பழைய கணக்கு/போகிற இடமெல்லாம் ஒரு போட்டி



போகிற இடமெல்லாம் ஒரு போட்டி

ரண்டாம் முறையாக நான் 1955-ல் கல்கியில் சேர்ந்த போது வாரா வாரம் உதவி ஆசிரியர்கள் எல்லோரும் கூடிப் புதிய அம்சங்கள் பற்றிச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவது வழக்கம். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் திட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற உந்துதல் எனக்கு எப்போதுமே உண்டு. பெரிய அளவில் சிறுகதைப் போட்டி ஒன்று அறிவித்து நிறைய ரொக்கப் பரிசு தரலாம் என்ற பொதுவான யோசனையை கல்கி அலுவலகத்தினர் வெளியிட்டார்கள். இதில் புதுமை எதுவும் கிடையாது. எல்லாப் பத்திரிகைகளுமே செய்யக் கூடியதுதான். எனக்கென்னவோ அப்படிச் செய்வதைவிடப் பரிசுத் தொகையைக் குறைத்து மாதா மாதம் சிறுகதைப் போட்டி நடத்தினால் அதன் மூலம் வளரும் எழுத்தாளர்களும் புதியவர்களும் நிறைய அளவில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று தோன்றியது. பரிசுத் தொகை அதிகம் என்பதாலேயே சிறப்பாகக் கதை எழுத வந்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த என் கருத்தை மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள். எனவே மாதச் சிறுகதைப் போட்டி ஒன்று உடனேயே தொடங்கப்பட்டது. கதைகளும் நிறைய வந்தன. மாதா மாதம் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து அதற்கு நூறு ரூபாய் சன்மானம கொடுத்து வந்தோம். இந்தப் போட்டியின் மூலம் பிரபலமடைந்தவர்தான் இன்று புகழுடன் விளங்கும் திரு நா. பார்த்தசாரதி. இவருடைய ‘வலம்புரிச் சங்கு’ கதை கல்கி மாதச் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பெற்ற கதைதான்.

அப்புறம் சில மாதங்களுக்குள்ளாகவே நான் கல்கியிலிருந்து விலகி விகடனில் சேர்ந்து விட்டேன். அங்கே போனதுமே ‘முத்திரைக் கதை’ என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்று கூறினேன். நல்ல சிறுகதைகளுக்கு விகடனின் சிறப்பு முத்திரையிட்டு நூறு ரூபாய் சன்மானம் கொடுக்க வேண்டுமென்பதே அந்தத் திட்டம். பின்னால் இந்த முத்திரை ஜெயகாந்தன் கதைகளுக்கு மட்டுமே தொடர்ந்து குத்தப்பட்டுக் கொண்டிருந்தது எனக்குப் பிடிக்காததால் அப்புறம் நான் இதில் தலையிடுவதை நிறுத்திக் கொண்டு விட்டேன்.

எழுத்தாளர்களுக்கு நிறைய சன்மானம் தரவேண்டும் என்ற என் ஆசையை நான் எங்கெங்கே பணி புரிந்தேனோ அங்கெல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தேன். பின்னர் ‘தினமணி கதிர்’ ஆசிரியரான போது ‘நட்சத்திரக் கதை’யை அறிமுகப்படுத்தி அந்தக் கதைக்கு இருநூற்று ஐம்பது ருபாய் சன்மானம் தருவதென்று முடிவு செய்தேன். அதைப் பார்த்துவிட்டு ஆனந்த விகடன் தன் முத்திரைக் கதைக்கான அன்பளிப்பை ஐந்நூறு ரூபாயாக உயர்த்தியது. இதை நான் அப்போது ஆசிரியராக இருந்த பத்திரிகைக்குப் போட்டியாகக் கருதவில்லை. மாறாக என் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது, காரணம், எப்படியோ எழுத்தாளர்களின் சன்மானம் ரூபாய் ஐந்நூறு வரை உயர்ந்து என் அடிப்படை நோக்கம் நிறைவேறிவிட்டதல்லவா!

கல்கியில் நான் ஆரம்பித்த ஒரு சிறிய திட்டம் இப்படிப் படிப்படியாக வளர்ந்து ஒரு சிறுகதை ஐந்நூறு ரூபாய் பெறுகிற அளவுக்கு உயர்ந்து அதன் மூலம் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும் உயர்ந்ததில் நான் அடைந்த பெருமகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் அளவில்லை.