பழைய கணக்கு/சின்ன அண்ணாமலை மார்க்கெட்



சின்ன அண்ணாமலை மார்க்கெட்

நல்ல காய்கறிகளின் மீது எனக்கு எப்போதுமே விருப்பம் அதிகம், பத்திரிகை விற்பனைக் கடைகளையோ, காய்கறிக் கடைகளையோ எங்காவது கண்டு விட்டால் என் கால்கள் தாமாகவே அங்கு நின்று விடும். காய்கறிகளை நானே வாங்கி வந்து, நானே நறுக்கிக் கொடுத்து, அவற்றைச் சமைக்கச் சொல்லிச் சாப்பிடுவதில் தனிப் பிரியம். நான் வேலை இல்லாமல் இருந்த நாட்களில் எனக்குத் தோன்றிய பல யோசனைகளில் ‘கறிகாய் வியாபாரம்’ செய்தால் என்ன? என்பதும் ஒன்று. வியாபாரத்துக்கு வியாபாரம், வீட்டுக்கும் காய்கறி கிடைத்த மாதிரி இருக்குமே!

அப்போது தியாகராய நகர் பனகல் பார்க் எதிரில் தமிழ்ப் பண்ணை அலுவலகம் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் கொட்டகை போட்டுக் கொண்டு நானும் சின்ன அண்ணாமலையும் அங்கே கட்டாத மனக்கோட்டைகள் இல்லை!

அந்த நாட்களில், ஊஸ்மான் ரோடும், துரைசாமி ரோடும் சந்திக்கும் இடத்தில் தெருவோரம் உள்ள பிளாட்பாரங்களில் சிறு சிறு வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். பாதசாரிகளுக்கும் வண்டிப் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாய் இருப்பதாகச் சொல்லி போலீஸார் அவர்களை தினமும் விரட்டி அடிப்பார்கள். அடிக்கடி போலீஸ் வான் வந்து அத்தனை காய்கறிக் கூடைகளையும் தூக்கிப் போட்டுத் கொண்டு போய்விடும்.

எனது காய்கறி வியாபார ஐடியாவை சின்ன அண்ணாமலையிடம் வெளியிட்ட போது அவர் அதை உற்சாகத்தோடு வரவேற்றர். “உடனே புறப்படுங்கள் வேலூருக்கு?” என்றார். ஒரு காரை எடுத்துக் கொண்டு ஜோலார்பேட்டை வரை போய் மொத்தமாகக் காய்கறிகளை வாங்கி வந்து ஊஸ்மான் ரோடு சில்லறை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்தோம்.

கறிகாய் வியாபாரிகள் தொடர்ந்து போலீஸ் தொல்லைக்குள்ளாகவே ஒரு நாள் அவர்களில் சிலர் எங்களிடம் வந்து, “இதற்கு ஒரு வழி செய்யக் கூடாதா?” என்று கேட்டனர். “நீங்க கவலைப் படாதீங்க. இன்றைக்கே ஏற்பாடு செய்யறேன்” என்று சின்ன அண்ணாமலை அவர்களிடம் சொல்லி அனுப்பிவிட்டு, என்னைப் பார்த்து, “நீங்க இன்றே காமராஜ் வீட்டுக்குப் போய் அவரிடம் இதைப் பற்றி எடுத்துச் சொல்லுங்க. அவர் ஏதாவது வழி செய்வார்?” என்றார். அப்போது எனக்குக் காமராஜரை அவ்வளவாகத் தெரியாது. ஒரு முறையோ இரண்டு முறையோ பார்த்திருக்கிறேன், அதனால் சற்று தயங்கினேன்.

“பொது விஷயம்தானே? இதற்கென்ன தயக்கம்? போய் தைரியமாப் பேசிட்டு வாங்க” என்றார் சின்ன அண்ணாமலை.

எனக்கு ஒரே பயம். ஆனாலும் நான் புறப்பட்டு விட்டேன். என்னோடு நாலைந்து வியாபாரிகளையும் அழைத்துச் சென்றேன். திருமலைப் பிள்ளை ரோடு. காமராஜ் வீடு. பிற்பகல் வெயில் நேரம். வேப்ப மரத்தில் காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன.

“தலைவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். நாலு மணிக்கு எழுந்திருப்பார்” என்று தகவல் கிடைத்தது. அப்படியே எழுந்திருந்தாலும் உடனே எங்களைச் சந்திப்பார் என்பது என்ன நிச்சயம்? அவருக்கு எவ்வளவோ வேலைகள். அங்கேயே காத்துக் கிடந்தோம். காமராஜ் எழுந்து விட்டார் என்று தெரிந்ததும் அவரது கவனத்தைக் கவர ஒரு திட்டம் போட்டேன். என் கூட வந்தவர்களிடம், “நான் காமராஜ் என்பேன். நீங்கள் அனைவரும் உரத்த குரலில் ‘வாழ்க’ என்று கோஷம் போட வேண்டும். சப்தம் கேட்டு காமராஜ் கீழே வருவார். வந்தால் நாம் பேச வாய்ப்புக் கிடைக்கும்” என்றேன்.

“காமராஜ்..”

“வாழ்க!”

“காமராஜ்..”

“வாழ்க!”

எனது திட்டம் வெற்றி பெற்றது! கோஷம் கேட்டதும் தலைவர் கீழே இறங்கி வந்து விட்டார். என்னை நானே அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

“என்ன விஷயம், சொல்லுங்க” என்று கேட்டார் காமராஜ்.நான் பிரச்னையை விவரித்தேன்.

“இவங்களுக்குப் போலீஸ் தொல்லை தரக் கூடாது. அன்றாடம் வியாபாரம் நடந்தால்தான் இவர்கள் வீட்டில் அடுப்பெரியும். அவ்வளவுதானே? வேறே அங்கே ஏதாவது இடம் இருக்கா? இவங்க வியாபாரத்தை அங்கே நடத்த முடியுமா?” என்று கேட்டார். “பனகல் பார்க்கைச் சுற்றி விசாலமான பிளாட்பாரம் இருக்கிறது. அங்கே நடத்தலாம்” என்றேன்.

சிறிது நேரம் யோசித்தார். உடனே டெலிபோன் அருகே போனார். அப்போது கார்ப்பரேஷனில் உயர் அதிகாரியாக இருந்த சத்தியமூர்த்தி என்பவரைக் கூப்பிட்டார்.

“இத பார், சத்தியமூர்த்தி! உஸ்மான் ரோடு காய்கறி வியாபாரிகள் இனிமேல் பனகல் பார்க் பிளாட்பாரத்தில் வைத்து வியாபாரம் செய்வதற்கு ஏற்பாடு பண்ணு. ஒரு கடைக்கு இவ்வளவு காசு என்று வேண்டுமானல் கார்ப்பரேஷன்ல வசூல் பண்ணிக்குங்க. நாளையிலிருந்து அவங்க கிட்ட போலீஸ் போகக் கூடாது. யாரிட்டே என்ன பேசனுமோ பேசிக்க” என்று சொல்லிப் போனை வைத்து விட்டார்.

“சாி. சரி நீங்க போங்க. நாளேயிலிருந்து பனகல் பார்க் பிளாட்பாரத்திலே விக்கட்டும்” என்றார் என்னைப் பார்த்து. எனக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். அதற்குப் பிறகு சின்ன அண்ணாமலையும் ஒரு முறை காமராஜரைப் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வந்தார். வந்ததும் வியாபாரிகளுக்கு பனகல் பார்க் பிளாட்பாரத்தில் வரிசையாக இடம் ஒதுக்கி ஒழுங்குபடுத்தினர். புதிதாக அமைந்த அந்த மார்க்கெட்டை ‘சின்ன அண்ணாமலை மார்க்கெட்’ என்று கூடச் சில நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர் பெயரில் ஒரு போர்டு கூட ஏதோ ஒரு மூலையில் இருந்ததாக ஞாபகம்.

இப்போது அங்கே கார்ப்பரேஷன் ‘பக்கா’வாக ஒரு கட்டிடத்தையும் கட்டி சென்னையின் மிகச் சிறந்த காய்கறி மார்க்கெட்டுகளில் ஒன்றாக்கியுள்ளது. அந்தப் பக்கம் நான் போகும் போதெல்லாம், எனக்கு காமராஜின் குரல் கேட்கும்: “...நாளையிலிருந்து அவங்க கிட்ட போலீஸ் போகக் கூடாது.”