பல்லவர் வரலாறு/24. இலக்கியம்

24. இலக்கியம்

முன்னுரை

பல்லவர்காலம் ஏறத்தாழக்கி.பி. 250 முதல் 900 முடிய என்னலாம். இந்தக் காலத்திற்குப் பிறகு சோழப்பேரரசு வளர்ச்சியுற்றது. அக்காலத்தில். சங்ககாலத் தமிழில் இல்லாத அளவு வடமொழிக் கலப்புத் தமிழில் உண்டாகிவிட்டது. இதனை அக்கால யாப்பருங்கலவிருத்தி. காரிகை, வீரசோழியம் முதலிய இலக்கண நூல்கள் கொண்டும், பெரிய புராணம், கம்ப ராமாயணம், கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தர் பாடிய நூல்கள் முதலியன கொண்டும் நன்குணரலாம். எனவே, சங்கநூல்கட்கும் இச்சோழர்கால நூல்கட்கும் உண்டான மொழி நடைவேறுபாடு, இரண்டிற்கும் இடைப்பட்ட பல்லவர் காலத்திற்றான் உண்டாகி வளர்ந்திருத்தல் வேண்டும். இஃதே உண்மை என்பதை யாப்பருங்கல விருத்தியுரை நன்குவிளக்கிநிற்றல் காணலாம்.கானவே, பல்லவர்கால இலக்கியம் தமிழ் இலக்கிய வரலாற்றிற் சிறப்பிடம் பெறத்தக்கதாகும்; ஆதலின் இங்கு ஓரளவு நன்கு விளக்கம் பெறும்.

வடமொழிப் பட்டயங்கள்

பல்லவர் வடவர் ஆதலின், அவர் பட்டயங்கள் எல்லாம் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. பிற்காலப் பல்லவர் பட்டயங்கள் எல்லாம் சிறந்த வடமொழி நடை உடையன. முதலாம் பரமேச்சுரவர்மன் வெளியிட்ட கூரம்பட்டயம் கூறும் பெருவளநல்லூர்ப் போர் வருணனை படித்து இன்புறத்தக்க பகுதியாகும். அதனை வரைந்தவர் சிறந்த வடமொழிப் புலவராகவும் போர் வருணனைகள் கொண்ட நூல்கள் நன்கு கற்றவராகவும் இருத்தல் வேண்டும். இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட காசக்குடிப்பட்டயம் பல்லவர் வரலாற்றைச் சிறந்த முறையில் விளக்குவதாகும். அதன் நடையும் உயர்ந்த நடை. இவ்வரசனுடைய தண்டன் தோட்டப்பட்டயம். மூன்றாம் நந்திவர்மனுடைய வேலூர் பாளையப் பட்டயம் முதலியவற்றில் வடமொழி நடை அழகாக இருக்கின்றது. இராசசிம்மன் காலத்துக் கயிலாசநாதர் கோயில் வடமொழிக் கல்வெட்டுகள் சுருக்கமும் தெளிவும் உடையன. முதலாம் பரமேச்சுரனுடைய மகாபலிபுரத்துக் கல்வெட்டுகள் சிலேடைப் பொருள் கொண்ட சொற்றொடர்கள் கொண்டவை.

வடமொழி நூல்கள்

லோகவிபாகம், கிராதார்ச்சுனியம். அவந்திசுந்தரி கதை. மத்தவிலாசப் பிரகசனம், காவ்யாதர்சம் போன்ற வடமொழி நூல்கள் பல்லவர் கால வடமொழி வளர்ச்சிக்குரிய சான்றுகளாம்.

இவை அனைத்தையும் நோக்க. பல்லவர் அவைக்களத்தில் சிறந்த வடமொழிப் புலவர்கள் இருந்தார்கள் என்பது தெரிகிறதன்றோ?

அச்சுத விக்கிரந்தன் (கி.பி. 350)

புத்ததத்தர் (கி.பி.350) காலத்தவனான இவனைப்பற்றிய தமிழ்ப் பாடல்கள் சில காணக்கிடக்கின்றன. அவற்றால் இவன் தமிழை ஒரளவு வளர்த்த களப்பிர அரசன் என்பது புலனாகிறது.[1]

இவனைப்பற்றிய பாடல்கள் தமிழ் நாவலர் சரிதை, தொண்டை மண்டல சதகம் முதலியவற்றிற் காணலாம்.[2] சான்றாக ஒன்றை இங்குக் காண்க.

அச்சுதன் மதுரை கொண்டது

“முரசதிர் வியன்மதுரை முழுவதுஉம் தலைபனிப்பப்
புரைதொடித் திரள்தோள் போர்மலைந்த மறமல்லர்
அடியோடு முடியுறுப்புன்டயர்ந்தவன் நிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ”[3]

முத்தரையரும் தமிழும் (கி.பி. 700-800)

தஞ்சையை ஆண்ட முத்தரையர்க்குத் தமிழ்ப்பற்று மிக்கிருந்தது. அவருள் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இருந்தவன் பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்பவன் இவன் புலவர் பலரை ஆதரித்தவன்; இவனைப் புகழ்ந்து (1) பாச்சில் வேள் நம்பன், (2) ஆசாரியர் அநிருத்தர், (3) கோட்டாற்று இளம்பெருமானார், (4) குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் காண்கின்றன. அவற்றால் இம்மன்னன் அழுந்தியூர், மனலூர், கொடும்பாளுர், காரை, கண்ணனூர், அண்ணல்வாயில் என்ற இடங்களில் நடந்த போர்களில் வெற்றி பெற்றவன் என்பது தெரிகிறது. இனி, ஒவ்வொரு புல்வரையும் அவர் பாடிய பாக்களையும் பற்றிக் காண்போம்.

