பழைய கணக்கு/எது திரட்டு? எது திருட்டு?



எது திரட்டு? எது திருட்டு?

நான் ராஜாஜியின் விசிறி. அவரது எழுத்தும் நகைச்சுவை மிக்க பேச்சும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பேசும் கூட்டங்களுக்குத் தவறாமல் போய் விடுவேன். குட்டிக் கதைகள், பொருத்தமான உவமைகள் மூலம் தாம் சொல்ல வந்ததை விளக்குவதில் ராமகிருஷ்ண பரமஹம்சருக்குப் பின் ராஜாஜியை மிஞ்சியவர் யாருமில்லை. கல்கி ராஜாஜியைப் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதுவார். அந்தப் புகழ்ச்சியில் மிகை இருந்ததில்லை. இதெல்லாமாகச் சேர்ந்து ராஜாஜியின் மீது நான் கொண்டிருந்த மரியாதை பக்தியாகவே மாறி விட்டது.

ராஜாஜியின் குட்டிக் கதைகளையும். உவமைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுமென்பது என் நீண்ட நாள் அவா. ராஜாஜி பேசும் எந்தக் கூட்டத்துக்கு நான் போனலும் குறிப்பெடுக்கத் தவறமாட்டேன். நான் குறிப்பெடுத்து எழுதியவை போக மேலும் சில உவமைகளைச் சென்னை பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குப் போய் அங்கே சேர்த்து வைப்பட்டிருந்த பழைய ஹிந்து நாளிதழ்களிலிருந்து எடுத்துச் சேகரித்தேன்.

ராயபுரம் ராபின்ஸன் பூங்காவில் ஒரு கூட்டம். ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது இந்த மாகாணத்தில் (அப்போதெல்லாம் மாகாணம்) மதுவிலக்குச் சட்டம் கொண்டு வந்தார். ராஜாஜி எந்தச் சட்டம் கொண்டு வந்தாலும் அதைப்பற்றிப் பொது மக்களிடையே போய் விளக்கம் தருவது வழக்கம். விற்பனை வரிச் சட்டம் கொண்டு வந்த போது கொத்தவால் சாவடியில் கூட்டம் போட்டுப் பேசினர். மதுவிலக்கு அமலுக்கு வந்தபோது ராயபுரத்தில் போய்ப் பேசினார்.

“நான் ஏன் சேலம் போன்ற தமிழக ஓரப் பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கிறேன் என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். கிராமத்திலிருந்து வருபவர்களுக்குத் தெரியும். சாப்பிடுவதற்குக் கூழ் காய்ச்சி அதைச் சூடாகத் தட்டில் ஊற்றி வைத்தவுடன் சாப்பிடுபவன் முதலில் ஓரமாகத்தான் விரலால் தொட்டுப் பார்ப்பான். அதைப் போலவே மதுவிலக்கை அமல் படுத்துவதற்கு முதலில் ஒரமாக உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன்?” என்று சொன்ன உவமையை நான் இன்றும் கூட எண்ணிப் பார்த்து ரசிப்பதுண்டு.

தனி நபர் சத்தியாக்கிரகத்தின் போது ராஜாஜி எந்நேரமும் கைது செய்யப் படலாம் என்று ஒரு செய்தி பரவியது. அவ்வளவு தான்; ஆயிரக்கணக்கான் பேர் அவர் வசித்து வந்த பஸ்லுல்லா வீதியில் கூடிவிட்டனர். “காலை பத்து மணிக்கு அரெஸ்ட் பண்ணப் போருங்களாம்” என்று செய்தி பரவும். எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ராஜாஜி கைதாக மாட்டார்! சாயங்காலம் இருக்கும் என்று கூட்டத்தினர் தாங்களாகவே பேசிக் கொண்டு போவார்கள். சாயங்காலத்துக்குள் மறுபடியும் திரும்ப வந்து காத்திருப்பார்கள். இப்படியே மூன்று நான்கு நாட்கள் ஒரே சஸ்பென்ஸாக இருந்தது.

