இரண்டறக் கலந்தது; அவர் தம் உருத்திர வணக்கம் நன்றாகச் சிவ வணக்கத்திற் கலந்துவிட்டது. சங்ககால இறுதியிலேயே உண்டான சிவஉருத்திரக் கலப்பைத் திருவாசகத்திற் காணலாம். பின்வந்த மறையவரால் மிகுந்த சமயக் கலப்பு ஏற்பட்டது. என்பதைக் கி.பி. 7ஆம் நூற்றாண்டிற் செய்யப்பெற்ற அப்பர், சம்பந்தர் பாடல்களைக் கொண்டு நன்குணரலாம். வேத வேள்வியே இல்லாத பழைய சிவன், வடவர் கலப்பால் வேள்விக்குரிய மகாதேவன் ஆயினன். தமிழ் முருகன் சுப்பிரமணியன் ஆயினன்; தமிழக் கொற்றவை துர்க்கை ஆயினள்[2] பல பல கிளைச் சமயத்தார் வழிபட்டுவந்த மூர்த்திகளை எல்லாம் சிவனுடன் சேர்த்து, ஐயனார் சிவனது அம்சம், விநாயகர் சிவனது பிள்ளை என்றெல்லாம் கூறி, அதற்கேற்பக் கதைகள் வரையப்பெற்றன. இத்தகைய மாறுதல் தமிழ்நாட்டில் ஏறத்தாழக் கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளில் நடந்து முடிந்தன என்னலாம். சைவ சமயம் பல கிளைகளாகப் பிரிந்து இருந்தது. அப் பல பிரிவினர், பெளத்தரும் சமணரும் தெற்கே வந்தபொழுதோ-அதற்கு முன்னரோ - பின்னரோ தென்னாடு புக்கனர். இவரே பாசுபதர், காபாலிகர், காளாமுகர் முதலியோர். இவர்தம் பெயர்களில் ஒன்றேனும் தமிழ்ப் பெயராக இருத்தல் அருமை; ‘தேவ சோமா’ முதலிய பெயர்களை மத்த விலாசத்திற் காண்க. இவர்தம் பழக்க வழக்கங்களும் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கட்கு முற்றும் மாறுபட்டவை. ‘அன்பே சிவம்’ என்ற மணிவாசகர் - அப்பர் - சம்பந்தர் கொண்ட சைவ சமயத்திற்கும் இவர்கள் கொண்ட சைவ சமயத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு காணலாம். எனினும், இக் கிளையினர் கொள்கைகள் பல தேவாரப் பதிகங்களிற் புகுந்துவிட்டன. இஃது அக்கால நிலையேயன்றி வேறன்று. சமண-பெளத்த சமயங்களை அடக்கத் தொடங்கிய பழந்தமிழ்ச்சைவம், ஒருபால் வைதிகத்தையும் மறுபால் இக் கிளைகளையும் தழுவி இவற்றின் துணைகொண்டு அவற்றை அடக்கிவிட்டது என்பது நன்கு தெரிகிறது.

பாசுபதர்

இவர் பழக்கங்களும், நம்பிக்கைகளும் விந்தையானவை இவர் சில சமயங்களில் ‘மயேச்சுரர்’ எனவும் கூறப் பெறுவர். இவர் திருநீற்றை அணிவர்; சிவனே முழு முதற்கடவுள் என்பர்; லிங்கத்தை அல்லது சிவமூர்த்தத்தை வணங்குவர். இவருட் சிலர் தலை முடியைக் கத்தரித்து விடுவர்; சிலர் மொட்டையடித்துவிடுவர்; சிலர் குடுமி வைத்திருப்பர். சிலர் உடல் முழுதும் நீறுபூசி ஆடையின்றி நடமாடினர். ஆயின், இவர் அனைவரும் உலகப்பற்றை விட்டு மேனிலை பெறத் தவ முயற்சி மேற்கொண்டிருந்தனர். இவருட்சிலர் சிறுகணங்கள் எனப்பட்டவற்றினிடம் நம்பிக்கை வைத்தனர். அவற்றை உளங்குளிரச் செய்ய மக்களைப் பலியிடல், இறந்தவர் இறைச்சியைப் படைத்தல் முதலியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.[3]

