பழைய கணக்கு/பெரியாரை சாப்பிட வைத்தவர்



பெரியாரை சாப்பிட வைத்தவர்

திசய மனிதர் திரு ஜி. டி. நாயுடு 1959-ம் ஆண்டு லண்டனுக்குப் போயிருந்போது நான் விகடனில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் படித்த நாயுடு அவர்கள் லண்டனிலிருந்து எனக்குப் பாராட்டுக் கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.

“இங்கு சங்கதிகளைப் பத்திரிகைகளில் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சாமர்த்தியமாகவும் பெருமையாகவும் யாரும் விரும்பத்தக்க வகையில் வருணித்துக் கட்டுரைகள் எழுதுகின்றர்கள். ஆனால் அவர்களும் கூடத் தங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய முறையில் நீங்கள் எழுதியிருப்பதைக் கண்டு மிக ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்தேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். திரு நாயுடு அவர்களின் அந்தக் கடிதத்தை இன்னமும் (ஆறு வீடுகள் மாற்றிய பிறகும் தொலைந்து போகாமல்) பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கிறேன். உற்சாகம் குன்றும் போதெல்லாம் அந்தக் கடிதத்தையும் அதைப் போன்ற இன்னும் பல கடிதங்களையும் எடுத்துப் படித்துப் புத்துணர்ச்சியும் புதுவேகமும் பெறுவேன்.

ஜி.டி. நாயுடு லண்டனிலிருந்து திரும்பி வந்ததும் ஒருநாள் சென்னைக்கு வந்திருந்தார். என்னை நேரில் சந்திக்க வேண்டுமென்று போனில் கூப்பிட்டார். காஸ்மாபாலிடன் கிளப்புக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு பப்பாளிப்பழங்கள் கொடுத்தனுப்பினார். அது முதல் எங்களுக்கிடையே ஏற்பட்ட நெருக்கம் வளர்பிறையாக வளர்ந்து உயர் நட்பாக மலர்ந்தது.

நான் எப்போது கோவைக்குப் போனாலும் நாயுடுவைச் சந்திக்காமல் திரும்புவதில்லை. அதேபோல் நாயுடு அவர்களும் சென்னை வரும்போதெல்லாம் என்னைக் கூப்பிட்டுப் பேசாமல் இருப்பதில்லை.

ஒரு சமயம் நான் கோவைக்குப் போயிருந்தபோது நாயுடு பங்களாவுக்குப் போன் செய்து அவரோடு பேசினேன். மறுநாள் காலை எட்டு மணிக்கு அவர் வீட்டில் சந்திப்பதாக முடிவானது. ஓட்டலிலேயே காலை டிபனை முடித்துவிட்டு அவருடைய பங்களாவுக்குப் போனேன். நான் உள்ளே நுழைந்த சமயம் அவர் ராமசாமிப் பெரியாரிடம் பேசிக் கொண்டிருந்தார். சற்று நேரத்துக்கெல்லாம் பெரியாரை வழி அனுப்பி வைத்து விட்டு என்னிடம் வந்து “வாருங்கள், சாப்பிடப் போகலாம்” என்று உள்ளே அழைத்தார்.

“நான் காலையிலேயே சாப்பிட்டாயிற்று! ஓட்டலிலேயே முடித்து விட்டேன்!” என்றேன்.

“அதெல்லாம் முடியாது. உங்களை யார் சாப்பிடச் சொன்னது? எட்டு மணிக்கு உங்களை வரச் சொன்னதே நாம் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்பதற்குத்தானே? இங்கே இட்லி, உப்புமா எல்லாம் ரெடியாக இருக்கிறது. சாப்பிடாமல் நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போக முடியாது” என்று பிடிவாதம் பிடித்தார் நாயுடு.

“முடியவே முடியாது” என்றேன் நான்.

“அதெல்லாம் முடியாது; சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்” என்றார் அவர். நானும் பிடிவாதத்தைத் தளர்த்த வில்லை.

“லண்டனில் பெரியார் ஒருமுறை இப்படித்தான் சாப்பிட முடியாது என்று பிடிவாதம் பிடித்தார். ஆனால் அவரை நான் விடவில்லை. பெரியாரையே சாப்பிட வைத்தவன் நான்” என்றார் நாயுடு பெருமையோடு.