இதைக் குறித்து ராஜாஜி சொன்னர் : “கிராமங்களில் வாழைத்தாரை அறுத்துப் பழுக்கப் போடுவார்கள். அதை ஒரு பானையில் வைத்து வைக்கோல் போட்டு மூடிவிடுவார்கள். தார் பழுக்க நாலைந்து நாட்கள் ஆகும். ஆனால் வீட்டிலிருக்கும் சின்னப் பயல்களுக்கு அதுவரை தாள முடியாது. அடிக்கொரு முறை உள்ளே போய் வைக்கோலே எடுத்துத் தார் பழுத்து விட்டதா என்று பார்ப்பார்கள். அதுபோல நான் கைதாகும் வரை இவர்களால் பொறுக்க முடியவில்லை!”

இம்மாதிரியான உவமைகள் பலவற்றை நான் அரும்பாடு பட்டுத் தொகுத்து வைத்திருந்தேன். என்றைக்காவது ‘ராஜாஜி உவமைகள்’ என்ற தலைப்பில் புத்தகமாகப் போட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

நானும் சின்ன அண்ணாமலையும் நெருங்கிய நண்பர்கள். புத்தகம் போடும் என் எண்ணத்தை அவரிடம் கூறி அதுவரை நான் தொகுத்து வைத்திருந்த எல்லா உவமைகளையும் அவரிடமே கொடுத்து வைத்தேன்.

வெள்ளிமணிக்குப் பிறகு எனக்கும் சின்ன அண்ணாமலைக்கும் இருந்த நட்புறவு முறிந்து விட்டதால் சிறிது காலம் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமல் இருந்தோம். அந்த நேரத்தில் நான் அவரிடம் கொடுத்து வைத்திருந்த தொகுப்பை அவர் தன்னுடையதாக பாவித்துத் தன் பெயரிலேயே அப்புத்தகத்தை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தச் செய்தி அறிந்தவுடன் என்னால் பொறுக்க முடியவில்லை. உடனே என் ஞாபகத்திலிருந்தே அந்த உவமைக் கதைகள் அவ்வளவையும் மீண்டும் எழுதி நானும் புத்தகமாக அச்சடித்தேன். பேராசிரியர் கல்கி இதற்கு முன்னுரை வழங்கினர். புத்தகம் பைண்டாவதற்கு முன் அச்சிட்ட ஃபாரங்களை ராஜாஜிக்கு அனுப்பி, புத்தகம் வெளியிடுவதற்கு உரிமை கேட்டிருந்தேன். அவரும் மகிழ்ச்சியோடு எனக்கு உரிமை வழங்கிக் கடிதம் எழுதியிருந்தார்.

“அதெப்படி நீங்கள் சாவிக்கு உரிமை கொடுக்கலாம்? நான் ஏற்கனவே புத்தகம் தயாரித்தாகி விட்டது” என்று சின்ன அண்ணாமலை ராஜாஜிக்குக் கடிதம் எழுதினார். ராஜாஜி உடனே, “ஆயிரம் பிரதியுடன் நிறுத்திக்கொள். இரண்டாம் பதிப்பு போட வேண்டாம்” என்று எனக்கு இன்னொரு கடிதம் எழுதியிருத்தார். எனக்கு இது மிகுந்த வருத்தத்தை அளித்தது.

ராபின்ஸன் பார்க்கில் குறிப்பெடுக்க ஆரம்பித்தது முதல் யூனிவர்ஸிடி லேப்ரரி பழைய பேப்பர்களைப் பார்த்துத் தொகுத்தது வரை எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் எழுதி “இது அத்தனையும் என் உழைப்பு. சின்ன அண்ணாமலையையும் உங்களுக்குத் தெரியும். என்னையும் தெரியும். இரண்டு பேரையும் எடைபோட்டு முடிவுக்கு வரவும் உங்களுக்குத் தெரியும்” என்று கடிதத்தை முடித்து, கூடவே நான் தயாரித்திருந்த புத்தகத்தையும் அனுப்பி வைத்தேன்.

ராஜாஜி அந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு அதில் சில திருத்தங்களையும் செய்து அனுப்பியிருந்தார். ஒரு திருத்தம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒரு வாக்கியத்தில் ‘மூளை’ என்ற சொல் இடம் பெற்றிருந்தது. ராஜாஜி அதை அடித்து ‘அறிவு’ என்று மாற்றியிருந்தார்.

கூடவே அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம்:

“எல்லா விஷயமும் தெரிந்தது. உன்னுடையதுதான் திரட்டு. இன்னொன்று திருட்டு.”