காபாலிகர்

இவர் பைரவரை வணங்கினவர், மண்டை ஒடுகளை மாலைகளாக்கி அணிந்து கொண்டிருந்தனர். மனிதர் உட்பட எல்லா உயிர்களையும் பைரவர்க்குப் பலியிட்டனர்; பலியிட்ட உடல் இறைச்சியையும் மதுவையும் உட்கொண்டனர்; பெண்களை ‘ஆதி சக்தி அவதாரம்’ என்று வணங்கினர்; சிவ வழிபாட்டில் எல்லாச் சமயத்தவரும் சமமானவரே என்ற கொள்கை கொண்டவர். இவர்கள் முயற்சியால் சக்தி வணக்கம் மிகுதிப்பட்டது.[4] இவருள் பெண்பாலரும் இருந்தனர் என்பது மத்தவிலாசத்தாற் புலனாகிறது.

காளாமுகர்

இவர் ‘லகுலீச பாசுபதர்’ என்னும் பெயர் பெற்றவர் பக்தி முறை பின்பற்றியவர்: இறைவனைப் பற்றிப் பாடலும் மெய்மறந்து ஆடலும் மந்திரம் செபித்தலும் செய்தனர். இவர் அனைவரும் சிறந்த கல்வி கற்றவர். இவர்கள் செல்வாக்கு, தமிழகத்தில் மிகுந்திருந்தது. சோழர் காலத்தில் பல கோவில்கள் இவர்கள் மேற்பார்வையில் விடப்பட்டிருந்தனர்.

வைணவம்

சைவம் தமிழ் நாட்டிற்கு உரித்தானது போன்றே வைணவமும் இந்நாட்டிற்கு உரியதே ஆகும். இதனை மாயோன் மேய காடுறை யுலகம் என்ற தொல்காப்பியர் சூத்திரம் நன்கு விளக்கும். இதன் வளர்ச்சி ஓரளவு சிலப்பதிகாரத்தால் நன்கறியலாம். சைவத்தில் பல புதிய கொள்கைகள் புகுந்தாற் போல வைணவத்திற் புகுந்த புதியன எவை என்பது அறியக்கூடவில்லை. ஆயின், திருமாலின் பல அவதாரக் கதைகளும் புராணச் செய்திகளும் பிறவும் வன்மையுற வழக்குப்பெற்ற காலம் பல்லவர் காலம் என்னலாம்.

வைணவ வேந்தர்

இவ் வைணவ சமயம் முதலில் பெளத்த சமயத்துடனும் பின்னர்ச் சமண சமயத்துடனும் போரிட்டது. திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் இவர்தம் பாசுரங்கள் அவர் காலச் சமய நிலையை நன்குணர்த்துவன ஆகும். பல்லவ அரசருள் இளவரசன் விஷ்ணுகோபன். இரண்டாம் சிம்மவர்மன், விஷ்ணுகோபவர்மன் முதலியோர் ‘பரம பாகவதர்’ என்று நம்மைக் கூறிக்கொண்டனர். ‘சமயங் காப்போர்’ என்றும் தம்மைப் பாராட்டிக் கொண்டனர். பிற்காலப் பல்லவருள் சிம்மவிஷ்ணு, நரசிம்மவர்மன், இரண்டாம் நந்திவர்மன் முதலியோர் சிறந்த வைணவப்பற்று உடையவர். அவர்களாற்றான் பல்லவப் பெருநாட்டில் பெருமாள் கோவில்கள் பல தோன்றின. குகைக் கோவில்கள் பல குடையப்பட்டன; வைணவ மடங்கள் காவேரிப்பாக்கம் முதலிய இடங்களில் தோன்றின. சைவத்தைப் பின்பற்றிய பல்லவ அரசரும் வைணவத்திற்கும் பலவகையில் ஆக்கம் அளித்தனர். சுருங்கக்கூறின், பல்லவர் காலத்திற் சைவமும் வைணவமும் பல்லவ அரசரால் பேணி வளர்க்கப் பெற்றன என்று கூறல் தவறாகாது.