(1) பாச்சில் வேள் நம்பன்

இவர் மழநாட்டுத் திருப்பாச்சில் (ஆச்சிரமம்) என்னும் ஊரினர் என்பதும், வேளிர் குலத்தவர் என்பதும் இவர் தம் பெயரால் அறியப்படும். இவர் பாடியவை ஐந்து வெண்பாக்கள். அவற்றுள் ஒன்று காண்க:

“வெங்கட் பொருகயல்சேர் வெல்கொடியோன் வாள்மாறன்
செங்கட் கரும்பகடு சென்றுழக்க-வங்குலந்தார்
தேரழுந்தி மாவழுந்தச் செங்குருதி மண்பரந்த
ஊரழுந்தி யூ ரென்னு மூர்.”

(2) ஆசாரியர் அநிருத்தர்

இவர் ‘ஆசாரியர்’ என்பதால், முத்தரையற்கு ஆசிரியராகவேனும், சமண முனிவருள் ஒருவராகவேனும் விளங்கியவராவர் என்று நினைக்கலாம். இவர் பாடியது கட்டளைக் கலித்துறை, அது சிதைந்து காணப்படுகிறது.

“..............
...போலரசு பிறவா பிறநெடு மேருநெற்றிப்
பொன்போல் பசுங்க திர்ஆயிரம் (விசும்) பொற்றேர்ப்பருதிக்
கெண்டோ தரவிடு மோவினைச் சோதி யிருவிசும்பே.”

(3) கோட்டாற்று இளம்பெருமானார்

‘கோட்டாறு’ என்பது தென் திருவாங்கூர்ச் சீமையில் இருப்பது. இவர் அவ்வூரினர். இவர் இளம்பெருமானார் எனப்பட்டதால் இவர் தமையனார் “கோட்டாற்றுப் பெருமானார்” என்ற ஒருவர் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இவரது பாடலும் சிதைந்து காணப்படுகிறது.

“சேட்டினர் பூந்தண் பொழிற்செம்பொன் மாரிக்கடியரணம்
முட்டினசீற்றமுன் சென்றது பின்பு பகட்டினத் தோர்
கெ.. (மர்) மாறன்க(டி)........க்க”

(4) குவாவங் காஞ்சன்

இவரது முழுப்பெயர் ‘கிழார்க் கூற்றத்துப் பவதாய மங்கலத்து அமருணிலை ஆயின குவாவங் காஞ்சன்’ என்பது. ‘கிழார்க் கூற்றம்’ என்பது தஞ்சைக் கோட்டத்துப் பாபநாசத்தைச் சுற்றியுள்ள பகுதியாகும். ‘அமருள் நிலை’ என்பது இவர் படைத்தலைவர்

என்பதைக் குறிக்கிறது. இவர் பாடியனவாக ஆறு பாடல்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று காண்க.

“எண்கிண் இருங்கிளையும் ஏறற் கரியவே
வண்கைச் செருமாறன் வாள்காய்த்தி-விண்படர்சேய்
வானாடு தாமூர்ந்த மாநாடக் கண்ணனூர்க்
கோனாடர் புக்கொளித்த குன்று.”[4]

இவற்றால் அறியப்படுவன

இந் நான்கு புலவரும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டினர் என்பதை எண்ண, உண்மையாகவே உள்ளம் மகிழ்கிறது. வடமொழி வளர்த்த பல்லவர் காலத்தில் தமிழ் இந்த அளவேனும் வளர்த்த தென்பது போற்றத்தக்கதே அன்றோ?

இப்புலவர் பெருமக்கள் என்னென்ன நூல்களைப் பாடினார்களோ, அறியோம்; அவை கிடைத்தில. அந்தக்காலத்தில் வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமே பெருவரவீன என்பதை மேற் சுட்டிய பாடல்கள் விளக்குகின்றன. சங்க காலத்தில் அகவலே பேரிடம் பெற்று விளங்கினது: கலிப்பாஓரளவு பயன்பட்டது. வெண்பா அருகி வழங்கியது. பல்லவர் காலத்தில் வடமொழிப் புலவர் இந்நாட்டில் பேரளவிற்கு குடிபுகுந்து வடமொழியைப் பரப்பின்மையால் அம்மொழியின் செய்யுள் இலக்கண அமைதிகள் தமிழிற் பரவின. அப் பரவலின் பயனாக விருத்தம் முதலியன தமிழிற் பயிலலாயின். தமிழ் யாப்பிலக்கண முறையிலேயே வடமொழிக் கலப்பு உண்டான காலம் பல்லவர் காலமே ஆகும் என்பது கி.பி.11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த அமிதசாகரர் செய்த யாப்பருங்கல விருத்தியுரையால் நன்குணரப்படுகிறது.

பல்லவரும் தமிழும்

மகேந்திரவர்மன், இரண்டாம்நந்திவர்மன் மூன்றாம்நந்திவர்மன், அபராசிதவர்மன் இவர்களே தமிழ் அறிவு பெற்றிருந்தனர் என்பது 498. தளவானுர்க் கல்வெட்டு, திருமங்கையாழ்வார் பாடல்கள், நந்திக்கலம்பக ஆசிரியர் பாடல்கள், திருத்தணிகைக் கல்வெட்டில் உள்ள வெண்பா இவற்றால் அறியக் கிடக்கிறது. இவர்கட்கு முன்னர் வடமொழியிலும் தென்மொழியிலும் புலமை பெற்ற ஐயடிகள் காடவர் கோன் என்ற பல்லவ அரசர் ஒருவர் இருந்தார் என்றும், அவர் “சிவத்தளி (சேஷத்திர) வெண்பா"ப் பாடினார் என்றும் பெரிய புராணம் குறிக்கிறது. அவர் பாடிய ‘சிவத்தளி வெண்பா’ சிதைந்த நிலையில் இன்று 11-ஆந் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அவரே மூன்றாம் சிம்மவர்மன் என்பர் ஆராய்ச்சியாளர்.[5]

