பல்லவர் வரலாறு/21. இசையும் நடனமும்

21. இசையும் நடனமும்

இசை

நாகரிக நாட்டுக் கலைகளாகப் போற்றப்படும் இசை, நடனம், ஓவியம். சிற்பம், காவியம் என்பவற்றைப் பல்லவ அரசர் போற்றி வளர்த்தனர். ஒவியமும் சிற்பமும் அவர் தம் ஆட்சியில் பெற்றிருந்த மேனிலையை அவர்தம் குகைக் கோவில்களிலும் கயிலாசநாதர் கோவில். வைகுந்தப் பெருமாள் கோவில் போன்ற கற்றளிகளிலும் கண்டு கண்டுகளிக்கலாம். அவை இந்நூல் அடுத்த பகுதியிலும் பிற இடங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. ஆதலின், இங்கு இசையும் நடனமும் சிறிது காண்போம்.

மகேந்திரவர்மனும் இசையும்

இவன் பல்லாவரம் குகைக்கோவில் கல்வெட்டில் தன்னைச் ‘சங்கீரண சாதி’ என்று கூறியுள்ளான். இதனைப் பிறழ உணர்ந்த அறிஞர் பலர், இவன் தமிழ்த் தாய்க்கும் சிம்மவிஷ்ணுவுக்கும் பிறந்தவன் எனப் பொருள் கொண்டனர். அது தவறு. இவன் தாளவகைகள் ஐந்தனுள் (சதுரஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம். சங்கீரனம்) கடைசியில் உள்ள சங்கீரணம் என்பதைப் புதிதாகக் கண்டு, அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைத்தவன் என்பது பிற்கால ஆராய்ச்சியாளர் கருத்து. இவனது குடுமியாமலைக் கல்வெட்டு ஒன்று. ‘சித்தம் நமசிவாய’ என்று தொடங்கிப் பலவகைப் பண்களையும் தாள வகைகளையும் விளக்கி, முடிவில், ‘இவை எட்டிற்கும் ஏழிற்கும் உரிய’ என்று முடித்துள்ளது. இதனால், ‘மகேந்திரன் கண்டறிந்த பண்கள் எட்டு நரம்புகளைக கொண்ட வீணைக்கும் பயன்படும். ஏழு நரம்புகளை உடைய வீணைக்கும் உரியன’ என்பது பொருளாகும். ஏழு நரம்புகளைக் கொண்ட வீணையே யாண்டும் இருப்பது. மற்றதை மகேந்திரன் புதிதாகக் கண்டு பிடித்தான் போலும்![1]

மாமண்டூர்க் கல்வெட்டில் ‘ஊர்வரி... கந்தர்வ சாத்திரம்’ என்று மகேந்திரன் இசைச் சிறப்பைக் குறித்துள்ளான். இப்பேரரசன் தான் இயற்றியுள்ள மத்த விலாசத்தில் இசை, நடனம் பற்றியதன் விருப்பைப் பிறர் வாயிலாக வெளிப்படுத்துதல் நோக்கத்தக்கது. “இசை எனது செல்வம் ஆநடிப்பவர் தம் அழகிய நடன்ம் பார்க்க இன்பமானது. தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ப அவர்கள் திறம்பட மெய்ப்பாடுகளை விளக்கி நடித்தல் இனிமையாக இருக்கின்றது. ‘கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல, ஐயநுண் இடையார் ஆடல் இன்பத்துள் ஆழ்த்துகின்றது.”