சமயக் கொடுமை

முதலிற் பல சமயங்களும் நன்முறையில் நடந்துவந்தன. ஆயின், நாளடைவில் சமய வாதங்கள் மிகுதிப்பட்டன. அவற்றால் ஒன்றுக்கென்று பகைமை முற்றத்தொடங்கியது; அரசர் செல்வாக்குப் பெற்ற சமயம், ஏனைய சமயங்களை ஏளனம் செய்யத் தலைப்பட்டது; மறைமுகமாகச் சில தீமைகளும் நிகழ்ந்திருக்கலாம். இப் பகைமை அப்பர்க்கு முன்பே வளர்ந்து வந்தது என்பதைத் தண்டியடிகள் புராணமும் நமிநந்தி அடிகள் புராணமும் நன்கு விளக்குகின்றன.

சமணர்-சைவர் கொடுமை

(1) தங்கள் சமயத்திற் சிறந்து இருந்த தருமசேனர் என்ற திருநாவுக்கரசர் சைவராக மாறியவுடன் திகம்பர சமணர் அரசனிடம் முறையிட்டனர்; அரசன் அவர் வயப்பட்டுச் சமணனாக இருந்தவன் ஆதலின், திகம்பர சமணர் அப்பரை ஒழிக்க நீற்றறையில் இடத் தூண்டினர்; விடம் கலந்த உணவை ஊட்டினர்; யானையால் இடறச் செய்தனர். இறுதியிற் கல்லிற் கட்டிக் கடலில் பாய்ச்சினர். சமணச் சார்புடைய மன்னன் இக்கொடுமைகள் செய்யப்பின்வாங்கவில்லை. இறுதியில் அப்பர் வென்றார்; அரசனும் சைவன் ஆனான். முன்பு சமணச் சார்பு கொண்டு சைவர்க்குத் தீங்கிழைத்தபடியே. அவன் சைவன் ஆனதும் சிறப்புற்ற பாதிரிப்புலியூரில் இருந்த சமணக் கல்லூரியை ஒழித்தான்! பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொணர்ந்து திருவதிகையிற் குணதர ஈச்சரம் என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான். சமணர் முன்னர் விதைத்ததையே அறுவடை செய்தனர்.

(2) இங்ஙனமே இத்திகம்பர சமணர் மதுரையில் சம்பந்தர் தங்கி இருந்த மடத்திற்கே நெருப்பிட்டு விட்டனர். அந்நெருப்பிட்ட பயனே. அவர்கள் கழுவேற நேர்ந்தது. இந்த நிகழ்ச்சியிலும் முதலில் நெடுமாறன் அத் திகம்பரர் பக்கமே சார்ந்து, ‘கண்ட முட்டு, கேட்ட முட்டு’ என்றான். ஆனால், அவனே சைவனாக மாறியவுடன். அத் திகம்பரரையே கழுவேறச் செய்தான். திகம்பரர் மடத்திற்குத் தீவைத்த கொடுமையை எண்ணியே. சம்பந்தர் வாய்திறவாதிருந்தார் என்று சேக்கிழார் கூறுதல் சிந்திக்கத்தக்கது.

இவை நடந்தனவா?

(1) மேற் சொன்ன இரண்டு நாட்டு நிகழ்ச்சிகளிலும் முற்பகுதியின. சமணர் செய்த கொடுமைகள், பின் இரண் சவர் செய்த கொடுமைகள். கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்ன பாடலியில் இருந்த புகழ்பெற்ற சமணக் கல்லூரியைப் பற்றிய குறிப்பே காணப்படவில்லை. அச் சமணரும், பாண்டி நாட்டுச் சமணர் பலரும் கங்கநாட்டிற்குப் போய்விட்டனர்;[5] சிலர் புதுக்கோட்டைச் சீமைக்குப் போய்விட்டனர்.[6] இக் குறிப்புகளை நடுவுநிலையினின்றும் ஆராயின். பெரியபுராணம் கூறும் மேற்சொன்ன செய்திகள் பொய்யெனக் கூறல் இயலாது. அப்பர் சமணரால் துன்புறுத்தப்பட்டவர் என்பதை அவருடைய பாடல்களே விளக்கி நிற்கின்றன. வேறு சான்று வேண்டுவதில்லை. குணதர ஈச்சரம் என்ற கோவில் இப்பொழுதும் திருவதிகையில் இருக்கிறது. அது மகேந்திரன் கட்டியதுதான் என்று அதன் தூண்களே சான்று பகர்கின்றன.[7] தான் வேறு சமயத்திலிருந்து சைவனாக மாறினான் என்பதை மகேந்திரனே தன் கல்வெட்டில் அறிவித்துள்ளான். அவன் கொண்டிருந்த வேறு சமயம் சமணமே என்பதைச் சித்தன்னவாசல் ஓவியங்கள் மெய்ப்பிக்கின்றன.