சிவத்தளி வெண்பா (கி.பி. 550-575)

‘இறக்குந் தறுவாயில் நேரும் துன்பங்கள் அடையாமுன், இன்னின்ன தளிவாழ் இறைவனை நினை’ என்று மனத்திற்கு அறிவுறுத்துவதாக அமைந்த வெண்பாக்களின் தொகுதியே ‘சிவத்தளி வெண்பா’ என்பது. இப்பொழுதுள்ள பாடல்கள் 24. அவற்றுட் பல தளிகள் குறிக்கப்பட்டுள்ள. அவை-தில்லை. குடந்தை, ஐயாறு, ஆரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, பாண்ட வாய்த் தென்னிடைவாய், திருநெடுங்களம், குழித்தண்டலை, ஆனைக்கா, மயிலை, சேனைமாகாளம், வளைகுளம், சாய்க்காடு, திருப்பாச்சிலாச் சிராமலை, திருமழபாடி (கொள்ளிடத்துத்தென்) திருஆப்பாடி, காஞ்சிபுரம், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருக்கடவூர் மயானம் என்பன.

பல்லவரைப் பற்றிய தனிப்பாடல்கள்

அகத்தியனார். இவர் பாடல் ஒன்று, பல்லவம் என்பது தனிநாடு: தமிழ் ‘வழங்காத நாடு’ என்னும் செய்தியைக் கூறுகிறது.[6]

மகேந்திரன் (கி.பி. 615-630) குடைவித்த தளவானுர்க் குகைக் கோவிலில் வெண்பா ஒன்று காணப்படுகிறது. அது,

“தொண்டையந்தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன்
வெண்கோட்டின் றென்பான்மிகமகிழ்ந்து-கண்டான்
சரமிக்க வெஞ்சிலையர்ன் சத்ருமல்லே சம்மென்று
அரனுக் கிடமாக அன்று.”[7]

என்பது.

பல்லவ மன்னன் (கி.பி. 719-775) இவனைப் பற்றிய பாக்கள் சில யாப்பருங்கல விருத்தியுரையுட் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ‘பல்லவமல்லன்’ என்ற பெயரையே சுட்டுகின்றது. அஃது எட்டாரைச் சக்கரத்தை விளக்க வந்த மேற்கோள் செய்யுள் ஆகும்.

“.... ........... .....
காடவர்கோன் திரு ஆரமிழ் தாடவர்க்”
.........................
“யாராழி பாய்ந்த விடந்தோ றழகிதாப்
பாராளும் பல்லவ மல்லன் என்றா-ராய்ந்(து).....”
.......................
-பாரில்
“தருமலிந்த வண்மைத் தலைத்தந்து மிக்க
திருமலிந்து தீதிலவே யாக-உருமலிந்த
என்னரசன் மல்லன் மதினிலை யேதிலர்கள்
துன்னரிய வஞ்சினத்தான் தோள்.”[8]

யாப்புநரல் பெருக்கம் (கி.பி. 250-900)

கி.பி. 11ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கல விருத்தி செய்யப் பட்டது; உரையும் அதே காலத்தில் ஆனது. இதனில், சங்கத்தார் பாடல்கள் சிறுவரவினவாயும், வடமொழி வழக்குப்பற்றித் தோன்றிய புதிய பா வகைகளை விளக்க வந்த புதிய பாடல்கள் பலவாகவும், இருத்தலை நோக்க - யாப்பருங்கல விருத்தியுரையுட் கூறப்படும் பல்வேறு இலக்கண நூல்களும் மேற்கோள் பாடல்களும் சங்க இறுதிக்கும் கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற் றான் செய்யப்பட்டன என்பதை நன்குணரலாம். அக்காலமே பல்லவப் பேரரசு இருந்த (கி.பி. 250-900) காலமாகும். மேலும் எட்டாரைச்சக்கரம் போன்ற புதியவை அனைத்தும் பல்லவ மல்லன் காலத்தில் தோன்றின என்பது மேற்கூறப் பெற்ற செய்யுளைக் கொண்டு தெளிவாக அறியலாம். இதனை விரிக்கிற் பெருகும். யாப்பருங்கல விருத்தி உரைநோக்கி ஆராய்ந்து உண்மை உணர்க.

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850)

இவன் காடவர் கோன் கழற் சிங்கன் எனப் பெரிய புராணத்தும், ‘நந்தி, பல்லவர் கோளரி என்று நந்திக்கலம்பகத்தும் கூறப்பட்டவன். யாப்பருங்கல விருத்தியுரையில், கச்சியார் கோ-சிங்கன் என்றும், ‘நந்தி என்றும் கோன் நந்தி என்றும் வரும்தனிப்பாடல்கள், பொருள் நோக்கி, இவனையே குறிப்பனவாகக் கொள்ளலாம்.

அவை வருமாறு

(1) ‘நிலமகள் கேள்வனும் நேர் கழலி னானும்
நலமிகு கச்சியார் கோவென்பவே
நலமிகு கச்சியார் கோவாயி னானும்
சிலைமிகு தோள்சிங்கன் அவன்என்பவே
செருவிடை யானை அவனென்பவே”[9]
(2) “வரைபெரிய மத்தாக வாளரவம் கயிறாகத்
திரையிரியக் கடல் கடைந்து திருமகளைப் படைத்தனையே[10]
உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனை”[11]
(3) “செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீத
சந்தனமென்றாரோ தடவினார்-பைந்தமிழை
ஆய்கின்ற கோனந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மேல்”
(4) “திருத்தேர் புகழ்நந்தி தேசபண்டாரி தெள்ளாறை[12] வெற்பில்
மருத்தேர் குழலிக்குக் கார்முந்து மாகில், மகுடரத்னப்
பரித்தேரும் பாகனும் என்பட்டவோஎன்று பங்கயக்கை
நெரித்தே வயிற்றில்வைத் தேநிற்பளேவஞ்சி நெஞ்சு லர்ந்தே”[13]
(5) ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம்;
வையகம் அடைந்ததுன் சீர்த்தி;
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்;
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்;
தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்;
செந்தழல் புகுந்ததுன் மேனி;
யானுமென் கவியும் எவ்விடம் புகுவேம்!
எந்தையே! நந்திநாயகனே!”[14]

