பல்லவர் வரலாறு/25. பல்லவர் கோநகரம்

25. பல்லவர் கோநகரம்

சங்க காலச் சோழர் ஆட்சியில் காஞ்சிமா நகரம் எங்ஙனம் இருந்தது என்பது முதற் பிரிவில் கூறப்பட்டதன்றோ? இப் பிரிவில் பல்லவர் கோநகரம் ஆகிய காஞ்சிபுரம் எந்நிலையில் இருந்தது என்பதைப் பல்லவர் எழுத்துகளைக் கொண்டும் பிற்காலச் சோழர் எழுத்துகளைக் கொண்டும் இன்றைய நிலையைக் கொண்டும் ஒருவாறு காண்போம்:

நகர அமைப்பு

இயூன்-சங்காலத்தில் காஞ்சி நகரத்தின் சுற்றளவு ஏறத்தாழ ஆறு கல்; இன்று ஏறத்தாழ ஐந்து கல்; ஒனகாந்தன் தளியிலிருந்து பிள்ளைப்பாளையம் வரை இன்று வயல்களாக உள்ள நிலப்பகுதி நகரமாக இருந்திருத்தல் வேண்டும் என்பது கயிலாசநாதர் கோவில் கல்வெட்டுகளால் நன்கு தெரிகிறது. வேகவதியாற்றை ஓர் எல்லையாகப் பழைய நகரம் கொண்டிருந்ததென்னல் பிழையாகாது. நகரம் மேற்கில் மேடாகவும் கிழக்கில் பள்ளமாகவும் இருக்கிறது; மேற்கிலிருந்து கிழக்கே வில்லைப்போல் வளைந்திருக்கிறது; நகரத்தெருக்கள் பெரும்பாலும் அகன்றவை. அரச வீதிகள் நான்கும் ஏறத்தாழ 100 அடிஅகலம்கொண்டவை: ‘தேரோடும்விதிகள்,படை செல்லும் வீதிகள்’ என்று கூறத்தக்கவாறு அகன்றுள்ளன. பெருமழை நீரும் சாலைகளில் தேங்குதல் இல்லை; உடனே உட்சென்று விடுகிறது. இந்நகர் நடுவே மஞ்சள்நீர்க் கால்வாய் என்பது ஓடுகிறது. இதனை அடுத்துப் பண்டைக் காலத்தில் ஒடை போன்ற அகழி இருந்தது என்று பெரியோர் பலர் கூறுகின்றனர். அந்த அகழிக்கு அணித்தே உள்ள தோட்டங்களில் நிலத்திற்கு அடியில் செங்கற் படைகள் இன்றும் கிடைக்கின்றன. அச் செங்கற்கள் 18-அங்குல நீளம் 9-அங்குல அகலம் 4-அங்குலகனம் உடையன. எனவே, அச் செங்கற் சுவர் கோட்டைமதிற்கவரின் பகுதியாக இருக்கலாம் என்று எண்ண வேண்டுவதாக இருக்கிறது. ‘மகேந்திரன் கோட்டை மதிலுக்குள் நுழைந்து கொண்டான், அஃது ஏறி உட்செல்ல முடியாத உயரமும் வன்மையும் உடையது’ என்று சாளுக்கியர் பட்டயம் கூறலாலும், ‘மதிற் கச்சி’ எனத் தேவாரத்தில் வருதலாலும் பல்லவர் காலத்தில் நகரைச் சுற்றி மதில் இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. காஞ்சி நகரம் பிற்காலத்தில் பல மாறுதல்களைப் பெற்று விட்டமையாலும் சோழர். விசய நகரத்தார், முஸ்லிம்கள் இவர்கள் ஆட்சியில் பல மாறுபாடுகள் உற்றிருத்தல் இயல்பே ஆதலாலும், பல்லவர் காலச் சின்னங்கள் பல இன்று காண்டல் அருமையே ஆகும்.

