பழைய கணக்கு/ஏ. வி. எம். சொன்ன வார்த்தைகள்



ஏவி. எம். சொன்ன வார்த்தைகள்

வெள்ளி மணி முதல் மூன்று இதழ்களைக் கண்ட பிறகு கல்கியின் மன நிலையில் பெரும் மாறுதல் நிகழ்ந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. மிகுந்த உற்சாகத்தோடு, “அப்படிச் செய்ய வேண்டும்; இப்படிச் செய்ய வேண்டும்” என்று ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரிடம் ஏற்பட்டிருந்த இந்த மாறுதலுக்கு என்ன காரணம்?

அவருக்கும் திரு சதாசிவத்துக்கும் உள்ள ஸ்தாபன உறவில் லேசாக ஒரு விரிசல் ஏற்பட்டிருந்ததும், அந்த விரிசலின் இடைவெளி வரவர அகலப்பட்டுக் கொண்டு போன நேரத்தில், வெள்ளி மணி தோன்றியதால் வெள்ளிமணியின் எதிர்காலத்தையும் தம்முடைய எதிர்காலத்தையும் அவர் உள் மனம் அடிக்கடி ஐக்கியப் படுத்திப் பார்த்துக் கொண்டதும்தான்.

அப்போது ஏவி. எம். ஸ்டுடியோ தேவகோட்டையில் இருந்தது.

பர்ணசாலைகள் போல் சிறு சிறு குடில்கள் போட்டு எளிய முறையில் அமைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் உலாவிய போது ஒரு சினிமா ஸ்டுடியோவில் இருக்கிறோம் என்கிற நினைப்பே உண்டாகவில்லை.

எனக்கும் சின்ன அண்ணாமலைக்கும் திரு ஏவி. எம். அவர்கள் தம் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பியிருத்தார். முன்பின் தெரியாதவரிடமிருந்து அழைப்பிதழ் வந்தபோது எங்களுக்கு அது வியப்பாக இல்லை. காரணம், முதல் நாளே கல்கி அது பற்றி எங்களிடம் சொல்லி விட்டார். “அழைப்பு அனுப்பச் சொல்லியிருக்கிறேன். நாம் மூவரும் அடுத்த வாரம் தேவகோட்டையில் நடைபெறும் அந்தத் திருமணத்துக்குப் போகிறோம்” என்றார்.

முகூர்த்தம் முடிந்ததும் நாங்கள் மூவரும் ராமராஜ்யா தமிழ் டப்பிங் படம் பார்ப்பதற்கு ஏவி. எம். ஏற்பாடு செய்திருந்தார். அது முடிந்ததும் ஏவி. எம். எங்களைத் தனியாகத் தம் அறையில் சந்தித்துப் பேசினார்.

“இங்கே காரைக்குடியில் என்னுடைய ராஜாஜி அச்சகம் இருக்கிறது, அதைப் போய்ப் பாருங்கள். அங்கே உள்ள அச்சு இயந்திரங்களில் எது ‘வெள்ளி மணி'க்குத் தேவைப்படும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அதை உடனே லாரியில் ஏற்றிச் சென்னைக்கு அனுப்பி வைக்கிறேன்.” என்றார்.

வெள்ளிமணியின் வளர்ச்சியில் ஏவி. மெய்யப்பன் முழு அக்கறையுடன் பொருளாதார ரீதியாக உதவ முடிவு செய்திருக்கிறார் என்பதை நான் அவருடைய பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.

பகல் இரண்டு மணிக்கு மேல் கல்கியுடன் நானும் சி. அ. வும் ராஜாஜி பிரஸ் பார்ப்பதற்குப் புறப்பட்டுச் சென்றோம். அப்போது கல்கி என்னிடம் சொன்னர்: “சாவி, இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் நான் வெள்ளிமணிக்கு வந்துவிடப் போகிறேன். ஆமாம்; பத்திரிகையை இன்னும் பிரமாதமாகக் கொண்டு வர வேண்டும்.”

எனக்கு ஒரு கணம் ஒன்றும் தோன்றவில்லை. கல்கியின் இந்த வார்த்தைகள் என்னை உணர்ச்சி வெள்ளத்தில் திணற அடித்து விட்டன. அதைச் சமாளித்துக் கொண்டு “அப்படியா! அந்த நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்” என்றேன்.

சில நாட்களுக்கு முன் கல்கியை விட்டு நான் விலகியது, அவர் கோபப்பட்டது. இப்போது அவரே வெள்ளி மணியில் சேர முன் வந்திருப்பது — இதையெல்லாம் எண்ணிய போது மனதுக்குள் சந்தோஷம் பொங்கியது.

சென்னை திரும்பியதுமே மௌண்ட் ரோடுக்குப் பக்கத்தில் அச்சகம் வைப்பதற்கான இடத்தைப் பிடித்து விட்டோம். அதற்கடுத்த வாரமே அச்சு இயந்திரம் லாரியில் வந்து இறங்கி விட்டது.

