பழைய கணக்கு/கடலூர் வேத பாட சாலையில்



கடலூர் வேத பாட சாலையில்...

சின்ன வயசில், வீட்டில் சொல்லிக் கொள்ளாமல், அப்பா கொடுத்த சம்பளப் பணத்தைப் பள்ளிக்கூடத்தில் கட்டாமல் திருச்சி வரை போய் விட்டேன். அதுவரை பயணம் செய்த செலவு போக கொஞ்சம்தான் பணம் மிஞ்சி இருந்தது. திருச்சியில் ‘நகர தூதன்’ என்ற பத்திரிகை அலுவலகம் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்து வேலை கேட்டபோது இல்லை என்று சொல்லி விட்டார்கள். அங்கிருந்து திருப்பாதிரிப்புலியூர் சென்று அங்கே கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள வேத பாடசாலைக்குப் போய், “சுப்பராயன் இருக்கிறானா?” என்று விசாரித்தேன்.

“அவன் லீவுக்கு ஊருக்குப் போயிருக்கிறான். திரும்பி வர ஒரு மாதம் ஆகும்” என்று சொல்லி விட்டார்கள்.

சுப்பராயன் என்னுடைய அத்தை மகன். அந்த வேத பாடசாலையில்தான் படித்துக் கொண்டிருந்தான். எப்படியும் சாப்பாடு போடுவான் என்ற நம்பிக்கையோடு அவனைத் தேடிச் சென்றேன். முதல் நாள் பிற்பகல் சாப்பிட்டதோடு சரி; அப்புறம் பசி வயிற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. கையில் ஒரே ஒரு தம்படிதான் மிச்சம். அதற்கு ஒரு வாழைப் பழம் வாங்கிச் சாப்பிட்டேன். ஆமாம்; அந்தக் காலத்தில் தம்படியும் உண்டு. தம்படிக்கு ஒரு வாழைப்பழமும் உண்டு!

அப்புறம் என்ன செய்வதென்று புரியாமல் வேத பாட சாலை வாசலில் திண்ணையிலேயே படுத்துக் கொண்டேன். தூக்கம் வர மறுத்தது. பசிக்கொடுமையும் சுப்பராயன் இல்லாத ஏமாற்றமும் சேர்ந்த சங்கடம் வயிற்றைப் பிசைந்து எடுத்தது. எழுந்து எதிரில் இருந்த கோயிலுக்குப் போய், அங்கே யாரோ அடித்த சதிர்த் தேங்காய்ச் சிதறல்களைப் பொறுக்கிச் சாப்பிட்டேன். அன்றைக்கெல்லாம் அவ்வளவுதான்.

மறுநாள் காலை சற்றுத் தொலைவிலுள்ள ஆற்றுக்கு நடந்தே போய் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது மயக்கமாய் வந்தது. கண்களில் மின்மினிப் பூச்சிகள் பறந்தன. கை நிறையத் தண்ணீரை அள்ளிக் குடித்துப் பசியை ஏமாற்றினேன்.

இன்றைக்கும் பட்டினி கிடக்க வேண்டியதுதானா? பொறுக்க முடியாத பசி காரணமாக அழுது விட்டேன். திடீரென்று பின் பக்கத்திலிருந்து ஒரு குரல்.

“சுவாமிகளே, இலை போடறதுக்கு மணி ஒண்ணுகுமா?”

சற்று துரத்தில் நாலைந்து வைதிக பிராம்மணர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவருடைய குரல்தான் அது.

“ஒகோ, எங்கேயோ சாப்பாடு போடுகிறார்கள் போலிருக்கிறது. இவர்களோடு கூடவே போனால் நமக்கும் சாப்பாடு கிடைக்குமே!” அவர்களைப் பின்பற்றி நடந்தேன். சந்நிதித் தெருவில் ஒரு வீடு. அங்கே ஏதோ விசேஷம். யாரோ இறந்து பதினாலவது நாள் சுப காரியம் நடக்கிற்து.

அந்த பிராம்மணர்கள் எல்லோரும் அந்த வீட்டுக்குள் போய் விட்டார்கள். எனக்குத் தைரியம் இல்லை. யாராவது அதட்டி, “யாருடா நீ!” என்று கேட்டு விட்டால்? தயக்கத்துடன் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்து உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். முன்கட்டில் ஓமப்புகையும், பின்கட்டில் சமையல் வாசனையும் ‘சாப்பாடு நிச்சயம் உண்டு’ என்பதை அறிவித்தன.

வாசலில் கைவண்டி ஒன்று வந்து நின்றது. சாம்பல் பூசனிக்காய், வாழை இலை கட்டுகள், பலாப்பழம், வாழைப் பழத் தார், இன்னும் என்னென்னவோ வண்டி நிறைய... இடையில் புகுந்து பலாப்பழத்தை எடுத்துக் கொண்டு வேகமாய் நடந்து சமையல் கட்டில் கொண்டு வைத்தேன்.

“அம்பி, இந்தா...உள்ளே போய் எண்ணெய் எடுத்துண்டு வாடா, பலாப்பழம் நறுக்கலாம்” என்றார் சமையல்காரர். கணிரென்ற குரல். வால்கிண்ணம் ஒன்றை என்னிடம் தந்தார். அதை வாங்கிக் கொண்டு போய் உள்ளே மாமியிடம் எண்ணெய் கேட்டு வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தேன். அந்த மாமி என்னை எதுவுமே விசாரிக்கவில்லை. சமையல்காரர் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு பலாப்பழம் நறுக்கிச் சுளை சுளையாகப் பாத்திரத்தில் போட்டார். ஒன்றை எடுத்து ‘இந்தா சாப்பிடு’ என்று என்னிடம் தந்தார். நாக்கில் ஒரு குடம் ஜலம் ஊறிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டு மனிதர்களில் ஒருவனாகி விட்டேன். எப்படியும் சாப்பாடு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை பிறந்தது!

பந்தி பரிமாறத் தொடங்கியதுதான் தாமதம், நானும் மற்றவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து விட்டேன். என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை. வடை பாயசத்தோடு வயிறு புடைக்கச் சாப்பிட்டு முடித்தேன். “அப்பாடா! இன்னும் இருபத்துநாலு மணி நேரத்துக்குக் கவலை இல்லை” என்று எண்ணிக் கொண்டேன். இப்போது உண்ட மயக்கம். மெதுவாக வெளியே புறப்பட்டு, வாசல் படியைத் தாண்டும் போது ஒரு கனமான குரல் “அம்பி இங்கே வா!” என்று சற்று அதட்டலாக அழைத்தது.

என் சப்த நாடியும் அடங்கிப் போயிற்று. சரி, முதுகிலே இரண்டு அறை வைத்து, “திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து சாப்பிடுகிறாயா? யாருடா நீ?” என்று கேட்பாரோ என்று நடுங்கியபடியே அவர் அருகில் போய் நின்றேன்.

“இந்தாடா! வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு போ” என்று சொல்லி ஒரு தட்டை நீட்டினார் அவர். அந்த வெற்றிலை பாக்கை எடுத்துக் கொண்டேன். அதில் நாலணாக் காசு இருந்தது. சாப்பிட்டதற்கு தட்சிணை!

அடுத்த வேளை சாப்பாட்டுக்கும் ஆண்டவன் படி அளந்து விட்டான்!