மகேத்திரவர்மன் பரிவாதினீ என்னும் பெயர் கொண்ட வீணையில் வல்லவனாக இருந்தான் போலும்! ‘ஒரு பெண்தன் தோழியை அனைத்துக் கொண்டு படுப்பதுபோல நங்கை ஒருத்தி பரிவாதினியை அணைத்துக்கொண்டு ‘உறங்கினாள்’ என்று அசுவகோஷர் புத்த சரிதத்தில் கூறுதல் காணலாம். மேலும் அவர், ‘இந்த வீணை பொன் நரம்புகளை உடையது’ என்கிறார். எனவே, பேரரசனான மகேந்திரவர்மன் சரியான வீணையைத்தான் வைத்திருந்தான் என்பது புலனாகிறது.[2]

இராசசிம்மனும் இசையும்

இராசசிம்மனும் இசையில் பெரும் புலமை பெற்றவன் ஆவன். அவனுடைய பல விருதுப் பெயர்களுள் ‘வாத்ய வித்யாதரன்’ (இசைக் கருவியில் வித்யாதரன்), ஆதோத்ய[3] தும்புரு, (தும்புருவைப்போல ஆதோத்ய வீணை வாசிப்பில் வல்லவன்). வீணா நாரதன் (வீணையில் நாரதன் போன்றவன்) என்பன அவனது, இசைப் புலமையை நன்கு விளக்குகின்றன்.

நாயன்மார் இசை

பண்களையும் தாள வகைகளையும் உண்டாக்கி அமைத்தவன். ஒருவன், பலவகை வாத்தியங்களில் சிறப்பாக வித்யாதரரையும் நாதனையும் தும்புருவையும் நிகர்த்தவன் ஒருவன் எனின் அம்ம்ம்ம! இப்பல்லவப் பெருவேந்தர் காலம் இசைக்காலமே ஆகும் என்பதில் ஐயமுண்டோ? இதனாற்றான் போலும், மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசர் பலவகைப் பண்களைக் கொண்ட, அரியதேனினும் இனிய தேவாரப் பதிகங்களைத் தலங்கள் தோறும் பாடிக்களித்தார்! பரமனுக்கும் பல்லவ நாட்டு மக்கட்கும் செவி விருந்தளித்தார்! அவர் காலத்துச் சம்பந்தரும் இசைப் புலவராகி மிளிர்ந்தார்! சம்பந்தர் இசைப் பாடலிற் பெரிதும் வல்லவர். அவர் பாடிய பாக்களை யாழில் அமைத்துத் தலங்கள் தோறும் பாடிவந்தவர் திருநீலகண்ட ‘யாழ்ப்பர்னர்’ ஆவர். அவரும் வாசிக்க இயலா வகையில் சம்பந்தர் ஒரு பாட்டைப்பாடித் திகைக்க வைத்தார்.[4] எனின், அக்கால இசை மேம்பாட்டை என்னென்பது!

அப்பர், ‘ஈசன் எந்தை இணையடி நிழல்-மாசில்லாத விணை ஒலி போன்றது என்று கூறுவதிலிருந்து அவரது இசைப் புலமையும் இசை இன்பத்தில் ஆழ்ந்து கிடந்த அவரது நுட்ப உணர்வினையும் நாம் நன்குணரலாம். சுந்தரரும் இசையிற் சிறந்தவர். இம்மூவர் தேன் பாடல்களும் திெவிட்டாத பேரின்பம் பயப்பனவாகும்; கேட்போர் செவி வழியாப் புகுந்து உள்ளத்தைப் பேரின்ப மயம் ஆக்கிக் கருவி கரண்ங்களை ஒயச்செய்து இசை உலகமாகிய பேரின்பப் பெருவாழ்வில் உய்ப்பனவாகும். சைவசமயம் அக்காலத்தில் மிகுதியாகப் பரவியதற்குற்ற சிறந்த காரணங்கள் சிலவற்றுள் இசைப்பாட்டு ஒன்றாகும். இந்த இசையை வளர்த்தவருள் முதல்வன் மகேந்திரவர்மன். அவன் காலத்தில் பல்லவப் பெருநாட்டில் இருந்த பெருங்கோவில்களில் எல்லாம் இசை வெள்ளம் கரை புரண்டு ஒடியது என்பதை அப்பர்-சம்பந்தர் பாக்களால் பாங்குற உணரலாம். பெண் மக்கள் இசையில் வல்லவராக இருந்தனர். ஆடவரும் அங்ஙனமே சிறந்திருந்தனர். ஆடவரும் பெண்டிரும்கோவில்களில் கலந்து பாடினர் என்னும் குறிப்புக்கள் தேவாரத் திருமுறைகளில் பல இடங்களில் காணலாம்.