“அதென்ன கதை” என்று கேட்டேன் ஆவலுடன்.

“லண்டன் போயிருந்த போது நான் தங்கியிருந்த ஓட்டலிலேயே பெரியார் ஈ.வெ.ராவும் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவருக்குப் போன் செய்து, “கீழே ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வந்து விடுங்கள், பேசலாம்” என்று சொல்லிவிட்டுக் கீழே போய் அவருக்காகக் காத்திருந்தேன். அவர் கீழே வத்தார். அவர் வருவதற்குள் அவருக்கும் சேர்த்து ப்ரேக்ஃபாஸ்ட் ஆர்டர் செய்திருந்தேன், அந்த ஐட்டங்களைக் கண்டதும் “நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேனே! இப்போது இன்னொரு முறை சாப்பிட முடியாது” என்றார்.

“உங்களுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணியாகி விட்டது. நீங்கள் சாப்பிட்டாலும் சாப்பிடா விட்டாலும் “பில் பணம் கொடுத்தாக வேண்டும்” என்று நான் சொன்னேன். கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டு அப்படியா? எவ்வளவு பில் வரும்?” என்று கேட்டார் பெரியார்.

“பதினேந்து பவுண்ட் வரலாம்” என்று சொன்னேன்.

உடனே, நம் ஊர் ரூபாய் எவ்வளவு என்று கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு. “ஐயோ. அவ்வளவு ரூபாயா? சரி, சரி” என்று அவ்வளவு ஐட்டங்களையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுத் தீர்த்தார். வயிற்றில் இடமே இல்லை என்று சொன்னவருக்கு அப்புறம் எப்படி இடம் கிடைத்தது என்று தெரியவில்லை! “சரி; இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார் நாயுடு.

“பெரியார் சாப்பிட்டார் என்பதற்காக நானும் சாப்பிட முடியுமா என்ன?” என்று எழுந்தேன் நான்.

“சரி. அப்படியானால் போய் வாருங்கள். உங்களை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை” என்று விடை கொடுத்து அனுப்பி விட்டார் நாயுடு.

காரில் ஏறி உட்கார்ந்தேன். கேட் வரை போன கார் உள்பக்கம் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வெற்றிகரமாக வாபஸ் வாங்க வேண்டியதாயிற்று. இது நாயுடுவின் வேலையாகத்தான் இருக்கும் என்பது எனக்கு உடனே புரிந்து போயிற்று. திரும்பி பங்களாவுக்கே போனேன்.

“ஏன் போகலயா?” என்று ஒன்றும் தெரியாதவர் போல் குறும்புச் சிரிப்பு சிரித்துக்கொண்டே கேட்டார் நாயுடு.

“கேட் பூட்டியிருக்கிறதே என்ன செய்ய?”

“நீங்களே சாவிதானே! பூட்டைத் திறந்து கொண்டு போக வேண்டியதுதானே?” என்று கூறிவிட்டு பலக்கச் சிரித்தார்.

கடைசியில், இட்லியும் உப்புமாவும் சாப்பிட்ட பிறகே என்னை வெளியே அனுப்பினார்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்ற என் மூத்த மகள் ஜெயந்தியின் திருமணத்துக்கு நாயுடு அவர்கள் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு பாக்கெட் கடிகாரம் ஒன்றைப் பரிசாகத் தந்தார். அந்தப் பரிசை என் மகள் என்னிடம் கொடுத்து “அப்பா! நாயுடு உங்களுக்குத்தான் கொடுத்திருப்பார், ஆகையால் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டாள். கோலி போன்ற கண்ணாடிக் கூண்டு வடிவத்தில் அமைந்துள்ள அந்த ஜெர்மன் கடிகாரம் இன்றும் இன்னமும் இப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது.

எனக்கு நாயுடு அவர்களின் நினைவு வரும்போதெல்லாம் அந்தக் கடிகாரத்தை எடுத்து வாஞ்சையோடு பார்ப்பேன். மெலிதான அதன் விநாடிமுள் துல்லியமாக நகரும்போது நாயுடு அவர்களே நேரில் வந்து உரையாடுவது போல், ஒரு பிரமை தோன்றும்!