(2) சம்பந்தர் பதிகங்களை நன்கு ஆராயின், அவர் திகம்பர சமணரை மனமார வெறுத்தவர்; அவர்களால் சைவசமயம் பாழாகியது என்பதை நம்பியவர் என்பன நன்கு வெளியாகின்றன. இராசராசன் காலத்தவரான நம்பியாண்டார் நம்பிதாம் பாடிய சம்பந்தரைப் பற்றிய பாக்களில் பல இடங்களில் சமணர் கழுவேற்றப்பட்டனர் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். சான்றாக ஒன்று காண்க: -

“கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக்-காதலால்

புண்கெழுவு செம்புனலாறோடப் பொருதவரை
வன்கழுவில் தைத்த மறையோனை”

[8]

நம்பி, சேக்கிழார்க்கு 200 ஆண்டுகள் முற்பட்டவர். இவர் எதனைச்சான்றாகக்கொண்டு இங்ஙனம் பல இடங்களிற் குறித்தார்? இவர் காலத்தில் அச் செய்தி நாடெங்கும் பரவி இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. அன்றோ? இது நிற்க.

வைணவர் கொடுமை

(1) இலக்கியச் சான்று: திருமங்கை ஆழ்வார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டினர். இரண்டாம் நந்திவர்மன் காலத்தினர். இவர் சோழநாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் சிறந்த வைணவ பக்தர். இவர் நாகப்பட்டினத்துப் பெளத்த விகாரத்தில் இருந்த பொன்னாற் செய்யப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து, அதைக் கொண்டு பல கோவில் திருப்பணிகள் செய்தனர் என்று குருபரம்பரை கூறுகின்றது. இவர் பெளத்த-சமண சமயங்கள் மீது நாயன்மாரைப்போலவே வெறுப்புற்றவர் என்பதை இவர் பாடல்களைக் கொண்டு நன்குணரலாம்.

(2) இவரது காலத்தவரே தொண்டர் அடிப்பொடி ஆழ்வார். அவரும் சமண-பெளத்தரை அறவே வெறுத்தவர்; அமயம் வாய்ப்பின், அவர்களைக் கொல்வதே நல்லது என்ற எண்ணம் கொண்டவர். இதனை அப்பெரியார் பாடலே உணர்த்தல் காண்க:

“வெறுப்பொடு சமணமுண்டர் விதியில்சாக் கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையே ஆங்கே
 அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமாநகர் உளானே!”

பட்டயச் சான்று

“இரண்டாம் நந்திவர்மன் தரும சாத்திர முறைப்படி நடவாத மக்களை அழித்து, இந்த நிலத்தைக் கைப்பற்றி, வரியிலியாகப்

பிராமணர்க்கு அளித்தான்” என்பது உதயேந்திரப் பட்டயத்திற் காணப்படுகிறது. இக்குறிப்பைப் பற்றி அறிஞர் தாமஸ் போக்ஸ், “இந்த நிலத்துக்கு உரியவர் சமணர் அவர்களை அழித்து இந்நிலத்தைப் பிறர்க்குக் கொடுத்தமை என்பது, பல்லவ மல்லன் வரலாற்றில் ஒரு களங்கத்தை உண்டுபண்ணிவிட்டது. எனினும், இச்செயல் அக்காலநிலையை ஒட்டியதாகும்”[9] எனக் கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது. இதனால் வைணவனான பல்லமல்லன், தன் முன்னோர் சமணர்க்கு விட்டிருந்த நிலத்தைக் கவர்ந்து, மறையவர்க்கு உரிமையாக்கினான் என்பது வெளிப்படை.