எனினும், ஏறத்தாழ இந் நகரப் பொது அமைப்பைப் பல்லவரை அடுத்துவந்த சோழர் காலத்துத் தண்டியலங்காரம் கூறுகிறது. அது கி.பி. 11ஆம் நூற்றாண்டு நூல்: பல்லவர்க்கு 150 ஆண்டுகட்குப் பின் செய்யப்பட்டது. பல்லவர் காலத்துத் தலைநகரம் சோழர்க்கு வடபகுதியின் தலைநகரமாக விளங்கியது. ஆதலால், பெரிய மாறுதல் எதுவும் நேர்ந்திருக்க இடமில்லை. ஆதலின் நாம் தண்டியலங்காரப் பாடலைச் சிறந்த சான்றாகக் கோடலில் தவறில்லை. அது வருமாறு:

“ஏரி இரண்டும் சிறகா, எயில்வாயிறாக்,
காருடைய பீலி கடிகாவா,-நீர்வண்ணன்
அத்தியூர் வாயா, அணிமயிலே போன்றதே
பொற்றேரான்கச்சிப் பொலிவு.”

பெரியபுராணம் இது கி.பி.12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப்பெற்ற நூல்; சோழர் அலுவலாளரும் தொண்டைநாட்டினரும் காஞ்சியை நேரிற் பார்வையிட்டவருமாகிய சேக்கிழார் காஞ்சி நகரத்தைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் 60 பாக்களில் சிறப்பித்துள்ளார்.[1] அப்பாக்களில் வரும் செய்திகளிற் பெரும்பாலான நகர்நிலைமையை அறியப் பேருதவி செய்வனவாகும்.

கெட்டிஸ் துரை கூற்று

இந்நகர அமைப்பைப்பற்றி, நகர அமைப்புத் திட்டவல்லுநரான திரு. கெட்டிஸ்துரை அவர்கள் கருத்து கச்சி நகராண்மைக் கழக அறிக்கையில் (1914-1915) அழகாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதில் சில பகுதிகள் ஈண்டுக் காண்க:-

“காஞ்சி நகரம் எண்ணிறந்த கோவில்கட்கு மட்டுமே பெயர் பெற்றதன்று. மிக்க தேர்ச்சியுடனும் கூர்ந்த அறிவுடனும் அமைக்கப்பட்ட நகர அமைப்புக்கும் இந்நகரம் பெயர்பெற்றதாகும். இந்த நகர அமைப்புத் திட்டத்துக்கு இணையான ஒன்று இந்தியாவில் உள்ள வேறு எந்த நகரத்திலும் இல்லை; உலகத்தில் உள்ள வேறு எந்த நகரத்திலும் இல்லை. வீடுகள் பாதை மட்டத்திற்குப் பல அடிகள் உயர்த்திக் கட்டப்பட்டிருத்தல் பாராட்டத்தக்கது. மேனாட்டு உயர்ந்த பெரிய நகரங்களில் காணக் கிடைக்கும் இருட்டுச் சந்துகளும் பலவகை அழுக்குகளும் காஞ்சியிற் காண்டல் அருமை!..... ஏகாம்பரநாதர் கோவிலைச் சேர்ந்த தேர் ஓடும் வீதிகளும், காமாட்சி அம்மன் கோவிலைச் சேர்ந்த தேர் ஒடும் வீதிகளும் ஒன்றுக்கொன்று இடர்ப்படாமல் அமைத்துள்ள முறை வியந்து பாராட்டத்தக்கதாகும்.நகர அமைப்புத்திட்டப் பயிற்சி பெறுவோர்க்கு இது சிறந்த இலக்காக அமைந்திருக்கிறது......”[2] 