“பண்ணியல் பாடல் அறாத ஆவூர்”
“பக்திமைப்பாடல் அறாத ஆவூர்”
“பாஇயல் பாடல்அறாத ஆவூர்” (சம்பந்தர் பதிகம் 8)
“.......மாதர் விழாச் சொற்கவி பாட நிதான நல்கப்
பற்றிய கையினர் வாழும் ஆவூர்” (சம்.பதி.செ.6)
“கோல விழாவின் அரங்கதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரொடும்
பாலென வேமொழிந் தேத்தும் ஆவூர்” (சம். பதி. செ. 9)
“தையலார்பட்டோவாச் சாய்க்காடு”
“மாதர் மைந்தர் இசைபாடும் பூம்புகார்”

‘சித்தம் நமசிவாய’ என்று சிவனார்க்கு வணக்கம் செய்து இசை இலக்கணம் கல்வெட்டிற் பொறித்த சிறந்த சிவபக்தனான, மகேந்திரவர்மன், இசைக்கலையிலும் நடனக்கலையிலும் பேரின்பம் துய்த்தவன் ஆதலின், அவனது பெருநாடும் இசையும் நடனமும் ஆகிய கலைகளின் இன்பத்தைச் சமய குரவர் காலத்தில் நன்கு நுகர்ந்து சைவப் பயிரைத் தழைக்கச் செய்தது. தேவார காலத்தில் இருந்த இசைக் கருவிகளைக் காணின், பல்லவப் பேரரசர் இசை வளர்த்த பெற்றி மேலும் நன்கு விளங்கும்.

தேவார காலத்து இசைக் கருவிகள் (கி.பி. 600-850)

1. யாழ் 2. வீணை 3. குழல் 4. கின்னரி 5. கொக்கரி 6. சச்சரி 7. தக்கை 8. முழவம் 9. மொந்தை 10. மிருதங்கம் 11. மத்தளம் 12. தமருகம் 13. துந்துபி 14. குடமுழா 15. தத்தலகம் 16. முரசம் 17. உடுக்கை 18. தாளம் 19. துடி 20. கொடுகொட்டி முதலியன. இவற்றுள், பல பண்டைக்கால முதலே தமிழகத்தில் இருந்தவை. தேவாரத்தில் காணப்படும் பெரும்பாலான பண்கள் தமிழ்நாட்டிற்கே உரியவை. அவை பண்டை இசை நூல்களில் (அழிந்துபோன நூல்களில்) கூறப்பட்ட இசை நுணுக்கம் பொருந்தியவை. அப் பண்களில் சில சிலப்பதிகாரத்துட் காணலாம். பல்லவப் பேரரசர் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்ப்பண்களும் தமிழ் இசையும் களிநடம் புரிந்தன என்பதற்குத் திருமுறைகளே ஏற்ற சான்றாகும்.[5]

ஆழ்வார் அருட்பாடல்கள்

திருப்பதிகங்கள் போலவே, பல்லவர் காலத்தில் ஆழ்வார் அருட்பாடல்கள் வைணவத் தலங்களில் நன்றாய்ப் பாடப்பட்டு வந்தன. இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வைணவம் போற்றப்பட்ட சமயமாக இருந்தது. அக்காலத்தில் அருட்பாடல்கள் பெரிதும் பாடப்பட்டிருத்தல் வேண்டும். இங்ஙனம் சைவர் ஒருபுறமும் வைணவர் மறுபுறமும் இசையோடு கூடிய அருடம்பாடல்களைப் பாடியருளி இசைக்கருவிகளையும் பயன்படுத்தினர். அரசர் ஆதரவு பெற்ற அப்பெருமக்கட்கு என்ன குறை சுருங்கக் கூறின் ‘பல்லவர் நாடு இசைக் கலையில் கந்தர்வ நாட்டை ஒத்திருந்தது’ என்று கூறி முடிக்கலாம்.