பல்லவ அரசர் பௌத்தர்க்கு நிலம் விட்டதாக இது காறும் ஒரு பட்டயமோ-கல்வெட்டோ கூறாதிருத்தல் இங்கு நினைக்கத்தக்கது.[10]

சிற்பச் சான்று

பரமேச்சுர விண்ணகரத்தின் உட்சுவர் நிறையச் சிற்பங்கள் அழகொழுகக் காட்சி அளிக்கின்றன. அவற்றில் சில சிற்பங்கள் பல்லவ மன்னன் சமயக் கொள்கையைக் குறிக்கின்றன; ‘அரசன் அரியணையில் அமர்ந்துள்ளான். அவனுக்குப்பின் ஒருத்தி கவரி வீசுகிறாள். அரசர்க்கு எதிரில் துறவிகள் இருவர் கழுவேற்றப்பட் டுள்ளனர். இச்சிற்பத்திற்கு வலப்புறம் ஆழ்வார் சிலைகொண்ட கோவிலையும் அதன் வலப்புறம் வைகுந்தப்பெருமாள் கோவில் போன்றகோவிலையும் குறிக்கும் சிற்பங்கள் காண்கின்றன. ஆழ்வார் சிலை, முதல் மூன்று ஆழ்வாருள் ஒருவரைக் குறிப்பதாகலாம். அவர் அக்காலத்திற்பூசிக்கப்பட்டனர்போலும்! சமணர், புத்தர் போன்ற புறச் சமயத்தவரை அழித்துவைணவம் நிலை நாட்ட முயன்றதைத் தான் இச் சிற்பங்கள் உணர்த்துகின்றன. இஃது அக்காலத்தை ஒட்டிய செயல் போலும் கழுவேற்றப்பட்டவர் யாவராயினும் ஆகுக: இச் சிற்பங்களால் பல்லவமல்லன் நடத்தை இன்னது என்பது நன்கு புலனாகிறது.

பெளத்த-சமணப் போராட்டங்கள் பெரும்பாலும் ஏழாம் நூற்றாண்டோடு முடிந்துவிட்டன எனக் கூறலாம். அதற்குப்பிற்பட்ட கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் சமணர் கழுவேற்றப் பட்டனர். எனின், வீராவேசத்துடன் சமண-சைவ வாதங்கள் நடந்த சம்பந்தர் காலத்தில்-அப்பரைப் பல்லாற்றானும் கொல்ல முயன்ற காலத்தில்-சம்பந்தர் இருந்த மடத்திற்கே நெருப்பிட்ட அக்காலத்தில் சமணர் கழுவேற்றப்பட்டனர் என்பதில் ஐயப்படத்தக்க குறிப்பு யாதுளது? இச்சமயக் கொடுமைகள், தாமஸ்போக்ஸ் போன்ற ஆராய்ச்சி அறிஞர் கூறுமாறு, ‘அக்கால நிலைமைக்கேற்ப நடைபெற்றனவாகும்’ எனக்கோடிலே வரலாற்றுணர்ச்சியுடையார் செயற்பாலது.


உயிர்ப்பலி இடுதல்

முன்னுரை

கபாலிகர் பாசுபதர் முதலிய சைவ சமய வேறு பிரிவினர் பைரவர்க்கும் காளிக்கும் செந்நீரையும் மதுவையும் படைத்தல் வழக்கம். இவ்விரு கடவுளர்க்கும் உயிர்களைப் பலியிட்டும் வந்தனர். இப் பழக்கம் நெடுங்காலமாகவே இந்தியா முழுவதும் இருந்த பழக்கமாகும். இது பல்லவர் காலத்திலும் இருந்ததென்பது அறியத் தக்கது. ஆயின் பல்லவ அரசர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர் என்பதைக் கூறச் சான்று இல்லை. அவர்கள் காலத்தில் துர்க்கை, காளி முதலிய பல வடிவங்களில் வழிபடப் பட்டு வந்தது பெண் தெய்வமாகும். கயிலாசநாதர் கோவில் சிற்பங்களில்

446. The spirit of the then was not unfavourable to the religious presecution of its portrayal on the walls temple of the “Victorious creed”.