பெளத்தர் தெருக்கள்

காஞ்சிநகராண்மைக்கழகம் கி.பி.1865இல் அமைக்கப்பட்டது. அக்காலத்திற்குமுன், இன்று ‘காமாட்சி’ அம்மன் சந்நிதித் தெரு என்னும் பெயர் கொண்டுள்ள தெரு ‘புத்தர் கோவில் தெரு’ என்று வழங்கப்பெற்றது. அத் தெருவின் இப்பண்டைப் பெயரைப் பனை ஓலைப் பத்திரங்களில் பார்த்த முதியவர்[3] இன்றும் அத் தெருவில் இருக்கின்றார். 30 ஆண்டுகட்கும் அவரது இல்லத்திற்கு எதிரில் நான் கைந்து வீடுகளுக்குப் பின்னுள்ள தோட்டத்தில் புத்தர் சிலைகள் இரண்டு அகப்பட்டன. இன்று அவை கருக்கினில் அமர்ந்தாள்[4] கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. அச்சிலைகள் இருந்த இடம் பண்டைக் காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது. அக் கோவிலைச் சேர்ந்த பழைய கிணறுகள் இரண்டு இன்றும் நன்னிலையில் இருக்கின்றன. புத்தர் கோவிற் பகுதிகளைக்கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டதாம். இன்றுள்ள காமாட்சி அம்மன் சந்நிதித் தெருவை அடுத்த சுப்பராய முதலியார் இல்லத் தோட்டத்தில் ஏறத்தாழ 5 1/2 அடி உயரமுள்ள புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. அது முன் சொன்ன இரண்டைப் போலவே அமர்ந்த நிலையில் அமைப்புண்டதாகும்; முன்னவற்றை விடப் பெரியது. அந்தத்தோட்டத்தில் உள்ள மண்டபம் ஒன்று 150 ஆண்டுகட்குமுன் கட்டப்பெற்றதாம். அதன் அடிப்படையை அமைக்கும்பொழுது நின்ற கோலங் கொண்ட புத்தர் சிலைகள் காணப்பட்டனவாம். இச் செய்திகளைநன்கு ஆராயின்,புத்தர்கோவில் தெருஒன்று இருந்தது. அங்குப்புத்தர் கோவில்கள் சில இருந்தன என்பது நன்கு புலனாகும் இன்றுள்ள புத்தேரித் தெரு என்பது ‘புத்தர் சேரி’ என்று இருத்தல் வேண்டும்; ஆயின், ‘புத்தேரி’த் தெரு என்றே சோழர் கல்வெட்டுகளிலும் பயின்று வருதல் இதன் பழைமையைக் காட்டுகிறது. அறப் பணச்சேரித் தெரு என்று ஒன்றுண்டு. அஃது ‘அறவணர் (அறவண அடிகள்) சேரி’ யாக இருந்திருக்கலாம் என்பர் இராவ்சாகிப் திரு. மு. இராகவையங்கார் அவர்கள். சில ஆண்டுகட்கு முன் காமாட்சி அம்மன் கோவிலிருந்து புத்தர் சிலைகளைத்திருவாளர் கோபிநாதராயர் கண்டெடுத்ததை ஆராய்ச்சி உலகம் நன்கறியும் அன்றோ? மணிமேகலையை நன்கு ஆராய்ந்தவர், காஞ்சியில் பெளத்த இடங்கள் சில வேனும் இருந்தன என்பதை ஒப்புவர். இபூன்-சங், மகேந்திரவர்மன் இவர்தம் நூல்களாலும் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பெளத்தர் காஞ்சியில் இருந்தனர் என்பதை எளிதில் உணரலாம். எனவே மேற்கூறிய தெருக்கள் இரண்டும் பண்டைக் காலத்தில் சிறப்பாகப் பல்லவர் காலத்தில் புத்தர் வாழ்ந்த இடங்களாக இருந்தன என்னலாம்.

‘சாத்தன் குட்டைத் தெரு’ என்பதொரு தெருவாகும். ‘சாத்தன்’ என்பது ‘சஹஸ்தன்’ என்பதன் மருஉ மொழி. இப் பெயர் புத்தர் பெருமானைக்குறிப்பது. ‘சாத்தனார்’ என்பது மணிமேகலை ஆசிரியர் பெயராதல் காண்க. இதனால், பல்லவர் காலத்திலும் அதற்கு முற்பட்ட சோழர் காலத்திலும் ‘புத்தர்’ போன்ற கடவுளர் பெயர்களைக் குளங்கட்கு இடுதல் மரபு என்பது தெரிகிறது.

பிற தெருக்கள்

யானை கட்டுந் தெரு, பட்டாளத் தெரு, காவலன் தெரு, முதலியன அரசியல் அமைப்பைச் சேர்ந்த தெருக்கள். அவை இன்றும் அப்பெயருடன் வழங்குகின்றன என்பது நோக்கத்தக்கது.[5] பலவகைத் தொழிலாளர் தெருக்கள் பண்டு இருந்தவாறே இன்றும் இருந்து வருகின்றன. அவற்றுள் சில சாலியர் தெரு, சுண்ணாம்புக் காரத்தெரு, நிமந்தக்காரத் தெரு (கொத்தத் தெரு) என்பன. சோலைகள் (இக்கால Park) இருந்த தெருக்கள் சில. அவை திருச்சோலைத் தெரு, மதுரன் தோட்டத் தெரு, தோப்புத் தெரு