மகேந்திரன் கால நடனம்

மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்ன வாசல் ஒவியங்கள் இரண்டிலிருந்து கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டில் இருந்த நடனக்கலையை நன்குணரலாம்.

(1) வலப்பக்கத்து நடிகை தன் இடக்கையை ‘யானைக்கை’ நிலையிலும், வலக்கையின் அங்கையைச் ‘சதுர’ நிலையிலும் வைத்திருத்தல் நோக்கத்தக்கது. இந்த நடன நிலை மிக உயர்ந்தது. இதனைப் பிற்கால நடராசர், சிலைகளில் எல்லாம் நன்கு காணலாம். சிவனார் ஆடிய ‘நாதாந்த நடனத்தில்’ இவ்வமைப்பைத் தெளிவாகக் கண்டுகளிக்கலாம்.

(2) இடப்பக்கத்து, நடிகை தன் இடக்கையை லதா விரிசிக நடனத்தில் நீட்டுதல் போலப் பெருமிதத்தோடு நீட்டியுள்ளார்கள். இடக்கால் பின்பக்கம் மடங்கவேண்டும் வலக்கையின் அங்கையும் வீரல்களும் மேல்நோக்கி வளைந்திருத்தல் வேண்டும் இடக்கை லதாவைப்போல நன்றாக நீட்டுதல் வேண்டும். இவை யாவும். அமைந்த நிலையே லதா விரிசிக நடனம் என்பது.

இந்த இரண்டு கூத்தியர் நடன முறைகளிலும் மெய்ப்பாடுகள் பல காணலாம். மெய்ப்பாடுகள் தோன்றும்படி நடித்தலே நாட்டியச் சுவையை மிகுதிப்படுத்துவதாகும். இம்மெய்ப்பாட்டு வகைகள் புலவாகத் தொல்காப்பியத்துள் விளக்கப்பட்டுள்ளன. இந் நடிகையர் முழுப் படமும் சித்தரிக்கப்படாமல் இடையளவு சித்திரிக்கப்பட்டிருத்தல், நட்னக் கலையில் உளதாகும் மெய்ப்பாடுகளை, உணர்த்தலே ஆகும்.

இவ் வியத்தகு ஒவியங்களை வரைந்த பெருமக்கள் சிறந்த நடிகராக இருத்தல் வேண்டும். சிறந்த நடிகரே சிறந்த ஓவியங்களை, உள் உணர்ச்சியோடு தீட்டவல்லவர் ஆவர். இச் சித்தன்னவாசல் சித்திரங்கள் தீட்டப்பெற்ற காலத்தில் பல்லவ நாட்டில் ஓவியம் வல்லாருள் பெரும்பாலர் சிறந்த நடிகராகவும் இருந்தனர் எனக்கோடல் பொருத்தமே ஆகும். பக்தியிற் கட்டுண்டு, இசைக் கலையை நன்குணர்ந்த திருநாவுக்கரசரும் நடனக்கலை உணர்வை, நன்குடையவர் என்பதை அவருடைய பதிகங்களிலிருந்து அறியலாம். அவர் சிவனாரது நடனத்தில் உள்ளம் வைத்த உத்தமராக இருந்தார்.

“நீல மணி மிடற்றான்....
கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே”
“இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”

“ஆடினார் பெருங்கூத்துக் காளி காண.”
வைகுந்தப்பெருமாள் கோவில்

இக் கோவிலில் நடனம் பற்றி இரண்டு சிற்பங்கள் காணப் படுகின்றன:

(1) அரசன் முன்னிலையில் ஆடவரும் பெண்டிரும் நடித்தல்-ஆடவன் ஒருவன் அழகாகத் தன்னை அணி செய்து கொண்டு பக்கத்துக்கொருவராக அழகியநங்கையர் இருவருடன் நிற்கின்ற நிலை என்பன காணத்தக்கன. அரசனது அவை முன்னர் இக்கூத்துநடைபெறுகிறது. இக்கூத்து முடிந்த பின்னர் மற்போர் நடைபெறுகிறது. இங்ஙனம் நடனத்திற்குப் பிறகு அதே இசை ஒலியுடன் மற்போர் நடைபெறல் பண்டை வழக்கம் போலும்![6]