அபராசிதவர்மன் (கி.பி. 875-893)

இவன் பல்லவர் மரபில் இறுதி அரசன் கி.பி. 875-க்குப் பிறகு நாட்டை ஆண்டவன். இவன் காலத்தே. நம்பி அப்பி என்பவன் திருத்தணிகை - வீரட்டானேசுவரர் கோவிற்குத் திருப்பணிகள் பலவும் புரிந்த பெரியவன். அவனைப் பாராட்டி அபராசிதன் ஒரு வெண்பாப் பாடினான். அஃது அக்கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது. பாவின் கீழ், ‘இவ்வெண்பாப் பெருமானடிகள்தாம் பாடி அருளித்து’ என்ற குறிப்புக் காணப்படுகிறது. அபராசிதற்குப் ‘பெருமானடிகள்’ என்ற பெயருண்டு. அவ் வெண்பா இதுவாகும்:

“திருந்து திருத்தணியிற் செஞ்சடைஈ சற்குக்
கருங்கலாற் கற்றளியா நிற்க-விரும்பியே
நற்கலைகள் எல்லாம் நவின்றசீர்நம்பியப்பி
பொற்பமையச் செய்தான் புரிந்து.”[15]

சத்திபல்லவன்

இவன் அரக்கோணம்தாலுக்காவில் தண்டலம் என்ற கிராமத்தில் ஏரியைப் புதுப்பித்தான் போலும் அங்குள்ள கல்வெட்டில் இரண்டு வெண்பாக்கள் இவனைப்பற்றிக் காணப்படுகின்றன. இவன் காலம் தெரியவில்லை.

(1) காடவர்கோன் சத்தி கற்றோட்டில் இட்டயாண்(டு)
ஏடியலீரைந்தில் இடுவித்தான்-நீடியசீர்ப்
பல்லவமா ராயன் பசிநீக்கித் தண்டலத்துக்
கல்லிவர்நீர் ஏரிக் கலிங்கு.”
(2) “மண்டலத்துளோர்மதிப்பவண்போளி யூர்நாட்டுத்
தண்டலத்தே ரிக்கலிங்கு தானமைத்தான-ஒண்டழிழ்ப்
பாமங்கை லான்விரும்பும் பல்லவமா ராயனெழில்
பூமங்கை தன்கோன் புரிந்து.”[16]

இராசபவித்திரப் பல்லவதரையன்

இவர் ‘அவிநயம்’ என்ற யாப்பிலக்கண நூலுக்கு உரை எழுதியவர் என்பதைத் தெரிவிக்கும் பாடல் ஒன்று நன்னூற்கு உரை வகுத்த மயிலை நாதரால் காட்டப்பட்டுள்ளது. அது வருமாறு:

“இந்தப்பத் தெச்சமும்
புவிபுகழ் புலமை அவிநய நூலுள்
தண்டலங் கிழவன் தகைவரு நேமி
எண்டிசை நிறைபெயர் இராச பவித்திரப்
பல்லவதரையன் பகர்ச்சியென்றறிக.”[17]

இதனால், இவர் தண்டலத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்த பல்லவ மரபினர் என்பதும், புலமை நிறைந்த இப்பெரியார் அவிநயத்துக்கு உரை கண்டு மகிழ்ந்தவர் என்பதும் பெறப்படுகின்றன. இவர் காலம் அறியக்கூடவில்லை.

பொதுப்பாடல்

இது பல்லவ அரசன் ஒருவனது ஆணைப்படி அவன் எல்லைப்புற வீரர் வடுகர் முனைச்சுரும் கடந்து பசு நிரை கவர்ந்த செய்தியைக் குறிப்பதாகும். காலம் கூறக்கூடவில்லை.

“நகில்பொழி தீம்பால் மண்சேறுபடுப்ப
மலர்தலை உலகம் ஒம்பும் என்ப
பரிசிலை தொண்டைப் பல்லவன் ஆணையின்
வெட்சித் தாய்த்து வில்லேர் உழவர்
பொருந்தா வடுகர் முனைச்சுரம்
கடந்து கொண்ட பலஆனிரையே.”[18]

வேறு பல நூல்கள் (கி.பி. 250-900)

இதுகாறும் கூறப்பெற்ற சில்லரைப் பாடல்களால், சங்க காலத்திற்குப் பிறகு வந்த பல்லவர் காலத்தில் புலவர்பலர் இருந்தனர் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கித் தோன்றும்.[19]