447. “The action was in close accordance with the spirit of the age’ - Thomas Foulkes

19

‘பைரவ மூர்த்தி, பிரம்ம சிரச்சேத மூர்த்தி ஆகியதேவரைக் குறிப்பனவும் உள. காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் துர்க்கை, காளி (மகிடாசுரமர்த்தினி) வடிவங்களைக் காணலாம். இவ்வடிவங்களைக் கண்ட டாக்டர் ஒகேல் என்பவர், “ஒவ்வொரு சிற்பமும் காளிக்குத் தலையை அறுத்துக் காணிக்கையாகத் தருதலையே குறிக்கின்றது. இச் செயல் பத்தர்தம் மனவுறுதியை நன்கு காட்டுகிறது” எனக் குறித்துள்ளார்.[11] தலையை அறுக்கத் துணிந்த பத்தனுக்கு எதிர்புறத்தே வேறொரு பத்தன்தன் உள்ளத்து உணர்ச்சியால் உயர்ந்த பத்தி நிலையிலிருந்து வழிபாடு செய்தலையும் அச் சிற்பங்கள் உணர்த்துகின்றன.[12]

சிற்பங்கள்

மகேந்திரவர்மன் காலத்துத்திருச்சிராப்பள்ளி-குகைக்கோவிலின் துர்க்கைக்கு முன் ஒருவன் தன்கழுத்தை அறுத்துப் பலியிடுவதாகச் சிற்பம் காணப்படுகிறது. இக் காட்சி புள்ள மங்கையில் உள்ள சிவன் கோவிலிலும் காணலாம். அங்குள்ள சிற்பங்களில் ஒருவன்கழுத்தை அரிந்துகொள்வதைக் குறிக்கிறது. மற்றொருவன் தன் தொடை யிலிருந்து தசையை அறுத்துக்காளிக்குப் பலியாகத் தருகிறான். மாமல்லபுரத்தில் உள்ள வராகப்பெருமாள் கோவிலில் அச்சுறுத்தும் தோற்றத்துடன் கூடிய துர்க்கை உருவம் காணப்படுகிறது. அங்கும் அழகன் ஒருவன் மதுவேந்திய பாத்திரத்துடன் துர்க்கையை வணங்குகின்றான். வேறொருவன் கோடரி ஒன்றை ஏந்திக் கொண்டே வணங்குகிறான். இத்தகைய சிற்பங்கள் அக்கால உயிர்ப்பலியை நினைப்பூட்டுவனவே அன்றி வேறல்ல.[13]

சான்றுகள்

இங்ஙனம் பைரவர்க்கும் காளிக்கும்.உயிர்ப்பலி (மக்கள் பலி) இடல் பண்டை வழக்கமே என்பது வரலாறு கூறும் செய்தியாகும். திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) சிவபெருமானுக்குக் கொங்கு வீரர் தம் தலைகளையும் நாக்குகளையும் பலி இட்டமை கல்வெட்டுச் செய்தியாகும்.

இப் பிற்காலக் கல்வெட்டுச் செய்திகளையும் முன்சொன்ன சிற்பங்களையும் நோக்க, பல்லவர் காலத்தில் உயிர்ப்பலி இடுதல் என்பது கிளைச்சமயத்தார் சிலரேனும் கையாண்டு வந்த பழக்கம் என்பதை அழுத்தமாகக் கூறலாம், அஃதாவது பைரவர்க்கும் காளிக்கும் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டது எனக் கூறலாம் கூறவே, சிறுத்தொண்டர் தம் ஒரே மகனைப் பைரவர்க்குப் பலியிட்டுச் சமைத்துப் படைத்ததில் வியப்பில்லை அன்றோ?


  1. M.V.K. Rao’s “Gangas of Talakad”.
  2. T.R.Sesha Iyengar’s “Ancient Dravidians."
  3. M.V.K. Rao’s Gangas of talakad p.189. ‘உயிர்ப்பலி பற்றிய செய்தி இப்பகுதியின் பிற்பட்ட பிரிவிலே விளக்கப்பட்டடுள்ளது.
  4. Ibid. pp.188-189
  5. MVK. Rao’s “Gangas of Talakad” pp.272.
  6. “Naratha Malai & its Temples, J.O.R. 1933.
  7. நான் இக் கோவிலை நேரிற் சென்று பார்வையிட்டேன்.
  8. wide his ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை 11ஆந்திருமுறை.
  9. Indian Antiquary, Vol. VIII. p.281.
  10. Dr.c. Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, p.172.
  11. K. Nilakanta Sastry’s article in “Kalaimagal’ (April, 1932.)
  12. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the - Pallavas’, p.183.
  13. Ibid. p.185.
"https://ta.wikisource.org/w/index.php?title=பல்லவர்_வரலாறு/20._சமயநிலை&oldid=583653" இலிருந்து மீள்விக்கப்பட்டது