முதலியன. மடம், மண்டபம் முதலியவற்றை உடைய தெருக்கள்-மடத்துத் தெரு, மண்டபத் தெரு, மூன்றாம் திருவிழா மண்டபத் தெரு எனப்பட்டன. கோவில்கள் உள்ள தெருக்கள் அக் கோவிற் பெயர் கொண்டு விளங்கின. அவை மதங்கீசர் தெரு, திருமேற்றளி ஈசர் தெரு முதலியன. இப் பெயர்கள் பல்லவர் காலத்தில் இருந்தன என்று கோடலில் எவ்விதத் தவறும் இருப்பதாகக் தெரியவில்லை. வடக்கு வாசல் தெரு என்றொரு தெரு இன்றும் இருக்கின்றது. இவ் வாசல் பண்டைக் கோட்டை வாசலாக இருந்திருக்கலாம்.[6]

காஞ்சியை அடுத்துக் காஞ்சி வாயில் என்னும் பெயருடன் சில சிற்றுார்கள் இருந்தன என்பது இங்குநினைவிற் கொள்ளுதல் நலம்.[7] ‘சாலாபோகம் தெரு’ என்பது ஒன்று. சாலா போகம் என்பது கோவில் வயல்களைக் குறிப்பதாகும். அயற்றை அடுத்துள்ள தெரு இங்ஙனம் அழைப்புண்டமை கருதத்தக்கது.

பல்லவ மேடு

இஃது இன்று ‘பாலி மேடு’ எனக் கூறப்படுகிறது. இந்த இடம் பெரிய காஞ்சிக்கும் சிறிய காஞ்சிக்கும் இடையில் தக்க இடத்தில் அமைந்திருத்தலே - இது பண்டைக் காலத்தில் பல்லவர் அரண்மனை இருந்த இடமாதல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இம்மேடு காஞ்சிநகரமட்டத்திற்குமேல் ஏறத்தாழ 30 அடி உயரம் உடையது. இதன்மீது நின்று நாற்புறமும் காணின், சுற்றிலும் பள்ளமான நிலப்பரப் புண்மையை உணரலாம். மேட்டின்மீது தென்னை மரங்கள் வளர்ந்துள்ளன. ஒருபால் சிறிய கோவில் இருக்கின்றது. அக் கோவிலில் உள்ள ஆவுடையார் செங்கல்லாலும் சுதையாலும் அமைந்தது. லிங்கம் கல்லால் இயன்றது. அக்கோவிலை அடுத்து இரண்டு கல் மண்டபங்கள்

காண்கின்றன. ஒரு மண்டபம் மகேந்திரன்தூண்களைக் கொண்டது. அம்மண்டபத்தில் இரண்டு வரிசைத் தூண்கள் இருக்கின்றன. மண்டபத்தை அடுத்துச் சில அறைகள் காணப்படுகின்றன. ஒன்று - மிகச்சிறிய அறை அது பூசை அறை போலும்! அதனை அடுத்துள்ள அறை இருண்டது. அதன் ஒரு மூலையில் சுரங்கம் ஒன்று படிக்கட்டுகளை உடையதாக இருக்கிறதாம். அச் சுரங்கம் கயிலாசநாதர் கோவிலுக்குச் செல்கிறதாம். மற்றொரு மண்டபம் இடிந்தது. அதில் உள்ள தூண்கள் ஐவகைப்பட்டவை: பல்வேறு காலத்தவை. மண்டபக்கூரை கருங்கற்களால் ஆனது. அதன்மீது செங்கல் சுண்ணாம்புத் தளம் இடப்பட்டுள்ளது. இப் பல்லவர் மேடு அகழப்பெறும் நாளே பல்லவரைப்பற்றிய் நற்குறிப்புகள் கிடைக்கும் நன்னாள் ஆகும். இம்மேடு அரசாங்கத்தார் பாதுகாவலில் இருப்பது போற்றத்தக்கதாகும்.