(1) யாப்பருங்கல விருத்தியுரையை நன்கு ஆராயின் பல்லவர் காலத்திற் பல யாப்பிலக்கண நூல்கள் வடநூல் வழித் தமிழ் ஆசிரியர் பலரால் செய்யப்பட்டன என்பது போதரும். அவற்றினை விரித்துக் கூறாதுபெயர்கள் மட்டுமே இவண் தரப்பெறும். விரிவை வேறிடத்துக் காண்க. சங்கயாப்பு, பாட்டியல் நூல், மாபுராணம் என்றயாப்புநூல்கள் இக்காலத்தன. இவையன்றி மேற்கூறிய உரையால் இலக்கிய நூல்கள் பல்லவர்காலத்து இருந்தன என்பது தெரிகிறது. அவையாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் காலத்திலும் இருந்தன என்பது அறியக் கிடக்கிறது. அவை முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியான கதை, குடமூக்கிற் பகவர் செய்த வாசு தேவனார் சிந்தம். அடிநூல், அணி இயல், அமர்தபதி, அரசசந்தம், அவிநந்தமலை, ஆசிரியமுறி, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப்பாட்டு, தேசிகமாலை, பசந்தம், பாவைப்பாட்டு, பிங்கலகேசி, புணர்ப்பாவை, பெரியபம்மம். பொய்கையார் நூல், (களவழியன்று), போக்கியம், மணியாரம், மந்திர நூல், மார்க்கண்டேயனார் காஞ்சி, மதுவிச்சை, வளையாபதி முதலியன. இவற்றுள் இரண்டொன்று நீங்கலாக மற்றவை அனைத்தும் பல்லவர்காலத்திற்செய்யப்பட்டவை என்பது அவற்றின் வடமொழிப் பெயர்களைக் கொண்டே கூறலாம்.[20]

(2)யாப்பருங்கலக் காரிகை உரையால், கலிதயனார் என்பவர் செய்த யாப்பு நூலும் பாடலனர் செய்த யாப்பு நூலும், பெயர் தெரியாப் புலவர் ஒருவர் செய்த யாப்பு நூலும் இருந்தன என்பது தெரிகிறது:[21]

(3) தொல்காப்பியச் செய்யுளியல் உரையிற் காணப்பெறும் நூல்கள் சிலவும் பல்லவர் காலத்தன எனக்கோடல் தவறாகாது. அவை யாழ் நூல் கந்தர்வ நூல்[22] (இவை நூல்). பருப்பதம், தந்திரவாக்கியம், வஞ்சிப்பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு, விளக்கத்தார் கூத்து முதலியன.[23]

சைவத்திரு முறைகள் (கி.பி. 250-850)

திருமூலர் திருமந்திரம், பேயம்மையார் பாடியபதிகங்கள், சமயகுரவர் திருமுறைகள், ஐயடிகள் ‘க்ஷேத்திர வெண்பா.’ திருத்தொண்டத் தொகை, சேரமான் பெருமாள் பாடிய அந்தாதி, உலா முதலியன பல்லவர் காலத்தனவே ஆகும். அவற்றைத் தனித்தனி விரிக்கிற் பெருகும். அவற்றுள் திருமுறைகள் பற்றிய குறிப்புகள் இந்நூலுள் ஆங்காங்குத் தரப்பட்டுள்ளன.

நந்திக் கலம்பகம் (கி.பி. 830-850)

இந்நூல் மூன்றாம் நந்திவர்மனைப் பற்றியதென்பது முன்பே விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் இவனதுவேலூர் பாளையப் பட்டயத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளது. இஃது இல்லாவிடில் இப்பேரரசன் முதலிற்செய்த வடநாட்டுப் போர் விளக்கம்பெறாது ஒழிந்திருக்கும். ‘குறுகோட்டை’ என்ற பெயர் ஒன்றே வேலூர் பாளையப் பட்டயக் குறிப்பை நன்கு விளக்கப் பேருதவி புரிந்தது. மேலும் பட்டயத்திற்குறிக்கப்படாத இவனது தமிழ்ப் புலமை, தமிழ்ப் புரவலனாந்தன்மை. பிற நல்லியல்புகள். இவன் மனைவியர். தம்பி முதலியவர் செய்திகளும் இன்னபிறவும் அறிந்து வரலாறு கட்ட இச் சிறு நூல் பேருதவி புரிந்துள்ளது. இம்மூன்றும் நந்திவர்மனே பெரிய புராணம் கூறும் காடவர்கோன் கழற்சிங்கன் என்பதை அறிய உதவிபுரிந்தது. இந்நூலே ஆகும். இதனால், கழற்சிங்கன்வரலாற்றுச் சிறப்புப்பெற்று விட்டான் அல்லனோ? இவன் அவனி நாரணன் என்றொரு பெரும் கொண்டவன் என்பது கலம்பகம் கூறும் நற்செய்தியாகும். காவேரிப்பாக்கம் ‘அவனி நாராயணச்’ சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது. சையாமில் இருந்த குளம் ஒன்று (தமிழன் பல்லவ நாட்டினன் வெட்டியது) அவனி நாரணம் எனப்பட்டதாக அங்குக் கிடைத்த கல்வெட்டுக் கூறுகிறது. பின்னிரண்டை ஒப்புநோக்கக் கலம்பகம் எத்துணைப் பேருதவி புரிகிற நிலையில் இருக்கிறதென்பது தானே விளங்கும். இவற்றோடு, இச்சிறு நூல், தமிழ்மொழியில், கலம்பகம் என்னும் பிரபந்த முறையில் இன்றுள்ள முதல் நூல் என்று கூறத்தக்க பழைமையும் பெற்ற தென்னலாம்: பல்லவர் காலயாப்பிலக்கண வளர்ச்சியை உள்ளவாறு அறிய உதவும் அரிய நூல் என்னலாம்.

பாரத வெண்பர (கி.பி. 830-850)

இதுவும் மூன்றாம் நந்திவர்மன் காலத்து நூல்; அவனால் ஆதரிக்கப்பெற்ற பெருந்தேவனார் என்ற தமிழ்ப்புலவர் பாடியது. இதனை இந்நூலின் முதற் செய்யுளாலும் அதன்கீழ் உள்ள உரைப் பகுதியாலும் நன்கு உணரலாம்.

“வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்
உண்மையால் பாராள் உரிமையால்-திண்மையால்
தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோ(டு)
யார்வேந்தர் ஏற்பார் எதிர்!”