(2) நடிகர் ஒன்பதின்மர் அரசன் அவையை அடைகின்றனர். முதல்வன் இசைமுழக்கத்துடன் உள் நுழைகிறான். அவனுக்குப்பின் ஆடவர் அறுவரும் பெண்டிர் இருவரும் செல்கின்றனர். இவ்விரண்டு சிற்பங்களோடு, சிலப்பதிகாரச் செய்திகளையும் நோக்க, பல்லவர் காலத் தமிழகத்தில் இருபாலரும் நடனத்தில் வல்லவராய் இருந்தனர் என்பதும், இருபாலரும் கலந்து ஆடிவந்தனர் என்பதும் நன்கறியலாம். இங்ஙனம் இருபாலரும் சேர்ந்து நடித்தலைப் பல்லவப் பெருவேந்தர் பாராட்டி வளர்த்தனர் என்பதும்

அடிகள்மார்

பல்லவர் காலத்துக் கோவில்களில் இசையும் நடனமும் வளர்க்கப்பட்டன. இவை இரண்டும் சமயத்தின் உறுப்புகளாகக் கருதப்பட்டன. பல கோவில்களில் இவ்விரண்டையும் வள்ர்க்கப் பெண்கள் இருந்தனர். அவர்கள் அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் முதலிய பெயர்களால் குறிக்கப் பெற்றனர். முத்தீச்சுரா கோவிலில் மட்டும் 42 அடிகள்மார் இருந்தனர் எனின், பல்லவப் பெருவேந்தர் நடனக் கலையை வளர்த்த சிறப்பை என்னெனப் பகர்வோம் திருவொற்றியூர்க் கோவிலிலும் குடந்தை முதலிய பல இடங்களிலும் அடிகள்மார் பலர் இருந்தனர்.

“தேனார் மொழியார் திளைத்தங் காடித் திகழும் குடமூக்கில்” (72, 7)
“வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே” (130,1),
“முழவம் மொந்தை குழல்யாழ் ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர்
ஏரார் பூங்காஞ்சி”
“தண்டு உடுக்கை தாளம் தக்கை சார
நடம் பயில்பவர் உறையும் புகார்”

என வரும் திருஞானசம்பந்தருடைய திருப்பாடல் அடிகளால் - அக்காலத்தில் (கி.பி. 7ஆம் நூற்றாண்டில்) அடிகள் மார் பெருங்கோவில்களில் எல்லாம் இருந்து இசையையும் நடனத்தையும் வளர்த்து வந்தனர் என்பதை நன்கறியலாம், இசை, நடனம் முதலியவற்றில் பல்லவர்கல்வெட்டுக் குறிப்புகட்குத் தேவாரம், விளக்கமாக அமைந்துள்ள பெற்றி அறிஞர் கவனிக்கத்தக்கதாகும். தேவாரப் பதிகங்கள் பக்திச் சுவையினூடே வரலாற்றுக் குறிப்புகளையும் வாரி வழங்கும் பண்புடையன என்பதைத் தமிழ்மக்கள் அறியும் நாளே, இத் திருமுறைகள் பொன்னேபோற் போற்றப்படும் பொன்னாள் ஆகும்.

