பழைய கணக்கு/நூற்று அறுபதுக்கு
எனது மிக நெருங்கிய நண்பர்களுள் தி. ஜ. ரங்கநாதனும் ஒருவர். நானும் அவரும் 1936ல் ‘ஹநுமான்’ பத்திரிகையில் சேர்ந்து வேலை பார்த்தவர்கள். சில நாட்கள் கழித்து நான் அந்த வேலையை விட்டு விட்டேன். ஆனாலும் தி. ஜ. ர. வையும் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையையும் விடவில்லை.
வேலை எதுவுமில்லாமல், மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் தி. ஜ. ர. வுக்கு பளிச் சென்று ஓர் யோசனை உதித்தது.
“ஓய்! நீர் உடனே ஒரு புதுப் பத்திரிகை ஆரம்பியும். ‘கத்தரி விகடன்’ என்று அதற்குப் பெயர்” என்றார்.
“கத்தரி விகடனு!” என்று ஆச்சரியப்பட்டேன் நான்.
“ஆமாம். ஆனந்த விகடனுக்குப் போட்டி. இந்தப் பெயரில் இன்னொரு வசதியும் உண்டு, மற்றப் பத்திரிகைகளில் வரும் சுவாரசியமான விஷயங்களைக் கத்தரியால் வெட்டி இதில் வெளியிடலாம். டைஜஸ்ட் மாதிரி. பிற இதழ்களிலிருந்து விஷயங்களைக் கத்தரித்துப் போடுவதால் ‘கத்தரி விகடன்’ என்று பெயர் வைப்பது பொருத்தமாக இருக்கும்.” என்று அவர் விளக்கினார்.
இதன் தொடர்பாக நேரக் கூடிய இன்னொரு லாபத்தையும் தி. ஜ. ர. எதிர்பார்த்தார். “‘விகடன்’ என்ற பெயரோடு இன்னெரு பத்திரிகை வெளிவருவதை ஆனந்த விகடன் வாசன் நிச்சயம் விரும்ப மாட்டார். எனவே ‘கத்தரி விகடன்’ வருவது தெரிந்ததும் உம்மைக் கூப்பிட்டு ஆனந்த விகடனிலேயே வேலை தந்தாலும் தரலாம்” என்றார் அவர்.
‘கத்தரி விகடன்’ வெளியாவது பற்றி ஹநுமானில் பெரிதாக விளம்பரப் படுத்தினேன். விளம்பர சார்ஜ் பின்னால் கொடுப்பதென்று ஏற்பாடு.
அப்போதெல்லாம் மாலை நேரங்களில் நானும் தி. ஜ. ர. வும் தம்புச் செட்டித் தெருவிலுள்ள எங்கள் ஓட்டல் அறையிலிருந்து நடந்தே சென்று ஹைகோர்ட் காம்பவுண்டுக்குள் மர நிழலில் உட்கார்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். ஒரு நாள் அப்படிப் போய்க் கொண்டிருந்த எனக்குப் பின்னால் மிக நெருக்கத்தில் சைக்கிள் மணியோசை கேட்டது. ஆனந்தவிகடனில் ப்யூனாக இருந்த முனுசாமி என்பவர் சைக்கிளை நிறுத்தி இறங்கி என்னிடம் ஒரு கடிதத்தைத் தந்தார்.
“ஆசிரியர் கல்கி உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உடனே வந்து பார்க்கவும்” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. கீழே தேவன் கையெழுத்துப் போட்டிருந்தார். தி. ஜ. ர.வின் எதிர்பார்ப்பு உண்மையாகி விடும் போல் தோன்றியது!
மறுநாள் காலை நான் விகடன் அலுவலகத்துக்குப் போய் ‘கல்கி’ அவர்களைச் சந்தித்தேன். இதில் வேடிக்கை என்ன வென்றால் அதற்கு ஒரு வாரம் முன்புதான் நான் வேறு பத்திரிகைகளில் பிரசுரமான எனது கட்டுரைகளின் தொகுப்போடு அவரிடம் போய் வேலை கேட்டேன். அப்போது அவர் என் கதைகளைப் புரட்டிப் பார்த்து விட்டு, “இதெல்லாம் ஒன்றும் சரியாக இல்லை. இப்போது வேலை எதுவும் இல்லை. பிறகு பார்க்கலாம், போய் வா” என்று கூறித் திருப்பி அனுப்பி விட்டார்.
இப்போது கல்கி என்னைப் பார்த்ததும், “நீதான!” என்று கேட்டார்.
“ஏதோ புதுப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறயாமே!”
"ஆமாம்.”
“யார் பணம் போடப் போகிறார்கள்?”
“எனக்குத் தெரிந்த பணக்காரர் ஒருவர்.”
“அவர் பணத்தை எங்கே போடப் போகிறார்? குளத்திலா”
சிறிது நேர மெளனம்.
“நீ ஏதோ கோஞ்ச நாளைக்கு முன் வேலை கேட்டாய் இல்லே? இப்போது உதவி ஆசிரியர் வேலை இருக்கிறது. வேணுமானல் சேர்ந்து கொள்ளலாம்.”
வேலை கிடைத்தால் போதும் என்று உள்ளுர அவசரப்பட்டாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் “சம்பளம்?” என்று இழுத்தேன்.
“எல்லோருக்கும் தருகிற மாதிரிதான் ஆரம்பத்தில் நாற்பது ரூபாய்” என்றார் கல்கி.
“இருந்தாலும், கத்திரி விகடனுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி விட்டன. நிறையப் பணம் செலவு செய்து விட்டார் ஒருத்தர். அவருக்கு எப்படித் திருப்பித் தருவது என்று தெரியவில்லை” என்று பொய் சொன்னேன். விளம்பரம் தந்ததைத் தவிர நான் ஒரு செல்லாக் காசும் செலவழிக்கவில்லை.
“இதுவரை எவ்வளவு பணம் செலவழித்தாய்?” என்று கல்கி கேட்டார்.
“நூற்று அறுபது ரூபாய் இருக்கும்” என்று சொன்னேன். அதுவும் பொய்தான்.
“அப்படியா? அதை நான் இங்கே ஆபீஸில் கொடுக்கச் சொல்கிறேன். கொண்டு போய் பணம் போட்டவரிடம் திருப்பிக் கொடுத்து விடு” என்றார்.
அப்போதே விகடனில் வேலையில் சேர்ந்து கொண்டேன். சாயங்காலம் வேலை முடிந்து வீட்டுக்குப் போனதும் தி. ஜ. ர.விடம் விஷயத்தையெல்லாம் விவரமாகச் சொன்னேன். தாம் போட்ட திட்டம் வெற்றியடைந்தது பற்றி அவருக்கு ஏக சந்தோஷம். கூடவே என்னை ஒரு திட்டும் திட்டினர்.
“சுத்த அல்பமையா நீர். சொன்னதுதான் சொன்னீர். நூற்று அறுபது ரூபாய்க்கு மேலே உமக்கு நம்பரே தெரியாதா? அதிகமாகச் சொல்லியிருக்க வேண்டியதுதானே! கொடுக்கக் கூடிய இடத்தில் வாங்கியிருக்கலாம் இல்லையா?” என்று கடிந்து கொண்டார்.