உரை நடை: “எல்லையின் நிறைந்த எண்டிசை உலகத்து மலையும் மலையும் உள்ளிட்ட மண்மிசை முழுதும் மறையது வளர்க்க அல்லி பீடத்து அரிவைக்குத் தன் அழகமர் தோளே ஆலயமாக்கிய பல்லவர் கோமான் பண்டிதர் ஆலயனைப் பரவினேம்.” தெள்ளாற்றுப் போர் குறிக்கப்பட்டுள்ளதால் இந்நூல் செய்யப்பட்ட காலம் ஏறத்தாழக் கி.பி. 830-850 எனக் கூறலாம்.

உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள்: இது வெண்பா, விருத்தம், அகவல் என்ற மூவகைப் பாக்களால் ஆனது இடையிடையே கதை தொடர்புக்காக உரைநடை மிகுதியாக விரவப்பெற்றுள்ளது. இத்தகைய முறை ‘சம்பு’ எனப்படும். இந்நூலாசிரியர் காலத்தில் கங்க நாட்டில் இச் சம்பு நூல்களேயாக்கப்பெற்றன என்பது இங்கு அறியத்தகும்.[24]

ஆசிரியர் வைணவர்: பெருந்தேவனார் சிறந்த வைணவர் என்பது இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாக்கள் பலவற்றால் தெரிகிறது. சிறந்த நாயன்மாருள் ஒருவனான நந்திவர்மனது அவைப்புலவர் சிறந்த வைணவர் என்பது வியப்புக்குரியது. இஃது அப் பேரரசனது பரந்த அறிவின் மாட்சியை விளக்குவதாகும் அன்றோ?[25]

நூற் செய்திகள் சில: (1) இவர் பாரதப் போரில் பல்லவரும் போரிட்டனர் எனக் கூறுதல்நகைப்பைத்தருகிறது. பல்லவர் மட்டும் இல்லை; குந்தளர் (கதம்பர்), சாளுக்கியர், கொங்கணர், கங்கர் முதலியதம் கால அரசரையும் பாரதப்போரில் இழுத்துவிட்டனர்.[26] (2) இவர் “மீகாமன் இல்லாத மரக்கலந்தான் ஆக்கினாய் வேந்தர் ஏறே”[27] என ஓரிடத்தில் உவமை கூறிஇருத்தல் தம் காலத்துக் கடல் வாணிய உணர்ச்சியால் என்னல் தவறாகதன்றோ?

(3) இவர் குறித்த வைணவத் தலங்கள்: திருவேங்கடம், திருமாலிருஞ்சோலைமலை, திருஅரங்கம் திருஅத்தியூர் என்பன. எனவே, இவை இவர் காலத்தில் மிக்க சிறப்புற்றனவாக இருந்திருக்கலாம் என்பதை நம்பலாம்.

“தேனோங்கு சோலைத் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும்-தானோங்கு
தென்னரங்க மென்றும் திருவத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டே சுகம்.”[28]

(4) தொகைநூல் தொகுப்பாளரா?: இப் பெருந்தேவனார், ‘எட்டுந் தொகையின் தொகுப்பாளர்’ என அறிஞர் சிலர் கருதுகின்றனர். களப்பிரர் குழப்பத்தால் பாண்டிய அரசு திடீரென வீழ்ந்ததாக வேள்விக்குடிப் பட்டயம் பகர்கிறது. அதனால், அதற்கு முன்னரே சங்கம் முற்றுப் பெற்றதாகக் கூறமுடியாது. அது திடீரென நின்றுவிட்டதாகல் வேண்டும். பின்னர் வந்த பாண்டியர் எவரும் அதைப்பற்றிக் கவலை கொண்டதாகவும் தெரியவில்லை.பல நூல்கள் அழியக் காரணம் களப்பிரர் குழப்பம், முதல், இடைக்காலப் பல்லவரது குழப்பமான அரசாட்சி, பல நாட்டார் செய்த போர்கள். திகம்பர சமணர், புத்தர் இவர்தம் இடையீடு இன்ன பிறவற்றால் பழந்தமிழ்ச்செய்யுட்கள் பல அழிந்தொழிந்தன. ஓரளவு அமைதியும் பல்லவர் பாண்டியர் நட்பும் உண்டான நந்திவர்மன் இறுதிக் காலத்தில், கிடைத்த பழைய பாடல்களைப் பெருந்தேவனார் முறைப்படுத்திச் சேர்த்திருத்தல் கூடியதே என்க. மூன்றாம் நந்திவர்மன் பைந்தமிழை ஆய்ந்த நந்தி ஆதலாலும், பாண்டிய நாடு தன் உறவு கொண்டமையாலும் இந் நன்முயற்சியில் ஈடுபடுமாறு தன் அவைப்புலவரை வேண்டி இருக்கலாம். அவரும் அதற்கு உடம்பட்டுப் பாக்களைத் தொகுத்துக் கடவுள் வாழ்த்துக்கூறி முடித்திருக்கலாம்,[29] என்று வரலாற்று ஆசிரியர் சிலர் எண்ணுதல் ஆராய்ச்சிக்குரியதே ஆகும்.

சேரமான் பாடிய நூல்கள்
(கி.பி. 825-850)

முன்னுரை

இவர் சுந்தரர் காலத்தவர்; மூன்றாம் நந்திவர்மன் காலத்தவர்; சீமாறன் சீவல்லபன் காலத்தவர்; இவர் பொன் வண்ணத்து அந்தாதியைத் தில்லைநகரிற் (பல்லவர் நாட்டில்) பாடினார்; மும்மணிக்கோவையைத் திருவாரூரிற் பாடினார்; ஞானவுலாவைக் கயிலையிற்பாடினார் என்பர். இவை மூன்றாம் பல்லவர்கால நூல்கள் ஆதலின், இவற்றைப்பற்றிச்சிறிதேனும் அறிதல் நன்றாகும்.