சிவபெருமான் திருக்கூத்து

சிவபெருமான்திருக்கூத்துவகைகள் பல்லவர்க்குமுற்பட்டவை. பல்லவர்க்கு முற்பட்ட மணிவாசகர் தமது உளமுருக்கும் திருவாசகத்திற் பல இடங்களில் இவற்றைக் கூறிக் களிக்கின்றார். மகேந்திரவர்மன் தனது மத்தவிலாசத்தில், “சிவன் காபாலி. அவனது தாண்டவ நடனம் மூவுலகங்களையும் ஒருமைப்படுத்துகின்றது.” என்று கூறியுள்ளான். இந்தத் தாண்டவ நடனம் சிவனார் ஆடிய நடனங்களில் இரண்டாவதாகும். இஃத அப் பெருமானது பைரவர் அல்லது வீரபத்திரர் நிலையை உணர்த்துவதாகும். இந்நடனம் சுடுகாட்டில் பேய்க் கணங்கன் புடை சூழ இறைவன் பத்துக் கைகளுடன் ஆடுவதாகும்.[7] இத்தகைய சிற்பங்களை எல்லோரா, எலிபென்டா புவனேஸ்வரம் முதலிய இடங்களில் தெளிவுறக் காணலாம். இந்தத் தாண்டவ நடனம் ஆரியர்க்கு முற்பட்ட நடனக் கலையைச் சேர்ந்தது. ‘பாதி இறை-பாதி பேய்க்கண்ம்’ அமைப்புக் கொண்ட ஒரு தெய்வ நடனத்தைச் சேர்ந்தது. இக்கூத்து பிற்காலத்தில் சிவபெருமானுக்கும் அம்மைக்கும் உரியதாகச்சைவசாக்த இலக்கியங்கள் மிக்க அழகாக விளக்கலாயின.[8]

கயிலாசநாதர் கோவில்

சிறந்த சிவபக்தனான இராசசிம்மன், தான் அமைத்த கயிலாசநாதர் கோவிலில் சிவபெருமான் ஆடிய பலவகை நடனங்களைத் தமிழ்மக்கள் அறியும் வகையில் சிற்பவடிவில் அமைத்துள்ளான். அவை உள்ளத்தையும் உயிரையும் ஈர்ப்பனவாகும். அவற்றுள் நாதாந்த நடனமும் குஞ்சித நடன்மும் குறிக்கத்தக்கன.

நாதாந்த நடனம்

சிவபெருமானுக்கே உரிய பழைய நாதாந்த நடனம்பல்லவர் காலத்துக் கோவில்களில் இல்லை. ஆயின் அதனினும் சிறிது வேறுபட்டதும் அரியதுமாகிய புதிய நடனம் கயிலாசநாதர் கோவிற் சுவர்களிற் காணக்கிடக்கின்றது."இது, நாட்டிய நூலில் உள்ள 108 வகை நடனங்களில் சேராதது. இதில் சிவபெருமான் தன் நடனத்திடையில் திடீரென்று ஆலிதாசன நடனத்தை ஒத்த ஒரு நிலையை அடைகின்றதாகக் தெரிகிறது.[9]

‘தாக்கிய திருவடி’ நடனம்

நடிகன் வலக்காலையும் வலக்கையையும் வளைக்க வேண்டும், இடக்காலும் இடக்கையும் வலமாகத் தூக்க வேண்டும்.

இந்த நிலையில் நடித்தலே ‘தூக்கிய திருவடி (குஞ்சிதபாத) நடனம் எனப்படும். இதனையும் கயிலாசநாதர் கோவிற் சிற்பங்களிற் காணலாம். இங்குச் சிவன் எட்டுக் கைகளை உடையவன். மேல் வலக்கைப் பாம்பின் வாலைப்பற்றியுள்ளது. அடுத்தகையில் தமருகம் உள்ளது. மூன்றாம் கைவளைந்து, அங்கை மெய்ப்பாடு காட்டுவதாக உள்ளது; நான்காம் கை ‘அஞ்சித்’ நிலையில் இருக்கின்றது. மேல் இடக்கை ‘மழு’ ஏந்தியுள்ளது. அடுத்தகை ‘கொடிக்கை’ நிலையில் உள்ளது; அடுத்தது ‘முக்கொடி’ (திரிபதாக) நிலையில் உள்ளது: நான்காம் இடக்கைமேலே உயர்த்தப்பட்டுள்ளது. அதன் உள்ளங்கை சடைமுடியைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது; இச் சிவனுக்குக் கீழே மூன்று கணங்கள் நடிக்கின்றனர். இடப்புறம் உமையான் அமர்ந்துள்ளான். அடியில் விடை காணப்படுகிறது. வலப்புறம் நடனச் சிலை ஒன்றும் அதன் அடியில் இரண்டு கணங்கள் குழல் வாசிப்பதாகவும் சிற்பங்கள் காண்ப்படுகின்றன்.