திருமேற்றளி என்பது பிள்ளைப்பாளையத்தில் இருக்கின்றது. இக்கோவில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றதாகும். இக்கோவிலில் இருந்த திருமால் சம்பந்தர் பாடல் கேட்டுச் சிவலிங்கமாக உருமாறினார் என்பது வரலாறு. இக்கோவிலைச் சேர்ந்த மடம் ஒன்று இருந்தது. அதற்குத் தந்திவர்மன் காலத்து முத்தரையன் ஒருவன் தானம் செய்ததாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[8]

கச்சிநெறிக் காரைக்காடு: இஃது அப்பர். சம்பந்தர் பாடல்கள் பெற்றது. எனவே, இதுவும் கி.பி.7ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில் ஆகும். இஃது இன்று ஊருக்கு வெளியே இருக்கிறது. ஆயின் பல்லவர் காலத்தில் ஊருக்குள் இருந்திருத்தல் வேண்டும்.

இங்ஙனமே ஒனகாந்தன்தளி, என்னும் சிறு கோவிலும் ஊருக்குச் சிறிது அப்பால் உள்ளது. அக் கோவில், கயிலாசநாதர் கோவில், மேற்றளிக் கோவில் இவை மூன்றும் ஏறத்தாழ ஒரே வரிசையில் உள்ளதை நோக்க, மேற்றளி பல தெருக்கட்கு இடையில் இருத்தலையும், மற்ற இரண்டும் வயல்கட்கிடையே இருத்தலையும் நோக்கப் பண்டை நகரப் பகுதிகள் சில இன்று வயல்களாக மாறிவிட்டமை நன்கு விளங்கும். இதனைக் கம்பனவுடையார் காலத்துக் கயிலாசநாதர் கோவிற் கல்வெட்டுகளும் மெய்ப்பித்தல் காணலாம்.

முடிவுரை

சுருங்கக்கூறின் காஞ்சிமாநகரம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளாகச் சிறப்புற்று விளங்கும் மாநகரம் என்னலாம். இது நகர அமைப்பில் இணையற்று இயங்குவது சமயத்துறையில் சிறப்புற்றுவிளங்குவது: வரலாற்றுத்துறையில் வளம்பெற்று இருப்பது. இப்பெருநகரம் பல மரபுகளைச் சேர்ந்த முடி மன்னர்களைக் கண்டது.[9] பல படையெடுப்புக்களைக் கண்டது. இதனை ஆண்ட அரசர் மறைந்தனர். இதன்மீது படையெடுத்த பார்மன்னரும் மறைந்தனர். ஆயின் காஞ்சி இன்றும் நின்று நிலவுகிறது. தனது பண்டை வரலாற்றைச் சிதைவுகள் வாயிலாகவும் கோவில்கள் வாயிலாகவும் தன்னடியில் மறைப்புண்டுவெளிப்படும் பொருள்கள் வாயிலாகவும் நமக்குப் புன்முறுவலோடு அறிவித்து நிற்கும் சாட்சி, வரலாற்று உணர்ச்சி உடையாருடைய கண்கட்கும் உள்ளத்திற்கும் பெரு விருந்தளிப்பதாகும்.


  1. S.50-110.
  2. Prof. Geddes’s ‘Report of Towns’ G.O.N.1272, M.dated 16-8-1915.
  3. திருவாளர். பாலகிருட்டிண முதலியார் அவர்கள்.
  4. கருக்கி சினையாகுபெயராய்ப் பனையை உணர்த்திற்று ‘பனங்காட்டில் அமர்ந்த காளி’ என்பது பொருள்.
  5. திருநெல்வேலியில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் இன்றும் ‘பரத்தையர் தெரு’ என்னும் பெயர் கொண்ட தெரு இருப்பதாகக் திரு.செ.தெ. நாயகம் அவர்கள் கூறினார்கள். இப் பண்டைப் பெயர் இன்றளவும் நிலைத்திருத்தல் அருமை அன்றோ?
  6. ‘ஏரி இரண்டும் சிறகா.... பொலிவு’ என வரும் தண்டியலங்கார வெண்பா இங்கு நினைக்கத்தக்கது.
  7. S.I.I. Vol. II, p.365.
  8. 89 of 1921.
  9. “Of all the ancient palces in South India there is none that can rival the ancient Kanchi in the variety, antiquity and importance of ancient monuments. Here are Jaina and Buddhist, Saiva and Vaishnava temples of the Pallava, Chola and later times, Which it would be difficult to imagine in any other place” - K.N.Dikshit. Director-General of Archaeology in Indią, Memoris of the A.S. of India, No.63 (Preface)