பழைய கணக்கு/பிரம்மசாரி காமராஜ்



பிரம்மசாரி காமராஜ்

“தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல பண்புகளும் பழக்க வழக்கங்களும் வளர வேண்டுமானால் அவற்றைப் போதிக்கும் நமது புராண, இதிகாசக் கதைகளைக் கதா காலட்சேபம், நாடகம் இவற்றின் வாயிலாகப் பட்டி தொட்டியெங்கும் பரப்புகின்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்ற யோசனையை ஒரு சமயம் திரு எம். பக்தவத்சலம் அவர்கள் திருவையாற்றில் வெளியிட்டார்.

காமராஜ், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி, கட்சி வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் அவருடன் ஒரு முறை டெல்லி போயிருந்தேன். டெல்லியில் தமிழ்நாடு ஹவுஸில் தங்கியிருந்தோம். பகலெல்லாம் அவருடன் சுற்றி அலைந்த களைப்பு மேலீட்டால் நான் குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டேன். சில நிமிடங்களில் என்னை யாரோ தட்டி எழுப்பினார்கள். திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் காமராஜ்!

“சரியாப் போச்சு. நான்தான் குறட்டை விடுகிறவன்னா நீங்க எனக்கு மேலே சத்தமா விடரீங்களே! எழுந்து போய் பக்கத்து ரூமிலே படுத்துக்குங்க. அப்பத்தான் நானும் நல்லாத் தூங்கலாம். நீங்களும் நல்லாத் தூங்கலாம்” என்று சொல்லி லேசாகச் சிரித்தார்.

மறுநாள் காலை டைனிங் ஹாலில் அவரோடு பேசிக் கொண்டிருந்த போது திரு பக்தவத்சலம் வெளியிட்டிருந்த யோசனையைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன்.

“ஆமாம்; நல்ல யோசனைதான். அதற்கு என்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டார்.

“கிருபானந்த வாரியார் அவர்களைக் கொண்டு ராமாயண விரிவுரையும் எஸ். வி. சகஸ்ரநாமத்தைக் கொண்டு அரிச்சந்திரா போன்ற நீதி நாடகங்களையும் தமிழ்நாடு முழுதும் நடத்திப் பார்க்கலாம். முதலில் சென்னையில் ஆரம்பித்து அப்புறம் தமிழ்நாடு முழுதும் இதைத் தொடரலாம்.” என்றேன்.

அவர் மெளனமாக யோசிக்கலானர்.

“நானே இந்தப் பொறுப்பேற்றுச் செய்யட்டுமா?” என்று இழுத்தாற்போல் தயக்கத்தோடு கேட்டேன்.

“தாராளமாச் செய்யுங்க. ஒரு கமிட்டி அமைச்சுக்குங்க. அதில காங்கிரஸ்காரங்க யாரையும் சேர்த்துடாதீங்க” என்றார் காமராஜ்.

“அப்படியானால் முதலில் தாங்கள் எனக்குச் சில வசதிகள் செய்து தரவேண்டும். முக்கியமாக, நிகழ்ச்சிகள் நடத்த தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் தேவைப்படும்” என்றேன்.

“சரி, ராமண்ணா கிட்ட சொல்லிடறேன்; நீங்க ஆரம்பியுங்க” என்றார்.

சென்னை திரும்பியதும் இதற்காக ஒரு கமிட்டி அமைத்தேன். வீனஸ் ரத்னம் ஐயர், லிப்கோ சர்மா போன்ற பெரிய மனிதர்களையெல்லாம் அதில் பிடித்துப் போட்டேன். கிடுகிடுவென்று வேலே ஆரம்பமாயிற்று. ‘சத்ய சபா’ என்று வாரியார் அதற்குப் பெயர் சூட்டினார். கமிட்டிக்கு காமராஜ் அவர்களை தலைவராக இருக்க ஒப்புக் கொண்டதுடன் முதல் கூட்டத்துக்கு வந்து சில யோசனைகளும் வழங்கினார். சகஸ்ரநாமம் நாடகங்களுக்கு டிக்கட் வைக்கக் கூடாது. எல்லோரும் இலவசமாக நாடகம் பார்க்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று.

காங்கிரஸ் மைதானம் அமர்க்களப்பட்டது. ஏவி. எம். அவர்கள் முகப்பு வாயிலை அலங்கரித்துக் கொடுத்தார். வாசன் அவர்கள் ‘ஔவையார்’ படத்துக்காகச் செய்த மிகப் பெரிய பிள்ளையார் உருவச்சிலையை அனுப்பி உதவினார். காங்கிரஸ் மைதானத்தின் நுழைவாயிலில் அதை வைத்து, பக்கத்தில் ஒரு உண்டியும் வைத்தோம். அதன் மூலம் அன்றாடம் கிடைத்த வரும்படியே அன்றாடச் செலவுக்குப் போதுமானதாயிருந்தது. வாரியார் ராமாயணக் கதை நாற்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இடை இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் சகஸ்ரநாமம் நாடகங்கள். கூட்டமாவது கூட்டம். கதை ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியும் காமராஜ் கதை கேட்க வராதது வாரியாருக்கு ரொம்பக் குறையாக இருந்தது. நானும் தினமும் காமராஜ் அவ்ர்களைச் சந்திக்கும் போதெல்லாம், “எப்போது கதை கேட்க வரப் போகிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

“என்னை தினமும் அழைக்கணுமா என்ன? நானே வந்துடறேன். மெட்ராஸில் இருக்கச்சே டைம் கிடைக்கிற நாளெல்லாம் வந்துடறேன்” என்றார்.

ஒருநாள் திடீரென்று காமராஜ் வருவதாக எனக்குத் தகவல் சொல்லி அனுப்பினார். கதைக்கிடையில் வாரியாரிடம் போய் அவர் காதோடு இதைச் சொன்னேன். அவருக்குப் பரம சந்தோஷம். அன்று அனுமானுடைய ஆற்றலைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தவர் வழக்கம் போலக் கிளைக் கதைகள், உபமானங்கள் என்று கூட்டத்தைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்.

“தன்னிடம் எந்தக் காரியத்தை ஒப்படைத்தாலும் அதை வெற்றிகரமாகச் சாதிக்கக் கூடியவர் அனுமார். காரணம்? அவர் ஒரு பிரம்மசாரி. பிரம்மசாரிகள்தான் தங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளைச் சரியாகச் செய்யக் கூடிய ஆற்றலும் வல்லமையும் பெற்றவர்கள். அந்தக் காலத்தில் மட்டுமல்ல. இந்தக் காலத்திலும்தான்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காமராஜ் அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் கூட்டத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் தோன்றியது. ரொம்பவும் அருமையாக டைம் கொடுத்து, “நான் பிரம்மசாரி என்று சொன்னது யார் என்பது உங்களுக்கெல்லாம் புரிகிறது. அதனால்தான் நீங்கள் எல்லோரும் அதை ரசித்துச் சிரிக்கிறீர்கள்” என்று வாரியார் கூறியதும் அந்தச் சிரிப்பு பேரலையாக மாறியது.