பழைய கணக்கு/எம். ஜி. ஆர்.

எம். ஜி. ஆர். கோபத்துக்கு என்ன காரணம்?

நான் தினமணி கதிரில் இருந்த போது ஒருநாள் வித்வான் லட்சுமணன் எனக்கு போன் செய்து, “உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன். எம். ஜி. ஆர். உங்களைப் பார்க்க விரும்புகிறார். தாங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும்” என்று கூறி, தேதி நேரம் இடம் மூன்றையும் குறிப்பிட்டார். அவர் விருப்பப்படியே நான் சத்யா ஸ்டுடியோவுக்குப் போய் எம். ஜி. ஆரைச் சந்தித்தேன்.

அன்று எம். ஜி. ஆர் அவர்களின் அன்னையார் நினைவு நாள்.

“வருடா வருடம் என் அன்னையின் நினைவு நாளன்று நான் மிகவும் விரும்பும் ஒருவரை அழைத்து அவருக்குப் பாயசம் தருவேன், இந்த ஆண்டு உங்களுக்கு” என்று பாயசத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார். பிறகு அவர் மதிய உணவுக்கு உள்ளே சென்ற போது கூடவே என்னையும் அழைத்துச் சென்று பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

“ஆனந்த விகடனில் ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்று நான் எழுதும் கட்டுரைத் தொடரைப் படிக்கிறீர்களா?” என்று கேட்டார். இரண்டொரு வாரம் மட்டுமே படித்ததாகச் சொன்னேன்.

“இப்போது உங்களை அழைத்தது எதற்குத் தெரியுமா?”

“தெரியாது.”

“உங்கள் தினமணி கதிரில் நான் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதப் போகிறேன்.”

“அதற்கென்ன, தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் ஒரு சின்ன நிபந்தனை. உங்கள் கேள்வி பதில் பகுதியை எப்போது வேண்டுமானலும் நிறுத்தி விடும் உரிமை எனக்கு உண்டு. நான் சொல்லும் வரை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். நீங்களாகவே நிறுத்தி விடக் கூடாது” என்றேன்.

“அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. அதில் நான் தலையிட மாட்டேன்” என்று எம். ஜி. ஆர். உறுதி அளித்தார்.

கதிரில் இரண்டு மூன்று வாரங்கள் விளம்பரம் செய்தேன். அதன் பலனாய் அலுவலகத்துக்கு வந்து குவிந்த வாசகர்களின் கேள்விகளை சாக்குப் பையில்தான் மூட்டை மூட்டையாகக் கட்டிவைக்க வேண்டியதாயிற்று. ஒரு தனி மனிதரின் பதிலுக்காக அப்போது வந்த கடிதங்களின் எண்ணிக்கை அளவுக்கு என் பத்திரிகை வாழ்வில் நான் எங்கும் கண்டதில்லை.

ந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பெரம்பூரில் ஒரு சாபாவின் ஆதரவில் நான் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ நாடகத்தை திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழு நடத்தியது. அன்றைய நிகழ்ச்சிக்கு எம்.ஜி. ஆர். தலைமை தாங்கினார். அந்தக் கதையை எழுதியவன் என்ற முறையில் என்னையும் நாடகத்துக்கு அழைத்திருந்தார்கள். நான் வருவதாகச் சொல்லியிருந்த போதிலும் போக முடியாதபடி இக்கட்டான ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

ரொம்ப நாளாகவே காமராஜ் அவர்கள் என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அன்று பார்த்து வருவதாகத் தகவல் அனுப்பிவிட்டார். அவர் வருவதை நான் மிகப் பெரிய பாக்கியமாகக் கருதியதால் சபாக்காரர்களுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டேன். “தமிழகத்தின் ராக்பெல்லரான திரு எம்.ஜி.ஆர். அவர்களே விழாவுக்கு வரும்போது பிறகென்ன?” என்று நகைச்சுவையாக அதில் எழுதியிருந்தேன். விழாவின்போது என் கடிதத்தை மைக்கில் படித்து விட்டார்கள். காமராஜ் வீட்டுக்கு வருவதால்தான் நான் வரவில்லை என்பது எம். ஜி. ஆருக்கும் தெரிந்து விட்டது. ஆனால் அது பற்றி அவர் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆகஸ்டு 14-ம் தேதி இரவு எட்டரை மணிக்கு என் வீட்டுக்கு வந்த காமராஜ் மறுநாள் காலை 3-30 மணிக்குத்தான், அதாவது ஆகஸ்ட் 15-ம் தேதிதான் திரும்பிப் போனார்.