இத் தூக்கிய திருவடி நடனச்சிலைகள் சிவ சூடாமணி ஆகிய இராசசிம்மன் உள்ளத்தைக் கொள்ள கொண்டதாகும். அதனாற்றான் இந்நடனச் சிலைகள் பல கயிலாசநாதர் கோவிலில் காணப் படுகின்றன. இவனுக்குப்பின்வந்த மூன்றாம் மகேந்திரவர்மன், தான் (கயிலாசநாதர் கோவிலுக்கு எதிரில்) கட்டிய சிவன்கோவிலில் இதே நடனத்தைக் குறிக்கும் சிற்பத்தை அழகிய முறையில் அமைத்துள்ளான். இச் சிற்பங்கள் மிகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்டவை ஆகும்.[10] இவற்றை நேரிற் காண்பவரே இவற்றின் அருமை பெருமைகளையும் சிவபக்தர்களான பல்லவப் பேரரசர் கலைஉணர்வின் நுட்பத்தையும் உள்ளவாறு உணர்தல் கூடும். ‘சங்கர பக்தனான இராசிம்மன் தில்லை நடராசர் கூத்தினும் சிறிது வேறுபட்ட கூத்தை (இறுதியிற் சொன்ன குஞ்சிதக் கூத்தை)த் தனதாகக் கொண்டது, அவனது கூத்தறிவின் பேரெல்லையை உணர்த்தி நிற்கின்றது. இங்ஙனம் பல்லவப் பெருவேந்தர் கூத்திலக்கணப் பண்புகளை முற்ற உணர்ந்தவராய்த் தாம் கட்டிய கோவில்களில் அவற்றை அணிபெற அமைத்து மக்கள் மனத்தைத் தூய கலைகளிற் புகச் செய்து பேரின்பப் பெருவாழ்வை அளித்துதவினர் என்னல் மிகையாகது.


  1. Prof Dubreils “pallavas’ pp. 38-40
  2. Dr.C.Minakshi’s pp.242-248.
  3. மகேந்திரன் இசைக் கலை உணர்வை முழுதும் உணர வேண்டுமாயின் டாக்டர் மீனாட்சி அம்மையாரின் அரிய ஆராய்ச்சி நூலைப் படித்துணர்க. ஆதோத்யம் என்பது, முரசம், குழல் தாளம் ஆகிய நான்கையும் குறிக்கும்.
  4. சம்பந்தர் புராணம், செ. 446 - 454
  5. பல்லவர் கால இசைச்சிறப்பை நன்குணர்த்தும் நூல்கள் முதல் ஏழு திருமுறைகளேயாம். இசைபற்றிய அக்காலக் குறிப்புகள் அனைத்தும் அத் திருமுறைகளில் விளக்கப்பட்டுள்ளன. இத்துறையில் தமிழ் அறிஞர் ஆராய்ச்சி நடத்தல் இன்றியமையாததாகும்.
  6. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, p.280.
  7. ‘நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே’
    ‘கூரிருட்கூத்தொடு குளிப்போன் வாழ்க!’
    ‘கழுதொடு காட்டை நாடகம் ஆடி......’
    ‘குடர்நெடு மாலை சுற்றி....’
    ‘சுடுகாட்டு அரசே......’ (திருவாசகம்)
    ‘ஆடினார் பெருங்கூத்துக் காளிகாண் (அப்பர் தேவாரம்)’
  8. A.K.Kumarasaml, “Siddhanta - Dipika’ Vol.XIII (1912).
  9. R. Gopinatha Rao’s “Hindu Iconography, Vol II, Part I, p. 269. ‘அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாதோர் கூத்து’ என்னும் அப்பர் கூற்றுச் சிந்திக்கற்பாலது.
  10. Dr. C. Minakshi’s “Adminitration and Social Life under the Pallavas’ pp.281-286.