அந்தாதி

இது நூறு பாக்களைக் கொண்டது; முதலும் முடிவும் பொன்வண்ணம் எனத் தொடங்கி முடிவது சங்கமங்கை (23), மறைக்காடு (47), ஐயாறு (60), தில்லை (77), கழுக்குன்றம் (59) என்ற தலங்கள் குறிக்கப்பெற்றுள்ளது.அழகிய பொருட் செறிவுடைய பாக்களைத் தன் அகத்தே பெற்றது. சேரமான் தன்னைச் செவிலி யாகவும், தலைவியாகவும் வைத்து இப் பாடல்களைப் பாடியுள்ளார். வருணனை மிக்கபாக்கள் சிலவுண்டு. அவற்றில் ஒன்று காண்க. சிவனார்,

சடை-எரிகின்ற தீப்போன்றது.
கங்கை-அத் தீக்குச் சொரியும் பாற்கடல் போன்றது;
(நீரில் சரிகின்ற திங்கள்-தோணி போன்றது;
அரவு-தோணி செலுத்துவோனைப் போன்றது.[30]

ஒரு செய்யுளில் மும்மூர்த்திகளுடைய பெயர்.இருப்பிடம் நிறம், மாலைகள், ஆதனம் கூறப்பட்டுள்ள அழகு நோக்கத்தக்கது.

பெயர்: சிவன் அயன் அரி
இருப்பிடம்: வெற்பு அலர் நீர்
நிறம்: எரி பொன் கார்
மாலை: கடுக்கை கமலம் துழாய்
ஆதனம்: விடை தோல் பறவை[31]

மும்மணிக்கோவை

இது திருவாரூரிற் சுந்தரர் முன்பு கோவிலிற் பாடியது. முப்பது செய்யுட்களை உண்ட்யது; அகவல், வெண்பர், கட்டளைக் கலித்துறை முறையே அமைந்தது. களவு, கற்பு என்ற இரண்டும் விரவப் பாடப்பெற்றது; ஒவ்வொரு பாவிலும் திருவாரூர் குறிக்கப்பெற்றது. ஒவ்வோர் அகவற்பாவும் (2, 4, 7, 10, 13, 25) அகநானூற்றுப் பாக்கள் போல முறையும் செறிவும் முடியும் அமையப்பெற்றது. பத்தாம் செய்யுளின் முதல் ஐந்து அடிகள்தலைவி வருத்த நிலையை அழகுறக் கூறுவன. இவ் வருணனை சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியின் பிரிவு நிலையுடன் ஒப்பிடத்தக்கது. இதன்கண் ஆரூர், சிராமலை (10), திருக்கடவூர் (24) குறிக்கப்பட்டுள: தக்கன் வேள்வி (12), சிவன் யானை உரித்தது (28), மலைமகட்கு ஒரு கூறு தந்தது (28) ஆகிய கதைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஞானவுலா

இது சிவபெருமான்முன் திருக்கயிலையிற் பாடியதென்பர். இந்நூல் படிக்கப் படிக்க இன்பம் தருவது. இதில் பல அரிய பொருள்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே காண்க.

(1) சிவன், ‘அரியாகிக் காப்பான்; அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனும் தானே.’

(2) சிவன், ‘எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான்.’

(3) அக்கால இசைக் கருவிகள்-சல்லரி, தாளம், தகுணிதம், தத்தளகம், கல்லலகு. கல்லவடம், மொந்தை. சங்கம், சலஞ்சலம், தண்ணுமை, பேரி, குடமுழவம், கொக்கரை, வீணை, குழல், யாழ், தடாரி, படகம், மத்தளம், துந்துபி, முருடு[32] என்பன.

(4) ஏழு பருவ மங்கையர் வருணனை படித்து இன்புறத்தக்க பகுதியாகும். அவற்றில் சில வருமாறு:-

(1) மடந்தை ‘தீந்தமிழின் தெய்வவடிவாள்.’

(2) அரிவை, ‘தன் ஆவார் இல்லாத்தகைமையாள்.’

(3) அவள் ‘இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும் மன்னிய வீணையையும் கைவிட்டாள்.'

(4) தெரிவை, ‘ஆராவமுதம் அவயவம் பெற்றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள்.’

(5) இந் நூலால் பெண்கள் சிவபெருமானை எண்ணி வெண்பாக்கள் பாடுதல் மரபு என்பது தெரிகிறது.[33]

(6) இந்நூலில், இல்லாரை எல்லாரும் என்ற குறளும் கண்டு கேட்டு என்ற குறளும் முழுவதும் வைத்து ஆளப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின், இது படித்து இன்புறத்தக்க சிறந்த நூல் என மற்றொரு முறை கூறலாம்.

நாலாயிரப் பிரபந்தம் (கி.பி. 200-900)

முதல்வர் ஆழ்வார் மூவரும் திருமழிசையாழ்வாரும் பல்லவர்க்கு. முற்பட்டவர் ஆவர். நாம் அறிந்தவரை பல்லவர் காலத்தில் தொண்டை நாட்டில் இருந்த திருமங்கை ஆழ்வாரும் தொண்டர் அடிப்பொடி ஆழ்வாருமே ஆவர்.[34] இவர்கள் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் இருந்தவர்கள். இவர்கள் பாடல்களைக் கொண்ட இப் பிரபந்தம்பற்றி முன்னரே நன்கு விளக்கப்பட்டுள்ளது. பல்லவர்கால மணிப்பிரவாள நடைக்கு இந்நூல் ஏற்ற சான்றாகும்.

