பழைய கணக்கு/கல்கி ஏன் ஜிப்பாவுக்கு மாறினார்?



கல்கி ஏன் ஜிப்பாவுக்கு மாறினார்?

‘கத்தரி விகடன்’ என்ற பெயரில் நான் ஒரு பத்திரிகை தொடங்கினேன். வருடம் 1937. அப்போது ஆனந்த விகடன் பொறுப்பாசிரியராக இருந்த கல்கி அவர்கள் என்னைக் கூப்பிட்டனுப்பி, பத்திரிகையாவது, மண்ணாவது. அதெல்லாம் நடத்த முடியாது. ஆனந்த விகடனில் உனக்கு உதவி ஆசிரியர் வேலை தருகிறேன். ஒப்புக் கொள்கிறாயா?” என்று கேட்டார்.

“சரி” என்றேன்.

“நீ இதுவரை கத்தரி விகடனுக்காக எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறாய்?” என்று கேட்டார் கல்கி.

“நூற்று அறுபது ரூபாய்” என்றேன்.

“அதை நீ வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறி விகடன் ஆபீஸிலிருந்து அந்தப் பணத்தைக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தார். மொத்தமாக அவ்வளவு பெரிய தொகையை நான் அதுவரை பார்த்ததில்லை. எனவே பணம் வந்த குஷியில் அன்றே ஒரு ஸில்க் ஜிப்பா தைத்துப் போட்டுக் கொண்டேன். மறுநாள் அதை அணிந்து கொண்டு அலுவலகம் போனபோது கல்கி அவர்கள் என்னை ஏற இறங்கப் பார்த்தார். அவருக்குப் புரிந்து விட்டது!

“நேற்று கொடுத்த பணம் ஸில்க் ஜிப்பாவாக மாறிவிட்டதா? கையில் கொஞ்சம் பணம் கிடைத்தால் அதைக் “கன்னா பின்னா’ என்று செலவு செய்து விடுவதா? இதோ பார், இந்த ஸில்க் ஜிப்பாவை உடனே கழற்றி எறி. அசிங்கம். இனிமேல் நீ கதர்தான் அணிய வேண்டும்” என்றார். அன்றே ஸில்க் ஜிப்பாவைக் கழற்றி எறிந்து விட்டு கதர்ச் சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டேன். அப்போது கதர் கட்டத் தொடங்கியவன் அப்புறம் ரொம்பக் காலம் (1966 வரை) கதரை விடவே இல்லை.

ல்கி அவர்கள் நீண்ட காலம் முக்கால் கை கதர்ச் சட்டை தான் அணிந்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் வாசன், மாலி, தேவன் இவர்களெல்லாருமே முக்கால் கை கதர்ச் சட்டை தான் அணிவார்கள். கல்கி ஆனந்த விகடனை விட்டு விலகி சொந்தப் பத்திரிகை தொடங்கிய பிறகு கூட முக்கால் கைச் சட்டைதான் அணிந்து கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் முக்கால் கையை மாற்றி முழுக்கை ஜிப்பா போடத் தொடங்கி விட்டார். அப்போது நான் கல்கியில் உதவி ஆசிரியராக இருந்தேன். எனக்கும் மற்ற உதவி ஆசிரியர்களுக்கும் கல்கி ஏன் ஜிப்பாவுக்கு மாறினர் என்பது புரியவில்லை. நாங்கள் அவரிடமே இதுபற்றிக் கேட்டபோது அவர் சிரித்துக் கொண்டே சொன்னர்:

“நான் என்னமோ ராஜாஜியையும், டி. கே. சியையும் என் சட்டைப்பையில் வைத்திருப்பதாகப் பலர் வெளியே பேசிக் கொள்கிறார்களாம். என் சட்டையில் இருப்பதோ ஒரே ஒரு பாக்கெட். அவர்கள் இரண்டு பேரையும் என் ஒரே பாக்கெட்டில் வைத்தால் இடநெருக்கடி ஏற்படாதா? அதற்காகத்தான் இப்போது இரண்டு பாக்கெட் வைத்த ஜிப்பா போட்டுக் கொள்கிறேன்” என்றார்.

த்தூரில் ஒரு காங்கிரஸ் மாநாடு. நான் அந்த மாநாட்டுக்குப் போயிருந்தேன். ஒரு பக்கமாக உட்கார்ந்து குறிப்பெழுதிக் கொண்டிருந்தேன். கல்கியும் அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். “என்னைத் தாண்டி கல்கி போனபோது, குறிப்பு எடுத்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து சைகையால் என்ன எழுதுகிறாய்?” என்று கேட்டார்.

“குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன்?” என்றேன்.

“அதையெல்லாம் மூடி வை. அப்புறம் சொல்கிறேன்” என்று கூறிவிட்டும் போய் விட்டார்.

பிறகு சொன்னர்: “இதோ பார், பேச்சைக் குறிப்பெடுத்து எழுதுவது தினப் பத்திரிகைகள் செய்யும் வேலை. வாரப் பத்திரிகைக்கு அந்த ‘ரிப்போர்ட்டிங்’ ஒத்து வராது. நீ பேசாமல் உட்கார்ந்து நடப்பதைக் கவனிக்க வேண்டும். உன் உள்ளத்தில் பதியும் சுவாரஸ்யமான விஷயங்களை மட்டுமே கட்டுரையாக எழுத வேண்டும்.”

“மறந்து போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் குறித்துக் கொண்டேன்” என்றேன்.

“நல்ல விஷயங்கள் என்றால் அது எப்படி மறந்து போகும்? மறந்து போகக் கூடிய விஷயங்கள் என்றால் அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல, பிரசுரத்துக்கு ஏற்றதல்ல என்பதுதானே பொருள்?” என்றார்.

அவர் அன்று சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சில் வேதவாக்காய்ப் பதிந்து விட்டன. இந்தக் குறிப்பெழுதும் வேலையை அன்றோடு விட்டுவிட்டேன்.

ஒரு விஷயத்தை எழுதுவதற்கு முன்னால் அதைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் படித்து அறிந்து கொண்ட பின்னரே கல்கி பேணாவைக் கையிலெடுப்பார். ‘சிவகாமியின் சபதம்’ எழுதும்போது புத்த பிட்சுவைப் பற்றி எழுத வேண்டியிருந்தது. அதற்காக புத்த பிட்சு, ஒருவரை எங்கிருந்தோ அழைத்து வரச் சொல்லி, அவரது நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்களை யெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டார். அந்தக் காலத்தில் கல்கி அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை தெரியும்.