ஒரு நாள் கல்கி என்னைக் கூப்பிட்டனுப்பினார். “நானும் டி. கே. சி.யும் சின்ன அண்ணாமலையை அழைத்துக் கொண்டு சாந்தி நிகேதன் போகிறோம். திரும்பி வர புத்துப் பதினைந்து நாட்கள் ஆகும். இப்போது ஏவி. எம். சென்னையில் இருக்கிறார். அவரிடம் எல்லாம் சொல்லியிருக்கிறேன். இந்த வருடம் கல்கி தீபாவளி மலர் கிடையாது. ஆகையால் வெள்ளி மணி தீபாவளி மலர் உண்டு. நான் அதற்கு ஒரு கதை எழுதித் தருகிறேன்.ஏவி. எம்.மைப் போய்ப் பார், பணம் தருவார்” என்றார்.

கல்கி சாந்தி நிகேதன் புறப்பட்டுப் போனதும் நான் பாலாஜி நகரிலிருந்த திரு ஏவி. எம். அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன்.

“வெள்ளி மணி ரொம்ப நன்றாயிருக்கிறது. கல்கி உங்களிடம் ரூபாய் பத்தாயிரம் தரச் சொல்லியிருக்கிறார். இப்போது ஐயாயிரம் தருகிறேன்” என்று கூறி நோட்டுக் கற்றைகளை ஒரு சின்னப் பெட்டியில் வைத்துப் பூட்டிப் பெட்டியை என்னிடம் தந்தார். “பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள்” என்று கூறித் தம்முடைய காரிலேயே என்னை அனுப்பி வைத்தார்.

“கையெழுத்து எதுவும் வேண்டாமா?” என்று கேட்டேன் நான்.

“உங்களைப் பற்றி கல்கி என்னிடம் சொல்லியிருக்கிறார். நீங்கள் நவகாளி செல்லும் போது ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினராம். அந்த ஆயிரத்தில் நானுாற்றுச் சொச்சம் ரூபாயைத் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விட்டதோடு பயணிச் செலவு விவரங்களையும் உடனே கணக்கெழுதிக் கொடுத்து விட்டீர்களாம். உங்களைப் பற்றி ரொம்ப உயர்வாகப் பேசினார். எனக்கு அவருடைய இந்த ஸர்ட்டிபிகேட் ஒன்றே போதும். உங்களை நான் நம்புகிறேன்” என்றார் ஏவி. எம்.

ராஜா ஸர் முத்தையா செட்டியாருக்குச் சொந்தமான கமர்ஷியல் அச்சகம் அப்போது அரண்மனைக்காரன் வீதியில் இருந்தது. வெள்ளி மணி அங்கேதான் அச்சாகிக் கொண்டிருந்தது.

பெரிதாகத் திட்டமிட்டு வெள்ளி மணி தீபாவளி மலர் முழுதும், ஆர்ட் காகிதத்திலேயே அச்சிட்டோம். வியாபாரத் திறமையோ அனுபவமோ இல்லாத காரணத்தாலும் உற்சாக மிகுதியில் எல்லாம் விற்று விடும் என்ற அசட்டு நம்பிக்கையினாலும் பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டு விட்டோம்.

மலர் நன்றாகவே அமைந்தது. ஆனால் ஆயிரம் பிரதிகள் கூட விற்பனை ஆகவில்லை. பெருத்த நஷ்டம். பாக்கி அதிகம் சேர்ந்து விடவே பணம் கொடுத்தால்தான் இனி அச்சிடுவோம் என்று கமர்ஷியல் பிரஸ்காரர்கள் சொல்லி விட்டார்கள்.

விஷயத்தைக் கல்கியிடம் போய்ச் சொன்னபோது, “ம்... அப்படியா? சரி சரி, பத்திரிகையை நிறுத்தி விடுங்கள். நஷ்டத்தோடு எத்தனை நாள் நடத்த முடியும்? ஏவி. எம் இனி பணம் தரமாட்டார்” என்று ரொம்பச் சாதாரணமாகச் சொல்லி அனுப்பி விட்டார்.

அப்படியானால் கல்கி வெள்ளி மணியில் சேரப்போகிறேன் என்று சொன்னதெல்லாம் என்ன ஆயிற்று? அடுத்த சில வாரங்களுக்குப் பிறகுதான் இந்தக் கேள்விக்கு எனக்கு விடை கிடைத்தது.

ராஜாஜி அவர்களின் ஆசியோடு கல்கியும் திரு சதாசிவம் அவர்களும் சம்பந்தி ஆகிவிட்டார்கள்!

சரி, மௌண்ட் ரோடுக்கு வந்த ராஜாஜி பிரஸ் என்ன ஆயிற்று?

அங்கிருந்து கோடம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டு வடபழனி பிரஸ் என்ற பெயரில் பெரிதாக வளர்ந்து இப்போது திரு சரவணன் நிர்வாகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதான் வெள்ளி மணி தோன்றி மறைந்த கதை.