என் அழைப்பின் பேரில் அன்று ‘சோ’ வும் என் வீட்டுக்கு வந்திருந்தார். நாங்கள் இருவரும் அன்று இரவு நாட்டு நடப்பு பற்றி திரு காமராஜ் அவர்களோடு விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்புறமும் எம். ஜி. ஆர். பதில்கள் கதிரில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அவர் தம்முடைய பதில்கள் சிலவற்றில் சோ அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார். நான் அவற்றைப் பிரசுரிக்கவில்லை. அரசியல் கருத்துக்கள் எப்படியிருந்தாலும் சோவும் என்னைப் போல் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பதால் அவரைத் தாக்கி எழுதும் பதில்களை என் பத்திரிகையில் வெளியிடுவது முறையல்ல என்று எனக்குத் தோன்றியது. எனவே எம்.ஜி.ஆர். சோவைத் தாக்கி எழுதியிருந்த பதில்களை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு மற்றவற்றைப் பிரசுரித்து வந்தேன்.

நாலைந்து வாரங்கள் கழித்து வித்வான் லட்சுமணன் என்னிடம் வந்தார். “எம். ஜி. ஆர். எழுதும் பதில்களில் சிலவற்றை நிறுத்தி விடுகிறீர்களே, எல்லாவற்றையுமே வெளியிட்டால் தேவலை” என்றார்.

“சோவைத் தாக்கி எழுதும் பதில்களைத்தானே சொல்கிறீர்கள்? அவற்றை நான் பிரசுரிப்பதற்கில்லை. மன்னிக்க வேண்டும்” என்றேன். “இல்லை, எம். ஜி. ஆர். எதிர்பார்க்கிறார். அதெல்லாம் அவருடைய கருத்துதானே? எல்லாவற்றையும் போட்டு விடுங்களேன்?” என்றார். வித்வான் லட்சுமணனின் தர்மசங்கடம் எனக்குப் புரிந்தது.

இது பற்றி நானும் எம்.ஜி.ஆரும் சந்தித்துப் பேசுவது நல்லது என்று எனக்குத் தோன்றியதால் வித்வானிடம், “நான் எம். ஜி. ஆரைப் பார்த்துப் பேசட்டுமா?” என்று கேட்டேன்.

“ரொம்ப நல்லது” என்றார் வித்வான்.

அதன்படி எம். ஜி. ஆரை ஒரு நாள் சந்திக்கப் போயிருந்தேன்.

கோடம்பாக்கம் ஸ்டுடியோ ஒன்றில் அவர் இருந்தார். ஏதோ சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. நான் போய் ஒரு மணி நேரமாகியும் எம்.ஜி.ஆர். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. பார்த்துவிட்டுப் பேசாமலேயே இருந்தார். நானாக வலியச் சென்று பேசியபோது ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். ஏதோ கோபம் என்று மட்டும் புரிந்து கொண்டேன். எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. ஆனாலும் அரைமணி நேரம் பொறுமையோடு உட்கார்ந்து ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஷூட்டிங் கலைந்த பிறகும் அவர் என்னிடம் பேசத் தயாரில்லை என்பது தெரிந்தது. “இங்கே இவரை ஏன் பார்க்க வந்தோம்?” என்று எனக்கு நானே நொந்து கொண்டேன். கடைசியில், “நான் போய் வருகிறேன்” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்ட போதுகூட அவர், “எதற்காக வந்தீர்கள்? ஏன் போகிறீர்கள்?” என்று என்னிடம் எதுவுமே கேட்கவில்லை.

என் மீது எம். ஜி. ஆர். கோபமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கோபம் எதனால் என்பது விளங்கவில்லை. இரண்டு காரணங்களுக்காக அவர் கோபப்பட்டிருக்க வேண்டும். ஒன்று அவரைவிட நான் காமராஜருக்கு முக்கியத்துவம் தந்து அவர் தலைமை வகித்த நாடக நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்ததாயிருக்கலாம். அல்லது சோ பற்றி அவர் எழுதிய பதில்களைப் பிரசுரிக்காமல் விட்டதாயிருக்கலாம். இவை இரண்டில் எது அவருக்குக் கோபமூட்டியது என்பது அவருக்குத்தான் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பழைய_கணக்கு/எம்._ஜி._ஆர்.&oldid=1159692" இலிருந்து மீள்விக்கப்பட்டது