பல்லவர் அவைப் புலவர் (கி.பி. 615-900)[35]

பிற்காலப் பல்லவர் காலத்திற்றான் தமிழ்மொழியிற் கல்வெட்டுகளும்.செப்பேடுகளும் வெளிவந்தன. அவற்றில் உள்ள அழகிய தமிழ்ப் பெயர்கள், அழகிய தொடர்கள், வருணனை இன்ன பிறவும் பண்பட்ட புலவர் பெருமக்களால் முதலில் வரையப் பட்டிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது.தமிழ்நாட்டில் தமிழ் மக்களை ஆண்டு, தமிழராக மாறிய பல்லவ வேந்தர் தமிழ் அறிவுடையராக இருந்தனர் என்பது பல சான்றுகளால் நிறுவப்பெற்றது. அவர்கள் தமிழ்மொழியை வளர்த்ததோடு, தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்து வந்தனர் எனக் கோடல் பொருத்தமே ஆகும். மூன்றாம் நந்திவர்மனுக்கு முற்பட்ட பல்லவர் காலத்துப் புலவர் இன்னவர், அவர் செய்த நூல்கள் இன்னவை என்பன இப்பொழுது அறியக் கூடவில்லை. ஆயினும், ஒவ்வோர் அரசன் அவையிலும் தமிழ்ப் புலவர் (பட்டயம் எழுதவும் கல்வெட்டில் பாட்டு எழுதவும், பிற சிறப்புடைய அரசியல் ஒலைகள் தீட்டவும்) இருந்திருத்தல் வேண்டும் என்பதை உய்த்துணரலாம்.


  1. Tamil Navaiar Saritai, S.154-157.
  2. K.A.N. Sastry’s “Cholas’ Part I, p.121.
  3. யா-விருத்தி சூ 83. உரை, இது விளக்கத்தனார் பாடியுள்ள நீண்ட கலிப்பாவின் ஒரு பகுதி.
  4. M.Raghava Iyengar’s “Sasans Tamil Kavi Saritam’ pp.17-21.
  5. Mysore Annual Archaeological Report 1925, pp.9-12.
  6. நன்னூல் சூ.272 மயிலை, உரை.
  7. தளவானுர்க் குகைக் கோவில் கல்வெட்டு; ‘சத்ரு மல்லன்’ என்பது மகேந்திரன் வருதுகளுள் ஒன்று.
  8. இம் மூன்று பாடல்களுள் பல்லவ மல்லனையே பற்றியவை. யா-விருத்தி, பாகம் 2, பக், 520-522 இப்பாடல்கள் பல்லவமல்லன் காலத்திலே செய்யப்பட்டவை என்பது ‘பாராளும் பல்லவவமல்லன்’ என்ற தொடரால் உணரலாம்.
  9. யா-விருத்தி சூ.87 உரை.
  10. இஃது இராட்டிரகூடரை வென்றதால், திருமகள் போன்ற இராட்டிரகூட இளவரசியாகிய சங்காவை மனைவியாகப் பெற்றமை கூறப்பட்டது; vide Bahur plates.
  11. இது நீண்ட கலிப்பா, பா-விருத்தி, சூ.86 உரை.
  12. தெள்ளாறு - வட ::ஆர்க்காட்டுக் கோட்டம் வந்தவாசி தாலுக்காவில் உள்ள ஊர்.
  13. இது கோவைப் பாடல்போலும் நந்திக்கோவை என்பதொன்று ‘நந்திக் கலம்பகம்’ என்பதுபோல இருந்ததுபோலும்! அது நந்திவர்மன் தெள்ளாற்றுப் போரில் தமிழரசரை வென்றபின் பாடப்பட்டதாகலாம்.
  14. நந்திக்கலம்பகத்தின் இறுதியிற் சேர்க்கப்பெற்ற பாடல்களில் ஒன்று; கையறுநிலை.
  15. 433 of 1905
  16. Ep.ind, Vol. VII, p.26.
  17. சூ.359. உரை.
  18. தொல் அகத். சூ54உரை. இதனால்; இது நச்சினார்க்கினியர் காலம் வரை வழக்கில் இருந்தமை தெரிகிறது அன்றோ?
  19. கி.பி. 250 முதல் 900 வரை தமிழகத்திற் பல்லவப் பேரரசே இருந்தமையால், அக்காலத்திற் செய்யப்பட்ட தமிழ் நூல்களிற் பெரும்பாலான பல்லவப் பெருநாட்டிற் செய்தனவாகக் கொள்ளப்பட்டன. மேலே கண்டவற்றுட் சில பாண்டிய - சேரநாடுகளிலும் செய்யப்பெற்றவாக இருக்கலாம்.
  20. Vide Author’s Article on “Books on Tamil Prosody’ (Selvi, Vol. 15)
  21. Ibid pp.377–378.
  22. Ibid p.379.
  23. ‘காந்தர்வ வித்தை’யில் மகேந்திரனும் இராசசிம்மனும் பல்லவர் புலவர் என்பது முன்னரே கூறப்பட்டன அல்லவா?
  24. Ibid. p.379.
  25. M. V. Rao’s “Gangas of Talakad’, p. 276
  26. S.387, 484, 514, 546, 559, 571, 583, 590, 618, 629, 678, 711 S.773
  27. S.669
  28. S. 484
  29. P.T.S.Iyengar’s “History of the Tamils’.
  30. S.67
  31. S.95
  32. காரைக்கால் அம்மையார் மூத்த இருப்பதிகத்தில் வரும் இசைக்கருவிகளை நோக்குக.
  33. வெண்பா மிகுதிப்பட்டது பல்லவர் காலமே என்பதற்கு இஃது மொரு சான்றாகும்.
  34. வேண்டுமாயின் திருமழிசை ஆழ்வாரை ஏறத்தாழ முற்காலப் பல்லவர் காலத்தவர் (கி.பி. 250-350) எனக் கொள்ளலாம்.
  35. தளவானூர் கல்வெட்டு வெண்பா மகேந்திரன் காலத்தது; இவன் காலமுதலே தமிழ்க் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ஆதலின் இவன். காலமே தொடக்க காலமாகக் கொள்ளப்பட்டது.